SOURCE :- BBC NEWS

டொனால்ட் டிரம்ப்: இரண்டாவது ஆட்சியில் இந்தியா உள்பட உலக நாடுகள் மீது எப்படியான தாக்கம் இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

4 நிமிடங்களுக்கு முன்னர்

உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நாடாகக் கருதப்படும் அமெரிக்காவுடைய அதிபரின் பதவிக்காலம், அந்த நாட்டின் கொள்கைகளில் மட்டுமல்ல, உலகளவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த விளைவுகள் பொருளாதாரக் கொள்கைகள் முதல் ராஜ்ஜீய முடிவுகள் வரை எதிரொலிக்கின்றன.

ஜனவரி 20ஆம் தேதி (இன்று) டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராகத் தனது இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்குவார். ஜே.டி.வான்ஸ் துணை அதிபராகப் பொறுப்பேற்கிறார்.

டிரம்ப் பெரும்பாலும், ‘கணிக்க முடியாதவர்’ என்றே கருதப்படுகிறார். அதாவது, எந்தவொரு பிரச்னையிலும் அவரது நிலைப்பாட்டை முன்கூட்டியே கணிக்க முடியாது. சிலர் இதை அவருடைய பலமாகக் கருதுகிறார்கள். மற்றவர்கள் அதை ஒரு பலவீனமாகப் பார்க்கிறார்கள்.

டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்கவுள்ள, இந்த நேரத்தில், அவரது முதல் பதவிக் காலத்தில் இருந்ததைவிட உலகம் நிறைய மாறிவிட்டது. பல புதிய சவால்கள் உருவாகியுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் உலகளவில் என்ன தாக்கம் இருக்கக்கூடும்?

அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா அதிக வரி செலுத்த வேண்டியிருக்குமா? அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் என்ன மாற்றம் ஏற்படும்? இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் மத்திய கிழக்கில் நீடித்த அமைதியை எந்த அளவுக்குக் கொண்டு வரும்?

யுக்ரேன் போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? காலநிலை மாற்றம் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? தெற்காசியாவில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா என்ன மாதிரியான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்?

இப்படியாக எழும் பல கேள்விகளை, பிபிசி ஹிந்தியின் ‘தி லென்ஸ்’ என்ற வாராந்திர நிகழ்ச்சியில், கலெக்டிவ் நியூஸ்ரூமின் செய்திப் பிரிவு இயக்குநர் முகேஷ் ஷர்மா விவாதித்தார்.

இந்த விவாதத்தில், மூத்த வெளியுறவு செய்தியாளர் இந்திராணி பாக்சி, ராஜதந்திர ஆய்வாளர் ராஜீவ் நயன், ஜெருசலேமை சேர்ந்த மூத்த செய்தியாளர் ஹரிந்தர் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் இஸ்ரேலுக்கு எப்படி இருக்கும்?

அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின்போது, டொனால்ட் டிரம்ப் யுக்ரேன்–ரஷ்யா போர் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மோதல் குறித்துப் பேசினார். அப்போது, தான் ஆட்சிக்கு வந்தால், இந்தப் போர்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்று கூறியிருந்தார்.

ஆனால், அவர் பதவியேற்பதற்கு முன்பே, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்தப் போர் நிறுத்தத்தில் டிரம்ப் என்ன பங்கு வகித்துள்ளார் என்ற கேள்வி எழுகிறது.

இதுகுறித்து, ஜெருசலேமை சேர்ந்த மூத்த செய்தியாளர் ஹரிந்தர் மிஸ்ரா கூறுகையில், “போர் நிறுத்தத்தில் டிரம்பின் பங்கு குறித்து ஜெருசலேமில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அதை டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்,” என்றார்.

அந்தக் கட்டுரையில், “ஜோ பைடன் தனது பதவிக் காலத்தில் செய்ய முடியாத பணியை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான ஒரேயொரு சந்திப்பில் டிரம்பின் சிறப்புத் தூதர் நிறைவேற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார் ஹரிந்தர் மிஸ்ரா.

மேலும் அவர், “இந்தச் சந்திப்பு மிகவும் பதற்றமாக இருந்ததாகவும், எப்படியாவது போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுமெனவும், பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்றும் நெதன்யாகு மீது அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது,” என்று கூறினார்.

ஹரிந்தர் மிஸ்ராவின் கூற்றுப்படி, டிரம்பின் புதிய நிர்வாகத்தில், இஸ்ரேலை எதிர்க்கும் அல்லது இஸ்ரேலுடன் விரோத உறவுகளைக் கொண்டிருக்கும் நாடுகள் மீது அவர் அதிக அழுத்தம் கொடுப்பார் என்று நம்பப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப்: இரண்டாவது ஆட்சியில் இந்தியா உள்பட உலக நாடுகள் மீது எப்படியான தாக்கம் இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தார். அவரது இரண்டாவது பதவிக் காலத்திலும் அவரது நிலைப்பாடு அப்படியே இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஹரிந்தர் மிஸ்ராவை பொருத்தவரை, டிரம்பின் முடிவுகளைக் கணிப்பது கடினமாக இருக்கும். “அவரது நிலைப்பாடு குறித்து இப்போது தெளிவு இல்லை. இந்த நிச்சயமற்ற தன்மை தொடரும் என்பதால், இது அனைவரையும் விழிப்புடன் இருக்க வைக்கும்,” என்கிறார் அவர்.

“நெதன்யாகுவுக்கும் டிரம்புக்கும் இடையிலான உறவுகள் முன்பு மிகவும் நன்றாக இருந்தன. ஆனால், டிரம்பின் முதல் பதவிக் காலம் முடிவடைந்து அவர் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, அவர்களுக்கு இடையே எந்த உறவும் இல்லை. இப்போது நெதன்யாகு டிரம்புடனான தனது உறவை மீண்டும் மேம்படுத்த முயல்கிறார். ஆனால் டிரம்ப் இதுதொடர்பாக எந்தத் தெளிவான அறிகுறியையும் இதுவரை கொடுக்கவில்லை. ஆனால், இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்த அவரது அர்ப்பணிப்பு அப்படியே இருக்கும் என்பது உறுதி,” என்று அவர் கூறினார்.

டிரம்பின் பங்கு குறித்து கருத்து தெரிவித்த மூத்த வெளியுறவு செய்தியாளர் இந்திராணி பாக்சி, “டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் இஸ்ரேலுடனான உறவுகள் ஆழமாக இருந்தன. அவர் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றினார், ‘ஆபிரகாம் ஒப்பந்த’ செயல் முறையைத் தொடங்கினார். இப்போது மோதல் இருக்கும் போதிலும் ஆபிரகாம் ஒப்பந்தத்தின் தாக்கம் உள்ளதாக நான் நினைக்கிறேன். இதுவொரு நேர்மறையான அறிகுறி” என்றார்.

“இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் எவ்வளவு காலம் நீடிக்கும், இறுதியில் அது நிரந்தர அமைதி ஒப்பந்தமாக மாறுமா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். இந்தப் புதிய முயற்சி எவ்வளவு தூரம் செல்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்,” என்றும் இந்திராணி மேலும் கூறினார்.

டிரம்ப் சௌதி அரேபியாவிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்?

டொனால்ட் டிரம்ப்: இரண்டாவது ஆட்சியில் இந்தியா உள்பட உலக நாடுகள் மீது எப்படியான தாக்கம் இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

ஆபிரகாம் ஒப்பந்தத்தின் கீழ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொராக்கோ, சூடான், பஹ்ரைன் ஆகியவற்றின் அங்கீகாரத்தை இஸ்ரேல் பெற்றது. இதற்காக அமெரிக்கா இந்த நாடுகளுக்குப் பல திட்டங்களை முன்வைத்தது.

இந்தப் பிராந்தியத்தில் மிக முக்கியமான நாடாக இருக்கும் சௌதி அரேபியாவும் இந்த ஒப்பந்தத்தில் சேர வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம். ஏனெனில், அது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இதுவரை, சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்த ஒப்பந்தத்தில் முழுமையாக நம்பிக்கை கொள்ளவில்லை. பாலத்தீனத்துக்கு முதலில் ஒரு சுதந்திர நாடு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், அதன் நிலம் அதற்கு வழங்கப்பட வேண்டும், அதன் பிறகுதான் மற்ற விஷயங்கள் நடக்கும் என்று சௌதி இளவரசர் கூறுகிறார்.

இப்போதைய கேள்வி என்னவென்றால், இஸ்ரேல் பாலத்தீனத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஆபிரகாம் ஒப்பந்தத்தைப் போதுமான அளவுக்கு டிரம்ப் நிர்வாகத்தால் முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியுமா?

டொனால்ட் டிரம்ப்: இரண்டாவது ஆட்சியில் இந்தியா உள்பட உலக நாடுகள் மீது எப்படியான தாக்கம் இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

இதுகுறித்துப் பேசிய ராஜதந்திர ஆய்வாளர் ராஜீவ் நயன், டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் சௌதி அரேபியா மற்றும் பிற அரபு நாடுகளின் எதிர்கால நிலைப்பாட்டைப் பற்றி விவாதித்தார்.

அப்போது அவர், “இந்தப் பிராந்தியத்தில் பாலத்தீனம் மற்றும் அரபு நாடுகளுக்கு ஆதரவாக ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று நினைக்கிறோம். அமெரிக்கா எங்கு ஆதிக்கம் செலுத்துகிறதோ, அங்கு இஸ்ரேலும் ஆதிக்கம் செலுத்தும்” என்றார்.

மேலும், “முன்னர் ஒபெக் பிளஸ் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கி நகர்ந்த சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள், அமெரிக்காவுடனான தங்கள் உறவுகளைச் சமநிலைப்படுத்த முயன்றன. அத்தகைய சூழ்நிலையில், இந்த நாடுகள் லாபகரமான ஒப்பந்தத்தைச் செய்து கொள்வதை அமெரிக்கா விரும்பாது,” என்று குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து ராஜீவ் நயன் மேற்கொண்டு பேசுகையில், “யுக்ரேன் நெருக்கடியில் சிக்கியுள்ளதால், சிரியாவில் திறம்பட எதையும் செய்ய முடியாத ரஷ்யாவின் திறன் தற்போது குறைந்துள்ளது. ஆகவே, இப்போதைக்கு சிரியாவில் தீவிரமாகத் தலையிடுவதில் ரஷ்யாவின் நிலைப்பாடு தெளிவாக இல்லை,” என்று அவர் கூறினார்.

அதோடு, “டிரம்ப் – புதின் இடையே ஒரு நல்லுறவு உருவானால், அது நிச்சயமாக சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற அரபு நாடுகள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும்,” எனக் குறிப்பிட்டார் ராஜீவ் நயன்.

யுக்ரேன் போர் குறித்த டிரம்பின் நிலைப்பாடு என்ன?

டொனால்ட் டிரம்ப்: இரண்டாவது ஆட்சியில் இந்தியா உள்பட உலக நாடுகள் மீது எப்படியான தாக்கம் இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

மத்திய கிழக்கு மோதலுக்குப் பிறகு, ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போரும் ஒரு முக்கியமான உலகளாவிய பிரச்னையாக மாறியுள்ளது. டிரம்ப் அதிபராகும்போது, ஒரு சமரசத்தை அடைய ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்க முடியும் என்று விவாதிக்கப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே நடந்து வரும் மோதலை டிரம்பால் எப்படி நிறுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது.

இதில் டிரம்பின் பங்கு குறித்து விவாதிக்கும் போது, மூத்த செய்தியாளர் இந்திராணி பாக்சி, “டிரம்புக்கும் புதினுக்கும் இடையே பழைய உறவு இருப்பதாகப் பேசப்படுவதால் இந்த அச்சம் வெளிப்படுத்தப்படுகிறது,” என்றார்.

“டிரம்ப் யுக்ரேனை அப்படியே இருக்கச் சொல்வார் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில், எதிர்பார்க்கப்படும் சமாதான ஒப்பந்தம் ஐரோப்பிய கண்ணோட்டத்திலானதாக இருக்கும். யுக்ரேனிய பகுதிகளை ஆக்கிரமித்திருப்பது சரியானதுதான் என்று ரஷ்யாவிடம் சொல்லப்படாது. ஏனெனில், எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும், ரஷ்யா செய்தது, சர்வதேச சட்டத்தின்படி தவறு.”

டிரம்ப் அப்படிப்பட்ட ஒப்பந்தத்திற்கு வருவார் என்று நினைக்கவில்லை என்கிறார் இந்திராணி பாக்சி.

இதுகுறித்து ராஜீவ் நயன் பேசுகையில், “பைடனுக்கும் டிரம்புக்கும் இடையே வேறுபாடு உள்ளது. பைடன் யுக்ரேனை முழுமையாக ஆதரித்துள்ளார். ஆனால் டிரம்பின் நிலைப்பாடு இதிலிருந்து வேறுபட்டிருக்கலாம்,” என்றார்.

அவர் மேற்கொண்டு பேசியபோது, “தற்போது அமெரிக்க பொதுமக்கள் யுக்ரேனுடன் நிற்கிறார்கள். டிரம்ப் அதை மாற்ற முயல்வதால், அவர் அமெரிக்க மக்களை அதற்குத் தயார்ப்படுத்த வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

“டிரம்பிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் திறன் உள்ளது. ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படாமல் போகலாம். ஆனால், 5–6 மாதங்களுக்குள் தீவிர மாற்றங்களை எதிர்பார்க்கலாம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுடன் டிரம்ப் வர்த்தகப் போரில் ஈடுபடுவாரா?

டொனால்ட் டிரம்ப்: இரண்டாவது ஆட்சியில் இந்தியா உள்பட உலக நாடுகள் மீது எப்படியான தாக்கம் இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

டிரம்ப் நிர்வாகம், “அமெரிக்க நலன்களுக்கு முன்னுரிமை” என்ற கொள்கையை வலியுறுத்துவதால், இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவுகள் ஒரு புதிய திசையை நோக்கிச் செல்லக்கூடும்.

இதுபோன்ற சூழ்நிலையில், இதை இந்தியா எப்படி ராஜ்ஜீய ரீதியாகக் கையாளும் என்ற கேள்வி எழுகிறது.

இதுகுறித்துப் பேசிய இந்திராணி பாக்சி, “கடந்த முறையும் டிரம்ப் இந்தியாவின் எஃகு மற்றும் அலுமினியத்தின் மீது வரிகளை விதித்தார். சில வாரங்களுக்கு முன்பும் அவர் வரிகள் பற்றிப் பேசியிருந்தார்.

மோதி அரசு தனது மூன்றாவது பதவிக் காலத்தில், அமெரிக்காவுடனான ஒப்பந்தம் தொடர்பாக எத்தகைய ராஜ்ஜீய அணுகுமுறையை எடுப்பது, அது இந்தியாவுக்கு மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் நன்மை பயக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்,” என்றார்.

அதேநேரத்தில், “இந்தியா எங்கு தன்னை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும் பார்க்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

டொனால்ட் டிரம்ப்: இரண்டாவது ஆட்சியில் இந்தியா உள்பட உலக நாடுகள் மீது எப்படியான தாக்கம் இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே சமநிலையை ஏற்படுத்துவது அமெரிக்க மூலோபாயத்திற்கு முக்கியமானது. இந்த மூன்று நாடுகளும் அவற்றின் சொந்த சூழலில் அமெரிக்காவுடன் ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளன. தெற்காசியாவுக்கான அமெரிக்க வியூகத்தில் அவற்றின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

தெற்காசியாவில், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூட்டான், நேபாளம், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவுகள் ஆகியவை அடங்கும். உலக வங்கியின் கூற்றுப்படி, இந்தப் பகுதியில் 194 கோடி மக்கள் வாழ்கின்றனர். தெற்காசியாவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா சில ஆண்டுகளில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அப்படியே இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

இதுகுறித்து இந்திராணி பாக்சி பேசிய போது, “பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் அமெரிக்காவுடனான உறவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன,” என்றார்.

“கடந்த பல வாரங்களாக, பாகிஸ்தானின் ஏவுகணை தயாரிப்பு நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. பாகிஸ்தான் தொலைதூர ஏவுகணையைத் தயாரித்து வருவதாக அமெரிக்கா கூறுகிறது. அதோடு அந்த ஏவுகணை தனக்கு எதிரானதாக திரும்பக்கூடும் என்றும் அமெரிக்கா நினைத்தது” என்று குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : BBC