SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியுடன் வியாழக்கிழமையன்று தொலைபேசியில் பேசினார்.
பேச்சுவார்த்தை தொடர்பாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் முதல் முறையாக பொதுவெளியில் பதிவிட்டுள்ளனர்.
தொலைபேசியில் பேசியபோது, பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு முத்தாகி கண்டனம் தெரிவித்ததற்கு எஸ். ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார்.
தாலிபன் அரசாங்கத்தை இந்தியா இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதும், ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கம் அமைவதை இந்தியா கோருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், AFGGCMumbai/X
தாலிபன்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் அண்மைக்காலங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது.
பாகிஸ்தான், தனது நாட்டிலுள்ள லட்சக்கணக்கான ஆப்கானிய அகதிகளை திருப்பி அனுப்புகிறது. இதற்கு ஆப்கானிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதைத் தவிர, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னையும் அவ்வப்போது பூதாகரமானதாக மாறி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், தாலிபன்களை அங்கீகரிக்காமலேயே, ஆப்கானிஸ்தானுடனான தனது உறவை மேம்படுத்த இந்தியா முயற்சிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
இருந்தபோதிலும், அண்மை மாதங்களில் இந்தியாவிற்கும் தாலிபன்களுக்கும் இடையில் தொடர்புகள் அதிகரித்துள்ளன.
ஜனவரியில், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, அமீர் கான் முத்தாகியை துபையில் சந்தித்தார்.
அமீர் கான் முத்தாகியுடனான தொலைபேசி அழைப்பு பற்றிய தகவலை ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இரு நாடுகளும் என்ன சொல்கின்றன?
“இன்று மாலை ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முல்லா அமீர் கான் முத்தாகியுடன் பேசினேன். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். அதை நான் பாராட்டினேன்” என வியாழக்கிழமையன்று (மே 16) தனது எக்ஸ் தளப் பதிவில் எஸ் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
“தவறான மற்றும் ஆதாரமற்ற செய்திகள் மூலம் இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் அவநம்பிக்கையை உருவாக்க முயன்ற அவர்களின் அண்மை முயற்சிகளை அவர் கடுமையாகக் கண்டித்தார். அதை நான் வரவேற்றேன்.”
“ஆப்கானிஸ்தான் மக்களுடனான நமது பாரம்பரிய நட்பு மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கான தேவைகளுக்கு நம்முடைய தொடர்ச்சியான ஆதரவு குறித்தும் பேசினோம். ஒத்துழைப்பை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான முறைகள் தொடர்பாகவும் கலந்தாலோசித்தோம்” என்று எஸ் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அளித்த தகவலில், “ஆப்கானிஸ்தான் குடியரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகிக்கும் இந்திய குடியரசின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான விஷயங்கள் இடம் பெற்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மும்பையில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையின்படி, “வெளியுறவு அமைச்சர் முத்தாகி இந்தியா ஒரு முக்கியமான பிராந்திய நாடு என்று கூறினார். மேலும் ஆப்கானிஸ்தான்-இந்தியா உறவுகளின் வரலாற்றுத் தொடர்புகளையும் பற்றி அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்குமான உறவு வலுவடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.”
“இந்த பேச்சுவார்த்தையில், ஆப்கன் நாட்டு தொழிலதிபர்கள் மற்றும் நோயாளிகளுக்கு விசா வழங்குவதை எளிதாக்கவும், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஆப்கனிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கைதிகளை விடுவிக்கவும் ஆவணசெய்யுமாறு முத்தாகி வேண்டுகோள் விடுத்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதாரத் துறை ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை ஜெய்சங்கர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஆப்கானிஸ்தான் கைதிகளின் பிரச்னையில் உடனடி கவனம் செலுத்துவதாக ஜெய்சங்கர் உறுதியளித்தார். விசா செயல்முறையை எளிதாக்குவதாகவும் அவர் உறுதியளித்தார்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சமீபத்திய கூற்று குறித்த சர்ச்சை
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, மே 7 அதிகாலையில், பாகிஸ்தானின் ஒன்பது இடங்களில் வான்வழித் தாக்குதல்களை இந்தியா நடத்தியது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ராணுவ மோதலின் போது, இந்திய ஏவுகணைத் தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் பகுதிகளும் குறிவைக்கப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
இந்தக் கூற்றை தாலிபன் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இனாயத் கோவராசம் மறுத்தார்.
அதேபோல் இந்தக் கூற்றை முற்றிலும் ஆதாரமற்றது என்று கூறிய இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “தங்களுடைய உண்மையான நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதைப் பற்றி ஆஃப்கானியர்கள் நன்றாகவே அறிவார்கள்” என்று சொன்னார்.
மேலும், “கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஆஃப்கானிஸ்தானில் பல ஆஃப்கானிய பொதுமக்களையும் உள்கட்டமைப்பையும் எந்த நாடு குறிவைத்துள்ளது என்பதை ஆஃப்கானிய மக்களுக்கு யாரும் சொல்லத் தேவையில்லை” என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
தாலிபனின் இரண்டாம் சகாப்தத்தில் இந்தியாவுடனான உறவுகள்
2021 ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இது இந்தியாவிற்கு ராஜ்ஜீய மற்றும் உத்தி ரீதியில் பின்னடைவாகக் கருதப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இந்தியா செய்த பில்லியன் கணக்கான டாலர் முதலீடுகள் வீணாகிவிடும் என்ற அச்சமும் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில், சாலைகள், மின்சாரம், அணைகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட 500க்கும் மேற்பட்டத் திட்டங்களில் இந்தியா 3 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளது.
இந்தியா, ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியது மற்றும் ஒரு புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்டியது.
இந்த அச்சங்கள் ஒருபுறம் இருந்தாலும், கடந்த ஆண்டு ஜனவரியில் பிபிசி நிருபர் சௌதிக் பிஸ்வாஸிடம் பேசிய ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் இந்திய தூதர் ஜெயந்த் பிரசாத், ‘கடந்த மூன்று ஆண்டுகளாக வெளியுறவு அதிகாரி மூலம் இந்தியா தலிபான்களுடன் தொடர்பைப் பேணி வருகிறது’ என்று கூறினார்.
தாலிபன்கள் ஆட்சி ஏற்பட்ட இரண்டு ஆண்டுகள் வரை, அஷ்ரப் கானி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தூதர் ஃபரித் மாமுண்ட்சாய், இந்திய தலைநகர் டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்தார்.
ஆனால் இந்திய அரசாங்கத்திடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை என்று கூறிய ஆப்கன் தூதரகம் அக்டோபர் 2023 இல் தனது செயல்பாடுகளை டெல்லியில் நிறுத்திவிட்டது.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் அதிகாரத்திற்கு வந்த பிறகு, டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்திற்கும், ஹைதராபாத் மும்பையில் உள்ள ஆப்கானிஸ்தான் துணை தூதரகத்திற்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது.
இதன் பிறகு, 2025 ஜனவரி 8ஆம் நாளன்று, துபையில் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கும் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முத்தாகிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இவை இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் உயர்நிலை பேச்சுவார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்த சந்திப்பில், இரானின் சபாஹர் துறைமுகம் மூலம் இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் கராச்சி மற்றும் குவாதர் துறைமுகங்களைத் தவிர்த்து, இரான் மற்றும் மத்திய ஆசியா வழியாக ஆஃப்கானிஸ்தானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் வகையில், இரானில் சபாஹர் துறைமுகத்தை இந்தியா கட்டி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் மோசமாகும் உறவுகள்
ஆப்கானிஸ்தானில் அப்போதைய சோவியத் யூனியனின் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் தாலிபனின் முக்கிய கூட்டாளியாக இருந்தது. ஆனால் அண்மை ஆண்டுகளில், தாலிபன்களுடனான பாகிஸ்தானின் உறவுகள் மோசமடைந்துள்ளன.
தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அமைப்பை கட்டுப்படுத்தலாம் என்று பாகிஸ்தான் நம்பியது. தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் அமைப்பு பாகிஸ்தானின் தாலிபன் என அழைக்கப்படுகிறது
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள, பஷ்டூன் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் தீவிரமாக செயல்படுகிறது.
இந்தியாவிற்கான பாகிஸ்தான் முன்னாள் உயர் தூதர் அப்துல் பாசித்தின் கூற்றுப்படி, “அண்மைக் காலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. TTPக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது, ஆனால் அதன் பாதுகாப்பான புகலிடம் ஆப்கானிஸ்தானில் உள்ளது.”
2025 ஜனவரியில் இந்தியாவிற்கும் தாலிபனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, கிழக்கு ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியது. இந்த தாக்குதல்களில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக தாலிபன் அரசு குற்றம்சாட்டியது.
இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களை அதிகரித்தன.
இது தவிர, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னைகள், உறவை மேலும் சிக்கலாக்குகிறது.
உரிய ஆவணங்கள் இல்லாமல் பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானியர்களை கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் அரசு வெளியேற்றி வருகிறது.
எதிர்வரும் மாதங்களில் அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து சுமார் 2 மில்லியன் மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று தாலிபன் அதிகாரிகள் கூறுகின்றனர். நாள்தோறும் 700 முதல் 800 குடும்பங்கள் டோர்காம் எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படுகின்றனர்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் UNHCR இன்படி, சுமார் 3.5 மில்லியன் ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் வாழ்கின்றனர். 2021 இல் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 7 லட்சம் பேர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைத் தகராறு
பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் பிரிக்கும் எல்லை துரந்த் கோடு (Durand Line) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான் இந்த எல்லைக் கோட்டை ஏற்கவில்லை.
பாகிஸ்தான் இந்த எல்லையை துரந்த் கோடு என்று அழைக்கவில்லை, மாறாக சர்வதேச எல்லை என்று அழைக்கிறது. இந்த எல்லைக்கு சர்வதேச அங்கீகாரம் இருப்பதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளின் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்த, பிரிட்டிஷ் அரசாங்கம் 1893 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுடன் 2640 கிலோமீட்டர் நீள எல்லைக் கோட்டை நிர்ணயித்தது.
ஆனால் ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்கள் யாருமே துரந்த் கோட்டை எல்லையாக ஏற்றுக்கொள்வதில்லை. அதை சர்வதேச எல்லையாகக் கருதுவதுமில்லை.
பாகிஸ்தான் இந்த எல்லையில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், துரந்த் கோடு தொடர்பாக தாலிபன் அரசு கேள்வி எழுப்பியதுடன், தாலிபன் போராளிகள் எல்லையில் போடப்பட்ட வேலியை பல இடங்களில் வேரோடு பிடுங்கி எறிந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் நெருங்கி வர விரும்புவது ஏன்?
டெல்லியில் உள்ள அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைத் துறையின் துணைத் தலைவராக பணிபுரியும் பேராசிரியர் ஹர்ஷ் வி. பந்த் இந்தியாவும் ஆஃப்கானிஸ்தானும் நெருங்கி வர விரும்புவது ஏன்? என்பதற்கான விளக்கத்தை கூறினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. அனைத்து முட்டுக்கட்டைகளையும் மீறி, இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது, அத்துடன் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் உதவிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்கிறார் அவர்
“இந்தியாவுடன் வர்த்தக உறவுகளைப் பேணுவதற்கு ஆப்கானிஸ்தானுக்கு தற்போது இருக்கும் ஒரே வழி பாகிஸ்தான்தான்” என்று அவர் கூறுகிறார்.
“இரானின் சபாஹர் துறைமுகம் மூலம் மத்திய ஆசியாவுடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்த இந்தியா விரும்புகிறது. இந்த துறைமுகம் மூலம், பாகிஸ்தான் இல்லாமலேயே இந்தியாவுடனும் உலகின் பிற பகுதிகளுடனும் ஆப்கானிஸ்தான் வர்த்தக உறவுகளை ஏற்படுத்த முடியும்” என்று அவர் கூறுகிறார்.
“மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு தாலிபன்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுவிட்டன என்று சொல்லிவிடமுடியாது. மாறாக, திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்துக் கொண்டிருந்தன. உறவுகளை மேம்படுத்த வேண்டியது இரு நாடுகளின் தேவை, தற்போது இருதரப்பும் நெருக்கமாவது இதற்கு ஒரு அறிகுறியாகும்” என்றும் பேராசிரியர் ஹர்ஷ் வி. பந்த் தெரிவித்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC