SOURCE :- BBC NEWS

டூரிஸ்ட் ஃபேமிலி ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், X/@MillionOffl

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நடிகர்கள் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் இன்று (மே 1) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

நடிகர்கள் யோகிபாபு, எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி ஆகியோரும் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தின் டீசர் வெளிவந்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு ஆர்வம் பெருகியது.

தரமான ஒரு நகைச்சுவை படமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா? ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பற்றி ஊடகங்கள் கூறுவது என்ன?

டூரிஸ்ட் ஃபேமிலி ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், X/@MillionOffl

படத்தின் கதை என்ன?

இலங்கையில் பொருளாதார கஷ்டம் காரணமாக சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் பிழைப்பு தேடி யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து கள்ளத்தோணி வழியாக ராமேஸ்வரத்துக்கு வருகிறார்.

அங்கிருந்து அந்த குடும்பம் சென்னையில் குடியேறுகின்றது. சென்னையில் வேலை செய்து, அக்கம் பக்கத்தில் இருந்த அனைவருடனும் பழகி நல்ல உறவை உருவாக்கிக் கொள்கின்றனர்.

இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் திடீரென குண்டு வெடிப்பு ஏற்படுகிறது. இதற்கான காரணம் இலங்கையில் இருந்து வந்த சசிகுமாரின் குடும்பம்தான் என்று காவல்துறை சந்தேகப்படுகிறது. அவர்களைத் கைது செய்ய முயற்சி செய்கின்றனர்.

இதற்குப் பிறகு இலங்கையில் இருந்து வந்து சென்னையில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த இந்த குடும்பத்தின் நிலை என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை.

டூரிஸ்ட் ஃபேமிலி ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், X/@MillionOffl

“அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்துக்கு சிறந்த படமாகவே இப்படம் அமைந்துள்ளது”, என்று தினமணி பாராட்டியுள்ளது.

மேலும் அந்த திரை விமர்சனத்தில், “இந்த 2 மணி நேரத் திரைப்படத்தில் நகைச்சுவையும் அழுத்தமான உணர்ச்சிகளும் இடம்பெற்றுள்ளது. கதை எங்கும் கவனத்தை சிதறடிக்காமல் பல விஷயங்களை யோசிக்க வைக்கிறது. யாருக்கான கதையை பேசப்போகிறோம் என்பதில் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் நல்ல புரிதல் இருந்திருக்கிறது”, என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இயக்குனர் அபிஷன் சோகமான மனநிலையை நீடிக்க விடவில்லை என்றாலும் கதையில் வரும் சில உணர்ச்சிகரமான பகுதிகள் தேவையில்லாமல் நீண்டுகொண்டே போவது கொஞ்சம் ஏமாற்றத்தை அளிக்கிறது”, என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த படத்தை விமர்சித்துள்ளது.

தொடர்ந்து அந்த விமர்சனத்தில், “படத்தின் சில காட்சிகள், முக்கிய கதைக்களமான குடும்பத்தை விட்டு விலகி வேறு விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறது”, என்று கூறப்பட்டுள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், X/@MillionOffl

சசிகுமார் – சிம்ரன் ஜோடி எப்படி?

“சசிகுமாரும் சிம்ரனும் முதல்முறையாக ஜோடியாக நடித்துள்ளனர். கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்ளும் யதார்த்தமான தம்பதியினராக அவர்கள் திரையில் தோன்றுகின்றனர்”, என்று பாராட்டியுள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

மேலும் “சசிகுமார் தன் கதாபாத்திரத்தின் உறுதியையும் அன்பையும் காட்டுகிறார். சிம்ரன் தனது குடும்பத்தை ஒன்றிணைக்கும் தாயாக பலவீனத்தையும் வலிமையையும் கலந்த ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி படத்திற்கு ஒரு பெரிய பிளஸ்”, என்றும் தெரிவித்துள்ளது.

“மூத்த மகனாக வரும் மிதுன் நடிப்பில் யதார்த்தம் தெரிகிறது. சிறுவனாக வரும் கமலேஷ் செய்யும் சேட்டை ரசிக்க வைக்கிறது. யோகிபாபுவின் ‘டைமிங் காமெடி’ கைகொடுத்திருக்கிறது”, என்று தினத்தந்தி அதன் திரை விமர்சனத்தில் பாராட்டியுள்ளது.

“திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பேசும் இலங்கைத் தமிழ் அவர்களின் உரையாடலை யதார்த்தமானதாக உணர வைக்கிறது”, என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கின்றது.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

‘சிரிப்புடன் சிந்திக்கவைக்கும் படம்’

“இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், அவரது பின்னணி இசையால் வசனங்கள் தேவைப்படாத இடத்தை உருவாக்குவதுடன் சாதாரணமாக கடக்க வேண்டிய வசனங்களை உணர்ச்சிப்பூர்வமான தருணங்களாக மாற்றியது சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதனின் ஒளியமைப்பும் நன்றாக இருந்தது”, என்கிறது தினமணியின் திரை விமர்சனம்.

“டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமானது நகைச்சுவை அம்சத்தில் சிறந்து விளங்குகின்றது.”என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.

”அகதியாக வருபவர்களை நாம் முதலில் மனிதர்களாக நடத்துகிறோமா? உண்மையில் யார் அகதிகள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் சிறப்பான பதிலை இந்த படம் மூலம் படக்குழுவினர் கொடுத்துள்ளனர். ஒரு மோசமான உலகில், நம்பிக்கையுடன் இருப்பதுதான் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி என்பதை பார்வையாளர்களுக்கு இந்த படம் தெளிவாக உணர்த்துகின்றது” என ஊடக விமர்சனங்கள் தெரிவித்துள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU