SOURCE :- BBC NEWS

அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில், இன்றைய செய்திகள், முக்கியச் செய்திகள், தலைப்பு செய்திகள், தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

16 நிமிடங்களுக்கு முன்னர்

மே 3, சனிக்கிழமை அன்று தமிழ் நாளேடுகள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை (மே 4) தொடங்குகிறது என்று இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு – மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 3) ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் 8-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மே 6-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 84 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. இது மே 28-ம் தேதி வரை நீடிக்கிறது. பொதுவாக, இந்த காலகட்டத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கும். ஆனால், சமீபகாலமாக அக்னி நட்சத்திர காலகட்டத்தில் பரவலாக பல பகுதிகளில் கோடை மழை பொழிந்து குளிர்ச்சியை கொடுத்து வருகிறது,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘போலி சாதி சான்றிதழ் குறித்த விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும்’ – உயர் நீதிமன்றம்

 இன்றைய செய்திகள், முக்கியச் செய்திகள், தலைப்பு செய்திகள், தமிழ்நாடு , போலி சாதிச் சான்றிதழ்

பட மூலாதாரம், Getty Images

இடஒதுக்கீட்டு கொள்கையை பாதுகாக்கும் விதமாக போலி சாதி சான்றிதழ் தொடர்பான விசாரணையை குறித்த காலத்துக்குள் விரைவாக முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், பாங்க் ஆப் பரோடா வங்கியின் உதவி பொது மேலாளர் ஜீவன் தாக்கல் செய்துள்ள மனுவில், ”எங்கள் வங்கியில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஏராளமான ஊழியர்கள் சாதி சான்றிதழ்களை கொடுத்து வேலைக்கு சேருகின்றனர். அவர்கள் தரும் சாதி சான்றிதழ்கள் பல போலியாக உள்ளன.

ஊழியர்களின் சான்றிதழின் உண்மைத்தன்மையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு மாநில அளவிலான ஆய்வுக்குழு உறுதி செய்யவேண்டும். ஆனால் இந்த குழு குறித்து காலத்துக்குள் விசாரித்து, உறுதி செய்வது இல்லை. இதனால், எங்கள் வங்கியின் ஊழியர்கள் ஓய்வூதிய பலன்களை நிர்ணயிக்க முடியவில்லை. எனவே, சாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய கால அளவை நிர்ணயித்து உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், ” போலி சாதிச் சான்றிதழ் தொடர்பான விசாரணையை முடிக்கும் காலத்தை நிர்ணயிக்க இந்த ஐகோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை. அது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், இந்த வழக்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்தோம்.

இடஒதுக்கீட்டு கொள்கையின் புனித்தன்மையையும், பொதுநலனையும் பாதுகாக்கும் விதமாக, போலி சாதி சான்றிதழ் குறித்த புகாரை குறித்து நேரத்தில் விரைவாக விசாரித்து முடிக்க மாநில ஆய்வுக்குழுவுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் உத்தரவிட வேண்டும். மேலும், போதுமான எண்ணிக்கையில் மாநில ஆய்வுக்குழுக்களை உருவாக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல அனைத்து விதமான விசாரணைகளையும் தீவிரமாக மேற்கொண்டு, இறுதியில்தான் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

அதனால், இந்த விவகாரம் குறித்து தகுந்த உத்தரவை 6 வாரத்துக்குள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் பிறப்பிக்க வேண்டும்,” என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை

சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், “பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்த தம்பதியினரினர் உடல்களை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியைச் அடுத்த விளக்கேத்தி கீழ்பவானி வாய்க்கால் கரையில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம் (65). இவர்களது மகன், மகள் இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். வயதான தம்பதி மட்டும் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், இவர்களது வீட்டில் இருந்து வியாழக்கிழமை துர்நாற்றம் வீசியதை அடுத்து, அருகில் வசித்த உறவினர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது கொலை செய்யப்பட்டு இருவரது சடலங்களும் கிடந்துள்ளன. தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டனர்.

கொலைச் சம்பவம் நடைபெற்று மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் உடல்கள் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிட்டதாகவும், நகை பணத்துக்காக கொலை நடைபெற்றுள்ளதாகவும், கொலையில் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க பிடிக்க ஈரோடு ஏ.டி.எஸ்.பி. விவேகானதன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளாதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில், இன்றைய செய்திகள், முக்கியச் செய்திகள், தலைப்பு செய்திகள், தமிழ்நாடு

விழிஞ்சம் துறைமுகத்தால் பொருளாதார ஸ்திரத்தன்மை: மோதி

நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் துறைமுகம் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கின. விழிஞ்சம் துறைமுகத்தில் முதற்கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

துறைமுக திறப்பு விழாவில் பிரதமர் மோதி, “கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் கடல்சார் வலிமை மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் துறைமுகத் திறன் இரட்டிப்பாகியுள்ளது. செயல்திறன் மேம்பட்டுள்ளது.

விழிஞ்சம் துறைமுகம் ரூ.8,867 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் சரக்கு கையாளும் திறனை விரைவில் மூன்று மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது பெரிய சரக்குக் கப்பல்களை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்பது நிச்சயம். இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும். பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் துறைமுகம் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும்,” என்று கூறினார்.

 இன்றைய செய்திகள், முக்கியச் செய்திகள், தலைப்பு செய்திகள், தமிழ்நாடு, நரேந்திர மோதி, விழிஞ்சம் துறைமுகம்,

பட மூலாதாரம், @narendramodi/X

அதானி குழுமத்துடன் இணைந்து இந்த விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. பல்வேறு நாடுகளில் இருந்தும் சரக்கு கப்பல்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU