SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
2 மணி நேரங்களுக்கு முன்னர்
இன்றைய (21/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் சிறுமிகள், பெண்களின் படங்களை செல்போனில் ஆபாசமாக சித்தரித்து வைத்திருந்ததாக கூறி, வடமாநில நபரை போலீசார் கண் எதிரிலேயே பொதுமக்கள் தாக்கியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் அனில்குமார். சமோசா, பானிபூரி உள்ளிட்ட வடமாநில தின்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவற்றை வீடு வீடாகச் சென்று விற்பனை செய்து வந்தார்.
இதுபோல, தன்னிடம் சமோசா, பானிபூரி வாங்குபவர்களின் செல்போன் எண்களையும், தன்னை செல்போனில் தொடர்பு கொண்டு தின்பண்டங்கள் கேட்பவர்களின் எண்களையும் தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருப்பதாக தினத்தந்தி செய்தி கூறுகிறது.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட செல்போன் எண்களின் ‘வாட்ஸ்அப் டி.பி.’யில் (Display Picture) இருக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வந்ததாகவும், இதுபற்றி அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனில்குமாரின் செல்போனைப் பார்த்தபோது, அதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டிருந்ததாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அனில்குமாரை தாக்க, போலீஸார் தலையிட்டு அவரை கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா : கட்டாய இந்திக்கு மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிரா அரசால் நியமிக்கப்பட்ட மொழி ஆலோசனைக் குழுவின் தலைவர் லட்சுமிகாந்த் தேஷ்முக், இந்தி மொழியை கட்டாயமாக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என தி ஹிந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020-இன் ஒரு பகுதியாக, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மகாராஷ்டிரா அரசு அறிவித்தது. மராத்தி மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என அரசு கூறியிருந்தது.
இந்த நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு மொழி ஆலோசனைக் குழு மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளது.
”தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டும். மேலும், மும்மொழிக் கொள்கை உயர்நிலைப் பள்ளிக் கல்வியின் போது செயல்படுத்தப்பட வேண்டும். இந்தி மொழி குறித்த கட்டாய முடிவு தேவையற்றது. தற்போது பள்ளிக் கல்வியில் மராத்தி மற்றும் ஆங்கில மொழியின் தரம் மோசமாக உள்ளது. ஏனெனில், பெரும்பாலான பள்ளிகளில் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களே உள்ளனர். மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவது ஆசிரியர்களின் சுமையை அதிகரிக்கும். ஒரு மொழியை முறையாகக் கற்கும் சாத்தியக்கூறு இதனால் குறையும்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ”இந்தி பேசும் ஆசிரியர்கள் அவர்களின் பேசும் திறனின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதனால் மராத்தி ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும்” எனவும் அந்த கடிதம் குறிப்பிடுகிறது.
”மகாராஷ்டிராவில், இந்தி மொழி ஏற்கனவே கற்பிக்கப்படுகிறது. மொழியியல் ஒற்றுமை இருந்தபோதிலும், வட இந்திய மக்கள் மராத்தியை மூன்றாவது மொழியாகக் கற்கவில்லை. அதே சமயம், மகாராஷ்டிராவில் குடியேறினாலும் அவர்கள் மராத்தி பேசத் தயாராக இல்லை. இந்த நிலையில், அரசாங்கம் இந்தி மொழியை கட்டாயமாக்குவது மராத்தி மொழிக்கும் அதைப் பேசுபவர்களுக்கும் ஏற்படும் அவமரியாதையாகும். மொழி மற்றும் கலாச்சார ரீதியாக மகாராஷ்டிரா மேலும் பாதிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை என்றால், இந்தி மொழியை கட்டாயமாக்கும் முடிவை அரசு ரத்து செய்ய வேண்டும்” என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
திருச்சியில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images
திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களில் குழந்தை பெண் உள்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி 8 மற்றும் 10-ஆவது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதாகப் புகார் எழுந்த நிலையில் உறையூர் மின்னப்பன் தெருவைச் சேர்ந்த லதா (60), மருதாம்பாள் (85) மற்றும் பிரியங்கா (4) ஆகிய 3 பேர் அண்மையில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸார் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனர் என்றாலும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளர். எனவும் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய 11 பெண்கள், 8 குழந்தைகள் என 19 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், மேலும் 10-க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தினமணி செய்தி கூறுகிறது.
திருச்சி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பெற்றுவருவோரிடம் மேயர் மு. அன்பழகன் நலன் விசாரித்துள்ளார்.
தொடர்ந்து அப்பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அப்பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்கிறது தினமணி செய்தி.
மேலும், அப்பகுதியில் நடை பெற்ற கோயில் திருவிழா அன்ன தான உணவுகளால் பொதுமக்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் அப்பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, தற்காலிகமாக மாநகராட்சி வாகனம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற் பட்டுள்ளதா என மாநகராட்சிப் பணியாளர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தினமணி செய்தி குறிப்பிட்டுள்ளது.
‘ரூ.1000 கோடி நன்கொடை மோசடி’
ரூ.1,000 கோடி வெளிநாட்டு நன்கொடை பெற்றுத் தரும் முயற்சி தோல்வியில் முடிந்ததால், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 61 வயது ஆன்லைன் வர்த்தகர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார் என தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, தாக்குதலுக்கு உள்ளான எட்வின் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
துபையைச் சேர்ந்த எட்வினின் நண்பர் சப்தரிஷி பானர்ஜி, இந்தியாவில் உள்ள ஒரு அறக்கட்டளைக்கு “ரூ.1,000 கோடி நன்கொடை” தன்னால் ஏற்பாடு செய்ய முடியும் என கூறியதாகவும், அதற்கான நபர்களை ஏற்பாடு செய்யுமாறு எட்வினிடம் கேட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், ஒரு நபரின் உதவியுடன், சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு அறக்கட்டளையை சப்தரிஷிக்கு எட்வின் அறிமுகப்படுத்தியுள்ளார். துபை சென்ற அறக்கட்டளை நிர்வாகிகளிடம் சப்தரிஷி ரூ.35 லட்சம் கமிஷன் பெற்றுக்கொண்டு, நன்கொடை ஏற்பாடு செய்ய தவறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பணத்தை கொடுத்த நபர்கள் எட்வினை கடத்திச் சென்று தாக்கியதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
1010 போதை மாத்திரைகளை பறிமுதல்
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் பகுதியில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 1010 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன என வீரகேசரி இணையதள செய்தி தெரிவித்துள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சந்தேகநபர் தற்போது சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU