SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
11 நிமிடங்களுக்கு முன்னர்
இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து சென்னை அணியில் ஷேக் ரஷீத் , ஆயுஷ் மாத்ரே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிலையில், இருவருமே 11 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய சாம் கரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பிரீவிஸ் தவிர்த்து யாருமே 20 ரன்களை எட்டவில்லை. எனினும் தனி ஒருவனாக போராடிய சாம் கரன் 47 பந்துகளில் 88 ரன்களை எடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
பிரீவிஸ் 26 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். எம்எஸ் தோனி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி எடுத்து 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய அன்சுல் கம்போஜ் வந்த தடமே தெரியாமல் டக் அவுட் ஆனார்.
பஞ்சாப் அணியின் யுஸ்வேந்திர சாஹல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். தீபக் ஹூடா, அன்சுல் கம்போஜ், நூர் அகமது ஆகியேரின் விக்கெட்டுகளை ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அவர் வீழ்த்தினார்.

பட மூலாதாரம், Getty Images
இன்று நடைபெறும் போட்டி தவிர்த்து சிஎஸ்கே அணிக்கு இன்னும் 4 போட்டிகள் எஞ்சி உள்ளன.
இந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால்கூட சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
“இதுபோன்ற டி20 தொடர்களில், ஏதாவது ஒரு சில குறைபாடுகள் இருந்தால் பரவாயில்லை, சமாளிக்கலாம். ஆனால் பெரும்பாலான வீரர்கள் நன்றாக விளையாடவில்லை என்றால் என்ன செய்ய முடியும். அணியில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்த முறையிலேயே போட்டிகளை விளையாட முடியாது.”
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இவ்வாறு பேசியிருந்தார்.

சேப்பாக்கத்திலேயே சிஎஸ்கே தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தது ரசிகர்களுக்குப் பெரிய வருத்தத்தையும், ஆதங்கத்தையும் அளித்து வருகிறது. சிஎஸ்கே போட்டி என்றால் டிக்கெட் கிடைக்காத நிலை இருந்த காலத்தில், இப்போது சிஎஸ்கே போட்டிக்கு டிக்கெட் விற்பனை மந்தமாக இருக்கும் நிலை வந்துவிட்டது.
சி.எஸ்.கே அணி இந்த சீசனில் இதுவரை 21 வீரர்களை களமிறக்கியுள்ளது. ப்ளே ஆஃப் வாய்ப்பு அந்த அணிக்கு மங்கிவரும் நிலையில் இனி உள்ள ஆட்டங்களை மீதம் உள்ள புதிய வீரர்களை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பாக கருதி, சி.எஸ்.கே அவர்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு புறம் 11 புள்ளிகளை பெற்றுள்ள பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இன்று நடைபெறும் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU