SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Special Arrangement
ஓசூரில் சந்திர சூடேஸ்வரர் கோவிலில் செவ்வாய்க்கிழமை (மே 6) வழங்கப்பட்ட புளியோதரையில் பாம்பு ஒன்று இருந்ததாக பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளார்.
“ஆனால், இது தவறான குற்றச்சாட்டு” எனக் கூறுகிறார் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரசாதக் கடையை நடத்தி வரும் ஒப்பந்ததாரர்.
இதுகுறித்துப் பேசிய கோவிலின் செயல் அலுவலர், “பிரசாதம் தொடர்பான ஆய்வக அறிக்கை வந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கோவில் பிரசாதத்தில் பாம்பு வந்தது எப்படி? அறநிலையத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மலை மீது மரகதாம்பிகை சமேத சந்திர சூடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு நிர்வாகத்தின் இணையதளம் கூறுகிறது.
அதோடு, “ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோவில் தேர்த் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அப்போது ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதில் பங்கேற்க வருகின்றனர்,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலின் வளாகத்தில் பிரசாத விற்பனைக் கடை ஒன்று அமைந்துள்ளது. இங்கு தயிர் சாதம், புளியோதரை, லட்டு, அதிரசம் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.
புளியோதரையில் பாம்பு

பட மூலாதாரம், Getty Images
மே 6ஆம் தேதியன்று சந்திர சூடேஸ்வரர் கோவிலுக்கு பெங்களூருவில் உள்ள பொம்மசந்திரா (Bommasandra) பகுதியைச் சேர்ந்த மதனிகா என்பவர் தனது தோழி ஜெயலட்சுமியுடன் வந்துள்ளார்.
கோவிலில் வழிபாடு நடத்திய பிறகு அவர் பிரசாத கடையில் இரண்டு புளியோதரை பார்சலை வாங்கியுள்ளார். சிறிது நேரத்தில் உணவைத் திறந்து பார்த்தபோது அதில் இறந்த நிலையில் சிறிய பாம்பு ஒன்று இருந்ததாக கோவிலின் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
“பார்சலை திறந்தபோது புழு போல ஏதோ ஒன்று இருப்பதாக நினைத்ததாகவும் பின்னரே அது ஒரு சிறு பாம்பு எனத் தெரிய வந்ததாகவும்” புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார். அதோடு, பிரசாதக் கடையை நடத்தி வரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
“இரண்டு பார்சல்களை வாங்கினோம். அதில் ஒரு டப்பாவில் இருந்த புளியோதரையில் பாதியைச் சாப்பிட்டுவிட்டோம். திறக்கும்போது வால் போலத் தெரிந்தது. அதைக் கொண்டு போய்க் காட்டியபோது குச்சியை விட்டு எடுத்தனர். அப்போதுதான் அது ஒரு சிறிய பாம்பு எனத் தெரிய வந்தது,” என்று பிபிசி தமிழிடம் கூறினார் மதனிகா.
தஞ்சாவூரை சேர்ந்த இவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். ஓசூரில் உள்ள சந்திர சூடேஸ்வரர் கோவிலுக்கு தாம் அடிக்கடி வந்து செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிலின் செயல் அலுவலர் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Special Arrangement
மதனிகாவின் புகாரைத் தொடர்ந்து, ஆய்வு நடத்த வருமாறு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கோவிலின் செயல் அலுவலர் சாமிதுரை கூறியுள்ளார். அதோடு, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிரசாதங்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
“பாம்பு இருந்ததாகக் கூறப்பட்டதால், ஆய்வகத்துக்கு அனுப்புவதற்காக அங்குள்ள உணவு மாதிரிகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சேகரித்தனர்,” என்கிறார் கோவிலின் செயல் அலுவலர் சாமிதுரை.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஓசூர் காவல் நிலையத்திலும் புகார் மனு கொடுத்துள்ளோம். காவல் நிலையத்தில் இருந்து விசாரணை செய்ய உள்ளனர். பாம்பு எப்படி வந்தது என்பது விசாரணை முடிவில் தெரிய வரும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிலில் பிரசாதம் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை திருச்சியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
‘பாதிப்பு ஏற்படவில்லை’ – உணவுப் பாதுகாப்பு அலுவலர்

பட மூலாதாரம், Special Arrangement
இதையடுத்து, அந்தக் கோவில் அருகே அமைந்திருந்த பிரசாதத்தைத் தயார் செய்யும் உணவுக் கூடத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
“சமையல் கூடத்தின் அறையும் பிரசாதக் கடையும் பூட்டு போடும் வசதியுடன் உள்ளது. அங்குள்ள மதில் சுவரில் விரிசல் உள்ளதால் அதன் வழியாக பாம்பு உள்ளே வந்திருக்கலாம் எனக் கருதுகிறோம்,” என ஓசூர் உணவுப் பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பன் பிபிசி தமிழிடம் கூறினார்.
“சமைக்கும்போது பாம்பு, பல்லி ஆகியவை விழுந்துவிட்டால் முழு உணவும் நஞ்சாகிவிடும். சம்பவம் நடந்த அன்று 200 பேர் சாப்பிடும் அளவுக்கு 200 புளியோதரை டப்பாவை தயார் செய்துள்ளனர். ஒவ்வொன்றும் 250 கிராம் அளவில் இருந்தது” எனக் கூறிய முத்து மாரியப்பன், “அதில் 30 டப்பாக்கள் விற்கப்பட்டுள்ளன. கோவில் ஊழியர்கள், பாதுகாவலர்கள் உள்பட ஏழு பேர் சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை,” எனவும் தெரிவித்தார்.
மேலும், ” புளியோதரையை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். ஆய்வறிக்கை வந்ததும் அறநிலையத்துறையிடம் ஒப்படைத்துவிடுவோம். புகாரில் உண்மைத்தன்மை இருந்தால் அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.
ஒப்பந்ததாரர் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Special Arrangement
ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார், பிரசாதக் கடையை நடத்தி வரும் ஒப்பந்ததாரரான வாசுதேவன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “எங்கள் தொழிலைக் கெடுப்பதற்காக செயற்கையாக இப்படியொரு புகாரைக் கொடுத்துள்ளனர். இதற்கு உள்ளூரில் உள்ள சிலரும் காரணம்” என்றார்.
“புளியோதரை பிரசாதம் வாங்கிய சற்று நேரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி கொடுக்கின்றனர். உணவை யாரும் சாப்பிடக் கூடாது என நினைத்திருந்தால் உடனே எங்களிடம் வந்து கூறியிருக்கலாம். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை,” எனவும் வாசுதேவன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சாதத்தை வடித்த பிறகு அதற்கான தட்டில் கொட்டப்படுகிறது. எண்ணெய் ஊற்றி நிலக்கடலை போடும்போது அது உடையும். காய்ந்த மிளகாய் போடும்போது தூளாக உடையும். அப்படியிருக்கும்போது பாம்பு இருந்திருந்தால் பல துண்டுகளாகப் போயிருக்கும்” எனக் கூறினார்.
பாம்பை செயற்கையாக உள்ளே வைத்துத் தங்களது வணிகத்தைச் சிலர் முடக்கப் பார்ப்பதாகக் கூறிய வாசுதேவன், “கையுறை மூலமாக சாதத்தைக் கிளறுகிறோம். அதில் நார் இருந்தால்கூட வெளியே எடுத்துப் போட்டுவிடுவார்கள். ஆகவே பாம்பு வருவதற்கு வாய்ப்பில்லை,” என்கிறார்.
இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய மதனிகா, “திட்டமிட்டுச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள்தான் பார்சலை கொடுத்தனர். கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தால் தெரியும்,” என்று மட்டும் பதில் அளித்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU