SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்
(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவெடுத்துள்ளதாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் என, ஏ.என்.ஐ. செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியில் இன்று பிரதமர் மோதி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தலைவர்கள் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
ஏற்கெனவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்பொழுது, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது.
தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோதிக்கு அதிமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது?
கடந்த 1865ஆம் ஆண்டில் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமான வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முறையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது.
கடந்த 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிகள் விவரம் சேகரிக்கப்படவில்லை. ஆனால், பட்டியல் பிரிவில் இருக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. மற்ற சாதியினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை.

ஆகவே, மற்ற சாதியினரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை.
இந்தியாவில் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011இல் மேற்கொள்ளப்பட்டது. அதற்கடுத்த கணக்கெடுப்பு, 2021இல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தருணத்தில் கோவிட் பரவல் இருந்த காரணத்தால், மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது மேற்கொள்ளப்படும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU