SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தியோ லெகெட்
- பதவி, சர்வதேச வணிக நிருபர்
-
14 மே 2025, 12:28 GMT
புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்
லண்டனின் ஹட்டன் கார்டன் (தங்கத்துக்கு பிரசித்தி பெற்ற) நகை மாவட்டத்தில், ஒரு குடும்பத்தால் நடத்தப்படும் தங்க டீலர்ஷிப்பான ஹட்டன் கார்டன் மெட்டல்ஸின் உத்தி இயக்குநராக எம்மா உள்ளார்.
மோதிரங்கள், சின்னச் சின்ன அலங்காரங்கள் நிரம்பிய வளையல்கள், செயின்கள் மற்றும் ஜோடியற்ற காதணிகள் உள்ளிட்ட பழைய, பளபளப்பை இழந்த நகைகள் நிறைந்த ஒரு மங்கிய பிளாஸ்டிக் பெட்டியை எம்மா காட்டினார்.
ஒவ்வொரு நாளும் அவர்களது கடைக்கு வரும் மக்கள் அந்தக் கடையில் விற்கும் பொருட்களின் ஒரு சிறிய மாதிரி தான் இந்த பெட்டியில் உள்ள நகைகள்.
“தங்கத்திற்கான தேவை நிச்சயமாக அதிகரித்துள்ளது,” என்று ஓரிரு தெருக்கள் தள்ளி உள்ள எம்என்ஆர் நகைக்கடையின் விற்பனையாளர் ஒப்புக்கொள்கிறார். இதனால் தங்கத்தின் விலையும் நிச்சயமாக உயர்ந்து வருகிறது.

விலை உயர்வுக்கு காரணமாகும் டிரம்ப்பின் கொள்கைகள்
தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என பட்டியலிடுகின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
அவற்றில் முக்கியமானது, டிரம்ப் நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அமெரிக்க வர்த்தகக் கொள்கை மாற்றங்கள்.
இதன் விளைவுகள் சந்தைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
அதற்கு மாறாக, பலராலும் தங்கம் ஒரு நிலையான முதலீடாக கருதப்படுகிறது. நிலவியல் சார் அரசியல் நிச்சயமற்ற சூழலைப் பற்றிய அச்சங்கள் தங்கம் மீதான ஈடுபாட்டை மேலும் அதிகரித்துள்ளன.
பில்லியனர் வாரன் பஃபெட்டால் “உயிரற்றது” என்றும் “பயனுள்ளதும், பெருகக் கூடியதும் அல்ல” என்று நிராகரிக்கப்பட்ட தங்கத்தின் மூலம் கிடைக்கும் நிலைத்தன்மையை பல முதலீட்டாளர்கள் அதிகம் பாராட்டத் தொடங்கியுள்ளனர்.
“இந்த சூழ்நிலை தங்கத்தின் மதிப்பு உயர்வதற்கு ஒரு சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது” என்று சுரங்கத் துறையால் நிதியளிக்கப்படும் ஒரு வர்த்தக சங்கமான உலக தங்க கவுன்சிலின் மூத்த சந்தை ஆய்வாளர் லூயிஸ் ஸ்ட்ரீட் விளக்குகிறார்.
“இது எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகளைக் கவனத்தில் கொண்டு உள்ளது.மந்தநிலை ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகரித்து வருகின்றன, ஐஎம்எப் (IMF-சர்வதேச நாணய நிதியம்) சமீபத்தில் பொருளாதாரம் எதிர்காலத்தில் எவ்வாறு செயல்படும் என்பது பற்றிய அதன் கணிப்புகளை குறைத்துள்ளது என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்…”
ஆனால் உயரும் தங்கத்தின் மதிப்பு குறையவும் வாய்ப்புள்ளது.
தங்கம் ஒரு நிலையான சொத்து என்ற நற்பெயரைக் கொண்டிருந்தாலும், அது விலையில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்படாமல் இருக்காது.
ஏனென்றால் கடந்த காலங்களில், உயர்வை சந்தித்த தங்கத்தின் விலையில், முக்கியமான வீழ்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன.
இன்றைய ஆர்வமுள்ள முதலீட்டாளர்களை பெரிய இழப்புகளை சந்திக்க வைக்கும் வகையில் இது மீண்டும் நடக்கக்கூடிய அபாயம் உள்ளதா?
தங்கத்தை வாங்கும் ஆர்வம் எதனால் ஏற்பட்டது?
ஒப்பீட்டளவில் அதன் அரிதான தன்மையின் காரணமாக, தங்கம் பல நூற்றாண்டுகளாக மதிப்பைக் காப்பாற்றும் சொத்தாகக் கருதப்பட்டு வருகிறது. அதன் உலகளாவிய விநியோகம் குறைவாகவே உள்ளது.
உலக தங்க கவுன்சிலின் தரவின்படி, இதுவரை வெறும் 216,265 டன் தங்கமே மொத்தமாக வெட்டப்பட்டுள்ளன. ( தற்போது ஆண்டுக்கு சுமார் 3,500 டன்கள் அதிகரித்து வருகிறது).
இதனால், தங்கம் ஒரு “பாதுகாப்பான புகலிடம்” என பலராலும் கருதப்படுகின்றது. அதாவது அதன் மதிப்பு நிலைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், முதலீடாக வரும்போது, தங்கத்தை பொறுத்த வரை நன்மை தீமை என இரண்டு கோணங்களும் உள்ளன.
பங்குகளைப் போலன்றி, இது ஒருபோதும் ஈவுத்தொகையை வழங்காது. பத்திரங்களைப் போல் அன்றி, இது நிலையான, கணிக்கக்கூடிய வருமானத்தை வழங்காது, மேலும் அதன் தொழில்துறை பயன்பாடுகளும் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், தங்கத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது வங்கி அமைப்புகளுக்கு வெளியே இருக்கும் பொருளாக உள்ளது. மேலும், இது பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. நாணயங்கள் காலப்போக்கில் மதிப்பிழக்கக்கூடியவை, ஆனால் பொதுவாக தங்கம் அப்படி இல்லை.
“தங்கத்தை மத்திய வங்கிகளால் அச்சிட முடியாது, அதை காற்றில் இருந்தும் உருவாக்கவும் முடியாது,” என்கிறார் பங்கு தரகர் ஏ.ஜே. பெல்லின் முதலீட்டு இயக்குனர் ரஸ் மோல்ட்.
“சமீபத்திய காலங்களில் எந்த ஒரு நெருக்கடியையும் எதிர்கொள்ள அதிகாரிகள் எடுத்த முக்கிய நடவடிக்கைகளாக வட்டி விகிதங்களை குறைத்தல், பண விநியோகத்தை அதிகரித்தல், அளவுகளை தளர்வு செய்தல், பணத்தை அச்சிடுதல் போன்றவையெல்லாம் தங்கத்தின் மதிப்பை மேலும் வலுப்படுத்துகின்றன. அதனால்தான் தங்கம் ஒரு ‘பாதுகாப்பான புகலிடம்’ என்றும், மதிப்பைத் தக்கவைக்கும் சொத்தாகவும் பார்க்கப்படுகிறது.”என்கிறார் ரஸ் மோல்ட்.
சமீபத்தில், தங்கத்தை நேரடியாக வைத்திருக்கும் முதலீட்டு அமைப்புகள் போல செயல்படும் எக்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் (ETFs) மூலமாக தங்கத்திற்கான தேவை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் முதலீட்டாளர்கள் அந்த நிதியில் பங்குகளை வாங்கவும் விற்கவும் முடிகிறது.
இந்த எக்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் (ETFs) பெரிய நிறுவன முதலீட்டாளர்களிடையே மிகப் பிரபலமாக உள்ளன. அதிக அளவில் அவர்கள் செய்யும் முதலீடுகள், தங்கத்தின் விலை உயர உதவியுள்ளன.
1980 ஆம் ஆண்டு ஜனவரியில் தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியபோது, சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்தது. அதே நேரத்தில் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தன. இதனால் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பணவீக்கம் அதிகரித்தது. முதலீட்டாளர்கள் தங்கள் செல்வத்தை பாதுகாக்க முயன்றனர். பின்னர், உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகும் தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்தது. இதன் விளைவாக, 2011-இல் மற்றொரு முறை தங்க விலை உச்சத்தை அடைந்தது.
டிரம்ப் நிர்வாகம் ஏற்படுத்திய குழப்பத்திற்கு சந்தைகள் வெளிப்படுத்திய எதிர்வினையே, சமீபத்திய தங்க விலையின் உயர்வுக்கு முக்கிய காரணம் என்று தோன்றுகிறது.

பட மூலாதாரம், AFP/Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலை நோக்கி இணையதளத்தில் கடுமையான விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை சமீபத்தில் மீண்டும் கடுமையாக உயர்ந்தது.
உடனடி வட்டி விகிதக் குறைப்பை வலியுறுத்திய டிரம்ப், கடன் செலவுகளை வேகமாக குறைக்கத் தவறிய பவலை “பெரிய தோல்வியைச் சந்தித்தவர் ” என்று குறிப்பிட்டார்.
அவரது கருத்துக்கள் அமெரிக்க மத்திய வங்கியின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று சிலர் கருதினர். பங்குச் சந்தைகள் சரிந்தன, மற்ற முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடும்போது டாலரின் மதிப்பும் சரிந்தது. அதனைத் தொடர்ந்து, தங்கம் அதன் சமீபத்திய சாதனையை எட்டியது.
ஆனால், தங்கத்தின் மதிப்பு சமீபத்தில் உயர்ந்ததற்கு டிரம்பின் நடவடிக்கைகள் மட்டுமே முழுமையான காரணம் அல்ல.
டாலரை ஆயுதமயமாக்குவது குறித்த அச்சங்கள்
2022 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றது. இதற்கு மத்திய வங்கிகள் தான் காரணம் என்கிறார் லூயிஸ் ஸ்ட்ரீட் .
“[அவர்கள்] கடந்த 15 ஆண்டுகளாக தங்கத்தை நிகரமாக வாங்கி, அதனை அவர்களின் அதிகாரப்பூர்வ இருப்புகளில் சேர்த்துள்ளனர்,” என்று அவர் விளக்குகிறார். “ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில், அது மிக வேகமாக அதிகரித்துள்ளது,” என்றும் அவர் கூறினார்.
2022 முதல், மத்திய வங்கிகள் ஆண்டுக்கு 1,000 டன்களுக்கும் அதிகமாக தங்கத்தை இணைந்து வாங்கி வருகின்றன. இது 2010 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் 481 டன்களாக இருந்தது. கடந்த ஆண்டு, போலந்து, துருக்கி, இந்தியா, அஜர்பைஜான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தங்கம் வாங்குவதில் முன்னணி நாடுகளாக இருந்தன.
பொருளாதாரமும் புவிசார் அரசியலும் நிலைதடுமாறும் சூழலில், பாதுகாப்பான இருப்புகளை உருவாக்க மத்திய வங்கிகள் முயற்சித்திருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
கோல்ட்மேன் சாக்ஸின் உலகளாவிய உலோகங்கள் ஆராய்ச்சித் துறையின் இணைத் தலைவரான டான் ஸ்ட்ரூய்வென் இதுகுறித்து பேசுகையில், “2022 இல் ரஷ்யா யுக்ரேனை ஆக்கிரமித்ததையடுத்து, ரஷ்ய மத்திய வங்கியின் நிதிகள் முடக்கப்பட்டன. இதைப் பார்த்த பல மத்திய வங்கிகளில் இருப்புகளை நிர்வகிக்கும் நிர்வாகிகள், ‘என் நாட்டின் இருப்புகளும் பாதுகாப்பாக இருக்காவிட்டால் என்ன செய்வது? தங்கத்தை வாங்கி, அதை என் நாட்டின் சொந்த களஞ்சியத்தில் வைத்துவிடலாமா?’ என்ற எண்ணத்துடன் செயல்படத் தொடங்கினர்.”என்கிறார்.
“எனவே, மத்திய வங்கிகளிடம் இருந்து தங்கத்திற்கான தேவை ஐந்து மடங்காக அதிகரித்திருப்பதை நாம் காண்கிறோம்”
முதலீட்டு நிறுவனமான பன்முரே லிபரமின் தலைமைப் பொருளாதார நிபுணரும் ஆராய்ச்சித் தலைவருமான சைமன் பிரெஞ்சு, டாலர் அடிப்படையிலான வங்கி அமைப்புகளிலிருந்து சுதந்திரம் பெறுவது மத்திய வங்கிகளுக்கு ஒரு முக்கிய உந்துதலாக இருந்துள்ளது என்று நம்புகிறார். “நான் சீனாவைப் பார்ப்பேன், ரஷ்யாவையும் பார்ப்பேன், அவர்களின் மத்திய வங்கி தங்கத்தை அதிகம் வாங்குகின்றது. துருக்கியும் அதேபோல் செய்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
“டாலர் அமைப்பு மற்றும் யூரோ அமைப்பு ஆயுதமயமாக்கப்படுவது குறித்து அஞ்சும் பல நாடுகள் உள்ளன,” என்றும் அவர் கூறுகிறார்.
“அவர்கள் அமெரிக்கா அல்லது மேற்கத்தியக் கண்ணோட்டத்துடன், ராஜ்ஜீய அடிப்படையில், ராணுவ அடிப்படையில் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை என்றால்… அவர்களின் ராணுவ அல்லது அரசியல் எதிரிகளால் கட்டுப்படுத்தப்படாத ஒரு சொத்தை அவர்களின் மத்திய வங்கியில் வைத்திருப்பது மிகவும் முக்கிய அம்சமாகும்.”
தங்கச் சந்தை இப்போது மேலும் உயர்வதற்கு, FOMO (Fear of missing out ) அல்லது தவறவிடுவோமோ என்ற பயமும் காரணமாக இருக்கிறது. தங்கத்தின் விலையில் புதிய சாதனைகள் பதிவு செய்யப்படுவதால் அது சில இடங்களில் அன்றாட உரையாடல்களில் பேசப்படுகிறது.
ஹாட்டன் கார்டனில் இதுதான் நிலைமை என்று ஜோ லியோன்ஸ் நம்புகிறார். “மக்கள் தங்கத்திலிருந்து லாபம் பெற விரும்புகிறார்கள். அவர்கள் மற்ற சொத்துகளில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, உண்மையான தங்கத்தை வாங்க விரும்புகிறார்கள் என்கிறார் ஜோ லியோன்ஸ் .
பாதுகாப்பானது தான், ஆனால் எவ்வளவு காலத்திற்கு ?
தங்கத்தின் விலை நிச்சயமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு அதன் விலை 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் இது ட்ராய் அவுன்ஸ் (விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான அளவீடு)ஒன்றுக்கு 3,500 டாலர் (2,630 யூரோவுக்கும்)மேல் சென்றது .
இருப்பினும், அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் முக்கியமான கேள்வி. சில நிபுணர்கள் அமெரிக்க அரசின் கணிக்க முடியாத கொள்கைகள், பணவீக்க அழுத்தங்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவது போன்றவற்றால் தூண்டப்பட்டு, தங்கத்தின் விலை உயரும் என்று எதிர்பார்க்கின்றனர்.
2025 ஆம் ஆண்டின் இறுதியில் தங்கம் ஒரு அவுன்சுக்கு 3,700 டாலர் (2,800 யூரோ) மற்றும் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 4,000 டாலர் (3,000 யூரோ) ஆக மாறும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவில் மந்தநிலை ஏற்பட்டாலோ அல்லது வர்த்தகப் போர் அதிகரித்தாலோ இந்த ஆண்டின் பிற்பகுதியில் அது 4,500 டாலர் (3,400 யூரோவை) எட்டக்கூடும் என்றும் அந்தக் கணிப்பு கூறுகிறது.
“அமெரிக்க பங்குச் சந்தை தங்கச் சந்தையை விட 200 மடங்கு பெரியது. ஆகவே, பெரிய பங்குச் சந்தையிலிருந்து அல்லது பத்திரச் சந்தையிலிருந்து ஏற்படும் சிறிய மாற்றம் கூட, மிகச் சிறிய தங்கச் சந்தையில் பெரிய சதவீத உயர்வை உருவாக்கும்” என்று டான் ஸ்ட்ரூய்வன் விளக்குகிறார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பெரிய முதலீட்டு சந்தைகளில் (பங்கு அல்லது பத்திர சந்தைகள் போன்றவை) சிறிய அளவிலான மாற்றம் ஏற்படுவது கூட, தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கக்கூடும்.
தங்கத்தின் விலை மிகவும் வேகமாகவும், அதிகமாகவும் உயர்வதால், அது சந்தையில் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சிலர் அஞ்சுகிறார்கள். அதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், விலை திடீரென சரியலாம்.

பட மூலாதாரம், Getty Images
உதாரணமாக, 1980 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை திடீரென ஏறியது. ஆனால் அதன் பிறகு, மிக வேகமாக சரிவும் ஏற்பட்டது. ஜனவரி மாத இறுதியில் 850 டாலர் (640 யூரோவாக) இருந்த விலை, ஏப்ரல் தொடக்கத்தில் 485 டாலர் (365 யூரோவாக) குறைந்தது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில், அது வெறும் 297 டாலர் (224 யூரோவாக) ஆக இருந்தது. அதாவது உச்சத்திலிருந்து 65% சரிவைச் சந்தித்தது
இதற்கிடையில், 2011 ஆம் ஆண்டில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து கூர்மையான சரிவு ஏற்பட்டது, பின்னர் நிலையற்ற சூழல் ஏற்பட்டது. நான்கு மாதங்களுக்குள் மீண்டும் 18% குறைந்துவிட்டது.
சிறிது காலம் நிலைத்திருந்த பிறகு, தொடர்ந்து சரிந்து, 2013 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மிகக் குறைந்த புள்ளியை எட்டியது. மேலும் அதன் அதிகபட்ச விலையில் இருந்து 35 சதவிகிதத்துக்கும் குறைவு.
எஞ்சியிருக்கும் கேள்வி என்னவென்றால், இப்போதும் அதுபோன்ற ஏதாவது நடக்குமா? என்பது தான்.
சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா?
சில ஆய்வாளர்கள், தங்கத்தின் விலை இறுதியில் பெரிதளவில் குறையக்கூடும் என்று நம்புகின்றனர்.
மார்னிங்ஸ்டாரில் தொழில் நிபுணராக உள்ள ஜான் மில்ஸ், ‘ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை அடுத்த சில ஆண்டுகளில் வெறும் 1,820 டாலராகக் குறையக்கூடும் ‘ என்று மார்ச் மாதத்தில் கூறியபோது, அது தலைப்புச் செய்தியாக மாறியது.”
சுரங்க நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியை அதிகரித்து, மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கமும் அதிக அளவில் சந்தையில் வரத் தொடங்கும் என்பதால், விநியோகம் அதிகரிக்கும் என்று அவர் கருதுகிறார். அதேசமயம், மத்திய வங்கிகள் அதிகமாக தங்கம் வாங்கும் போக்கை மெல்லக் குறைக்கும். மேலும் தேவையை தூண்டும் குறுகிய கால அழுத்தங்களும் குறையத் தொடங்குவதால், தங்கத்தின் விலை குறையலாம்.
சுரங்கச் செலவுகள் அதிகரித்ததால், அந்த கணிப்புகள் பின்னர் சிறிது உயர்த்தப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
டான் ஸ்ட்ரைவன் அதில் உடன்படவில்லை. குறுகிய காலத்தில் விலை ஓரளவுக்கு குறையலாம் என்றாலும், ஒட்டுமொத்தமாக தங்கத்தின் விலை மேலும் உயரும் என அவர் நம்புகிறார். “யுக்ரேனில் அமைதிக்கான ஒப்பந்தம் ஏற்பட்டாலும், அல்லது வணிகத்திலுள்ள பதற்றம் விரைவாக குறைந்தாலும், ஹெட்ஜ் நிதிகள் தங்கத்தில் வைத்திருந்த முதலீட்டை ஓரளவுக்கு எடுத்து, பங்குச் சந்தை போன்ற ஆபத்தான சொத்துகளில் முதலீடு செய்யத் தயார் ஆகலாம் என எனக்குத் தோன்றுகிறது” என்கிறார் டான் ஸ்ட்ரைவன்.
“எனவே நீங்கள் தற்காலிக சரிவுகளைக் காணலாம். ஆனால், மத்திய வங்கிகள் பாதுகாப்பான இருப்புகளை வைத்திருக்க விரும்பும் இந்த நிச்சயமற்ற நிலவியல் சார் அரசியல் அமைப்பில், அவை நடுத்தர காலத்தில் தேவையை தொடர்ந்து அதிகரிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”
குறைந்தபட்சமாக, தங்கத்தின் உயர்வில் ஒரு இடைவெளி ஏற்படும் என்று ரஸ் மோல்ட் நம்புகிறார்.
“இது இவ்வளவு அதிகமாக உயர்ந்ததால், ஏதோ ஒரு நேரத்தில் அது சில நேரம் இடைவேளை எடுத்துக்கொள்ளும் என்று தர்க்கரீதியாக எதிர்பார்க்கிறது,” என்று அவர் கூறுகிறார்.
ஆனால், கடுமையான பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால், நீண்ட காலத்திற்கு தங்கத்தின் விலை உயரக்கூடும் என்றும் ரஸ் மோல்ட் நம்புகிறார்.
முதலீட்டாளர்களுக்கு இப்போது முக்கியமான குழப்பம் என்னவென்றால், தங்கத்தின் சமீபத்திய உயர்வு, தொடர்ந்து மேலே செல்லும் பயணத்தில் ஒரு இடைநிலையை எட்டியுள்ளதா, எடுத்துக்காட்டாக 4,000 டாலரை நெருங்கக்கூடியதா? அல்லது இது தான் உச்சப் புள்ளியா என்பதைக் கண்டறிவது தான்.
பன்முரே லிபரமில் உள்ள சைமன் பிரெஞ்ச், தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியிருப்பதாக நம்புகிறார்.
தற்போது அதிக பணம் சம்பாதிக்கலாம் என எதிர்பார்த்து சந்தையில் குவியும் மக்கள் ஏமாற்றமடைய வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் விளம்பரங்கள் மற்றும் தலைப்புச் செய்திகளால் தங்கத்தை வாங்குவதில் ஈர்க்கப்பட்ட சிலரை சந்தை தலைகீழாகச் சென்றால் நஷ்டமடைய நேரிடும் என்று மற்றவர்கள் எச்சரித்துள்ளனர்.
“தங்கத்தின் விலை உயரத்தை எட்டியுள்ளதால், அதில் முதலீடு செய்து லாபம் பெற வேண்டும் என்ற ஆவல் சிலரிடம் இருக்கலாம். ஆனால், குறுகிய கால ஊகங்களை வைத்து முதலீடு செய்வது பெரும்பாலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்,” என ஹார்க்ரீவ்ஸ் லான்ஸ்டவுனில் பணம் மற்றும் சந்தைகள் பிரிவின் தலைவரான சுசன்னா ஸ்ட்ரீட்டர் கூறியுள்ளார்.
“தங்கத்தில் முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ளும் முதலீட்டாளர்கள் பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டு தொகுதியின் ஒரு பகுதியாக அவ்வாறு செய்ய வேண்டும். அவர்கள் முதலீடுகள் அனைத்தையும் தங்கத்தில் மட்டும் போடக்கூடாது.”
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC