SOURCE :- BBC NEWS

ஜப்பானில் புல்லட் ரயில் சேவையை ஸ்தம்பிக்க வைத்த ஒரு குட்டிப் பாம்பு

பட மூலாதாரம், Getty Images

ஜப்பானின் மிகவும் பரபரப்பான புல்லட் ரயில் பாதைகளில் ஒன்றின் மின் கம்பியில் பாம்பு சிக்கிக் கொண்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் புல்லட் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

டோக்கியோ மற்றும் ஒசாகா இடையே இயங்கும் டோகைடோ ஷின்கான்சென் ரயில் சேவை, புதன்கிழமையன்று உள்ளூர் நேரப்படி மாலை 5:45 மணிக்கு நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும், மாலை 7 மணிக்கு புல்லட் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் இப்போது கோல்டன் வீக் எனப்படும் பரபரப்பான விடுமுறைக் காலம். இந்த ஒரு வாரத்தில் நான்கு தேசிய விடுமுறைகள் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் ரயில்களும், விமானங்களும் நிரம்பி வழியும், விடுமுறை கொண்டாட்டங்கள் உச்சத்தை எட்டும்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

ஒசாகாவில் இந்த ஆண்டு உலகளாவிய கண்காட்சி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அக்டோபரில் இந்த உலகக் கண்காட்சி முடியும் வரை லட்சக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பார்வையாளர்கள் நகரத்திற்கு வந்து செல்வார்கள்.

ஜப்பானிய செய்தி நிறுவனமான கியோடோ நியூஸ் வெளியிட்ட செய்திப்படி, கிஃபு-ஹாஷிமா மற்றும் மைபாரா ரயில் நிலையங்களுக்கு இடையில் பாம்பு ஒன்று மின்கம்பியில் சிக்கிக்கொண்டது. இதனால் டோக்கியோ செல்லும் ரயில்கள், ஷின்-ஒசாகா மற்றும் நகோயா இடையே நின்றன. அதேபோல, ஒசாகா செல்லும் புல்லட் ரயில்கள் ஷின்-ஒசாகா மற்றும் டோக்கியோ இடையே நிறுத்தப்பட்டன.

பாம்பு சிக்கியதால், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மின்சாரத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, ரயில் நிலையம் ஒன்றில் பயணிகள் ஊழியர்களைச் சுற்றி வளைத்துவிட்டதாகவும், டிக்கெட் இயந்திரங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அடிக்கடி புல்லட் ரயிலை பயன்படுத்தும் பயணி ஒருவர், இதுவரை இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதே இல்லை என்றும், மின்சாரம் துண்டிக்கப்பட்டு புல்லட் ரயில் நின்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் கூறினார்.

ஜப்பானில் புல்லட் ரயில் சேவையை ஸ்தம்பிக்க வைத்த ஒரு குட்டிப் பாம்பு

பட மூலாதாரம், Getty Images

“நான் மாதத்தில் பல முறை புல்லட் ரயிலை பயன்படுத்துகிறேன். ஆனால் மின்தடை காரணமாக ரயில் நிறுத்தப்பட்ட சூழலை நான் சந்தித்ததே இல்லை. இன்றுதான் இப்படிப்பட்ட அனுபவத்தை முதl முறையாக அனுபவிக்கிறேன்” என்று 46 வயதான சடோஷி தாகவா, கியோடோ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

புல்லட் ரயில் சேவைகளில் ஏற்பட்ட சிக்கல்களால் ”சோர்வடைந்து விட்டதாக” 26 வயதான கசுடோஷி டாச்சி என்ற பயணி கூறினார்.

“புல்லட் ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்,” என்று அவர் கூறுகிறார். புல்லட் ரயில் சேவை பாம்பால் நிறுத்தப்பட்டது முதல் முறை அல்ல.

ஏப்ரல் 2024இல், நகோயாவுக்கும் டோக்கியோவுக்கும் இடையிலான ரயிலில் இருந்த 16 அங்குல (40.6 செ.மீ) பாம்பை அதிகாரிகள் அகற்றிய நேரத்தில் ரயில் சேவையில் 17 நிமிட தாமதம் ஏற்பட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU