SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ், விகாஸ் பாண்டே
- பதவி, பிபிசி செய்திகள்
-
11 மே 2025
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தில் முக்கியத் திருப்பமாக, இரு நாடுகளுக்கும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமையன்று சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
நான்கு நாட்கள் தொடர்ந்த பதற்றமான எல்லை தாண்டிய மோதல்களுக்குப் பிறகு “முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கு” இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன.
அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதனத்தை ஏற்படுத்துவதில் பல்வேறு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இருப்பினும், சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அது மீறப்பட்டதாக இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டன. இது உடன்பாட்டின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.
பாகிஸ்தான் “தொடர்ந்து அத்துமீறல்கள்” செய்வதாக இந்தியா குற்றம் சாட்டும் நிலையில், தனது படைகள் “பொறுப்பையும் கட்டுப்பாட்டையும்” காட்டி சண்டை நிறுத்தத்தில் உறுதியுடன் இருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது.
சண்டை நிறுத்தம் தொடர்பாக டிரம்பின் அறிவிப்பு வருவதற்கு முன்பு, இரு அண்டை நாடுகளுக்கு இடையிலான சண்டை முழு போராக மாறுமோ என பலர் அஞ்சினர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட கொடிய தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீருக்குள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது இந்தியா.
அதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே வான் வழி சண்டைகள் அதிகரித்த நிலையில், தங்கள் விமானப்படை தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டின.
இரு நாடுகளும் கடுமையான சொற்போரிலும் ஈடுபட்டன. தாக்குதல்களைத் தடுக்கும் அதே வேளையில், எதிரி நாட்டிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் இரு நாடுகளும் தெரிவித்தன.

பட மூலாதாரம், Getty Images
வாஷிங்டன் டிசியில் உள்ள ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷனின் மூத்த ஆய்வாளரான தன்வி மதன், மே 9 அன்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருடன் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் பேசியது “முக்கியமான விஷயமாக இருந்திருக்கலாம்” என்று கூறுகிறார்.
“இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் பல்வேறு சர்வதேச நாடுகளின் பங்கு பற்றி நமக்குத் தெரியாதவை நிறைய உள்ளன. ஆனால் கடந்த மூன்று நாட்களில் அமெரிக்காவைத் தவிர பிரிட்டன் மற்றும் செளதி அரேபியாவும் பதற்றத்தைத் தணிக்க முயற்சித்தன என்பது தெளிவாகிறது” என்று அவர் கூறுகிறார்.
துருக்கி, செளதி அரேபியா மற்றும் அமெரிக்கா உட்பட “மூன்று டஜன் நாடுகள்” இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் நிறுத்தத்திற்கு முயற்சித்ததாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
“இந்த முயற்சி முன்னதாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தால் – அதாவது இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, இந்தியாவுக்கும் சில இழப்புகளை ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் சொல்லிக் கொண்டிருந்தபோதே, இரு தரப்பிடையே சமாதான பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருந்தால் மோதலை இன்னும் விரைவாகவே தணித்திருக்கலாம்” என்று தன்வி மதன் கூறுகிறார்.
இந்தியா-பாகிஸ்தான் நெருக்கடியைத் தணிக்க அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது இது முதல் முறை அல்ல.
முன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில், 2019 பதற்றத்தின்போது பாகிஸ்தான் தாக்குதலுக்கு அணு ஆயுதங்களை தயார்படுத்துவதாக ”இந்திய சகா” தன்னிடம் தொலைபேசியில் கூறியதாக எழுதியுள்ளார். அந்த இந்திய சகாவின் பெயரை மைக் பாம்பியோ குறிப்பிடவில்லை.

பட மூலாதாரம், Reuters
அணு ஆயுதப் போருக்கான வாய்ப்பு பற்றியும், பதற்றத்தை குறைப்பதில் அமெரிக்காவின் பங்கு பற்றியும் பாம்பியோ மிகைப்படுத்தியுள்ளார் என பாகிஸ்தானுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் அஜய் பிசாரியா கூறியிருந்தார்.
ஆனால் இந்த முறை நெருக்கடியைத் தணிப்பதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது என்பதில் சந்தேகமில்லை என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
“அமெரிக்கா மிக முக்கியமான மூன்றாம் தரப்பாக செயல்பட்டது. கடந்த முறை, அணு ஆயுதப் போரைத் தடுத்ததாக பாம்பியோ கூறினார். அது மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், அவர்கள் முதன்மையான பங்கை வகித்திருக்கலாம். ஒருவேளை இந்தியாவின் நிலைப்பாடுகளை பாகிஸ்தானிடம் தெளிவுபடுத்தியிருக்கலாம்,” என்று அஜய் பிசாரியா சனிக்கிழமையன்று பிபிசியிடம் கூறினார்.
ஆனால், தொடக்கத்தில் இந்த சண்டையில் அமெரிக்கா தலையிடாமல், தள்ளியிருந்தது
பதற்றங்கள் உச்சகட்டத்தில் இருந்தபோது வியாழக்கிழமையன்று பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், “அடிப்படையில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாத மோதலில் அமெரிக்கா தலையிடப் போவதில்லை” என்று கூறியிருந்தார்.
“இந்த நாடுகளை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. அடிப்படையில், இந்தியா பாகிஸ்தானிடம் பிடிவாதத்தைக் கொண்டுள்ளது. ஆயுதங்களைக் கீழே போடுமாறு இந்தியாவிடம் அமெரிக்கா சொல்ல முடியாது. பாகிஸ்தானிடமும் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்ல முடியாது. எனவே, ராஜ்ஜீய வழிகள் மூலம் இந்த விஷயத்தில் தொடர்ந்து முயற்சி செய்யப் போகிறோம்,” என்று ஜே.டி வான்ஸ் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.
இந்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதும் முக்கியமானது.
“இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இரு தலைவர்களையும் நன்கு அறிவேன், அவர்கள் பிரச்னையை சரிசெய்வதை பார்க்க விரும்புகிறேன்… அவர்கள் நிறுத்துவதை நான் பார்க்க விரும்புகிறேன், அவர்களால் இப்போது நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்” என கூறியிருந்தார் டிரம்ப் .

பட மூலாதாரம், Getty Images
லாகூரைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் எஜாஸ் ஹைதர் பிபிசியிடம் பேசியபோது, முந்தைய நிகழ்வுகளிலிருந்து தற்போது ஒரேயொரு வித்தியாசத்தைக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
“அமெரிக்காவின் பங்கு, கடந்த காலங்களில் இருந்ததைபோலதான் உள்ளது. ஆனால் ஒரேயொரு முக்கிய வித்தியாசம் மட்டுமே உள்ளது. இந்த முறை அவர்கள் உடனடியாக தலையிடுவதற்குப் பதிலாக நெருக்கடி ஏற்படும்வரை பார்த்துக் கொண்டிருந்தனர். நிலைமை எப்படி செல்கிறது என்பதைக் கண்டபோதுதான் அதை சமாளிக்க அவர்கள் தலையிட்டனர்,” என்று எஜாஸ் ஹைதர் பிபிசியிடம் கூறினார்.
மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டதை குறிக்கும் வகையில் பாகிஸ்தான் “இரட்டை சமிக்ஞைகளை” அனுப்பியது.
தேசிய கட்டளை ஆணையம் (NCA) கூட்டத்தை அறிவித்தது என்பது அணுசக்தியை பயன்படுத்துவது, ராணுவ ரீதியான பதிலடி கொடுப்பது என்பதற்கான தெளிவான நினைவூட்டல் என்று பாகிஸ்தானில் உள்ள நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தலையிட்ட நேரத்தில் இது நடந்தது.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் NCA, நாட்டின் அணு ஆயுதங்கள் தொடர்பான செயல்பாட்டு முடிவுகளையும் எடுக்கிறது.
“அமெரிக்கா தவிர்க்க முடியாத நாடு, அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ரூபியோவின் முயற்சிகள் இல்லாமல் இந்த சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருக்காது,” என்று கார்னகி எண்டோமென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் அமைப்பின் மூத்த ஆய்வாளரான ஆஷ்லே ஜே டெல்லிஸ் பிபிசியிடம் கூறினார்.
மேலும், இந்தியாவுடனான அமெரிக்காவின் ஆழமான உறவுகளும் இதற்கு உதவியது.
அமெரிக்க அதிபர் டிரம்புடனான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட உறவும், அமெரிக்காவின் விரிவான உத்தி மற்றும் பொருளாதார உறவுகள் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இரு எதிரிகளிடையே பதற்றத்தைத் தணிக்க அமெரிக்காவுக்கு உதவியாக இருந்தது.
2019 இல் புல்வாமா-பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு நடந்ததைப் போலவே, இந்த முறையும் மூன்று முக்கிய அமைதிப் பாதைகள் இருந்தன.
- அமெரிக்கா, பிரிட்டனின் அழுத்தம்
- இரு நாடுகளின் தலைநகரங்களுக்கும் வருகை தந்த செளதி வெளியுறவு அமைச்சர் மூலம் செளதி மத்தியஸ்தம்
- இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு (NSAs) இடையிலான நேரடி பேச்சுவார்த்தை
சர்வதேச அளவில் அமெரிக்காவின் முன்னுரிமைகள் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், முதலில் தலையிடாமல் இருந்தாலும் அமெரிக்கா, பின்னர் இந்தியா – பாகிஸ்தான் சண்டையில் தலையிட்டு பதற்றத்தை குறைத்தது.
தனது பங்கை அமெரிக்கா மிகைப்படுத்தி பேசினாலும் சரி, இந்தியாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவின் பங்கை குறைத்து பேசினாலும் சரி, இந்தியா– பாகிஸ்தான் மோதல்களில் அமெரிக்காவின் பங்கு எப்போதும் போலவே இப்போதும் முக்கியமானது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
இருப்பினும், சனிக்கிழமை நிகழ்வுகளுக்குப் பிறகு சண்டை நிறுத்தம் தொடர்வது குறித்த சந்தேகங்கள் நீடிக்கின்றன.
மேலும், இந்த சண்டை நிறுத்த புரிந்துணர்வானது இரு நாடுகளின் மூத்த ராணுவ அதிகாரிகளின் மத்தியஸ்தத்தால் செய்யப்பட்டது என்றும், அமெரிக்காவின் முயற்சியால் அல்ல என்றும் சில இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC