SOURCE :- BBC NEWS

'டிடி நெக்ஸ்ட் லெவல்'-  ஊடக விமர்சனங்கள்

பட மூலாதாரம், @iamsanthanam

59 நிமிடங்களுக்கு முன்னர்

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’, தமிழ் சினிமாவின் ‘ஹாரர் காமெடி திரைப்படங்கள்’ பட்டியலில் புதிதாக இணைந்துள்ள திரைப்படம்.

சந்தானம், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், ரெடிங் கிங்ஸிலி, யாஷிகா ஆனந்த், கீதிகா திவாரி, உள்ளிட்ட பலர் நடித்து இன்று (மே 16) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது டிடி நெக்ஸ்ட் லெவல். இந்தப் படத்தை எஸ். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார், ஆஃப்ரோ இசையமைத்துள்ளார்.

நடிகர் சந்தானத்தின் டிடி (தில்லுக்குத் துட்டு) திரைப்பட வரிசையில், இது நான்காவது திரைப்படம். இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘கோவிந்தா’ எனும் பாடல் சர்ச்சையான நிலையில், அந்த பாடலின் சர்ச்சை வரிகளை நீக்கியுள்ளதாகவும், டியூனை மியூட் செய்ய உள்ளதாகவும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

நகைச்சுவை நடிகராக பிரபலமாகி, நாயக அவதாரம் எடுத்துள்ள சந்தானத்தை ‘அடுத்த லெவலுக்கு’ கொண்டு செல்லுமா இந்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம்? ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திரைப்படத்தின் கதை என்ன?

யூடியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து அதன் மூலம் ஆதரவாளர்களையும், அதே அளவு ஹேட்டர்களையும் ஈட்டி வைத்திருப்பவர் கிஸா 47 (சந்தானம்). திரை விமர்சகர்களை குறிவைத்து தன்னுடைய பாழடைந்த தியேட்டருக்கு வரவழைத்து கொல்லும் பேய் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) ஹீரோ கிஸாவை தனது திரையரங்குக்கு வரவழைக்கிறார்.

ஆனால் அவருக்கு முன்பாகவே ஹீரோவின் குடும்பத்தினர் (நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த்) அங்கு சென்று மாட்டிக் கொள்கின்றனர்.

ஹீரோவும் அவரது நண்பரும் (மொட்டை ராஜேந்திரன்) திரைக்குள் இழுக்கப்பட்டு அதில் ஓடும் திரைப்படத்துக்குள் சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது, அதில் இருக்கும் நடிகர்களாக ஹீரோவின் குடும்பத்தினர் இருப்பது. திரைக்குள் ஹீரோவின் காதலி (கீதிகா திவாரி) பேயாக மாறி இருக்கிறார்.

அவர் ஏன் பேயாக மாறினார்? திரைக்குள் இருந்து தனது குடும்பத்தை சந்தானம் எப்படி வெளியே கொண்டு வந்தார் என்பதே ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் மீதிக் கதை.

'டிடி நெக்ஸ்ட் லெவல்'-  ஊடக விமர்சனங்கள்

பட மூலாதாரம், @iamsanthanam

“ஒரு திகில் காமெடி ஜானருக்கான கச்சிதமான கதையை தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர்”, இந்து தமிழ் திசை நாளிதழின் விமர்சனம் கூறுகிறது.

சினிமா விமர்சகர்களை பழிவாங்கும் பேய், திரைக்குள் சென்று மாட்டிக் கொள்ளும் பிரதான கதாபாத்திரங்கள் என சுவாரஸ்யமான ஒன்லைனரை எடுத்துக் கொண்டு தமிழில் ஒரு ஸ்பூஃப் வகை திரைப்படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் என்று அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட சில விஷயங்களுக்காகவே இயக்குனர் பிரேம் ஆனந்த் மற்றும் சந்தானத்தை பாராட்டலாம்” என்று இந்தியா டுடேவின் விமர்சனம் கூறுகிறது.

மேலும், “திரைக்கதையில் பல அடுக்குகள் உள்ளன. ஹாரர் காமெடி மட்டுமல்லாது, மெட்டா திரைப்படமாகவும் உள்ளது, திரைப்பட விமர்சகர்கள் தொடர்பான காட்சிகள், என நிறைய புதுமைகள் உள்ளது. அவை முதல் பாதியின் 25 நிமிடங்களுக்கு நம்மை சிரிக்க வைக்கின்றன.” என்று அந்த விமர்சனம் கூறுகிறது.

சந்தனத்தின் நடிப்பு எப்படி உள்ளது?

'டிடி நெக்ஸ்ட் லெவல்'-  ஊடக விமர்சனங்கள்

பட மூலாதாரம், @iamsanthanam

இந்து தமிழ் திசை நாளிதழின் விமர்சனத்தின்படி, “சந்தானம் பேசும் டயலாக் டெலிவரி பல இடங்களில் கைகொடுக்கிறது. ‘ப்ரோ’ என்று சொல்லி அவர் பேசும் மாடுலேஷன் புன்னகையை வரவழைக்கிறது. மொட்டை ராஜேந்திரன் – சந்தானம் கூட்டணியில் சில ‘குபீர்’ தருணங்களும் உள்ளன. உதாரணமாக சப்டைட்டில் தொடர்பாக வரும் காட்சி, கவுதம் மேனனின் ‘உயிரின் உயிரே’ மீளுருவாக்கம் உள்ளிட்ட காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது.”

சந்தானம், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் ஒரு காமெடி படத்துக்கு எது தேவையோ அதை கொடுத்திருக்கின்றனர் என்றும் அந்த விமர்சனம் கூறுகிறது.

இந்த திரைப்படத்தில் சந்தானம் தனது உச்சக்கட்ட ‘ஃபார்மில்’ இருக்கிறார் எனப் பாராட்டியுள்ள இந்தியா டுடே, “திரைப்பட விமர்சகர்களை கேலி செய்வது முதல் கிசுகிசு பரப்புபவர்களாக இருக்கும் யூடியூபர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சிப்பது வரை, ஊடக வட்டாரங்களில் ஒலிக்கும் அனைத்து வேடிக்கையான விஷயங்களையும் இந்தப் படம் தொடுகிறது. ஒரு இடத்தில் சந்தானம், ஆணாதிக்க நகைச்சுவை வேண்டாமே என்று கூறுகிறார்.” என பாராட்டியுள்ளது.

ஆனால் சந்தானத்தின் நடிப்பும், காமெடி ‘ஒன்லைனர்களும்’ வழக்கமான சுவாரஸ்யத்துடன் இல்லை என டைம்ஸ் ஆப் இந்தியாவின் விமர்சனம் கூறுகிறது.

ராஜேந்திரன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் கூட்டணியை பாராட்டியுள்ள அந்த விமர்சனம், இந்த மூவரைத் தவிர, பிற கதாபாத்திரங்கள் குறிப்பாக பெண் கதாபாத்திரங்கள் வெறுமனே பயப்படுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது.

திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா?

'டிடி நெக்ஸ்ட் லெவல்'-  ஊடக விமர்சனங்கள்

பட மூலாதாரம், @iamsanthanam

“ஒட்டுமொத்தமாக திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர். கதாபாத்திரங்கள் திரைக்குள் செல்லும்வரை ஓரளவு விறுவிறுப்பாக சென்ற படம், அதன்பின் தாறுமாறாக அலைபாய்கிறது. எந்த கதாபாத்திரமும் அழுத்தமாக வடிவமைக்கப்படவில்லை.” என இந்து தமிழ் திசை நாளிதழின் விமர்சனம் கூறுகிறது.

“இதற்கு முன்பு வந்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படமும் இதே பாணி ஹாரர் காமெடி திரைப்படம்தான் என்றாலும் அதில் இடம்பெற்ற புத்திசாலித்தனமான திரைக்கதையும், அழுத்தமான கதாபாத்திரங்களும் இதில் முற்றிலுமாக இல்லை.

குறிப்பாக இரண்டாம் பாதியின் இழுவை சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது. படம் இதோ முடிந்து விட்டது என்று நாம் நினைக்கும் இடங்களில் எல்லாம், முற்றுப்புள்ளிக்கு பதில் கமா போட்டு மீண்டும் மீண்டும் இழுத்து வைத்திருக்கிறார்கள். குறிப்பாக நிழல்கள் ரவி பாத்ரூம் காட்சி, மர்ம டைரியை யார் எடுப்பது என்பது தொடர்பான காட்சிகள் சிரிக்க வைப்பதற்கு பதிலாக பொறுமையை கடுமையாக சோதிக்கின்றன.” என்று இந்து தமிழ் திசையின் விமர்சனம் கூறுகிறது.

'டிடி நெக்ஸ்ட் லெவல்'-  ஊடக விமர்சனங்கள்

பட மூலாதாரம், @iamsanthanam

“படம் இரண்டு மணி நேரத்திற்கும் சற்று அதிகமாக இருந்தாலும், இரண்டாம் பாதி மட்டுமே ஆறு மணி நேரம் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் பாதி தந்த சுவாரஸ்யத்தையும் அது கெடுக்கிறது.” என இந்தியா டுடே விமர்சித்துள்ளது.

மேலும், முதல் பாதியில் சிறப்பாக ஆரம்பித்த திரைப்படம், இரண்டாம் பாதியில் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது என அந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.

திரைப்படத்தின் தொழில்நுட்ப அம்சங்களை பாராட்டியுள்ள டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம், “ஆனால், படத்தின் சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைக் காட்சிகளால் அவை தடுமாறுகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆஃப்ரோவின் பின்னணி இசை சுமார் ரகம். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவில் கலர்ஃபுல்லான காட்சிகள் ஈர்க்கின்றன. சிஜியில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் எனக் கூறுகிறது இந்து தமிழ் திசை நாளிதழின் விமர்சனம்.

“மொத்தத்தில் ‘டிடி’ படவரிசையில் மிகவும் ‘வீக்’ ஆன திரைக்கதையை கொண்ட படமாக இதனை சொல்லலாம். அந்த அளவுக்கு ஓரிரண்டு காட்சிகளை தவிர பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லாமல் மிகவும் தட்டையாக நகர்கிறது படம்.” என்று அந்த விமர்சனம் கூறுகிறது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU