SOURCE :- INDIAN EXPRESS
ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் தினத்தன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் இது மிகவும் புகழ்பெற்றதாகும். திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாடுகள் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும்.
இந்தாண்டிற்கான சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வருவாய் கோட்டாட்சியர் அருள் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். போட்டி தொடங்கும் முன் ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். போட்டி தொடங்கியதும் முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து போட்டியில் பங்கேற்க வந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வந்தார். அதே நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் வருகை தந்தார். இருவரும் ஒன்றாக அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சின்ன கொம்பன் காளை அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளை வெற்றி பெற்றது. சின்னக் கொம்பன் காளையில் உரிமையாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வெற்றி பெற்ற காளைக்கான பரிசினை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, சூரியூரில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைப்பதற்கான அரசாணையை அமைச்சர் மகேஷ் ஜல்லிக்கட்டு விழா குழுவினரிடம் வழங்கினார். இதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது;
பெரிய சூரியூரில் ரூ.3 கோடி செலவில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுகள் விளையாடும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலாக அது அமையும். இன்னும் ஒரு மாத காலத்தில் அதற்கான பணிகள் தொடங்கும்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆர்வம் கொண்டவர். அதன் காரணமாக சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியையும் காண வந்துள்ளார். ஜல்லிக்கட்டு தமிழர்களின் விழா அவருடன் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தது மகிழ்ச்சி தான் என்றார்.
முன்னதாக, திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்ட திருவளர்ச்சோலை பகுதியைச் சேர்ந்த செல்லப்பா என்பவரின் காளை வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அப்போது அதற்கு முன்னதாக வாடிவாசலில் இருந்து ஏற்கனவே சென்ற காளை மீது பின்புறமாக முட்டிக்கொண்டதில் தலையில் அடிபட்டு திடீரென மயங்கிய நிலையில் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தது. மோதிய மற்றொரு காளைக்கு தொடையில் படுகாயம் அடைந்த நிலையில் அந்தக் காளை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் காளை இறந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியது.
செய்தி: க.சண்முகவடிவேல்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS