SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், ANI
புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்
பாகிஸ்தானுடனான 1960 சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக கடந்த புதன்கிழமை இந்தியா அறிவித்தது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த மறுநாள் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் புதன்கிழமை நடந்து முடிந்தபிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, புதன்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “1960ம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக நிறுத்தும்வரை இது தொடரும்,” என்று கூறினார்.

பாகிஸ்தான் தொடர்பாக இதற்குமுன் பல முக்கிய முடிவுகளை இந்தியா எடுத்திருந்தாலும் அவை இந்த அளவு கடுமையானவை அல்ல.
“இந்தியா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்திருக்கிறது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ராணுவம், விமானப்படை, கப்பல் படை ஆலோசகர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது. ஆனால், தூதரக நடவடிக்கைகளை மூடவில்லை. சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர முழுவதுமாக ரத்து செய்யப்படவில்லை. பாகிஸ்தானில் இருந்து SAARC விசா மூலம் வருபவர்களுக்கான விசாதான் நிறுத்தப்பட்டுள்ளது, ஆனால் அனைத்து வகையான விசாக்களும் அல்ல” என்று தி ஹிந்து ஆங்கில நாளிதழின் ராஜ்ஜீய விவகாரங்களுக்கான ஆசிரியர் சுஹாசினி ஹைதர் எழுதியுள்ளார்.
இந்த முடிவுகளுக்குப் பிறகு, இந்தியா ராணுவ நடவடிக்கையும் எடுக்க வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.
“இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விரும்பினால், அதற்கு சில வழிகள் உள்ளன. இந்தியா வான் தாக்குதல் நடத்தலாம். 2016ல் நடந்தது போல் சிறப்பு ராணுவ நடவடிக்கைளும் எடுக்கலாம். விமானங்கள் ஆபத்துக்குள்ளாவதை தவிர்க்க ஏவுகணைகளைப் பயன்படுத்த முடிவு செய்யலாம். எல்லையில் போர்நிறுத்தம் முடிவுக்கு வரலாம். குறிப்பிட்ட நபர்களை மட்டும் குறிவைத்துப் படுகொலை செய்வதும் நடக்கலாம்,” என்று எழுதியிருக்கிறார் பிரிட்டன் பத்திரிகையான தி எகனாமிஸ்டின் பாதுகாப்புச் செய்திகள் ஆசிரியர் ஷஷாங்க் ஜோஷி.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானிய நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
இத்தனை விஷயங்களுக்கும் இடையில் சிந்து நீர் ஒப்பந்த நிறுத்தம் பற்றிய செய்திகள்தான் பாகிஸ்தானில் அதிகம் விவாதிக்கப்பட்டன.
தன்னிச்சையாக இந்தியா இப்படி முடிவெடுக்க முடியாது என்று பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான இஷாக் தர், பாகிஸ்தானிய ஊடகங்களுடன் பேசும்போது குறிப்பிட்டார்.
பாகிஸ்தானிய செய்தித் தொலைக்காட்சியான சமா டிவியில் பேசிய அவர், “முந்தைய அனுபவத்தின்படி இந்தியா இப்படிச் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று யோசித்தோம். நான் இப்போது துருக்கியில் இருக்கிறேன். பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டித்துள்ளது. சிந்து நீர் ஒப்பந்தத்தைத் தவிர மற்ற நான்கு விஷயங்களில் இந்தியா எடுத்துள்ள முடிவுக்கு எளிதாகத் தீர்வு காண முடியும்,” என்று கூறினார்.
“ஏற்கெனவே சிந்து நீர் ஒப்பந்தத்தில் இந்தியா பிடிவாதமாக இருந்து வருகிறது. நீரை நிறுத்திவைக்க சில நீர்த்தேக்கங்களையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் உலக வங்கிக்கும் தொடர்பு இருக்கிறது. அதோடு இந்த ஒப்பந்தம் உறுதியானது. இதில் தன்னிச்சையாக முடிவெடுக்கமுடியாது. இப்படிச் செய்தால் உலகில் ஒவ்வொருவரும் தன்னிச்சையாக முடிவெடுக்கத் தொடங்குவார்கள். ‘வலிமை இருப்பவர்கள் சரியானவர்கள்’ என்பது இங்கே ஒத்து வராது. இந்தியாவிடம் எந்த ஒரு சட்டரீதியான பதிலும் இல்லை. பாகிஸ்தானின் சட்ட அமைச்சகம் இதற்கு பதில் சொல்லும்,” என்றார் அவர்.
” இந்தியா இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் அதன்பிறகு இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கும்? ஒருவேளை அது எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை என்றால் இதற்கு ஒரு பயனும் இல்லை என்றுதானே அர்த்தம்.”
“இந்தியா சிந்து நீர் ஒப்பந்தத்தில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. இந்தியா அந்த முடிவெடுத்திருந்தாலும் சிந்து, ஜீலம், செனாப் ஆகிய நதிகளில் இருந்து வரும் நீரை நிறுத்தத் தேவையான உள்கட்டமைப்பு இந்தியாவிடம் இல்லை. ஆனால் சில தீர்க்கமான முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டும். நாங்கள் உலக வங்கிக்கு எழுதப்போகிறோம். ஏனெனில் இதற்கு உத்தரவாதம் கொடுத்தது அதுதான்.” என்று டாவ்ன் நியுஸுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதரக அதிகாரி அப்துல் பாசித்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவால் நீரை நிறுத்த முடியுமா?
”இன்றைய சூழலில் உலகில் யாருமே விதிகளைப் பின்பற்றுவதில்லை. சர்வதேச அமைப்புகள் செயல்பட முடியாமல் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில், சிந்து நீர் ஒப்பந்தத்தில், இந்தியா இப்படி தன்னிச்சையாக முடிவெடுத்தால், பாகிஸ்தான் என்னதான் செய்ய முடியும்?” என்று அப்துல் பாசித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“இது ஒரு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒவ்வொரு வருடமும் மேற்கு நதிகளில் இருந்து 1330 லட்சம் ஏக்கர் அடி நீர் நமக்குக் கிடைக்கிறது. இந்த நீரை நிறுத்தும் நிலையில் இப்போது இந்தியா இல்லை என்றே நான் நினைக்கிறேன். நமது ராஜ்ஜீய நடவடிக்கைகளை கொஞ்சம் செயல்படுத்திப் பார்க்கவேண்டும்,” என்று பதிலளித்தார் அப்துல் பாசித்.
“இந்த நீரை நிறுத்த இந்தியாவுக்கு இதுவரை எந்த உள்கட்டமைப்பும் இல்லை. அதனால் உடனடியாக பெரிய சவால் எதுவும் இல்லை. ஆனால் இந்த நிலைமையைத் தடுக்க நாம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உதாரணமாக சீனா இந்த விஷயத்தில் நமக்கு உதவி செய்ய முடியும்.
சீனாவில் இருந்து பல நதிகள் இந்தியாவுக்குள் வருகின்றன. அவர்கள் அதைத் தடுத்து நிறுத்த ஏற்பாடுகள் செய்யலாம். நிறைய வழிகள் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். விதிகளின்படி நடப்பது வேலை செய்யவில்லை என்றாலும் அதைத் தாண்டி நிறைய வழிகள் உள்ளன. தண்ணீர் நிறுத்தப்பட்டு, வாழ்வா சாவா என்று பிரச்னை வந்தால் ரத்தம் சிந்த வேண்டி வரலாம்,” என்று கூறினார் அப்துல் பாசித்.
“இது ஒரு அசாதாரண நடவடிக்கை. இந்த ஒப்பந்தம் மீறமுடியாதது. இப்படி தன்னிச்சையாக யாரும் முடிவெடுக்க முடியாது. இந்த விஷயத்தை உலக வங்கிக்கும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்வோம். நீரைத் திருப்பிவிடுவது இந்தியாவுக்கு எளிதான செயல் அல்ல. அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்,” என்று துனியா டிவிக்கு அளித்த பேட்டியில் முன்னாள் பாகிஸ்தான் சட்ட அமைச்சர் அஹ்மெர் பிலால் சூஃபி கூறினார்.

பட மூலாதாரம், Reuters
அதே நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் அரசியல் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் ஷாஷாத் சௌத்ரியிடம், ”90 சதவிகித பாகிஸ்தானிய விளைபொருட்கள் சிந்து நீர் ஒப்பந்தத்தை நம்பியே இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் சார்ந்திருக்கும் நிலையில் இந்தியாவின் முடிவை எப்படிக் கையாள்வது” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
“அத்தனை போர்கள் நடந்தபோதும் இந்த ஒப்பந்தம் மீறப்படவில்லை. ஆனால் இப்போது நடக்கும் விஷயங்கள் எதிர்பார்க்க முடியாதது. என்னதான் இதை இந்தியா நிறுத்தி வைத்திருந்தாலும், இது எந்த உடனடி விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை,” என்று ஷாஷாத் சௌத்ரி பதிலளித்தார்.
“பாகிஸ்தான் நதிகளில் நீரே இருக்கப் போவதில்லை என்ற விஷயம் நடக்காது. ஜீலம், செனாப் நதிகளில் அவர்கள் அணை கட்டுவதன் மூலம் ஒரு விளைவை ஏற்படுத்தலாம். அதை அவர்கள் ஏற்கெனவே செய்யவும் செய்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானை பாதிக்கும் அளவு அணையின் கொள்ளளவு இருக்கப்போவதில்லை” என்று அவர் கூறினார்.
“இன்னும் நிறைய விஷயங்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. உதாரணமாக, ஷிம்லா ஒப்பந்தம் என்ன ஆகும்? கராச்சி ஒப்பந்தத்துக்கு என்ன நடக்கும்? எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் போர்நிறுத்தம் அறிவித்திருந்தது என்ன ஆகும்? அணு ஆயுதங்கள் குறித்து பரிமாறிக்கொண்ட தகவல்கள் என்ன செய்யப்படும்? இப்படி எல்லா விஷயத்திலும் கேள்விகள் எழுப்பப்படும்,” என்றார் ஷாஷாத் சௌத்ரி.
“இந்தியா ஒரு அரசியல் முடிவை எடுத்துள்ளது. ஆனால் அதற்கு எந்த விளைவும் இருக்கப்போவதில்லை. சிந்து நீர் ஒப்பந்த விஷயத்தில் இந்தியா ஏற்கெனவே தயாராக இருந்து வந்தது. ஆனால் இந்தியா இதோடு நிறுத்தி விடாது என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும்,” என்கிறார் சௌத்ரி.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU