SOURCE :- BBC NEWS

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம், DMK/www.dmk.in

‘அமைச்சராக இல்லை என்பதால் தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவருக்கு ஜாமீன் வேண்டுமா… அமைச்சர் பதவி வேண்டுமா?’ என, ஏப்ரல் 23 அன்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

செந்தில் பாலாஜியின் கருத்தை அறிவதற்கு ஏப்ரல் 28 வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. இதன் காரணமாக, அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கேற்ப, சனிக்கிழமையன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை, சட்ட அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

தி.மு.க அமைச்சர்களில் செந்தில் பாலாஜியை போலவே, மேலும் ஏழு அமைச்சர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் மீதான வழக்குகள் என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜி:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம், V.Senthilbalaji/Facebook

தி.மு.க அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, 2011-2015 அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது, போக்குவரத்துத்துறையில் இளநிலை உதவியாளர், ஓட்டுநர், நடத்துநர் ஆகிய பணியிடங்களில் செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகள் சிலர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில், செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மற்றும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதன் விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார். இதையேற்று, 2021 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை நிறுத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதே வழக்கில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறி 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறையில் இருந்தபோதும் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். இதன் காரணமாக ஜாமீன் வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

2024 பிப்ரவரி மாதம் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார்.

அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யுமாறு வித்யா குமார் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின்படி அடிப்படை உரிமை மீறப்பட்டதால் ஜாமீன் வழங்கினோம். 2 நாட்களுக்குள் அவர் அமைச்சர் ஆனதை ஏற்க முடியாது’ எனக் கூறியது.

மேலும், ‘ஜாமீன் வேண்டுமா.. அமைச்சராக நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டது.

இதனால் பதவியை ராஜினாமா செய்வதைத் தவிர செந்தில் பாலாஜிக்கு வேறு வழியில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. அதற்கேற்ப, சட்டப்பேரவையில் சனிக்கிழமையன்று செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

‘உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணையின்றி சிறை செல்ல நேரிடும்’ என்ற மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்வதாக இருந்தது.

இதன் மீதான விவாதம் ஏப்ரல் 29 அன்று நடைபெறும்போது, செந்தில் பாலாஜியால் பதில் அளிக்க முடியாது என்பதால் இப்படியொரு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

அமைச்சர் துரைமுருகன்:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம், @katpadidmk/X

தி.மு.க அமைச்சரவையில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன், 1996-2001 தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இதே காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 3.92 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, அவர் மீது 2002 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

2007 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து 2013 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு சுமார் 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.

கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி தள்ளுபடி செய்யுமாறு துரைமுருகன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்த வழக்கில், ஏப்ரல் 23 ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பித்த சென்னை சென்னை உயர் நீதிமன்றம், வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.

மேலும், துரைமுருகன் மீதான விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இதுதவிர, 2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இருந்து துரைமுருகனும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

ஏப்ரல் 24 ஆம் தேதியன்று இந்த உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமைச்சர் பொன்முடி:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம், KPonmudi/Facebook

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2021 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து, அமைச்சர் பொன்முடி மீதான சர்ச்சைகள் அணிவகுத்தன.

மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்தை விமர்சித்தது, அரசு நிகழ்ச்சிகளில் பொதுமக்களை விமர்சித்தது எனத் தொடர்ந்து பொன்முடியின் பேச்சு விமர்சனத்துக்குள்ளானது.

தி.மு.க பொதுக்குழு கூட்டத்திலேயே இதுதொடர்பாக தனது அதிருப்தியை முதலமைச்சர் ஸ்டாலின் வெளிக்காட்டினார். இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.

அப்போது, சைவம், வைணவம் ஆகிய மதங்களை பாலியல் தொழிலாளிகளுடன் ஒப்பிட்டு அவர் பேசினார்.

பொன்முடியின் பேச்சு இணையத்தில் பரவியது. இதையடுத்து, பொன்முடியை தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், “சைவ, வைணவ சமயங்கள் குறித்த பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.

“இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவில்லை என்றால் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறி ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

மீண்டும் வழக்கு விசாரணையின்போது, ‘கட்சியே நடவடிக்கை எடுததும்கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை’ எனக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “பொன்முடியின் பேச்சு வெறுப்பு வரம்புக்குள் வருகிறது” எனக் கூறினார்.

வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதற்காக பதிவுத் துறைக்கு தான் உத்தரவிடுவதாகவும் ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.

இதுதவிர, 1996-2001 தி.மு.க ஆட்சியின்போது போக்குவரத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது 2002 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

அவர் 1.36 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு வேலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை மாவட்டத்தின் நிர்வாக நீதிபதிகள் வேறு மாவட்டத்துக்கு மாற்ற முடியுமா?’ எனக் கேள்வி எழுப்பி, இதற்கு அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார்.

‘பொன்முடி மீதான வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற முடியும் என்றால், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கிலும் எந்த விசாரணையும் நடத்த முடியாது’ எனக் கூறி இறுதி விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம், Facebook

தி.மு.க ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 1996-2001 மற்றும் 2006-2011 தி.மு.க ஆட்சியிலும் அமைச்சராக பதவி வகித்தார்.

இந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட மூன்று பேரையும் விடுவிதது உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் ஒழிப்புத் துறை சார்பில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது பன்னீர்செல்வம் தரப்பில் சில வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அறக்கட்டளை சொத்துகளையும் குடும்ப சொத்துகளையும் வருமானத்துக்கு அதிகமான சொத்துகளாக ஊழல் ஒழிப்புத் துறை கணக்கிட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 25) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன் ஆகியோரை விடுவித்து கடலுர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் கடலூர் நீதிமன்றம் முடிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம், Facebook

2006-2011 தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76,40,433 அளவு சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.

2012 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தன்னையும் தன் மனைவியையும் விடுவிக்குமாறு தங்கம் தென்னரசு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையேற்று 2022 ஆம் ஆண்டு இருவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து ஊழல் ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.

வழக்கை மறுவிசாரணை நடத்துமாறு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம், Facebook

தி.மு.க ஆட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கடந்த 2006-2011 தி.மு.க அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.44,56,067 ரூபாய் சொத்து சேர்த்ததாக ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

2012 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு விடுவித்தது.

தங்கம் தென்னரசு வழக்குடன் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராமச்சந்திரன் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றமும் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் மா.சுப்ரமணியன்:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம், @Subramanian_ma/X

2006-2011 தி.மு.க ஆட்சியில் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த மா.சுப்ரமணியன், தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மனையை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துவிட்டதாக, குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இந்தப் புகார் தொடர்பாக மா.சுப்ரமணியன் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவானது. இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மா.சுப்ரமணியன் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், நிலத்தை 1998 ஆம் ஆண்டே தான் வாங்கிவிட்டதாகவும் சுமார் 20 ஆண்டுகள் கழித்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

நிலத்தை வாங்கியதன் மூலம் சிட்கோ மற்றும் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை எனவும் மோசடி நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கும் இடமில்லை என மா.சுப்ரமணியன் கூறியிருந்தார்.

வழக்கில் காவல்துறை மற்றும் புகார்தாரர் பார்த்திபன் ஆகியோரின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மா.சுப்ரமணியனின் மனுவை கடந்த மார்ச் 28 ஆம் தேதின்று தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

மா.சுப்ரமணியன் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம், Facebook

தி.மு.க அரசில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமி, கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

வீட்டு வசதி வாரியத்தின் நிலத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு முறைகேடாக வழங்கியதாக, ஐ.பெரியசாமி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் ஐ.பெரியசாமி மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்,

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, ஜூலை மாதத்துக்குள் வழக்கின் விசாரணையை முடிக்குமாறு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கும் தடை விதித்துள்ளது.

‘தடை உத்தரவு தொடரும்’ என கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU