SOURCE :- BBC NEWS

DC vs PBKS, சமீர் ரிஸ்வி, ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம், Getty Images

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

டெல்லி கேபிடல்ஸ் அணி இதற்கு முன் 22 முறை 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு 2வது முறையாக அதில் நேற்று வெற்றி பெற்றுள்ளது.

ப்ளே ஆஃ சுற்று தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் டாப்-4 பட்டியலில் யாருக்கு எந்த இடம் என்பது குறித்து இன்னும் தெளிவான முடிவுக்கு வராத நிலை நீடித்து உச்சக் கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ப்ளே ஆஃப் சுற்று எந்தெந்த அணிகளுக்கு இடையே நடக்கும் என்பதை ஊகிக்க முடியாத பரபரப்பான கட்டத்தை நோக்கி ஐபிஎல் சீசன் நகர்ந்துள்ளது.

ஸ்ரேயாஸ் போராட்டம், ஸ்டாய்னிஷ் அதிரடி

பஞ்சாப் அணிக்கு தொடக்கத்திலேயே ஆர்யா ஆட்டமிழக்கவே, பிரப்சிம்ரன், இங்கிலிஸ் ஜோடி சேர்ந்து பவர்ப்ளேயில் ஸ்கோர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இங்கிலிஸ் 32 ரன்னில் விப்ராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழக்கவே, பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணி. நிலைக்காத பிரப்சிம்ரனும் 28 ரன்னில் விப்ராஜ் பந்துவீச்சில் போல்டாகினார்.

நடுவரிசையில் நேஹல் வதேரா(16), சஷாங் சிங்(11) ரன்களில் ஏமாற்றவே, கேப்டன் ஸ்ரேயாஸ் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தி அரைசதம் அடித்தார். 53 ரன்களில் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தபோது பஞ்சாப் அணி 172 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

DC vs PBKS, சமீர் ரிஸ்வி, ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம், Getty Images

ஸ்டாய்னிஷ் களமிறங்கி 16 பந்துகளில் 44 ரன்களை விளாசினார். 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசிய ஸ்டாய்னிஷ் பஞ்சாப் அணி 200 ரன்களைக் கடக்க உதவினார். முகேஷ் குமார் ஓவரில் லாங்ஆப்பில் சிக்ஸர், மோகித் சர்மா ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள், முஸ்தபிசுர் ரஹ்மான் ஓவரிலும் சிக்ஸர் என ஸ்டாய்னிஷ் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குல்தீப் ஓவரில் ஓமர்சாய், யான்சென் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும் ஸ்டாய்னிஷ் அதிரடிக்கு யாரும் கைவிலங்கிட முடியவில்லை, 16 பந்துகளில் 44 ரன்களுடன் ஸ்டாய்னிஷ் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெல்லி தரப்பில் முஸ்தபிசுர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப், விப்ராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

DC vs PBKS, சமீர் ரிஸ்வி, ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம், Getty Images

கருண் நாயரின் உற்சாகம்

டெல்லி அணிக்கு டூப்பிளசிஸ், ராகுல் இருவரும் வலுவான தொடக்கத்தை அளித்து வெற்றிக்கான தீர்மானத்தோடு ஆடினர். ராகுல் 31 ரன்னில் யான்சென் பந்துவீச்சிலும் அதைத் தொடர்ந்து டூப்பிளசிஸ்23 ரன்னில் பிரார் பந்துவீச்சிலும் வெளியேறினர். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட்டை இழந்து பஞ்சாப் 61 ரன்கள் சேர்த்தது.

இந்திய டெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்குப்பின் இடம் பெற்ற உற்சாகத்தில் ஆடிய கருண் நாயர் நடுவரிசையில் அணியை வழிநடத்திச்செல்ல முக்கியமானவராக நேற்று இருந்தார். பிரவீண் துபே பந்துவீச்சில் வந்த வேகத்தில் கருண் நாயர் தொடர்ந்து 4 பவுண்டரிகளை விளாசினார். யான்சென் பந்துவீச்சில் சிக்ஸரும், பிரார் பந்துவீச்சில் பவுண்டரியும் அடித்து ரன்ரேட்டை குறையவிடாமல் கருண் நாயர் கொண்டு சென்றார்.

ஆனால் பிரார் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட்ஆடமுயன்ற கருண் நாயர், போல்டானார். 27 பந்துகளில் 44 ரன்கள்(2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள்) சேர்த்து கருண் நாயர் ஆட்டமிழந்தார்.

DC vs PBKS, சமீர் ரிஸ்வி, ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம், Getty Images

ரிஸ்வி அசத்தல்

டெல்லி அணிக்கு வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது 21 வயது வீரர் சமீர் ரிஸ்விதான். 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 58 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

ஒரு கட்டத்தில் டெல்லி அணி வெற்றிக்கு 46 பந்துகளில் 91 ரன்கள் தேவைப்பட்டது. ஓவருக்கு 12 ரன் ரேட் தேவை என்ற நிலையில் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை ரிஸ்வி வெளுத்துவாங்கினார். இளம் பேட்டர் ரிஸ்வி அச்சமின்றி பேட் செய்து ஓமர்சாய், யான்சென் பந்துவீச்சில் சிக்ஸரை பறக்கவிட்டார். ஹர்பிரித் பிரார் பந்துவீச்சில் சிக்ஸரும், ஸ்டாய்னிஷ், அர்ஷ்தீப் பந்துவீச்சில் சிக்ஸர் என மிரட்டலாக ரிஸ்வி பேட் செய்தார். ஐபிஎல் தொடரில் ரிஸ்வி 58 ரன்கள் என்பது அவரின் அதிகபட்ச ஸ்கோராகும்.

மோசமான பந்துவீச்சு

பஞ்சாப் அணி சேர்த்த 207 ரன்கள் என்பது வலுவான ஸ்கோர்தான். இதை டிபெண்ட் செய்ய முடியாமவிட்டால் ப்ளே ஆஃப் சுற்றில் எவ்வாறு இதற்கும் குறைவான ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடியும். பஞ்சாப் அணியில் நேற்று 6 பந்துவீச்சாளர்களும் 10 ரன்ரேட்டுக்கு மேல்தான் வாரி வழங்கினர். வேகப்பந்துவீச்சாளர்கள் யான்சென், ஓமர்சாய், அர்ஷ்தீப், ஸ்டாய்னிஷ் ஆகியோர் 13.3 ஓவர்கள் வீசி 143 ரன்களை வாரி வழங்கினர். இவர்கள் பந்துவீச்சில் 9 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளை வாரி வழங்கி 98 ரன்களை கொடுத்தனர்.

பஞ்சாப் பந்துவீச்சு இன்னும் கட்டுக்கோப்பாக இருந்திருந்தால், குறிப்பாக ஓமர்சாய், யான்சென் பந்துவீச்சு துல்லியமாக இருந்திருந்தால், பஞ்சாப் அணி வென்றிருக்கும். கருண் நாயர், ரிஸ்வி பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் சிரமப்பட்டது, ரிஸ்வியை ஆட்டமிழக்காமல் சிரமப்பட்டபோதே, பஞ்சாப் அணி தோல்வியை நோக்கி செல்வது உறுதியானது.

DC vs PBKS, சமீர் ரிஸ்வி, ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம், Getty Images

“பந்துவீச்சு சரியில்லை”

பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ” 207 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர்தான். ஆனால், ஆடுகளத்தில் பல இடங்களில் பந்து பிட்ச் ஆகி ஒவ்வொருவிதமாக பேட்டரை நோக்கி வருவதால் பேட் செய்வது கடினமாக இருந்தது. பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகசெயல்படவில்லை. ஆடுகளத்தை அறிந்தபின் அதற்கு ஏற்றார்போல் துல்லியமான லென்த்தில் பந்துவீசியிருக்க வேண்டும்.

விக்கெட் எடுக்கும் முயற்சியில் அதிக பவுன்ஸர்களை வீசியது தவறு. இந்த சீசனில் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது, வெற்றிக்கு ஒவ்வொரு அணியும் தகுதியானவர்கள். நாம்தான் நிதானமாக பொறுமையாக, நேர்மறையாக செயல்பட வேண்டும். அடுத்தப் போட்டியில் இன்னும் வலிமையாக திட்டங்களுடன் வருவோம்” எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் பிளேஆஃப் சுற்றில் யாருக்கு எந்த இடம்?

ப்ளே ஆஃப் சுற்றில் டாப்-2 மட்டுமல்ல டாப்-4-ல் யாருக்கு எந்த இடம் என்பது இன்னும் முடிவாகவில்லை. பஞ்சாப், ஆர்சிபி அணிகள் தலா 17 புள்ளிகளுடன் உள்ளன. நிகர ரன்ரேட்டில் பஞ்சாபை விட(0.327) ஆர்சிபி (0.255) குறைவாக இருக்கிறது. இரு அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கிறது. இதில் எந்த அணி அதிகபட்ச ரன்ரேட்டை பெறும் வகையில் வெல்கிறதோ அந்த அணி 19 புள்ளிகளுடன் முன்னேறும்.

அதேபோல குஜராத் அணி 18 புள்ளிகளுடன் இருக்கிறது. கடைசி லீக்கில் இன்று சிஎஸ்கேவுடன் மோதுகிறது. ஒருவேளை குஜராத் வென்றால் 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும். தோல்வி அடைந்தால், 18 புள்ளிகளுடன் இப்போதுள்ள 0.602 ரன்ரேட் குறையும்.

அதேநேரம், மும்பை அணி கடைசி லீக்கில் நாளை பஞ்சாபுடன் மோதுகிறது. ஒருவேளை பஞ்சாப் அணி வென்றால் 19 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்கும், மும்பை 16 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு செல்லும். ஆர்சிபி கடைசி லீக்கில் தோல்வி அடைந்தாலும் 3வதுஇடம் கிடைக்கும், ஒருவேளை மாபெரும் வெற்றி பெற்றால் 2வது இடத்துக்கு செல்லவும் வாய்ப்புள்ளது.

ஒருவேளை பஞ்சாப் அணியை மும்பை வீழ்த்திவிட்டால், இன்று நடக்கும் ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் குஜராத் தோல்வி அடைந்தால், 18 புள்ளிகளுடன் வலுவான ரன்ரேட்டில் மும்பை முதலிடத்தைப் பிடிக்கும். ஆர்சிபி அணி கடைசி லீக்கில் வென்றால் 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும் மும்பை வலுவான ரன்ரேட்டுடன் இருந்தாலும் 18 புள்ளிகளுடன் இருப்பதால் 2வது இடத்தையும், குஜராத் 3வது இடத்தையும், பஞ்சாப் 4வது இடத்தையும் பிடிக்கும்.

DC vs PBKS, சமீர் ரிஸ்வி, ஐபிஎல் பிளேஆஃப்

எதிர்வரும் முக்கிய ஆட்டங்கள்

இன்றைய ஆட்டம்

குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே

இடம்: ஆமதாபாத்

நேரம்: மாலை 3.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

நாள் – மே 26

இடம் – ஜெய்பூர்

நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs லக்னெள

நாள் – மே 27

இடம் – லக்னெள

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு

சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-638 ரன்கள்(13 போட்டிகள்)

சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-636 ரன்கள்(13 போட்டிகள்)

சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்)

நீலத் தொப்பி

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்)

நூர் அகமது(சிஎஸ்கே) 21 விக்கெட்டுகள்(13போட்டிகள்)

டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள்(13 போட்டிகள்)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU