SOURCE :- BBC NEWS
31 நிமிடங்களுக்கு முன்னர்
தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றங்களைக் கொண்டு வரும் மனநிலையில் கிரிக்கெட் நிர்வாகிகள் உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அடுக்கு முறையை (two-tier system) அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனவரி 6ஆம் தேதி மெல்போர்ன் ஏஜ் பத்திரிகையில் இதுகுறித்து ஒரு செய்தி வெளியானது. அதில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவர் ஜெய் ஷா கூடிய விரைவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தலைவர் மைக் பேர்ட், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) தலைவர் ரிச்சர்ட் தாம்சன் ஆகியோரைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கும் திட்டம் குறித்து, இம்மாத இறுதியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி அந்தச் செய்தி விவரித்தது.
புதிய இரண்டு அடுக்கு முறை 2027 முதல் நடைமுறைக்கு வருகிறதா?
‘இரண்டு அடுக்கு’ முறை செயல்படுத்தப்பட்டால், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகள் முதல் வரிசையில் (Tier-1) இருக்கக்கூடும்.
மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இரண்டாம் வரிசையில் (Tier-2) இடம்பெறக்கூடும்.
தற்போது நடைமுறையில் இருக்கும் கிரிக்கெட் சுற்றுப்பயணத் திட்டம் 2027இல் முடிவடைய உள்ளதால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இன்னும் சில காலம் ஆகலாம்.
கிரிக்கெட் உலகின் பலம் வாய்ந்த அணிகள் பெரும்பாலும் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. இதை மாற்றவே, ‘இரண்டு அடுக்கு’ என்ற புதிய முறையைக் கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் இந்தப் புதிய முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால், முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ‘டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்புடன் வைத்திருக்க வேண்டும் என்றால், சிறந்த அணிகள்தான் ஒன்றோடொன்று விளையாட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
ரசிகர்களை ஈர்த்த பார்டர்-கவாஸ்கர் தொடர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் தொடர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இரு அணிகளுக்கும் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.
சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற்ற இந்தத் தொடரைக் காண ஏராளமான பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டனர். செய்திகளின்படி ஆஸ்திரேலியாவில் இதுவரை நடந்த கிரிக்கெட் போட்டிகளிலேயே அதிகமான பார்வையாளர்கள் எண்ணிக்கையுடன் இந்தத் தொடர் நான்காவது இடத்தில் உள்ளது.
இது தவிர, இன்று வரை அதிகம் பார்க்கப்பட்ட டெஸ்ட் தொடராகவும் இது அமைந்தது. எனவே, சிறந்த டெஸ்ட் அணிகள் மோதும் போட்டிகளை மட்டுமே மக்கள் அதிகம் ரசிப்பதாக ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்து
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அதிக அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது போட்டிகளைப் பிரபலமாக்குவதோடு, வணிக ரீதியாகவும் பலனளிக்கும்.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் உள்நாட்டு கிரிக்கெட் ஆட்டங்கள் இதற்கு நல்ல உதாரணம். ஐபிஎல், பிபிஎல், தி ஹன்ட்ரட் போன்ற லீக்குகளின் மீது பார்வையாளர்கள் மிகுந்த அன்பைப் பொழிகிறார்கள், இது இந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு லாபம் தருகிறது.
“டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்பினால், முடிந்த வரை முன்னணியில் இருக்கும் அணிகளை மோதவிடுவதே ஒரே வழி என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்கிறார் ரவி சாஸ்திரி
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் ரவி சாஸ்திரியின் கருத்தை ஆமோதிக்கிறார்.
டெலிகிராஃப் தளத்தில் அவர் எழுதிய கட்டுரையில், “டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்களுக்கு நடக்க வேண்டும். ஒவ்வொரு நாளுக்கும் தேவையான ஓவர்கள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். ஒரு தொடரில் குறைந்தது மூன்று டெஸ்ட் போட்டிகள் இருக்க வேண்டும். டெஸ்ட் அணிகளின் இரண்டு குழுக்கள் இருக்க வேண்டும்.”
“டெஸ்ட் கிரிக்கெட்டில், 2027ஆம் ஆண்டு இரண்டு அடுக்கு முறையை ஐசிசி பரிசீலித்து வருவதைப் படித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதன் பொருள் இனி நாம் மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை ஆஷஸ் தொடரைப் பார்க்கலாம்” என்று அவர் எழுதியுள்ளார்.
லாபம் ஈட்டும் என்ணம் உள்ளதா?
`எனக்கு பொருளாதாரம் தெரியும்’ என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தெரிவித்துள்ளார்.
“இது மூன்று வாரியங்களுக்குப் பயனளிக்கும். ஆனால் விளையாட்டு என்பது பவுண்டுகள், டாலர்கள் மற்றும் ரூபாய்களைப் பற்றியது அல்ல. இந்த விளையாட்டில் தொடர்புடையவர்கள் நிச்சயமாக அதன் மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டும்” என்று அவர் விமர்சித்துள்ளார்.
முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் `பிபிசி ரேடியோ 5′ உடன் பேசுகையில் இதுபற்றிக் கருத்து தெரிவித்தார்.
அப்போது, “இந்தப் புதிய முறை சரியானதல்ல. இது கிரிக்கெட்டின் சிறந்த நலன்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்பதில் நம்பிக்கை இல்லை. இது பேராசை என்று நான் நினைக்கிறேன். இது டெஸ்ட் கிரிக்கெட் போன்ற விளையாட்டை அழிக்கப் போகிறது” என்றார்.
கடந்த 1975, 1979 ஆகிய ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகள் உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணிக்கு தலைமை தாங்கிய கிளைவ் லாயிட், இந்தத் புதிய டெஸ்ட் தொடர் முறையுடன் உடன்படவில்லை.
“இந்த முடிவை இப்போதே நிறுத்த வேண்டும். டெஸ்ட் நாடுகள் அந்தஸ்தை பெற கடுமையாக உழைத்த நாடுகளுக்கு இது மிகவும் மோசமான முடிவு. இப்போது அவர்கள் பலவீனமான அணிகளுடன் தங்களுக்குள் விளையாடுவார்கள்” என்பது அவரின் கருத்து.
“அது எப்படி பலவீனமான அணிகள் முன்னேற உதவப் போகிறது? உங்களைவிடச் சிறந்த அணிகளுடன் நீங்கள் விளையாடும்போது, உங்கள் ஆட்டம் மேம்படும். நீங்கள் உண்மையில் எவ்வளவு சிறப்பாக விளையாடுவீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நான் இதை நினைத்து வருத்தப்படுகிறேன்” என்று லாயிட் கூறினார்.
அதோடு, “அனைத்து அணிகளுக்கும் சமமான பணம் கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும். இதனால் அவர்கள் தொடர்ந்து தங்கள் விளையாட்டை மேம்படுத்துவதில் பணியாற்ற முடியும்” என்றும் அவர் கூறினார்.
மேற்கிந்திய தீவுகள் ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது. 1980 முதல் 1995 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் வெல்ல முடியாத அணியாக இருந்தனர். ஆனால் அதன் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி திணறி வருகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டில் ஐயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றன. அதன் பின்னர், பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக சில போட்டிகள் நடந்தன, ஆனால் அதன் முடிவுகள் பெரியளவில் இல்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU