SOURCE :- BBC NEWS

ஜக்ஜித் சிங் தல்லேவால், விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், SKM NP

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

டிசம்பர் 19, மதியம், கானௌரி எல்லையில் மேடை நிகழ்ச்சிகள் திடீரென நிறுத்தப்பட்டன. சில நிமிடங்களில் மேடை காலியானது.

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்த விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மருத்துவர்கள் உட்பட ஒட்டுமொத்த மருத்துவப் பணியாளர் குழுவும் அங்குமிங்கும் ஓடியது.

சிலர் கோபமாகவும், சிலர் உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும் காணப்பட்டனர். சிறிது நேரம் கழித்து, குர்பானி மேடையில் இருந்து முழக்கமிடத் தொடங்குகிறது. தல்லேவால் குணமடைய, கூட்டத்தினர் பிரார்த்தனை செய்வதையும் காண முடிந்தது.

பிற்பகலில் பாரதீய கிசான் யூனியன் (சித்துப்பூர்) மாநில பொதுச் செயலாளர் காக்கா சிங் கோத்ரா, மேடையில் பேசும் போது, ஜக்ஜித் சிங் தல்லேவாலின் இரத்த அழுத்த அளவு மிகவும் குறைந்துவிட்டதாகவும், அவர் சிறிது நேரம் சுயநினைவு இழந்ததாகவும் கூறினார். ஆனால் தற்போது அவரின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் உள்ளது.

ஜக்ஜித் சிங் தல்லேவால், விவசாயிகள் போராட்டம்

தல்லேவாலின் விவசாய இயக்கப் பயணம்

ஜக்ஜித் சிங் தல்லேவால், விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

பாரதிய கிசான் யூனியனின் (சித்துபூர்) மாநிலத் தலைவரும், ஐக்கிய கிசான் மோர்ச்சாவின் தலைவருமான ஜக்ஜித் சிங் தல்லேவால், பஞ்சாபின் ஃபரித்கோட் மாவட்டத்தில் உள்ள தல்லேவால் கிராமத்தில் வசிப்பவர்.

70 வயதான ஜக்ஜித் சிங் தல்லேவால், புற்றுநோயால் அவதிப்பட்டாலும், விவசாயிகள் போராட்டத்தின் முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளார்.

பாரதிய கிசான் யூனியனின் (சித்துப்பூர்) மாநில பொதுச் செயலாளரான காக்கா சிங் கோட்ராவின் கூற்றுப்படி, தல்லேவால் 1982-83 ல் கிசான் யூனியனில் செயல்படத் தொடங்கினார்.

ஜக்ஜித் சிங் தல்லேவால், விவசாயிகள் போராட்டம்

மேலும் ” கடந்த நாற்பது ஆண்டுகளாக கிசான் யூனியனில் தல்லேவால் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளார்” என்றும் காக்கா சிங் கோட்ரா கூறினார்.

தேசிய அளவிலும் பல போராட்டங்களில் ஜக்ஜித் சிங் தலேவால் முக்கிய பங்கு வகித்துள்ளார். சுமார் 17 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் தல்லேவால் , விவசாயிகள் போராட்டத்தின் போது பலமுறை சிறைக்குச் சென்றுள்ளனர். இவரது மனைவி கடந்த ஜனவரி 27ஆம் தேதி காலமானார்.

விவசாய சட்டங்களுக்கு எதிரான இயக்கத்தில் தல்லேவாலின் பங்கு

ஜக்ஜித் சிங் தல்லேவால், விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் நடந்த விவசாயிகள் இயக்கத்தின் போராட்டத்தின் போது ஜக்ஜித் சிங் தல்லேவால் தேசிய அளவில் முக்கியமான விவசாயத் தலைவராக உருவெடுத்தார்.

இந்த இயக்கத்தின் போது, ​​பல விவசாயத் தலைவர்கள் ஏதோ ஒரு வகைகளில் சர்ச்சைகளில் சிக்கினர், ஆனால் அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களில் அதுபோன்ற சர்ச்சைகளில் சிக்காத ஒருவராக தல்லேவால் இருந்தார்.

கடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட விவசாயத் தலைவர்களை தல்லேவால் பகிரங்கமாக எதிர்த்தார்.

ஜக்ஜித் சிங் தல்லேவால், விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், குவீர் சிங்/பிபிசி

தல்லேவாலின் போராட்டம் விவசாயிகளின் போராட்டத்திற்கு உயிர் கொடுத்தது எப்படி ?

கிசான் மஸ்தூர் மோர்ச்சாவும் ஐக்கிய கிசான் மோர்ச்சாவும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக பிப்ரவரி 13, 2024 அன்று ‘கிசான் அந்தோலன்-2.0’ இன் கீழ் டெல்லி செல்ல அறிவித்திருந்தன.

ஆனால் அவர்களின் வாகனங்கள், ஷம்பு மற்றும் கானௌரியில் உள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லையில் நிறுத்தப்பட்டன.

இந்த நேரத்தில் விவசாயிகளுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே பல மோதல்கள் நடந்தன, அதில் சுபாகரன் சிங் எனும் ஒரு இளைஞர் உயிரிழந்தார். மேலும் பல இளைஞர்களும் மற்றும் விவசாயிகளும் காயமடைந்தனர்.

கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டம், நவம்பர் 26ஆம் தேதி முதல் விவசாயிகளின் தலைவர் ஜக்கித் சிங் தலேவால் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தால் தற்போது மீண்டும் விவாதமாக மாறியுள்ளது.

ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உண்ணாவிரதப் போராட்டம், விவசாயிகளின் இயக்கத்தில் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்று ஆர்வலர் பல்தேவ் சிங் சிர்சா கூறுகிறார்.

அவர் கூறுகையில், “இந்த உண்ணாவிரதத்தின் விளைவாகத்தான் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்க மாநிலத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் உட்பட மத தலைவர்களும் முன் வருகிறார்கள்” என்றார்.

விவசாயிகள் தலைவ ர் சத்னம் சிங் பெஹ்ருவின் கூற்றுப்படி, தல்லேவாலின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாகவே விவசாயிகளின் போராட்டத்தில் மக்கள் ஆழமாக ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

பல இடங்களில் ரயில்களை நிறுத்துவதற்கான அழைப்பை செயல்படுத்தும் அளவுக்கு அவர்கள் செயல்படத் தொடங்கியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மோதலின் முக்கிய மையமாக மாறிய கானௌரி எல்லை

ஜக்ஜித் சிங் தல்லேவால், விவசாயிகள் போராட்டம்

‘கிசான் அந்தோலன் 2.0’ திட்டத்தின் ஆரம்ப நாட்களில், ஷம்பு எல்லை மோதலின் மையப் புள்ளியாக இருந்தது, ஆனால் ஜக்ஜித் சிங் தல்லேவால் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய பிறகு, கானௌரி எல்லை விவாதப் புள்ளியாக மாறத்தொடங்கியது.

விவசாயி ஹர்ஜித் சிங், கானௌரி எல்லையிலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் வசிக்கிறார். தல்லேவால் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கிய தினத்திலிருந்து, இந்த போராட்டத்தின் வேகம் அதிகரித்துள்ளது என்று குறிப்பிடுகின்றார். விவசாயிகளின் வாகனங்கள் இப்போது 4-5 கிலோமீட்டர் நீளம் வரை அணிவகுத்து நிற்கின்றதாகவும் அவர் தெரிவித்தார்.

கானௌரி எல்லைக்கு வரும் இளைஞர்களிடம் பேசியபோது, ​​சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு கானௌரி எல்லையை அடைந்ததாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

பாட்டியாலா மாவட்டத்தைச் சேர்ந்த சுக்செயின் சிங் என்ற இளைஞர் கூறும்போது, ​​”இவ்வளவு வயதான முதியவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும்போது, இளைஞர்களாகிய எங்களால் ஏன் ஏதாவது செய்ய முடியாது ?” என சுக்செயின் சிங் கேட்கிறார்.

வரலாற்றில் உண்ணாவிரதங்கள், மரணங்கள் மற்றும் வெற்றிகள்

ஜக்ஜித் சிங் தல்லேவால், விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

இயக்கத்தின் தலைவர் ஒருவர் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருப்பது இது முதல் முறையல்ல. உண்மையில், தலைவர்கள் ஒன்றிணைந்த கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன.

1920களில், விவசாயிகள் பிரச்சனைகளுக்காகப் போராடிய பிரஜா மண்டல் இயக்கத்தின் தலைவரான சேவா சிங் லக்ரிவாலா, சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.

பிரஜா மண்டல் கட்சியின் சில முக்கிய கோரிக்கைகள் நடுத்தர வர்க்க விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பானவை.

ஜனவரி 20, 1935 அன்று, நள்ளிரவில் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது சேவா சிங் லக்கிரிவாலா இறந்தார்.

ஷாஹீத் பகத் சிங்கின் தோழர் ஜதின் தாஸ் 63 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு லாகூர் சிறையில் இறந்தார்.

பஞ்சாபின் முக்கியமான சீக்கியத் தலைவரான தர்ஷன் சிங் ஃபெருமான், பஞ்சாப் மாகாணத்தின் முக்கியமான கோரிக்கைகளுக்காக ஆகஸ்ட் 15, 1969 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த அவர் அக்டோபர் 27, 1969 அன்று இறந்தார்.

ஒரு அமைப்பின் தலைவரால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டு, அரசுக்கு அழுத்தம் கொடுத்து கோரிக்கைகளை ஏற்று அறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வுக்கான உதாரணங்கள் வரலாற்றில் ஏராளம் உண்டு.

கானௌரி எல்லையில் உள்ள விவசாயிகளின் அச்சம் என்ன?

ஜக்ஜித் சிங் தல்லேவால், விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

கானௌரி எல்லையில் நிற்கும் விவசாயிகள், ஜக்ஜித் சிங் தல்லேவால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டால், அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைகளைத் தீர்க்க, மருத்துவர்கள் நேரடியாக திரவங்கள் அல்லது மருந்துகளை அவருக்கு செலுத்தலாம் என்று கருதுகின்றனர்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உண்ணாவிரதம் இருப்பவர் காவல்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். முன்னதாக நவம்பர் 26ஆம் தேதி, தல்லேவாலை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக காவல்துறையினர் தல்லேவாலை விடுவித்தனர்.

2015-ம் ஆண்டு சிறைபிடிக்கப்பட்ட விவசாயிகளை விடுவிக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த சூரத் சிங் கல்சா, சுமார் 8 ஆண்டுகளாக லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால், ஜக்ஜித் சிங் தல்லேவாலை எந்தச் சூழ்நிலையிலும் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்ற அனுமதிக்க மாட்டோம் என்று விவசாயிகளின் தலைவர் பல்தேவ் சிங் சிர்சா உறுதியாகக் கூறுகின்றார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU