SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலமாக இருக்கும் தானியங்களை காலை உணவாக உண்பது ஆரோக்கியத்திற்கு உகந்தது.
நமது அன்றாட உணவில் காலை உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி அடிக்கடி பேசுகிறோம்.
காலையில் சிறப்பான உணவை உட்கொண்டால், அன்றைய நாளில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் சக்தி உடலுக்குக் கிடைக்கும்.
இருப்பினும், சரியான காலை உணவு எது? குழந்தைகளுக்கு காலை உணவாக என்ன கொடுப்பது என்பதை முடிவு செய்வது கடினமானதாக இருக்கிறது.
காலை உணவாக தானியங்களை உண்ணும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் 53 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்களும் தானியங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்ள விரும்பினால், பல தெரிவுகள் உள்ளன.
ஓட்ஸ், மியூஸ்லி, கார்ன் ஃப்ளேக்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவுகள் நமது உடலாரோக்கியத்திற்கு போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. ஆனால், மிகவும் பதப்படுத்தப்பட்டவையாக இருந்தால், அவை நமக்கு நல்லதல்ல என்றும் சில விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இந்த விஷயத்தின் உண்மைத்தன்மை என்ன என்பதையும், காலை உணவாக நாம் தானியங்களை சாப்பிட்டால் அது எந்த வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.

அத்தியாவசிய சத்துக்கள் கொண்ட உணவு வகைகள்
கோதுமை, அரிசி, ஓட்ஸ், பார்லி, மக்காச்சோளம் ஆகியவை தானிய வகைகளில் முக்கியமானவை. ஒவ்வொரு தானியமும் மூன்று முக்கிய சேர்மங்களைக் கொண்டவை ஆகும். தானியத்தின் வெளிப்புற அடுக்கில் நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும் தானியங்களில் ஸ்டார்ச் மற்றும் புரதங்கள் உள்ளன. அத்துடன், எண்ணெய், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நிரம்பியுள்ளன.
தானியங்களை காலை உணவாக மாற்றும் திட்டம்
தானியங்களை காலை உணவாக மாற்றலாம் என்ற யோசனை அமெரிக்க மருத்துவர் ஜான் ஹார்வியின் மனதில் உதித்தது. Battle Creek Sanitarium என்ற நிறுவனத்தில் அவர் பணிபுரிந்துவந்தார்.
நோயாளிகளுக்கு சமச்சீரான உணவை திட்டமிடும் பணியில் அவர் சில புதிய உணவு வகைகளை உருவாக்கினார். அதில் கிரனோலா மற்றும் சோளமும் இடம்பெற்றன.
இன்று இந்த உணவுப்பொருட்கள் அனைத்தும் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. அதுமட்டுமல்ல, அவை பல்வேறு விதங்களில் விற்கப்படுகின்றன.
அறுவடைக்குப் பிறகு, பல்வேறு கட்டங்களில் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படும் தானியங்கள், இறுதியில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
சில தானியங்கள் முழுமையானதாக இருக்கும். சிலவற்றில், வெளிப்புற அடுக்கு மட்டும் அகற்றப்படும். சில தானியங்கள் பதப்படுத்தப்படுகின்றன. வேறு சில அரைத்து மாவாக்கப்படுகின்றன.
தானியம் உணவுப்பொருளாக மாற்றப்படும்போது, அதன் இறுதிப் பொருளில் உப்பு, சர்க்கரை, வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற பிற கூறுகளும் கலக்கப்படுகின்றன.
பின்னர் அவை சமைக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ற வடிவத்திற்கு உருமாற்றப்படுகின்றன.
தானியங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், அவை அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்க போதுமானதாகக் கருதப்படுகின்றன.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களும் தானியங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அவர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான அளவு வைட்டமின்கள் உணவில் இருந்து மட்டுமே கிடைத்துவிடாது.
உதாரணமாக, சைவம் அல்லது வீகன் உணவு முறையை பின்பற்றுபவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருக்கும். பால் குடிக்காதவர்களுக்கு போதுமான அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் டி கிடைப்பதில்லை.
அதேபோல, வயதாகும்போது, சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் பலவீனமடைகிறது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் ஆபத்து உள்ளது.
தானியங்களை காலை உணவாக சாப்பிடுவதால் சில நன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், பெரும்பாலான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதற்கு செறிவூட்டப்பட்ட உணவுகள் இல்லாததும் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கலப்பு தானியங்கள் கொண்ட காலை உணவுகளில் நார்ச்சத்து நிறைந்திருக்கும். நமது வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும் ஊட்டச்சத்து இது என்பதும், பொதுவாக 90 சதவீத மக்களுக்கு நார்ச்சத்து குறைபாடு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
சர்க்கரை அதிகம் உள்ள தானியம்
“தானியங்களில் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் செறிவூட்டப்பட்டால், அவை ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்,” என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஊட்டச்சத்து பேராசிரியர் சாரா பெர்ரி கூறுகிறார்.
பிரிட்டனில், 11 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் சுமார் 50 சதவீதத்தினர் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அமெரிக்காவில் 14 சதவீத பெரியவர்கள் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறுகிறார்.
“காலை உணவில் கவனமாக இருக்க வேண்டும். சில தானியங்களில் அதிக சர்க்கரையும், குறைந்த நார்ச்சத்தும் உள்ளது. அதேபோல, பழங்கள் மற்றும் காய்கறிகளும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொடுப்பதற்கு சிறந்த தேர்வாக இருக்கும்” என்று சாரா பெர்ரி கூறுகிறார்.
பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் ஆராய்ச்சியின்படி, 30 கிராம் சோளத்தில் தோராயமாக 11 கிராம் அளவு சர்க்கரை உள்ளது.
ஒரே நேரத்தில் அதிக சர்க்கரை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதற்கு காரணமாகிவிடும். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நீரிழிவு நோய் அல்லது இதயம் தொடர்பான நோய்களை அதிகரிக்கும் அபாயமும் சோளத்தில் உள்ளது.
இதுபோன்ற தானியங்கள் நமது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம் என்று கூறும் சாரா பெர்ரி, ஆனால் அது குறித்து தற்போது அதிக தகவல்கள் கிடைக்கவில்லை என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம்
சாரா பெர்ரியின் கருத்தை அனைவரும் ஒப்புக்கொள்வதில்லை.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்துமே தீங்கு விளைவிப்பதில்லை என சில நிபுணர்கள் நம்புகிறார்கள். மேலும், காலை உணவாக உண்ணப்படும் அனைத்து வகையான தானியங்களும் ஒரே மாதிரியானவை அல்ல.
மியூஸ்லி, ஆரோக்கியமான காலை உணவு என்று கூறும் பேராசிரியர் சாரா பெர்ரி, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த காலை உணவை உட்கொண்டால் அது ஆற்றலைத் தரும் என்றும், விரைவில் பசி எடுக்காது என்றும் கூறுகிறார்.
அமெரிக்காவில் காலை உணவில் ஓட்ஸ் மிகவும் பிரபலம். சுமார் 5 லட்சம் பேர் பங்கு கொண்ட ஒரு ஆய்வு, ஓட்ஸ் அதிகமாக உட்கொண்டவர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து, குறைவாக உட்கொண்டவர்களை விட 22 சதவீதம் குறைவாக இருப்பதாக காட்டுகிறது.
ஓட்ஸில் உள்ள மிக முக்கியமான நன்மை பயக்கும் காரணி நார்ச்சத்து. ஓட்ஸ் தொடர்பான பல ஆய்வுகள் பீட்டா குளுக்கன் கொளஸ்டால் அளவை குறைப்பதாகக் கண்டறிந்துள்ளன.
அதிலும், இதய நோய்கள் ஏற்பட காரணமான கெட்ட கொளஸ்டாலான லிப்போபுரோட்டீன் (LDL) அளவை ஓட்ஸ் குறைக்கிறது. இருந்தபோதிலும் நன்றாக அரைத்த ஓட்ஸிலிருந்து தயாரிக்கப்படும் பல வகையான ஓட்ஸ் பொருட்களில் இந்த நன்மை இருப்பதாக தெரியவில்லை.
ஓட்ஸ் மாவில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருள், துரிதமாக செரிமானமாகி, மிகக் குறுகிய காலத்தில் உடலில் அதிக சர்க்கரையை வெளியிடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஒரு மருத்துவ பரிசோதனையில், தன்னார்வலர்கள் முழு ஒட்ஸை முதல் நாளும், அடுத்த நாள் அரைத்த ஓட்ஸையும் சாப்பிட்டார்கள்
இரண்டு வகை ஓட்ஸிலும் நார்ச்சத்து, புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஒரே அளவில் இருந்தபோதிலும், நன்றாக அரைத்த ஓட்ஸை சாப்பிட்டவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
முழு தானியங்களை உண்பவர்களுக்கு புற்றுநோய் மற்றும் டைப்-2 நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களின் ஆரோக்கிய நன்மைகள் குறைந்துவிடும்.
“முழு தானியங்கள் நார்ச்சத்து நிறைந்தவை என்பதால் அவை நன்மை பயக்கும்” என்று இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து நிபுணர் ரிக்கார்டோ காவல்லோனெசா கூறுகிறார்.
நார்ச்சத்தின் முக்கியமான பண்பு, உணவை செரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதும், குளுக்கோஸைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதும் ஆகும் என்று அவர் கூறுகிறார்.
ஆனால், தானியங்களில் உள்ள நார்ச்சத்தை நீக்கினால் குளுக்கோஸ் வேகமாக உற்பத்தியாகும்.
எனவே, காலை உணவாக தானியங்களை உட்கொள்வது நமக்கு நல்லதா அல்லது கெட்டதா? என்ற கேள்விக்கான பதில் என்ன?
“நீங்கள் எந்த வகையான தானியங்களை சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது”.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU