SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Raghu Palat
“அன்று நான் எனது தாத்தாவுடன் ஜாலியன் வாலாபாக் இடத்துக்கு சென்றிருந்தேன். திடீரென்று அங்கு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது, எனது தாத்தா என்னைத் தூக்கிக்கொண்டு, தாக்குதல் நடத்தப்படும் எதிர் திசையை நோக்கி ஓடினார். அந்த இடத்தை விட்டு வெளியே செல்ல வழி இல்லை என்று உணர்ந்ததும், அவர் என்னை ஏழு அடி உயர சுவர் ஒன்றைத் தாண்டி தூக்கி வீசினார்”.
“நான் கீழே விழுந்ததால் எனது கையின் எலும்பு முறிந்தது. ஆனால் இந்த சம்பவம் நடந்த கதையை உலகுக்கு சொல்வதற்காகவே நான் உயிர் பிழைத்தேன். நாங்கள் மேலும் சித்திரவதை செய்யப்படுவோம் என்று பயந்ததால் பல நாட்கள் மருத்துவமனைக்குச் செல்லவில்லை”.

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் படுகொலை நடந்தபோது பர்பூர் சிங்குக்கு 4 வயதுதான் ஆகியிருந்தது. 2009 ஆம் ஆண்டு பர்பூர் சிங்குடன் நடந்த உரையாடலின்போது அவர் இந்த கதையை பகிர்ந்து கொண்டார்.
ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவை பிரிகேடியர் ஜெனரல் டயர் வழங்கினார். அவருடன் சார்ஜென்ட் ஆண்டர்சனும் சென்றார். அந்த நேரத்தில் மைக்கேல் ஓ’ட்வயர் பஞ்சாபின் லெப்டினன்ட் கவர்னர் ஜெனரலாக இருந்தார்.
இந்த படுகொலை சம்பவம் நடந்த ஆரம்ப நாட்களில், இது பற்றி அதிகம் விவாதிக்கப்படவில்லை.

பட மூலாதாரம், partition museum
ஜாலியன் வாலாபாக் நீதிமன்ற வழக்கு
ஆனால், ஒரே ஒரு இந்தியர் மட்டும் பிரிட்டனுக்கு சென்று, ஜாலியன் வாலாபாக் படுகொலை தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கை பிரிட்டன் நீதிமன்றத்தில் தனியாக வாதிட்டார். இந்த வழக்கு ஐந்தரை வாரங்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கின் மூலம் ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய கதை உலகம் முழுவதுக்கும் தெரியவந்தது.
அந்த நபரின் பெயர் சர் சேத்தூர் சங்கரன் நாயர்.
சங்கரன் நாயரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘கேசரி 2’ என்ற படத்தில் தற்போது நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.
அப்போது பிரிட்டன் ஆட்சியில் அடிமையாக இருந்த இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்குச் சென்று ஆங்கிலேயரை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதிடுவது என்பது மிகவும் கடினமான செயலாக கருதப்பட்டது. ஆனால், சங்கரன் நாயர் எல்லாவற்றையும் மீறி அதைச் செய்து வரலாற்றில் ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்தினார்.

பட மூலாதாரம், Raghu Palat
சங்கரன் நாயர் யார்?
இந்திய வரலாற்றில் சங்கரன் நாயர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். 1857 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் சுதந்திரப் போர் நடந்து கொண்டிருந்தபோது, பாலக்காட்டில் செல்வச் செழிப்பு மிக்க ஒரு குடும்பத்தில் சங்கரன் நாயர் பிறந்தார்.
அவர் ஒரு வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும், 1987 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றினார்.
மேலும் 1915 ஆம் ஆண்டு வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் உறுப்பினர் ஆனார். அவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை அவர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது அவர் வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்ததால், நிராயுதபாணியாக இருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை நேரில் கண்டவர்களிடம் இருந்து படிப்படியாக சாட்சியங்களை சேகரிக்கத் தொடங்கினார்.
இந்த சம்பவத்தை அடுத்து, பஞ்சாபில் நடந்த நிகழ்வுகளால் அவர் மிகவும் ஏமாற்றமடைந்து, வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது பிடிவாதத்துக்கு ஒரு சான்று “The Case That Shook the Empire” என்ற புத்தகத்தில் எழுதப்பட்ட ஒரு சம்பவத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
இந்த புத்தகத்தை சங்கரன் நாயரின் கொள்ளுப் பேரன் ரகு பலாட் மற்றும் அவரது மனைவி புஷ்பா பலாட் ஆகியோர் எழுதியுள்ளனர்.
“வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் இருந்து விலகிய பிறகு வைஸ்ராய் செம்ஸ்ஃபோர்ட், ‘வேறு எந்த இந்தியரின் பெயரையாவது பரிந்துரைக்க முடியுமா’? என்று சங்கரன் நாயரிடம் கேட்டார்”, என்று அந்த புத்தகத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“ஒரு இந்தியரின் ஆலோசனையில் செம்ஸ்ஃபோர்டின் வைஸ்ராய் சிறிதும் அக்கறை காட்டவில்லை என்பதை சங்கரன் நாயர் உணர்ந்தார். அந்தக் கேள்விகள் வெறும் ஒரு சாம்பிராதாயத்துக்காகவே கேட்கப்பட்டன. அந்த வேலையின் கடைசி நாளில், அந்த பிரிட்டிஷ் அதிகாரியை கேலி செய்யும் எந்த வாய்ப்பையும் சங்கரன் நாயர் தவறவிடவில்லை”.
“சங்கரன் நாயர், ‘ஆம், நான் ஒரு இந்தியரை பரிந்துரைக்க முடியும்’, என்று பதில் அளித்தார். வாசலில் நின்றிருந்த தலைப்பாகை அணிந்த காவலர் ராம் பிரசாத்தை நோக்கி அவர் கைகாட்டி, ‘ஏன் நாம் அவரை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளக் கூடாது? அவர் உயரமானவர், அழகானவர், நீங்கள் என்ன சொன்னாலும் அதை அவர் ஏற்றுக்கொள்வார்’ என்று கூறிவிட்டு வைஸ்ராயுடன் கைகுலுக்கி அமைதியாக வெளியேறினார்”, என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், partition museum
மைக்கேல் ஓ’ட்வயர் தொடர்ந்த வழக்கு
1922 ஆம் ஆண்டு சங்கரன் நாயர் ‘Gandhi and Anarchy’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார், அதில் அவர் காந்தியின் கொள்கைகளுடன் தனது கருத்து வேறுபாட்டைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். மேலும் பஞ்சாபின் நிலைமைக்காக அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தையும் விமர்சித்திருந்தார்.
பஞ்சாபில் நடந்த இந்த அத்துமீறல்கள் பஞ்சாபின் லெப்டினன்ட் கவர்னர் ஜெனரல் மைக்கேல் ஓ’ட்வயருக்குத் தெரிந்தே நடந்தவைதான் என்றும் அவர் அந்த புத்தகத்தில் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, 1922 ஆம் ஆண்டு பிரிட்டனில் சங்கரன் நாயருக்கு எதிராக மைக்கேல் ஓ’ட்வயர் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். சங்கரன் நாயர் மன்னிப்பு கேட்க வேண்டும், அந்த புத்தகத்தை திரும்பப் பெற வேண்டும் மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என்று மைக்கேல் ஓ’ட்வயர் கோரினார், ஆனால் சங்கரன் நாயர் இதனை மறுத்துவிட்டார்.
சங்கரன் நாயர் வழக்கு தொடர்ந்தபோது, ஐந்தரை வார கால விசாரணையில் பிரிட்டிஷ் ஆட்சி பற்றி அம்பலப்படுத்தப்பட்டதால், ஜாலியன் வாலாபாக் மற்றும் பஞ்சாபில் நடந்த அட்டூழியங்கள் பற்றி உலகம் முழுவதுக்கும் தெரியவந்தது.
அந்தக் கால கட்டத்தில் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களுக்கு நடந்த சிவில் வழக்கு இதுவே.

பட மூலாதாரம், partition museum
வழக்கு தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு வழக்கறிஞர் இல்லை
‘The Case That Shook the Empire’ என்ற புத்தகத்தில் இந்த வழக்கு பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
விசாரணை தொடங்குவதற்கு முந்தைய நாள் மாலை, சங்கரன் நாயரின் வழக்கறிஞர் சர் ஜான் சைமன், இந்த வழக்கில் வாதாட மறுத்துவிட்டார். கடைசி நேரத்தில் சங்கரன் நாயர், சர் வால்டரை புதிய வழக்கறிஞராக நியமித்தார்.
“சங்கரன் நாயருக்கு எதிராக பல விஷயங்கள் இருந்தன. பிரிட்டன் நீதிமன்றத்தில் ஒரு ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு வழக்கை இந்தியர் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார். மைக்கேல் ஓ’ட்வயருக்கு சாதகமாக சாட்சி கூற அவர் தரப்பில் பல்வேறு முக்கியஸ்தர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்”, என்று அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மறுபுறம், சங்கரன் நாயருக்கு சார்பாக சாட்சி சொல்ல இருந்தவர்கள் சாதாரண இந்தியர்களே. அவர்களும் பிரிட்டனில் இல்லாமல், இந்தியாவில் இருந்தனர். மேலும் அவர்களின் சாட்சியம் இந்தியாவில் இருந்து பதிவு செய்யப்பட்டது. அந்த சாட்சியங்கள் பிரிட்டன் நீதிமன்றத்தில் வெறுமனே வாசிக்கப்பட்டன. அது நேரில் வந்து சாட்சி கூறுவது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தாது”.
“சங்கரன் நாயரின் சாட்சிகளில் இருவர் மட்டுமே பிரிட்டன் நீதிமன்றத்துக்கு நேரில் வந்து சாட்சியமளிக்க முடிந்தது – 1919 ஆம் ஆண்டு கல்சா கல்லூரியின் முதல்வராக இருந்த ஜெரால்ட் வாத்தன் மற்றும் பஞ்சாபில் அமைச்சராக இருந்த சர் ஹர்கிஷன் லால். அவர்கள் ராணுவச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் சொந்த செலவில் சாட்சியமளிக்க லண்டனுக்கு வந்தனர்.”

பட மூலாதாரம், Raghu Palat
குஜ்ரன்வாலா குண்டுவெடிப்பு
“வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, ஜாலியன் வாலாபாக் சம்பவத்துக்குப் பிறகு குஜ்ரன்வாலா குண்டுவெடிப்பை ஜெனரல் ட்வயர் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. இதற்காக அவரது உத்தரவின் பேரில் விமானங்கள் அனுப்பப்பட்டதாக அவர் ஒப்புக்கொண்டார்”, என்று ‘The Case That Shook the Empire’ என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“குஜ்ரன்வாலாவுக்கு வெளியே அப்பாவி மக்கள் மீது குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிகளால் சுடுவது சரியா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, குஜ்ரன்வாலாவைச் சேர்ந்த இவர்கள் பஞ்சாபில் கலவரத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருந்ததாக ஜெனரல் மைக்கேல் ஓ’ட்வயர் கூறினார். கசூரில் பள்ளி மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்தும் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோது, அந்த முழு பள்ளியும் கலவரத்தைத் தொடங்கும் சதியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறினார்.”
“லாகூரில் கொளுத்தும் வெயிலில் பள்ளிக் குழந்தைகள் ஏன் 17 மைல்கள் நடக்க உத்தரவிடப்பட்டனர் என்று கேட்டதற்கு, மாணவர்கள் பலர் கிளர்ச்சி செய்யத் தொடங்கிவிட்டார்கள் என்று ட்வயர் கூறினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் பற்றி விவாதிக்கப்பட்டபோது, 5 லட்சம் மக்களின் உயிரைக் காப்பாற்ற சில நூறு பேரைக் கொல்வது சரியா, இல்லையா என்பதுதான் கேள்வி என்று நீதிபதி நடுவர் மன்றத்திடம் கூறினார்.”
இந்த வழக்கு குறித்து இந்தியாவிலும் பிரிட்டனிலும் செய்தித்தாள்களில் வெளியாகத் தொடங்கியது, மேலும் பஞ்சாபில் நடந்த ஷெல் குண்டுவீச்சு தாக்குதல்கள், கொலைகள், ஜாலியன் வாலாபாக் சம்பவம் மற்றும் இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது ராணுவத்தில் நடந்த கட்டாய ஆட்சேர்ப்பு பற்றிய கதைகள் வெளிவரத் தொடங்கின.

பட மூலாதாரம், Raghu Palat
நீதிபதியின் அணுகுமுறை குறித்து கேள்விகள்
இந்த வழக்கில் நீதிபதி மெக்கர்டியின் ஒருதலைபட்ச அணுகுமுறை குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டன. இது குறித்து பொது மன்றத்தில் கூட விவாதிக்கப்பட்டது, மேலும் அவரை நீக்கவும் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கின் நீதிபதி மெக்கார்டியின் நடத்தையை கண்டித்து ஆங்கில செய்தித்தாள்களான டெய்லி க்ராக்கிள் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் கெஜட் ஆகியன செய்திகள் வெளியிட்டன.
இந்த சம்பவங்கள் பிரிட்டனின் பொது நலனுக்கு துரதிருஷ்டவசமானவை என்று டெய்லி நியூஸ் வர்ணித்ததுடன், நீதிபதியின் நடத்தைக்கு வருத்தம் தெரிவித்தது. நீதிபதி மெக்கார்டி பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
நடுவர் குழுவில் இருந்த 12 பெரும் பிரிட்டனை சேர்ந்தவர்கள். நடுவர் மன்றத்தால் ஒருமித்த முடிவை எட்ட முடியவில்லை, மேலும் சங்கரன் நாயருக்கு எதிராக 11-1 என்ற ரீதியில் தீர்ப்பு வந்தது.
சங்கரன் நாயர் மன்னிப்பு கேட்டால், அவர் அபராதம் மற்றும் வழக்கு செலவுகளைச் செலுத்த வேண்டியதில்லை என்று மைக்கேல் ஓ’ட்வயர் கூறினார். ஆனால் சங்கரன் நாயர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் நடந்த அந்த நாள் நாயருக்கு கடினமான நாளாக அமைந்தது என்று புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சங்கரன் நாயர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
சங்கரன் நாயர் பற்றி காந்தி சொன்னது என்ன?
அந்த வழக்கு தோல்வியில் முடிந்தபோதிலும், பிரிட்டிசாருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த வழக்கு இந்தியாவின் சுதந்திர இயக்கத்துக்குப் புத்துயிர் அளித்தது மற்றும் மகாத்மா காந்தியின் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தியது.
தனது வார இதழான ‘யங் இந்தியா’-வில் 1924 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி அன்று வெளியான கட்டுரையில், “நீதிபதி ஆரம்பத்திலிருந்தே ஒருதலைப்பட்சமாக இருந்தார். இந்த வழக்கைப் பற்றிய செய்திகளை தினமும் படிப்பது வேதனையாக இருந்தது. ஒரு பிரிட்டிஷ் நீதிபதி எதையும் வெளிப்படையாகச் செய்ய முடியும், அதற்காக ஒரு இந்தியர் விலை கொடுக்க வேண்டியிருக்கும்”, என்று எழுதியிருந்தார்.
“மைக்கேல் ஓ’ட்வயரின் சவாலை ஏற்றுக்கொண்டதன் மூலம், சர் சங்கரன் நாயர் பிரிட்டிஷ் அரசியலமைப்பையும் மக்களையும் விசாரணைக்கு உட்படுத்தினார். இந்தத் தோல்வியிலும் கூட, அனைத்து இந்தியர்களும் சர் சங்கரன் நாயருக்கு அனுதாபம் தெரிவிக்கிறார்கள். அவரது துணிச்சலை நான் பாராட்டுகிறேன்.”
லண்டனில் சங்கரன் நாயரின் உருவப்படம்
இன்றும் கூட, சங்கரன் நாயரைக் கௌரவிக்கும் வகையில் ஜாலியன் வாலாபாக் அருங்காட்சியகத்தில் ஒரு தகடு உள்ளது. அவரது உருவப்படம் லண்டனில் உள்ள தேசிய உருவப்படக் காட்சியகத்தில் இருக்கின்றது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே, 1934 ஆம் ஆண்டு சங்கரன் நாயர் உயிரிழந்தார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட ஹண்டர் குழுவின் கூற்றுப்படி, மொத்தம் 370 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இறப்பு எண்ணிக்கையை 1,000 முதல் 1,500 வரை இருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
சங்கரன் நாயரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கேசரி-2 படத்தைப் பற்றி அக்ஷய் குமார் கூறுகையில், “இதற்கு முன்பு, எனக்கும் இந்த நீதிமன்ற வழக்கு பற்றி தெரியாது. வரலாறு ஆங்கிலேயர்களின்படி எழுதப்பட்டதால் உண்மையான வரலாற்றை மக்கள் முன் கொண்டு வர, நான் இந்தப் படத்தை இப்போது உருவாக்குகிறேன்”, என்றார்.
சொல்லப்போனால், ஜாலியன் வாலாபாக்கில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு பெயர் ஜெனரல் டயர்.
ஜெனரல் டயரின் வாழ்க்கை வரலாறான “The Butcher of Amritsar” என்ற புத்தகத்தில் ஆசிரியர் நிகல் கோலெட் எழுதுகையில், “‘அமிர்தசரஸின் நிலைமையை அறிந்தவர்கள் நான் சரியானதைச் செய்தேன் என்று சொன்னார்கள், ஆனால் சிலர் நான் தவறு செய்தேன் என்று கூறுகிறார்கள். நான் இறந்து கடவுளிடம் சென்ற பிறகு நான் செய்தது சரியா தவறா என்று கேட்க விரும்புகிறேன்’ என்று ஜெனரல் டயர் கூறினார்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜாலியன் வாலாபாக் சம்பவத்துக்கு பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை பலமுறை எழுப்பப்பட்டதாகவும், ஆனால் ஒருபோதும் முறையான மன்னிப்பு கேட்கப்படவில்லை என்றும் பிபிசியிடம் பேசிய நிகல் கோலெட் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU