SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
சிந்து நதி மற்றும் அதன் இரு கிளை நதிகளும் பாகிஸ்தானுக்குள் நுழைவதைத் தடுப்பது இந்தியாவுக்கு சாத்தியமா இல்லையா என்ற கேள்வி பலராலும் கேட்கப்படுகிறது.
கடந்த செவ்வாயன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதிப்படுகையில் உள்ள ஆறு நதிகளின் நீர்ப் பங்கீட்டை நிர்வகிக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. அதன்பிறகு பலருக்கும் இந்த கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 1960ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அணு ஆயுதத்தை வைத்திருக்கும் இந்த இரு அண்டை நாடுகளுக்கு இடையில் அதன்பிறகு இரண்டு போர்கள் நடந்தநிலையிலும் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படாமல் நிலைத்து நின்றது. எல்லை தாண்டிய நீர் மேலாண்மைக்கு சர்வதேச அளவில் ஓர் எடுத்துக்காட்டாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்பட்டது.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டும் இந்தியா, அதற்கு எதிராக எடுத்துள்ள பல நடவடிக்கைகளில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதும் ஒன்று.
ஆனால், இந்தியாவின் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுக்கும் பாகிஸ்தான், இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக எதிர் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
அத்துடன், நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது “ஒரு போர்ச் செயலாகக் கருதப்படும்” என்றும் கூறியுள்ளது.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ், சிந்து நதிப் படுகையின் கிழக்குப் பகுதியின் சட்லெஜ், ராவி, பியாஸ் ஆகிய மூன்று நதிகள் இந்தியாவுக்கும், மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்றின் 80% பாகிஸ்தானுக்கும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் ஒப்பந்தம் மீறப்படுவது தொடர்பான குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் வைத்துள்ளது.
இந்தியாவின் சில நீர் மின்சாரத் திட்டங்களும், நீர் உள்கட்டமைப்புத் திட்டங்களும் நதியின் நீரோட்டத்தைக் குறைக்கும் என்றும், இதுபோன்ற திட்டங்கள் நதிநீர் ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானின் விவசாயத்தில் 80 சதவிகிதத்திற்கு அதிகமான அதிகமானவையும், அந்நாட்டின் நீர்மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கும் சிந்து நதிப் படுகையைச் சார்ந்துள்ளது என்பது பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள கவலை.
இதற்கிடையே காலநிலை மாற்றம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, பாசனம், குடிநீர் முதல் நீர் மின்சாரம் வரை மாறி வரும் தேவைகளைக் காரணம் காட்டி, ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க இந்தியா சமீப காலமாக அழுத்தம் கொடுத்து வருகிறது.
உலக வங்கியால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைப் பின்பற்றுவது தொடர்பான குற்றச்சாட்டுகளை பரஸ்பரம் சுமத்தி வந்திருந்தாலும், இந்த ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அறிவிப்பது இதுவே முதல் முறை.
குறிப்பாக நதியின் மேல்நிலையை கொண்டிருப்பதால் நிலவியல் ரீதியாகச் சாதகமான இடத்தில் இருக்கும் இந்தியா இந்த இடைநிறுத்தத்தை அறிவித்திருக்கிறது.
பாகிஸ்தானுக்குள் செல்லும் நீரை இந்தியாவால் தடுக்க முடியுமா?

பட மூலாதாரம், EPA
இரு நாடுகளுக்கு இடையிலான நதிநீர் உடன்படிக்கையை நிறுத்தப்படுவதன் உண்மையான அர்த்தம் என்ன? பாகிஸ்தானின் வாழ்வாதரத்தைப் பாதிக்கும் வகையில் சிந்து நதியின் நீரை இந்தியா தடுத்து நிறுத்துவதோ அல்லது திருப்பிவிடுவதோ சாத்தியமா? உண்மையில் இந்தியாவில் அப்படிச் செய்துவிட முடியுமா? இவை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நுணுக்கமான கேள்விகள்.
நதியில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் காலத்தில், மேற்கு ஆறுகளில் பாயும் பல்லாயிரக்கணக்கான பில்லியன் கன மீட்டர் அளவிலான தண்ணீரைத் தடுத்து நிறுத்துவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனென்றால், இவ்வளவு அதிக அளவிலான நீரைச் சேமித்து வைக்கத் தேவையான மிகப்பெரிய சேமிப்பு உள்கட்டமைப்போ, நீரின் போக்கை திருப்பிவிடத் தேவையான விரிவான கால்வாய்களோ இந்தியாவிடம் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
“இந்தியாவின் உள்கட்டமைப்பு பெரும்பாலும் ஆற்றின் வழியாக இயங்கும் நீர்மின் நிலையங்களாகும். அவற்றுக்குப் பெரிய அளவிலான நீர் சேமிப்புத் தேவை இல்லை” என்று அணைகள், ஆறுகள் மற்றும் மக்கள் தொடர்பான தெற்காசிய வலையமைப்பின் (South Asia Network on Dams, Rivers and People) பிராந்திய நீர்வள நிபுணர் ஹிமான்ஷு தாக்கர் கூறினார்.
இத்தகைய நீர்மின் நிலையங்கள், அதிக அளவு தண்ணீரைத் தடுத்து நிறுத்தாமல், ஓடும் நீரின் சக்தியை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
போதுமான உள்கட்டமைப்பு இல்லாததால், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் ஜீலம், செனாப் மற்றும் சிந்து நதிகளில் 20% பங்கைக்கூட இந்தியாவால் முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. நீர் சேமிப்புக் கட்டமைப்புகளை உருவாக்க இந்தியா விரும்பினாலும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் எதிர்க்கிறது.
தற்போது, உள்கட்டமைப்புக்குத் தடையாக இருந்த நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியிருக்கும் இந்தியா, பாகிஸ்தானுக்கு தெரிவிக்காமல் தற்போதுள்ள உள்கட்டமைப்பை மாற்றியமைக்கலாம் அல்லது புதிய கட்டமைப்புகளை நிர்மாணித்து அதன் மூலம் அதிக நீரைத் தடுத்து நிறுத்தலாம் அல்லது திருப்பிவிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“அதுமட்டுமல்ல, கடந்த காலங்களைப் போலன்றி, இந்தியா இப்போது தனது கட்டமைப்புத் திட்ட ஆவணங்களை பாகிஸ்தானுக்குடன் பகிர்ந்துகொள்ள வேண்டியது கட்டாயமில்லை” என்று ஹிமான்ஷு தாக்கர் கூறுகிறார்.
பாகிஸ்தானில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு என்ன?

பட மூலாதாரம், EPA
இருந்தபோதிலும், கடினமான நிலப்பரப்பு மற்றும் சில நீர் கட்டமைப்புத் திட்டங்களுக்கு உள்நாட்டில் இருக்கும் எதிர்ப்பு உள்படப் பல சவால்களால், சிந்து நதிப் படுகையில் நீர் உள்கட்டமைப்புக் கட்டுமானம் போதுமான அளவு முன்னேறவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் ஆயுததாரிகளின் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதிப் படுகையில் பல அணைகள் மற்றும் நீர் சேமிப்புத் திட்டங்களின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதாக இந்திய நீர்வள அமைச்சக அதிகாரிகள் பிபிசியிடம் கூறியிருந்தனர்.
அத்தகைய திட்டங்களின் நிலை குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் இல்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா, தற்போதிருக்கும் உள்கட்டமைப்புகளின் உதவியுடன் பாகிஸ்தானுக்கு செல்லும் நீரின் போக்கைக் கட்டுப்படுத்தத் தொடங்கினால், நீர்வரத்து குறைந்திருக்கும் வறட்சியான காலங்களில் பாகிஸ்தானுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
“வறட்சியான காலங்களில் நிலைமை எப்படியிருக்கும் என்பது முக்கியமான கவலையாக இருக்கும். சிந்து நதிப் படுகை முழுவதும் நீர்வரத்து குறைவாக இருக்கும்போது, நீர் சேமிப்பு முக்கியத்துவம் பெறும்” என்று டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற சுற்றுச்சூழல் கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளின் உதவிப் பேராசிரியர் ஹசன் எஃப் கான் டாவ்ன் நாளிதழில் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
வெள்ள முன்னறிவிப்பு, நீர்ப்பாசனம், நீர் மின்சாரம் மற்றும் குடிநீருக்கான திட்டமிடலுக்கு அடிப்படையான நீர்நிலைத் தரவுகளை இந்தியா பாகிஸ்தானுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் அம்சங்களில் ஒன்று.
இந்தியா ஒப்பந்தத்தை இடைநிறுத்தினால், பாகிஸ்தானுடன் வெள்ளம் தொடர்பான தரவுகளை நிறுத்தலாம் என்று சிந்து நதிநீர் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் பிரதீப் குமார் சக்சேனா, பிடிஐ செய்தி முகமையிடம் பேசுகையில் தெரிவித்தார்.
ஜூன் மாதம் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் சிந்து நதிப் படுகை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. ஆனால், இந்தியா ஏற்கெனவே வெள்ளம் தொடர்பான தகவல்களைக் குறைவான அளவிலேயே பகிர்வதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
“இந்தியா அண்மையில் நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தும் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே, சுமார் 40% தரவை மட்டுமே பகிர்ந்து கொண்டிருந்தது” என்று சிந்து நதிநீர் ஆணையத்திற்கான பாகிஸ்தானின் முன்னாள் கூடுதல் ஆணையர் ஷிராஸ் மேமன் பிபிசி உருதுவிடம் கூறினார்.
இப்பகுதியில் நீர் தொடர்பான பதற்றம் ஏற்படும்போது, மேல்நிலை நீரோட்டப் பாதையில் இருக்கும் நாடு கீழ்நிலையில் இருக்கும் நாட்டிற்கு எதிராகத் தண்ணீரை “ஆயுதமாக” பயன்படுத்த முடியுமா என்பது மற்றொரு முக்கியமான பிரச்னை.
இதை “நீர் வெடிகுண்டு” என்று அழைக்கின்றனர். மேல்நிலையில் உள்ள நாடு தற்காலிகமாக தண்ணீரைத் தடுத்து நிறுத்தி, பின்னர் திடீரென அதை விடுவித்து, கீழ்நிலை நாட்டிற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
இந்தியா நதிநீரை ஆயுதமாகப் பயன்படுத்துமா?

பட மூலாதாரம், ANI
இந்தியாவால் அதை செய்யமுடியுமா?
சிந்து நதிப் படுகையில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் அணைகள் பாகிஸ்தான் எல்லையிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், நீரைத் தடுத்து வைத்து எதிர்பாராத நேரத்தில் திறந்துவிடுவது முதலில் இந்தியாவையே பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்
ஏனென்றால், இந்திய பகுதிகளே முதலில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இருப்பினும், நீர்த்தேக்கங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை முன்னறிவிப்பு இல்லாமல் இந்தியா வெளியேற்றக்கூடும், இது கீழ்நிலை நாடான பாகிஸ்தானுக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.
சிந்து போன்ற இமயமலை ஆறுகளில் வண்டல் மண் அதிகளவில் இருக்கும். அவை அணைகள் மற்றும் தடுப்பணைகளில் விரைவாகக் குவிகின்றன. இந்த வண்டல் மண்ணை திடீரென வெளியேற்றுவது என்பது கீழ்நிலையில் இருக்கும் பகுதிகளில் கணிசமான சேதத்தை ஏற்படுத்தும்.
இதன் பின்னணியின் கவனிக்கத்தக்க முக்கிய விஷயமும் இருக்கிறது. பிரம்மபுத்ரா படுகையில் இந்தியா கீழ்நிலை நாடாகவும், சீனா மேல்நிலை நாடாகவும் உள்ளது. திபெத்தில் உருவாகும் சிந்து நதியின் கீழ்நிலை நாடு பாகிஸ்தான்..
2016ஆம் ஆண்டில், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றிய இந்தியா, “ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது” என்று பாகிஸ்தானை எச்சரித்தது. அதன்பிறகு, வடகிழக்கு இந்தியாவில் பிரம்மபுத்ராவாக உருமாறும் யார்லுங் சாங்போவின் துணை நதியை சீனா தடுத்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா. தன் நாட்டு எல்லைக்கு அருகில் கட்டிவரும் ஒரு நீர்மின் திட்டத்திற்குத் தேவையானது என்பதால் நீரைத் தடுத்ததாகக் கூறியது. ஆனால் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதை அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நேரம் சுட்டிக்காட்டியது.
திபெத்தில் பல நீர்மின் நிலையங்களைக் கட்டிய பிறகு, யார்லுங் சாங்போவின் கீழ்ப் பகுதிகளில் உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் திட்டத்தை சீனா முன்னெடுத்துள்ளது.
இந்த அணை கட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்கப்படாது என்று சீனா கூறினாலும், இந்த அணையானது நதியின் நீரோட்டம் கட்டுப்படுத்தப்படலாம் என்று இந்தியா அஞ்சுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC