SOURCE :- BBC NEWS

விக்ரம் மிஸ்ரி, இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

12 மே 2025, 08:31 GMT

புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு சனிக்கிழமை மாலை ஒரு உடன்பாட்டை எட்டிய பிறகு, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் உள்ள தனது பயனர் கணக்கை தனிப்பட்ட ஒன்றாக (protected mode) ஞாயிற்றுக்கிழமை மாற்றியதைக் காண முடிந்தது.

அதாவது தனிப்பட்ட கணக்காக மாற்றப்பட்டுவிட்டதால், அவரது எக்ஸ் பக்கத்தில் இனி யாரும் கருத்து தெரிவிக்க முடியாது.

இந்தியா–பாகிஸ்தான் மோதலின் போது, விக்ரம் மிஸ்ரி இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஊடகங்களிடம் தொடர்ந்து முன்வைத்து வந்தார்.

தாக்குதல்களை நிறுத்துவதற்கான உடன்பாட்டை சனிக்கிழமை அறிவித்தவர் விக்ரம் மிஸ்ரி தான்.

இதனையடுத்து, சமூக ஊடகங்களில் பலரும் அவரை குறிவைத்து கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிய பின்னர், பலர் அவருக்கு ஆதரவாகப் பதிவிடத் தொடங்கினர்.

“வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து ட்ரோல்கள் வருவதைப் பார்ப்பது உண்மையிலேயே அருவருப்பானது. அவர் தொழில்முறை நெறிகளை கடைப்பிடிக்கும் ஒருவர். அமைதியாக, தெளிவாக, சமநிலையுடன் செயல்பட்டு, சரியாக பதிலளிக்கக் கூடியவர்” என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் நவ்தீப் சூரி பதிவிட்டுள்ளார்.

விக்ரம் மிஸ்ரி, இந்தியா - பாகிஸ்தான்

விக்ரம் மிஸ்ரிக்கு ஆதரவு

விக்ரம் மிஸ்ரி, இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

“ஆனால் அவரது இந்த குணங்கள் நம் சமூகத்தில் சிலருக்குப் போதாது, இது வெட்கக்கேடானது” என்று நவ்தீப் சூரி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“விக்ரம் மிஸ்ரி வெளியுறவு அமைச்சகத்திற்குத் தலைமை தாங்கும் ஒரு மரியாதைக்குரிய ராஜதந்திரி. உங்கள் கற்பனையில் நீங்கள் வேறு இந்தியா-பாகிஸ்தான் வீடியோ கேம் விளையாடுகிறீர்கள் என்பதற்காக அவரது குடும்பத்தினரை கேலி செய்வது மலிவானது மட்டுமல்ல, அத்தகைய மோசமான மனநிலையில் இல்லாமலும் இந்த நாடு செயல்பட முடியும் என்பதைக் காட்டுகிறது” என்று வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர் இந்திராணி பாக்சி வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த மோதல் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சிறந்த வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை கேலி செய்பவர்கள், மனிதர்களாக இருந்தாலும், குப்பை போன்றவர்கள்”என்று மூத்த பத்திரிகையாளர் வீர் சங்வி பதிவிட்டுள்ளார்.

ஏஐஎம்ஐஎம் (AIMIM) எம்பி அசாதுதீன் ஒவைசியும் விக்ரம் மிஸ்ரி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“விக்ரம் மிஸ்ரி கண்ணியமானவர், நேர்மையானவர். அவர் நாட்டுக்காக கடினமாக உழைப்பவர். அயராது உழைக்கும் ராஜதந்திரி” என்று அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

“நமது அரசு ஊழியர்கள் நிர்வாகத்தின் கீழ் பணிபுரிகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டை வழிநடத்தும் நிர்வாகத்தின் அல்லது அரசியல் தலைமையின் முடிவுகளுக்கு அவர்களை இலக்காக்கக் கூடாது” என்றும் ஓவைசி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கேரள காங்கிரஸ் பிரிவும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.

கடந்த வாரம், ஒரு ராணுவ வீரரின் மனைவியான ஹிமான்ஷி நர்வால், “வெறுப்பையும் வன்முறையையும் பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததற்காக” சமூக ஊடகங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டதாக அப்பதிவில் கூறப்பட்டிருந்தது.

“மோதி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் அல்லது ஜெய்சங்கர் அல்லாமல் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த முடிவை எடுத்தவர் அவர்தான் என்பது போல, இந்த மக்கள் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை குறிவைக்கிறார்கள்” என்று கேரள காங்கிரஸ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

விக்ரம் மிஸ்ரி யார்?

விக்ரம் மிஸ்ரி, இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

இந்திய வெளியுறவு அமைச்சக வலைத்தளத்தின்படி, விக்ரம் மிஸ்ரி ஜூலை 15, 2024 அன்று வெளியுறவுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

1989 ஆம் ஆண்டு விக்ரம் மிஸ்ரி இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்தார்.

ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்திய தூதரகங்களில் பணி புரிந்ததுடன், வெளியுறவு அமைச்சகத்தில் தூதராகவும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் விக்ரம் மிஸ்ரி.

அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தொடர்பான விவகாரங்களைக் கையாளும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் குழுவிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

இது தவிர, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர்களாக இருந்த ஐ.கே.குஜ்ரால் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோரின் குழுக்களிலும் விக்ரம் மிஸ்ரி இடம் பெற்றிருந்தார்.

பிரதமர் அலுவலகத்திலும் விக்ரம் மிஸ்ரி இணைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

ஐ.கே. குஜ்ரால், மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோதி ஆகிய மூன்று இந்தியப் பிரதமர்களின் தனிச் செயலாளராகவும் விக்ரம் மிஸ்ரி பணியாற்றியுள்ளார்.

பிரஸ்ஸல்ஸ், துனிஸ், இஸ்லாமாபாத் மற்றும் வாஷிங்டன் டிசி ஆகிய இடங்களிலும் பணியாற்றியுள்ள விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய துணை தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு ஸ்பெயினுக்கான இந்தியத் தூதராகவும், 2016 ஆம் ஆண்டு மியான்மருக்கான இந்தியத் தூதராகவும், 2019 ஜனவரியில் சீனாவிற்கான இந்தியத் தூதராகவும் மிஸ்ரி நியமிக்கப்பட்டார். சீனாவில், அவர் 2021 வரை பணியாற்றினார்.

சமீபத்தில் இந்தியாவின் மூலோபாய விவகாரங்களுக்கான துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றி வந்த விக்ரம் மிஸ்ரி, 2022 ஜனவரி 1 முதல் 2024 ஜூன் 30 வரை அந்த பதவியை வகித்தார்.

ஸ்ரீநகரில் பிறந்த விக்ரம் மிஸ்ரி, அவரது ஆரம்பக் கல்வியை ஸ்ரீநகர் மற்றும் உதம்பூரில் கற்றார்.

குவாலியரில் உள்ள சிந்தியா பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில் வரலாற்றில் கௌரவப் பட்டம் பெற்ற விக்ரம் மிஸ்ரி, ஜாம்ஷெட்பூரில் உள்ள XLRI-யில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

அரசாங்கப் பணியில் இணைவதற்கு முன்பு, விளம்பரம் மற்றும் விளம்பரப் படத் தயாரிப்புத் துறையிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

விக்ரம் மிஸ்ரி இந்தி, ஆங்கிலம் மற்றும் காஷ்மீரி மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். அதேசமயம், அவர் பிரெஞ்சு மொழியையும் கற்றுள்ளார்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC