SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், EPA
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இன்றைய (15/05/2025) நாளிதழ் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள முக்கியமான செய்திகளை இங்கு காண்போம்.
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிய அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரபூர்வ விவரங்களை தில்லியில் நடைபெற்ற தொடர் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கடற்படை கமாண்டர் ரகு நாயர், விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி ஆகியோர் இணைந்து வெளியிட்டு வந்தனர்.
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை தானாக முன் வந்து விசாரணைக்கு ஏற்ற மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதுல் ஸ்ரீதான், அனுராதா சுக்லா அமர்வு, மாநில அமைச்சர் விஜய் ஷா மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அதுகுறித்த விவரத்தை நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
இந்த நிலையில் மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா மன்னிப்பு கேட்டுள்ளார். “என்னுடைய கருத்து அனைத்து சமூகத்தினரையும் புண்படுத்தியுள்ளது. நான் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்களில் அர்ச்சகர் நியமனத்துக்கு தடை – தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்களில் அர்ச்சகர் நியமனத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக, இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக அரசுக்கு நிபந்தனை விதித்துள்ள உச்ச நீதிமன்றம் அடுத்த 3 மாதங்களுக்குள் ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களை அடையாளம் காண உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டம் 2006ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஆதி சிவாச்சாரியர்கள் சங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. அதன்படி, ஆகம விதிப்படி அர்ச்சகர் நியமனம் நடைமுறையில் உள்ள கோவில்களில் அதே முறையில் தான் நியமனம் நடைபெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் பிறகு, 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 28 பேருக்கு பணி நியமன ஆணையை தமிழ்நாடு அரசு வழங்கியது. இதற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கத் தலைவரான அரங்கநாதன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இதில், இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், “ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் மட்டுமே அனைத்து சாதியினரை அர்ச்சகராக நியமிக்க வேண்டும். மேலும் ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்கள் எவை என அடையாளம் காண தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக” அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? – முர்மு கேள்வி

பட மூலாதாரம், rashtrapathi bhavan
ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றத்தால் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேள்வி எழுப்பியுள்ளார் என, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக மாநில அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த தீர்ப்புக்கு பதில் நடவடிக்கையாக உச்ச நீதிமன்றத்திடம் இருந்து விளக்கம் பெறும் குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை மத்திய அரசு பயன்படுத்தியுள்ளதாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி குறிப்பிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு, அதே அமர்வில் விசாரிக்கப்படுவதால் சாதகமான பதில் கிடைக்காது என்பதை உணர்ந்து மத்திய அரசு இந்த வழியைத் தேர்ந்தெடுத்துள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் எந்தக் காலக்கெடுவும் நிர்ணயிக்காத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அப்படி நிர்ணயிக்க முடியுமா” என்பது உட்பட14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் கேட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நான்கு பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழுவை நியமித்தது அரசு

பட மூலாதாரம், MK STALIN
தமிழ்நாட்டில் உள்ள நான்கு மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு தேடுதல் குழவை நியமித்துள்ளதாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழு தங்களின் பரிந்துரையை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இத்துடன் தமிழ்நாடு அரசு ஒன்பது பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழுவை நியமித்துள்ளது என்றும் தமிழ்நாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இன்றி செயல்படுவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணி சுவீகரிப்பைத் தடுக்க சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரியது தமிழ்த்தேசிய பேரவை

பட மூலாதாரம், NIRUJAN SELVANAYAGAM
இலங்கையில் காணி சுவீகரிப்பு தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை தடுக்க சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என அயல்நாட்டு தூதர்களிடம் தமிழ்த்தேசிய பேரவை தலைவர்கள் கோரிக்கை வைத்ததாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியா, பிரிட்டன், கனடா மற்றும் ஐ.நா தூதர்களை அவர்கள் சந்தித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டி விகாரை விவகாரம் என்பன தொடர்பில் கொழும்பிலுள்ள சர்வதேச இராஜதந்திரிகளிடம் எடுத்துரைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரவையின் பிரதிநிதிகள், இவ்விடயங்களில் சர்வதேச சமூகம் தலையீடு செய்து, உரிய அழுத்தங்களை வழங்கி, தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இச்சந்திப்புக்களில் தமிழ்த்தேசிய பேரவையின் சார்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சிறிகாந்தா, தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசனும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சரவணபவனும் கலந்துகொண்டிருந்தனர் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU