SOURCE :- INDIAN EXPRESS
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தங்களை சந்திக்க வரும் த.வெ.க தலைவர் விஜயை திடலில் சந்திக்க அனுமதி அளிக்கவில்லை என்றால், விஜயுடன் இணைந்து உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வோம் என்று போராட்டக்குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது தனது கடைசி படத்தில் நடித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். கடைசி படத்தை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையிலும், விஜய் இன்னும் மக்களை சந்திக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதற்குபதில் அளிக்கும் வகையில் விஜய் மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமானநிலைய திட்டத்திற்கு எதிராக 900 நாட்களுக்கு மேலாக அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த கிராம மக்களை த.வெ.க தலைவர் விஜய் நாளை (ஜனவரி 20) சந்திக்க உள்ளார். மக்களை சந்திக்க காவல்துறை, அனுமதி வழங்கியுள்ளது.
அதே சமயம் மக்களை கிராமங்களில் சந்திக்க கூடாது என்றும், திருமண மண்டபத்தில் மட்டுமே அவர்களை சந்திக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கூறியுள்ளது. இது தொடர்பான காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகம் மற்றும் த.வெ.க பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் இடையே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஏகனாபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் விஜய் மக்களை சந்திக்கலாம் என போலீசார் அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, ஏகனாபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் திடலில் போராட்டக் குழுவினரை சந்தித்து விஜய் பேசவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், நிகழ்வு நடைபெறும் இடத்தை புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். இந்தக் கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணிக்குள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதனிடையே, விஜய் சந்திப்பு குறித்து போராட்ட குழுவினர் ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், நாளை 910-வது நாள் போராட்டம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மற்றும் விவசாயிகளை சந்திக்க வரும் த.வெ.க தலைவர் விஜய் வருகைக்காக காத்திருக்கிறோம். ஆனால் போராட்ட திடலில் விஜயயை சந்திக்க விடாமல், இங்கிருந்து 5-6 கி.மீ தொலைவில் உள்ள ஒரு மண்டபத்தில் இந்த சந்திப்பை நடத்துமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். மண்டபத்தில் தான் அனுமதி திடலில் இல்லை என்று சொல்கிறார்கள்.
திடல் என்பது விவசாயிகளின் ஏரியா. பாதிக்கப்பட்ட மக்களின் கிராமம். நேரடியாக விஜய் இங்கு தான் வர வேண்டும் என்று நாங்களும் எதிர்பார்க்கிறோம். இந்த திடலில் அனுமதி மறுக்கப்பட்டால், போராட்டக்குழுவும் மக்களும் நாளை விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்களோடு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளார்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS