SOURCE :- BBC NEWS

அமெரிக்கா, டிரம்ப் 2.0

பட மூலாதாரம், Getty Images

18 ஜனவரி 2025, 07:20 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜனவரி 20ஆம் தேதி வெள்ளை மாளிகைக்குள் அவர் கால் பதிக்கவுள்ளார்.

அமெரிக்க அதிபராக அவரது இரண்டாவது பதவிக்காலம், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது.

ஏனெனில் அவர் ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ (America First) என்ற திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார். இது அமெரிக்காவின் எல்லைக்கு அப்பால் வாழும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும்.

இதற்கு முன், 2017 முதல் 2021 வரை அமெரிக்க அதிபராக இருந்தார் டிரம்ப். அவரது இரண்டாவது பதவிக்காலத்தில், சில முக்கிய சர்வதேச பிரச்னைகளை எவ்வாறு அணுகக்கூடும் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

அமெரிக்கா, டிரம்ப் 2.0

யுக்ரேன்

அமெரிக்கா, டிரம்ப் 2.0

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் பிரசாரத்தின் போது, ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போரை ‘ஒரே நாளில்’ முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று டிரம்ப் பலமுறை கூறினார். ஆனால், அதுகுறித்த கூடுதல் விவரங்களை அவர் அளிக்கவில்லை.

2022ஆம் ஆண்டில் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, யுக்ரேனுக்கு வழங்கப்பட்ட பில்லியன்கணக்கான டாலர்மதிப்பிலான அமெரிக்க ராணுவ உதவி குறித்து டிரம்ப் நீண்டகாலமாக விமர்சித்து வருகிறார்.

இதனால், போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவுடன் சமரசம் செய்யுமாறு யுக்ரேனை டிரம்ப் நிர்பந்திப்பார் என்ற அச்சம் யுக்ரேன் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்தது.

யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கான டிரம்பின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட கீத் கெல்லாக் என்பவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஜனவரியின் தொடக்கத்தில், ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய கெல்லாக், ‘100 நாட்களுக்குள் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வை எட்டுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகக்’ கூறினார்.

ரஷ்யாவுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க யுக்ரேன் ஒப்புக் கொண்டால் மட்டுமே, அந்நாடு அமெரிக்காவின் உதவியைப் பெற முடியும் என்று கெல்லாக் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு ஆய்வறிக்கையில் முன்மொழிந்தார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தன்னைச் சந்திக்க விரும்புவதாகவும், தனது குழுவினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நேட்டோ

அமெரிக்கா, டிரம்ப் 2.0

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உட்பட 32 நாடுகளை உள்ளடக்கிய வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) டிரம்பின் வெறுப்புக்குரிய விஷயங்களில் ஒன்றாகும்.

அதிபராக தனது முதல் பதவிக் காலத்தின் போது, மற்ற உறுப்பு நாடுகள் ‘தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட வேண்டும்’ என்ற ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கை அடையத் தவறினால், நேட்டோவிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதாக அவர் அச்சுறுத்தினார்.

தனது பங்கை செலுத்தாத ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால், அமெரிக்கா அதை பாதுகாக்காது என்றும் டிரம்ப் கூறினார்.

ஜனவரியின் (2025) தொடக்கத்தில், நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தங்கள் தேசிய வருமானத்தில் 5% (முந்தைய இலக்கை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக) இதற்காக செலவழிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

நேட்டோவின் நோக்கம் மற்றும் பணியை ‘அடிப்படையில் இருந்தே மறு மதிப்பீடு செய்வது’ தான் டிரம்பின் குறிக்கோள் என்று அவரது பிரசார வலைத்தளம் விவரிக்கிறது.

நேட்டோ கூட்டணியில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து கருத்து வேறுபாடு நிலவுகிறது.

ஆனால் வெளியேறாமல் கூட இந்தக் கூட்டணியை பலவீனப்படுத்த அவருக்கு இன்னும் வழிகள் உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் அதனை அவரால் சாதிக்க முடியும்.

மத்திய கிழக்கு

அமெரிக்கா, டிரம்ப் 2.0

பட மூலாதாரம், Getty Images

காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு டிரம்ப் பதவியேற்க உள்ளார். இந்த விவகாரத்தில் டிரம்பின் ஆலோசகர்கள், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறப் போகும் அதிபர் பைடனின் குழு மற்றும் கத்தார்-எகிப்திய பேச்சுவார்த்தையாளர்களுடன் இணைந்து பணியாற்றினர்.

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இருவருமே (டிரம்ப் மற்றும் பைடன்) உரிமை கோருகின்றனர்.

ஆனால் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் சவால்கள் இருக்கும், குறிப்பாக பிந்தைய கட்டங்களை இறுதி செய்வதில். அதில் பைடன் கூறியது போல ‘போருக்கு நிரந்தர முடிவு’ என்பதும் அடங்கும்.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது, அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து அங்கு மாற்றியது உள்ளிட்ட இஸ்ரேலுக்கு ஆதரவான கொள்கைகளை டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் அமல்படுத்தினார்.

அவரது நிர்வாகம் இரான் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது, பொருளாதாரத் தடைகளை அதிகரித்தது மற்றும் இரானின் மிக சக்தி வாய்ந்த ராணுவத் தளபதியான, ஜெனரல் காசிம் சுலைமானியைக் கொன்றது போன்ற நடவடிக்கைகளைக் கூறலாம்.

டிரம்பின் கொள்கைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் விளைவைக் கொண்டிருந்தன மற்றும் பாலத்தீனர்களை தனிமைப்படுத்தின என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.

இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சூடான் மற்றும் மொராக்கோவுக்கும் இடையிலான ராஜ்ஜிய உறவுகளை இயல்பாக்கும் வரலாற்று ஒப்பந்தமான ‘ஆபிரகாம் ஒப்பந்தங்கள்’ விவகாரத்தில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்தார்.

ஆனால் இஸ்ரேல், எதிர்காலத்தில் ஒரு சுதந்திர பாலத்தீன அரசை ஏற்றுக்கொள்ளும் என்ற அரபு நாடுகளின் முந்தைய நிபந்தனை இதில் சேர்க்கப்படவில்லை. இருந்தும் ஆபிரகாம் ஒப்பந்தம் சாத்தியமானது.

காஸா போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர், “இந்தப் பிராந்தியத்தில் ‘வலிமையின் மூலம் அமைதியை’ ஊக்குவிப்பேன், ஆபிரகாம் ஒப்பந்தங்களை செயல்படுத்துவேன்” என்றும் டிரம்ப் கூறினார். இதன் பொருள் சௌதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவதாக இருக்கலாம்.

சீனா

அமெரிக்கா, டிரம்ப் 2.0

பட மூலாதாரம், Getty Images

சீனாவுடனான அமெரிக்காவின் அணுகுமுறை உலகளாவிய பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் பெரும் தாக்கங்களைக் கொண்டுள்ளது.

டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில், சீனாவுடன் கடுமையான வர்த்தகப் போரைத் தூண்டினார். இந்த முறை, அமெரிக்காவுக்கான சீன இறக்குமதிகளுக்கு 60% வரை வரி விதிக்க அவர் பரிந்துரைத்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிகளுக்கு டிரம்பின் தேர்வாக இருக்கும் மார்கோ ரூபியோ மற்றும் மைக் வால்ட்ஸ் ஆகிய இருவருமே சீனா மீது கடுமையான நிலைபாட்டைக் கொண்டவர்கள் என்று கருதப்படுகிறது. சீனாவை ஒரு பெரிய அச்சுறுத்தலாக பார்க்கிறார்கள் என்பதை இருவரும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

தைவான் ஒரு முக்கியமான பிரச்னையாக உள்ளது. இந்த சுயாட்சி தீவுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தைவானை, தங்களிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு மாகாணமாக கருதும் சீனா, அது ஒருநாள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்று நம்புகிறது.

ஒருவேளை சீனா தைவானை ஆக்கிரமித்தால், அமெரிக்கா அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது குறித்து இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் தெளிவாகக் கூறியதில்லை.

இருப்பினும் முந்தைய அதிபர்களுடன் ஒப்பிடுகையில், “அமெரிக்கா தைவானைப் பாதுகாக்கும்” என்று பைடன் வெளிப்படையாகவே கூறினார்.

தேர்தல் பிரசாரத்தின் போது, ‘தைவான் மீதான முற்றுகையைத் தடுக்க ராணுவ சக்தியைப் பயன்படுத்த வேண்டியதில்லை’ என்று டிரம்ப் கூறினார். அதற்கு காரணம் ‘சீன அதிபர் ஜின்பிங் தன்னை மதிப்பதாகவும், தனது குணத்தைப் பற்றி அவருக்கு நன்கு தெரியும்’ என்றும் டிரம்ப் கூறினார்.

அதையும் மீறி சீனா செயல்பட்டால், சீன இறக்குமதிகள் மீது மிகக் கடுமையான வரிகள் விதிக்கப் போவதாகவும் கூறினார்.

காலநிலை மாற்றம்

அமெரிக்கா, டிரம்ப் 2.0

பட மூலாதாரம், Getty Images

புதிய அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களின் மீது சந்தேகம் கொண்டவர் மற்றும் பசுமை ஆற்றலை அதிகரிப்பதற்கான முயற்சிகளை ஒரு ‘மோசடி’ என்று விவரித்தவர் என்பதும் பலரும் அறிந்ததே.

காலநிலை மாற்றம் தொடர்பான ‘2015 பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து’ அவர் மீண்டும் அமெரிக்காவை விலக்க வாய்ப்புள்ளது. டிரம்பின் முதல் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை அதிபர் ஜோ பைடன் 2021இல் மாற்றியமைத்தார்.

எண்ணெய்க்காக, இன்னும் அதிகமாக துளையிடப் போகிறோம் என்று டிரம்ப் சூளுரைத்துள்ளார். இது எரிசக்தி மலிவாக கிடைக்க வழிவகுக்கும் என உறுதியளித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னதாக பிரசாரத்தில், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ‘அற்பமான வழக்குகளை’ நிறுத்தப் போவதாக டிரம்ப் கூறினார்.

காற்றாலை மின்சாரத்திற்கான மானியங்களை நிறுத்துவதாகவும், எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி உற்பத்தியாளர்கள் மீதான வரிகளைக் குறைப்பதாகவும், பைடன் கொண்டு வந்த வாகன உமிழ்வு விதிமுறைகளை திரும்பப் பெறுவதாகவும் அவர் உறுதியளித்தார்.

காலநிலை வல்லுநர்கள், டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தை உலகளாவிய காலநிலை நடவடிக்கைகளுக்கு ஒரு பலத்த அடியாக கருதுகிறார்கள். அதே வேளையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது என்பது, இப்போதும் அமெரிக்க மற்றும் சர்வதேச பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

குடியேற்றம்

அமெரிக்கா, டிரம்ப் 2.0

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் அனுமதியின்றி வசிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதாக டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் தனது முதல் நாளிலேயே ‘அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தும் நடவடிக்கையை தொடங்குவேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் 11 மில்லியன் பேர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பலர் பல ஆண்டுகளாக அங்கு வேலை செய்து, வாழ்ந்து வருகின்றனர். ‘குற்றவாளிகளிடமிருந்து’ இந்த நடவடிக்கையை தொடங்குவேன் என்று டிரம்ப் கூறியுள்ளார், ஆனால் இது தொடர்பாக குறைவான விவரங்களே கொடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க மண்ணில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை என்ற ‘பிறப்பு குடியுரிமை’ (Birthright citizenship) முறையை முடிவுக்கு கொண்டு வருவதையும் டிரம்ப் நோக்கமாகக் கொண்டுள்ளார்.

தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின்போது, எல்லைப் பாதுகாப்பை கடுமையாக்கப் போவதாகக் கூறினார். அவரது முந்தைய ஆட்சியில், குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை இருந்தது. அவற்றில் பல முஸ்லிம் நாடுகள். இந்த சர்ச்சைக்குரிய பயணத் தடைகளை இம்முறை மீண்டும் கொண்டுவரப் போவதாகவும் டிரம்ப் கூறினார்.

எவ்வாறாயினும், டிரம்பின் திட்டங்கள் குறிப்பிடத்தக்க சட்ட, நிதி மற்றும் அரசியல் சவால்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று குடியேற்ற நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாய்

அமெரிக்கா, டிரம்ப் 2.0

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், கிரீன்லாந்தை வாங்குவதுடன், பனாமா கால்வாயை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்புவதாகவும் கூறியது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த இலக்குகளுக்கு ராணுவ அல்லது பொருளாதார பலத்தை அவர் பயன்படுத்துவாரா என்று ஜனவரி தொடக்கத்தில் கேட்கப்பட்ட போது, அவர் பின்வருமாறு பதிலளித்தார், “அதைக் குறித்து என்னால் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.”

குறைவான மக்கள் தொகை கொண்ட கிரீன்லாந்து தீவில் அரிய தாதுக்கள் மிகப்பெரிய அளவில் கிடைக்கின்றன. இந்த தாதுக்கள் பேட்டரிகள் மற்றும் உயர் தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தியில் முக்கியமானவை.

டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தை ஆளும் தலைவர்கள் இந்த பகுதி விற்பனைக்கு இல்லை என்று வலியுறுத்தியுள்ளனர்.

டிசம்பரில், பனாமா கால்வாய் வழியாக செல்ல பனாமா நிர்வாகம் ‘அபத்தமான, மிகவும் நியாயமற்ற’ கட்டணங்களை வசூலிப்பதாகக் கூறிய டிரம்ப், இதை நிறுத்தாவிட்டால் பனாமா கால்வாயை அமெரிக்காவிடம் திருப்பித் தருமாறு கோருவேன் என்றார்.

பனாமாவில் பெரும் பொருளாதார முதலீடுகளைக் கொண்டுள்ள மற்றும் கால்வாயை அடிக்கடி பயன்படுத்தும் நாடான சீனா குறித்து தான் கவலை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால், கால்வாய் மீதான தங்களது இறையாண்மை ‘பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது’ என்றும், நீர்வழிப் பாதையில் ‘சீன தலையீடு’ இல்லை என்றும் பனாமா கூறியுள்ளது.

மேற்கூறிய 2 பிராந்தியங்களில் எதனையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. ஆனால் டிரம்பின் ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற பார்வை, அந்நாட்டின் எல்லைக்கு அப்பால் கூட தாக்கம் செலுத்தக்கூடும் என்பதையே அவரது அறிக்கைகள் காட்டுகின்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU