SOURCE :- BBC NEWS

ஐபிஎல் 2025, GT vs SRH

பட மூலாதாரம், Getty Images

ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல் 6) நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 19-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

முதலில் பேட்செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை சேர்த்தது. 153 ரன்கள் என்னும் இலக்கைத் துரத்திய குஜராத் அணி 16.4 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் குஜராத் அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் 4 தோல்விகளுடன், ஒரு வெற்றியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

ஒருதரப்பாக மாறிய ஆட்டம்

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருதரப்பாகவே அமைந்தது. கடந்த சீசனில் இருந்து அதிரடி ஃபார்முலாவை கையில் எடுத்து ஆடிவரும் சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசனில் அந்த ஃபார்முலா வெற்றியைத் தரவில்லை.

பந்துவீ்ச்சிலும், பேட்டிங்கிலும் சன்ரைசர்ஸ் அணியினர் சராசரிக்கும் குறைவாகவே செயல்பட்டனர். சன்ரைசர்ஸ் அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை. அந்த அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி (31), கிளாசன்(27), கம்மின்ஸ் (22) ஆகியோர் மட்டுமே ரன்கள் சேர்த்தனர்.

ஆனால் குஜராத் அணியினர் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அற்புதமாகச் செயல்பட்டனர். பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்த்தி நெருக்கடியளித்தது, நடுப்பகுதியில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசியது, டெத் ஓவர்களை சிறப்பாக வீசியது, பேட்டிங்கிலும் 2வது விக்கெட்டுக்கு பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தது என குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிக்கு உரியதாகவே இருந்தது.

ஐபிஎல் 2025, GT vs SRH

பட மூலாதாரம், Getty Images

தலை நிமிர வைத்த தமிழக வீரர்கள்

இந்த ஐபிஎல் தொடரில் அதிக எண்ணிக்கையில் தமிழக வீரர்கள் இருக்கும் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிதான். இந்த அணியில் தமிழக வீரர்கள் சாய் கிஷோர், சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான் ஆகியோர் உள்ளனர். ஒவ்வொரு போட்டியிலும் தமிழக வீரர்கள் தங்கள் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் குஜராத் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை.

கடந்த சில போட்டிகளாக பேட்டிங்கில் சாய் சுதர்சன் ஆதிக்கம் செலுத்திய நிலையில் இந்த ஆட்டத்தில் பந்துவீச்சில் சாய் கிஷோரும், பேட்டிங்கில் வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக செயல்பட்டனர். வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளில் 49 ரன்கள் (2சிக்ஸர், 5பவுண்டரி) விளாசி வெற்றிக்கு துணையாகினார்.

இதுநாள்வரை ஐபிஎல் தொடர்களில் கடைசிவரிசையில் களமிறங்கி வந்த வாஷிங்டன் சுந்தரை குஜராத் அணி நேற்றைய ஆட்டத்தில் 4வது வீரராகக் களமிறக்கியது.

சிறந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். சிமர்ஜித் சிங் ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என சுந்தர் விளாசவே, அத்தோடு சிமர்ஜித்துக்கு ஓவர் நிறுத்தப்பட்டது. கம்மின்ஸ் பந்துவீச்சில் பவுண்டரி, ஷமி பந்துவீச்சில் பவுண்டரி என சுந்தர் விளாசினார். 168 ஸ்ட்ரைக் ரேட்டில் சுந்தர் அதிரடியாக பேட் செய்து வியக்க வைத்தார்.

பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தருக்கு குஜராத் அணி வாய்ப்புக் கொடுக்காவிட்டாலும் பேட்டிங்கில் தன்னால் சிறப்பாக 4வது வரிசையில் விளையாட முடியும் என்பதை சுந்தர் நிரூபித்துவிட்டார்.

சுப்மன் கில்லுடன் 3வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த வாஷிங்டன் சுந்தர் 90 ரன்கள் சேர்த்தார். குஜராத் அணியில் 3வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும். பந்துவீச்சில் சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசிய 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தமிழக வீரர்கள் 4 பேரில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே கேப்டு (capped) வீரர், சர்வதேச அனுபவம் கொண்டவர். ஆனால் மற்ற 3 வீரர்களும் அன்கேப்டு (uncapped) வீரர்கள், சர்வதேச அனுபவம் இல்லாத நிலையிலும் இவர்களின் ஆட்டம் தமிழகத்தை தலைநிமிர வைக்கிறது.

இன்னும் இந்திய அணியின் கதவுகள் சாய் சுதர்சனுக்கும், கிஷோருக்கும் ஏன் திறக்கப்படவில்லை என்ற கேள்வியை இந்த ஆட்டம் விட்டுச் செல்கிறது.

ஐபிஎல் 2025, GT vs SRH

பட மூலாதாரம், Getty Images

யார் வெற்றியாளர்கள்?

வெற்றிக்குப்பின் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசுகையில் “பந்துவீச்சாளர்கள்தான் ஆட்டத்தை மாற்றியவர்கள். ஏராளமானோர் டி20 குறித்தும், பேட்டிங், பந்துவீச்சு குறித்துப் பேசுகிறார்கள். எங்களைப் பொருத்தவரை போட்டியில் வெற்றி பெற செய்வது பந்துவீச்சாளர்கள்தான். அதனால்தான் எங்கள் அணியில் பந்துவீ்ச்சுக்கு முக்கியத்துவம் அளிப்போம். பவர்ப்ளேயில் டெஸ்ட் போட்டி நுட்பத்தை பயன்படுத்தினோம். பேட்டிங் செய்யும் வாஷிங்டனும், நான் பேசிக்கொண்டு பேட் செய்தோம், சுந்தர் அடித்த பல ஷாட்களும் அற்புதமானவை.

முன்பு மும்பைக்கு எதிரான போட்டி கடும் நெருக்கடியானதாக இருந்தது, வாஷிங்டன் கால்காப்பு கட்டி தயாராகஇருந்தாலும் இம்பாக்ட் விதியால் அவரால் களமிறங்க முடியவில்லை. இந்த ஆட்டத்தில் கூடுதல் சுழற்பந்துவீச்சாளராகவும், பேட்டராகவும் சுந்தரைக் காண முடிந்தது. இருவருக்கும் இடையே நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது இதனால், அணியை வெற்றிக்கு கொண்டு சேர்க்க முடிந்தது. சிராஜ் பந்துவீச்சு அருமையாக இருந்தது, அவரின் பந்துவீ்ச்சில் புதிய உத்வேகம், காணப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

ரஷித்கானை ஓரங்கட்டிய சாய் கிஷோர்

குஜராத் அணியில் இருக்கும் ரஷித் கான் இந்த சீசன் தொடங்கியதிலிருந்தே மோசமாகப் பந்துவீசி வருகிறார். இந்த ஆட்டத்தில் கூட 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்தவில்லை. சிறப்பாக தொடங்கினாலும் ரஷித்தான் 3வது போட்டியாக விக்கெட் வீழ்த்தாமல் ஃபார்மின்றி இருக்கிறார்.

ஆனால், தமிழகத்தன் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர், ரஷித்கான் பந்துவீச்சைவிட குறைந்த வேகத்தில் பந்துவீசியதால், பந்து நன்றாக டர்ன் ஆகியது, பந்துவீச்சிலும் பல்வேறு வேரியேஷன்களை கிஷோர் வெளிப்படுத்தினார். இதனால் மிகப்பெரிய விக்கெட்டான கிளாசனையும்(27), நிதிஷ் குமார் (31)விக்கெட்டையும் சாய் கிஷோர் எளிதாக வீழ்த்தினார். ரஷித் கான் பந்துவீச்சை கையாள்வதில் சன்ரைசர்ஸ் பேட்டர்கள் சிரமப்பட்டதைவிட, சாய் கிஷோர் பந்துவீச்சை ஊகித்து ஆடுவதில்தான் பெரும் சிரமப்பட்டனர்.

ஐபிஎல் 2025, GT vs SRH

பட மூலாதாரம், Getty Images

வியக்க வைத்த ‘வாஷி’

குஜராத் அணியால் வாங்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் முதல்முறையாக இந்த ஆட்டத்தில் களமிறங்கினார். தன்னுடைய சிறுவயது பள்ளி தோழன் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தபின் வாஷிங்டன் சுந்தர் 4வது வீரராக களமிறங்கினார். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் எந்த அணியும் வாஷிங்டனை 4வது இடத்தில் களமிறக்கியதில்லை என்ற நிலையில் அவரை துணிந்து குஜராத் அணி களமிறக்கியது.

பவர்ப்ளேயின் கடைசி ஓவரைச் சந்தித்த வாஷிங்டன் சுந்தர், சிமர்ஜித் சிங் ஓவரில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசினா். 2016 ஆம் ஆண்டு டிஎன்பிஎல் தொடரில் அபினவ் முகுந்துடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரராக வாஷிங்டன் சுந்தர் களமிறங்கி வெளுத்து வாங்கிய அதே நினைவுகளை சுந்தர் கண்முன் நிறுத்தினார். அதிரடியாக பேட்செய்த வாஷிங்டன் 168 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார். ஆனால், அரைசதத்தை தவறவிட்டாலும் வாஷிங்டன் பேட்டிங் அரைசதத்துக்கும் மேலானது என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.

தொடக்கத்திலேயே குஜராத் அணி சாய் சுதர்சன், பட்லர் இருவரின் விக்கெட்டை இழந்து தடுமாறினாலும், கேப்டன் கில், வாஷிங்டன் கூட்டணி அணியைதூக்கி நிறுத்தியது. பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள்ச சேர்த்தது.

கேப்டனுக்குரிய பொறுப்புடன் பேட் செய்த சுப்ம ன் கில் 36 பந்துகளில் அரைசதம் அடித்து 61 ரன்களிலும், ரூதர்போர்ட் கேமியோ ஆடி 35 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

ஐபிஎல் 2025, GT vs SRH

பட மூலாதாரம், Getty Images

சன்ரைசர்ஸ் அணியின் சறுக்கல்

ஹைதராபாத்தில் வழக்கமான பேட்டிங் பிட்சாக இருந்திருந்தால் ஆட்டம் இன்னும் ஸ்வரஸ்யமாக இருந்திருக்கும். ஆனால், நிதானமாக பேட் செய்யக்கூடிய, சற்று மந்தமான ஆடுகளத்தை, பொறுமையாக ஆடக்கூடிய ஆடுகளத்தை அமைத்தது.

இதனால் பேட்டர்களை நோக்கி பந்து வேகமாக வருவதுபோல் தெரிந்தாலும் பிட்சில் பந்துபட்டவுடன் நின்று மெதுவாகவே பேட்டரை நோக்கி வரும்போது எதிர்பார்த்த ஷாட்ளை பேட்டர்களால் ஆட முடியவில்லை. இதனால் டிராவிஸ் ஹெட், அபிஷேக், இஷான் கிஷன் ஆகிய 3 அதிரடி பேட்டர்களும் சொற்பரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.

கடந்த 5 போட்டிகளாக சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை இழந்ததுதான் தோல்விக்கு முக்கியக் காரணமாகும். இந்த 5 போட்டிகளில் மட்டும் பவர்ப்ளேயில் மட்டும் சன்ரைசர்ஸ் அணி 12 விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பவர்ப்ளே ஓவர்களை பந்துவீச்சிலும்,பேட்டிங்கிலும் பயன்படுத்திக்கொண்ட அணி, சிறப்பான வெற்றியைப் பெறுகிறது என்பது புள்ளிவிவரங்கள் மூலம் அறியலாம்.

டிராவிஸ் ஹெட், அபிஷேக் இருவருமே கடந்த சீசன்களில் அதிரடியான தொடக்கத்தை அளித்து எதிரணிகளை கதிகலங்க வைத்தவர்கள். ஆனால் இருவரும் இந்த ஆட்டத்தில் பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். முதல் சிக்ஸரை சன்ரைசர்ஸ் அணி 13வது ஓவரில்தான் அடித்தது.

சன்ரைசர்ஸ் அணியில் டாப்ஆர்டர் 3 பேட்டர்களைத் தவிர்த்து கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா, மெண்டிஸ், கம்மின்ஸ் என வீரர்கள் இருந்தும், ஒரு வீரர்கூட அரைதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கம்மின்ஸ் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 22 ரன்களைச் சேர்த்ததால் ஸ்கோர் 150 ரன்களைக் கடந்தது இல்லாவிட்டால் மோசமாகியிருக்கும்.

இங்கிலாந்து அணி கடைபிடிக்கும் பாஸ்பால் ஃபார்மெட்டையே சன்ரைசர்ஸ் அணியும் கையில் எடுத்துள்ளது. அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்குவது, எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்து மனரீதியாக குழப்பி அவர்களை வெல்வது, பெரிய ஸ்கோரை அடித்து, எதிரணிகளை எளிதாக வீழ்த்துவது என்ற அதிரடி ஃபார்முலாவை சன்ரைசர்ஸ் கையாண்டது.

ஆனால், கடந்த சீசனில் அந்த அணிக்கு சிறப்பாக செயல்பட்ட இந்த அதிரடி ஃபார்முலா இந்த சீசனுக்கு எடுபடவில்லை, 5 போட்டிகளிலும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் சன்ரைசர்ஸ் அணி 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது.

பந்துவீச்சில் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் குஜராத் அணியில் பெரிதாக விக்கெட் வீழ்த்தவில்லை. மென்டிஸ், அபிஷேக், சிமர்ஜித் சிங் ஆகியோர் தலா ஒரு ஓவர் வீசிய 20ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஷமி, கம்மின்ஸ், ஜீசன் அன்சாரி ஆகிய 3 பந்துவீச்சாளர்கள் மட்டுமே கட்டுக்கோப்புடன் பந்துவீசினர். ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐபிஎல் 2025, GT vs SRH

பட மூலாதாரம், Getty Images

மிரள வைத்த முகமது சிராஜ்

சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணியில் தேர்ந்தெடுக்காதது, ஆர்சிபி அணி ஏலத்தில் சிராஜை கழற்றிவிட்டது ஆகியவற்றால் விரக்தியில் இருந்த முகமது சிராஜ் தனது பந்துவீச்சால் பதில் அளித்தார். தன்னை தவறவிட்டது தவறு என்பதை பிசிசிஐக்கும், ஆர்சிபி அணிக்கும் பந்துவீச்சு மூலம் சிராஜ் உணர்த்தினார்.

கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிராஜ்-ஹெட் உரசிக்கொண்ட நிலையில் இந்த ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். அதன்பின் அபிஷேக் சர்மா(18), அனிகேத் வர்மா(18), சிமர்ஜித் சிங் ஆகியோரின் விக்கெட்டுகளை சிராஜ் வீழத்தினார். சிராஜின பந்துவீச்சு நேற்று சன்ரைரசர்ஸ் பேட்டர்களுக்கு உண்மையில் சிம்மசொப்னமாகத்தான் இருந்தது, ஒரு சிக்ஸர் கூட அடிக்கவிடாத சிராஜ், 3 பவுண்டரிகள் உள்பட 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். சிராஜ் வீசிய 4 ஓவர்களில் 17 டாட் பந்துகள் அடங்கும்.

பிரசித் கிருஷ்ணா தனக்குரிய பங்களிப்பை சரியாகச் செய்து 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் இஷாந்த் சர்மா மட்டுமே விக்கெட் இன்றி 54 ரன்களை வாரிவழங்கினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU