SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Handout
“பஹல்காமுக்கு நாங்கள் சென்று வந்த பிறகு தாக்குதல் சம்பவம் நடந்தது. தப்பித்தால் போதும் என விடுதியில் இருந்து கிளம்பினோம். ஆனால், காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு வரும் பயணம், அவ்வளவு எளிதாக இருக்கவில்லை” எனக் கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த சுமதி.
தனது முதல் காஷ்மீர் பயணமே இப்படி முடியும் என எதிர்பார்க்கவில்லை எனவும் கடவுளின் கருணையால் தான் காப்பாற்றப்பட்டதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி மதியம், ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலின்போது காஷ்மீரில் இருந்த தமிழ்நாட்டுப் பயணிகளின் மனநிலை என்ன? அவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் இருந்ததா?

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்குவதற்கு தான் உத்தரவிட்டுள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, புதன்கிழமையன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூலை, காஷ்மீர் மாநில அரசுடன் இணைந்து ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்குத் தான் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
“தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து அவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
“தாமதம் ஆனதால் தப்பித்தனர்”
இதையடுத்து, பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் சிலரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.
“எங்கள் சங்கம் சார்பாக, மதுரையில் இருந்து காஷ்மீருக்கு 68 பேர் சுற்றுலா சென்றனர். தாக்குதல் நடந்த நாளில் அவர்கள் பஹல்காமில் இருந்திருக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக தப்பித்துவிட்டனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” எனக் கூறுகிறார், மதுரையை சேர்ந்த மோட்டார் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகியான ராதாகிருஷ்ணன்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களின் டீலர்களை குடும்பத்துடன் சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ளதாகவும் இந்தப் பயணம் மூன்று மாதங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டதாகவும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
“பஹல்காமுக்கு சற்று தாமதமாக சென்றதால், அவர்களை ராணுவம் எச்சரித்து மீண்டும் ஓட்டலுக்கே அனுப்பிவிட்டது. அனைவரும் வயதானவர்கள். 60 வயதைக் கடந்தவர்கள். தாக்குதலைக் கேள்விப்பட்டு அனைவரும் பதற்றத்தில் உள்ளனர்” எனக் கூறுகிறார், இதே சங்கத்தின் நிர்வாகியான சித்தார்த்தன்.
ஓட்டல் அறைக்கு வந்து சேரும் வரை அவர்கள் அனைவரும் தங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தாமதமாக கிளம்பியதால் தாக்குதலில் இருந்து தப்பித்துவிட்டனர். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு சந்துரு என்பவருக்கு இதயநோய் பாதிப்பு ஏற்பட்டது” எனக் கூறினார்.
இந்த தாக்குதலில் சந்துரு நேரடியாக பாதிக்கவில்லை எனவும் தற்போது ராணுவ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சித்தார்த்தன் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு வெளியான காயம் அடைந்தவர்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்துரு என்பவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

பட மூலாதாரம், Handout
“துப்பாக்கி சத்தம் கேட்டேன்”
“செவ்வாய்க் கிழமை மதியம் 12.45 மணியளவில் பஹல்காம் வந்தடைந்தோம். அதற்கு முன்னதாக எட்டு இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். அடுத்து செல்லவிருப்பது மிக அழகான பள்ளத்தாக்கு என வழிகாட்டி சொன்னார். அப்போது 5 முறை துப்பாக்கி குண்டு சத்தத்தைக் கேட்டோம்” எனக் கூறுகிறார் சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ.
பிடிஐ உள்பட ஊடக நிறுவனங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
“நாங்கள் சென்றபோது, ‘தீவிரவாதிகள் தாக்குதல் நடக்கிறது’ எனக் கூறி அங்கிருந்து உடனே செல்லுமாறு ராணுவத்தினர் கூறினர். நாங்கள் பயந்துவிட்டோம். அங்கிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்து வந்தோம்” எனவும் அவர் கூறினார்.
இவர்களைப் போல, காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழ்நாட்டுப் பயணிகள் பலரும் புதன்கிழமையன்று மதியம் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

பட மூலாதாரம், Getty Images
“வெளியே வருவது எளிதாக இல்லை”
“பத்து நாள் பயணமாக ஜம்மு காஷ்மீருக்கு சென்றோம். எங்களுடன் இந்தப் பயணத்தில் குடும்பம் குடும்பமாக 40 பேர் இணைந்திருந்தனர். திங்கள்கிழமை முழுவதும் பஹல்காமில் இருந்தோம். மறுநாள் தாக்குதலைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தோம்” எனக் கூறுகிறார், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த முனியாண்டி.
ஸ்ரீநகரில் இருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் பஹல்காம் உள்ளது. “நேற்று மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததும் உடனே எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதற்கு மேல் இங்கு இருக்க வேண்டாம் என நினைத்துக் கிளம்பிவிட்டோம்” என்கிறார்.
“வெளியேறுவது சுலபமில்லை”
“ஆனால், காஷ்மீரை விட்டு வெளியே வருவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை” எனக் கூறுகிறர் முனியாண்டி.
“நாங்கள் வந்த வழிகளில் ஒரு சாலை மூடப்பட்டுவிட்டது. வாகனங்கள் வெளியேறுவதற்கு ராணுவம் அனுமதிக்கவில்லை. நாங்கள் சென்ற அதே வாகனத்தில் வெளியேற முடியவில்லை. இதனால் கிடைத்த வாகனங்களில் ஏறியபடி பல முறை மாறி அங்கிருந்து வெளியே வந்தோம்” எனவும் அவர் கூறினார்.
“நள்ளிரவு 1 மணிக்கு மேல் தான் எங்களால் ஜம்முவுக்கு வர முடிந்தது. அங்கிருந்து டெல்லிக்கு ரயிலில் வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ரயிலை தவறவிட்டுவிட்டோம். பேருந்தைப் பிடித்து புதன்கிழமை மதியம் தான் தமிழ்நாடு இல்லத்துக்கு வந்து சேர முடிந்தது” என்கிறார் முனியாண்டி.
“பஹல்காம் தாக்குதலால் எங்களுடன் வந்தவர்கள் பயத்தில் உள்ளனர். இனிமேல் காஷ்மீருக்கு செல்லும் முடிவில் யாரும் இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
“கடவுள் காப்பாற்றியதாக கருதுகிறோம்”
“திங்கள்கிழமை பஹல்காமில் இருந்தோம். அங்கு குதிரை சவாரி செய்தோம். அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்தோம். மறுநாள் அதே இடத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை அறிந்து அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை” எனக் கூறுகிறார், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சுமதி.

பட மூலாதாரம், Handout
இவர், மாநில அரசின் நிதித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது கணவருடன் முதல்முறையாக காஷ்மீருக்கு சுற்றுலா சென்றதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“எங்களை ஏதோ ஒரு வகையில் கடவுள் காப்பாற்றியதாகவே பார்க்கிறோம். பஹல்காமை நாங்கள் கடந்த பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு மிகுந்த சிரமப்பட்டு வந்தோம். அவ்வளவு எளிதாக வாகனங்கள் கிடைக்கவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்களுடன் வந்தவர்கள் ஆறு வேன்களில் தனித்தனியாக பிரிந்து கிளம்பினோம். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. போக்குவரத்தையும் மாற்றிவிட்டனர். வரும் வழியில் கற்கள் உருண்டு கிடப்பதைப் பார்க்க முடிந்தது” எனக் கூறினார்.
பயணிகளுக்கு ராணுவத்தினர் அதிக உதவிகளைச் செய்ததாகவும் கேள்விகளுக்கு எந்தவித தயக்கமும் இல்லாமல் பதில் அளித்து தங்களைப் பத்திரமாக வழியனுப்பி வைத்ததாகவும் சுமதி குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU