SOURCE :- BBC NEWS

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், அண்ணாமலை

பட மூலாதாரம், Annamalai/X

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இன்றைய தினம் (05/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளைப் பார்க்கலாம்.

பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “இதுபற்றி நான் தெளிவாக கூறியிருக்கிறேன். கிட்டத்தட்ட 2026 ஆம் ஆண்டு தேர்தலை அணுகப் போகிறோம் என்பதைப் பற்றி கூறியிருக்கிறோம். நான் மாநிலத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடவில்லை. நான் யாரையும் கை காட்டவும் இல்லை. இதைப் பற்றி விளக்கமாக கூறவில்லை. நான் எந்த வம்பு சண்டைக்கும் வரவில்லை” என்றார்.

அதிமுக – பாஜக கூட்டணியால் தலைமை மாற்றப்படுகிறாதா என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “அதைப் பற்றி நான் கருத்து கூறவில்லை. நல்லவர்கள் இருக்கக்கூடிய கட்சி. நல்ல ஆத்மாக்கள் இருக்கக்கூடிய கட்சி. அந்தக் கட்சி நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான்,” என்றும் பதில் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க பெண்ணுக்கு இமெயில் மூலம் தொல்லை – திருச்சி இளைஞர் கைது

அமெரிக்கப் பெண்ணுக்கு இ-மெயில் மூலம் தொடர் தொல்லை கொடுத்த திருச்சி இளைஞரை சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

“அமெரிக்காவைச் செர்ர்ந்த பெண்ணுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து 2018-ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் தொடர்ச்சியாக ஆபாசக் கடிதம் வந்துள்ளது. ஆரம்பத்தில் அந்தப் பெண் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். ஆனால் அத்துமீறல் அதிகரித்ததால் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு இ-மெயில் மூலம் புகார் கடிதம் அனுப்பினார். அத்துடன் அவருக்கு அனுப்பப்பட்டிருந்த மிரட்டல் பதிவுகள், ஆபாச பதிவுகளையும் இணைத்திருந்தார்.

இதுபற்றி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் சார்பில் காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம்’ போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக அப்பெண்ணுக்கு அனுப்பப்பட்டிருந்த ஆன்லைன் பதிவுகளை ஆய்வு செய்தனர். அத்துமீறலில் ஈடுபட்டது திருச்சியைச் சேர்ந்த கிபட் ஜேசுபாலன் செல்வநாயகம் (37) என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சைபர் க்ரைம் போலீஸார் அவரை நேற்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்தனர். அவர் பயன்படுத்திய செல்போன், ஐபேட், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவரை சென்னை அழைத்துவந்து விசாரணை நடத்திய போது பல்வேறு தகவல்கள் வெளியாகின.

கிப்ட் ஜேசுபாலன் செல்வ நாயகத்துக்கு வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. எனவே. கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் கம்யூட்டர் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால், படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். பின்னர் ஜப்பான் நாட்டில் வேலை செய் வதற்காக ஜப்பானிய மொழி பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார். ஆனால் அதையும் பாதியிலேயே விட்டுள்ளார்.

இதையடுத்து, சமூக வலைதளம் மூலம் வெளிநாட்டினருடன் நட்பு பாராட்டி வேலை கிடைக்குமா? என்று கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். அவ்வப்போது மிரட்டுவதையும் தனது வழக்கமாக வைத் திருந்துள்ளார். அப்படித்தான் தற்போது புகார் தெரிவித்த அமெரிக்கா பெண்ணையும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

ஜேசுபாலன் திருச்சியில் இருந்தாலும் அமெரிக்காவில் வாழ்வது போன்று காட்டி வந்துள்ளார். அமெரிக்க நேரப்படி தன்னுடைய செயல்பாடுகளை மாற்றி அமைத்துள்ளார். இரவில் தூங்காமல் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை ஆன்லைன் மூலம் தொந்தரவு செய்வதை தனது பொழுதுபோக்காக வைத்திருந்துள்ளார்.,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்படுள்ளது.

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், அண்ணாமலை

பட மூலாதாரம், Hindu Tamil

மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்து வாலிபரின் உயிரை குடித்த பாம்பு

கம்பம் அருகே, மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த பாம்பு கடித்து வாலிபர் பரிதாபமாக இறந்தார் என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். கூலித்தொழிலாளி. அவருடைய மகன் ஹரிகிருஷ்ணன் (வயது 20). இவர் பிளஸ்-1 வரை படித்துவிட்டு, எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ஹரிகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு ஊர்ந்து வந்த 2 அடி நீள பாம்பு ஒன்று, மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில், மின்விளக்கு (டூம்) பகுதிக்குள் சென்று பதுங்கியிருந்துள்ளது.

இந்த நிலையில் பாம்பு பதுங்கி இருப்பது தெரியாமல் ஹரிகிருஷ்ணன், தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தன்னுடன் அதே ஊரை சேர்ந்த, அவரது நண்பரான ராம்குமார் (21) என்பவரையும் அழைத்து சென்றார். அவர். பின்னால் அமர்ந்து வந்தார்.

சுருளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு கம்பம் சாலையில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அங்கு சாலையில் உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளின் மின்விளக்கு (டூம்) பகுதியில் இருந்து திடீரென பாம்பு சீறியபடி பாய்ந்தது. உடனே ஹரிகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த பாம்பு ஹரிகிருஷ்ணனின் வலது கையில் கடித்தது. உடனே அந்த பாம்பை ஹரிகிருஷ்ணனும், ராம்குமாரும் அடித்துக்கொன்றனர்.

இதையடுத்து இறந்த பாம்புடன் 2 பேரும் கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு ஹரிகிருஷ்ணனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஹரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம், Daily Thanthi

எம்புரான் படத் தயாரிப்பாளர் அலுவலகங்களில் சோதனை

எம்புரான் பட தயாரிப்பாளர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையின் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினார்கள் என்று தினமணி நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

“சென்னை கோடம்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஶ்ரீகோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம், கோகுலம் சினிமாஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபடுகிறது. சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் படத்தை இந்த நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக 2017-ஆம் ஆண்டு தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய 80 இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது. நான்கு நாட்கள் நடைபெற்ற சோதனையில் ரூ. 1100 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் முறைகேடாக பணப்பரிவர்த்தனை நிகழந்திருப்பது வருமான வரித்துறைக்கு தெரிய வந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு வருமானவரித்துறையினர் அமலாக்கத்துறையினருக்கு பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறையினர் கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள கோகுலம் சிட்பண்ட், நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நீலாங்கரையில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோபாலனுக்கு சொந்தமான வீடு ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை காலை சோதனை செய்தனர். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்த அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.” என்று தினமணி செய்தி கூறுகிறது.

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், Mohanlal

இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்தால் சீனா அதிருப்தியடையும் – வீரசேகர

“இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும். ஒரு நாட்டுக்காக ஏனைய நாடுகளை பகைத்துக்கொள்ள கூடாது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்” என்று வீரகேசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய அவர், “இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவரை அன்புடன் வரவேற்கிறோம். இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதில் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய விடயங்களை உள்ளடக்கிய வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றத்துக்கும்இ நாட்டு மக்களுக்கும் அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் உள்ளடங்கங்கள் என்னவென்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை வெளிப்படுத்தாத வரையில் சாதாரண சந்தேகம் தோற்றம் பெறும்.

இலங்கை பிளவுப்படாத வெளிவிவார கொள்கையை கடைப்பிக்கின்ற நிலையில் பாதுகாப்பு தொடர்பில் ஒரு நாட்டுடன் மாத்திரம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது நாட்டின் வெளிவிவகார கொள்கையை கேள்விக்குள்ளாக்கும்.

இந்தியாவுக்கும்இ சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும்,” என்று கூறியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC