SOURCE :- BBC NEWS
24 நிமிடங்களுக்கு முன்னர்
முக்கிய நாளிதழ்கள் மற்றும் ஊடக இணையதளங்களில் இன்று (ஜனவரி 15) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம்.
தமிழ்நாடு உதவியால் ஐபோன் ஏற்றுமதியில் ஆப்பிள் நிறுவனம் ரூ.1 லட்சம் கோடி ரூபாயை பெற்றிருப்பதாக தினமணி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஐபோன் ஏற்றுமதி சுமார் 77.8 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2024-ம் ஆண்டில் அது 42 சதவீதம் அதிகரித்து 1.08 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. இதில், தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெரும்பங்கு வகிக்கிறது.
அமெரிக்கா – சீனா வர்த்தப் போரால் சீனாவில் இருந்த ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி தளங்கள் வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இருப்பினும் ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்த வகையில் அந்த மாற்றங்களை விரைவுபடுத்த முடியவில்லை.
“இந்திய – இலங்கை மீனவர் பிரச்னை பற்றி விரைவில் பேச்சு”
இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்காக மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே கூறியிருப்பதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்தலை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அதிகாரிகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டுமாறு பல மீன்பிடி தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியத் தரப்பும் தயாராக உள்ளது. தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் விடயங்களை முன்னெடுப்பதற்கு நாமும் தயாராகவே உள்ளோம். ஆனால் அடுத்து வரும் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறையுடன், இந்திய அதிகாரிகளுடன் விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது கூட இந்த விவகாரம் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது மட்டும் போதாது. எனவே, இந்திய அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.” என்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை வரும் பயணிகளுக்காக சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தினத்தந்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி ஜன.19ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கு (06168) சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மதுரை – சென்னை எழும்பூர் முன்பதிவு செய்யப்படாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் ஜனவரி 19, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4.00 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 00.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரெயில், மேல்மருவத்தூர், திண்டிவனம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடை ரோடுஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கிராமியக் கலைஞர்களுக்கு ஒருநாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்வு
சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்றுள்ள கிராமியக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியத்தை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழ் இந்து இணையதள செய்தி கூறுகிறது.
சென்னை மாநகரில் தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’-வை முதல்வர் ஸ்டாலின் முழவு இசைத்து திங்கள்கிழமை (ஜன.13) தொடங்கி வைத்தார்.
சென்னையில் உள்ள 18 இடங்களில் நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர். செ
ன்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 3 நாள் சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா பற்றி தினத்தந்தி இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
10வது ஆண்டாக நடக்கும் இந்த பலூன் திருவிழாவில் அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் மற்றும் பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். திருவிழா நடக்கும் ஆச்சிபட்டி மைதானத்தில் இருந்து யானை வடிவிலான பிரம்மாண்ட ராட்சத பலூனில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பைலட்டுகளுடன் இரண்டு சிறுமிகளும் இருந்தனர்.
அந்த ராட்சத பலூன் கேரள மாநிலம் கன்னிமாரி முல்லந்தட்டில் என்ற பகுதியில் வயல்வெளியில் தரையிறங்கியது. உள்ளூர் மக்கள் உதவியுடன் ராட்சத பலூன் பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதிலிருந்த சிறுமிகள் எந்த பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்திருக்கவில்லை. என்றாலும், எந்தவொரு காயமும் இல்லாமல் அவர்கள் தப்பினர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU