SOURCE :- BBC NEWS

ஜம்மு-காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

56 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் சம்பா பகுதியில் சந்தேகத்துக்கிடமான டிரோன்கள் தென்பட்டதாகவும் அதனை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனாலும் எந்த திசையிலிருந்து டிரோன்கள் வந்தன என்ற தகவலை ராணுவம் கூறவில்லை.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நான்கு நாட்களாக நடைபெற்ற மோதலை தொடர்ந்து, கடந்த 10-ஆம் தேதி இரு நாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தன.

ஆனால், இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், அதை பாகிஸ்தான் மீறியதாக இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி குற்றம் சாட்டினார்.

இதனிடையே, “பிரதமர் மோதி பல கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்க வேண்டும்” என காங்கிரஸ் கூறியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அப்போது பேசிய நரேந்திர மோதி, “‘ராணுவம் உட்பட முப்படைகளும் முழுமையான தயார் நிலையில் உள்ளன. ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் புதிய கோணத்தை காட்டியது. இந்தியாவின் மீது பயங்கரவாதிகள் தாக்கினால், பதிலடி கொடுப்போம். பயங்கரவாதத்தின் வேர் தொடங்கும் இடத்திலேயே அதை முடிப்போம். அணு ஆயுத மிரட்டல்களின் பெயரில் பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது” என்றார்.

”ஆபரேஷன் சிந்தூர் கொன்ற பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் கலந்துக் கொண்டது மூலமாக அவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை உலகம் பார்த்தது.” என்றார் நரேந்திர மோதி.

 நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

இதைத்தொடர்ந்து, நாட்டின் ராணுவத்துக்கு மரியாதை அளிப்பதாக கூறிய காங்கிரஸ், ஆனாலும் பிரதமர் இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

“பிரதமரின் தாமதமான இந்த உரை, அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய தகவல்களால் முக்கியத்துவம் இழந்தது. ஆனால், பிரதமர் இதுகுறித்து ஒரு வார்த்தை கூட கூறவில்லை,” என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நாட்டு மக்களுக்கு திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு உரையாற்றிய சிறிது நேரத்துக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.

டிரம்ப் கூறியது என்ன?

“இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா மிகவும் உதவியது,” என டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் வர்த்தக அழுத்தத்தால் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறினார்.

டிரம்ப் கூறுகையில், “பல காரணங்களுக்காக இரு நாடுகளும் சண்டை நிறுத்த முடிவை எடுத்துள்ளன. ஆனால், வர்த்தகம் தான் முக்கிய காரணம். நாங்கள் பாகிஸ்தானுடன் அதிகளவில் வர்த்தகம் செய்கிறோம். இந்தியாவுடனும் அதிகளவில் வர்த்தகத்தில் ஈடுபடுகிறோம். நாங்கள் இந்தியாவுடன் இதுகுறித்து பேசிவருகிறோம். பாகிஸ்தானுடன் பேசவுள்ளோம்.” என்றார்.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் எழுப்பிய கேள்வி

இதையொட்டி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்றுக்கொண்டதா? பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த நடுநிலையான இடத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டதா? ஆட்டோமொபைல், விவசாயம் மற்றும் மற்ற துறைகளில் தன் சந்தையை திறந்துவிடுவதற்கான அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா இப்போது ஏற்றுக்கொண்டதா?” என கேள்வியெழுப்பினார்.

அனைத்துக் கட்சி தலைவர்களுடனான கூட்டத்தை பிரதமர் மோதி நடத்த வேண்டும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார்.

“வரும் மாதங்கள் எச்சரிக்கையுடன் கூடிய ராஜ்ஜிய நடவடிக்கையையும் கூட்டு தீர்வையும் கோரும். ஓரிரு வார்த்தைகள் பேசுவது இந்த தருணத்துக்கான மாற்றாக இருக்காது.” என்றார்.

மேலும், “நம் ஆயுதப் படைகள் மீது நிபந்தனையற்ற மரியாதை செலுத்துகிறோம். அவர்கள் நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். நாங்கள் அனைத்து நேரங்களிலும் 100% அவர்களுடன் உள்ளோம். ஆனால், பிரதமர் இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.” என கூறினார் ஜெய்ராம் ரமேஷ்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU