SOURCE :- INDIAN EXPRESS

PV Sindhu Marriage First Pic: இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக வலம் வருபவர் பி.வி. சிந்து. உலக பேட்மிண்டன் அரங்கில் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ள அவர், இந்தியாவுக்காக 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் ரியோ 2016 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். 

Advertisment

2021 ஆம் ஆண்டில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். இதுவரை 5 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை சிந்து வென்றுள்ளார். அவற்றில் 2019-ம் ஆண்டில் அவர் பெற்ற தங்க பதக்கமும் அடங்கும். அவரின்  சாதனைகளைப் போற்றும் வகையில், இந்திய அரசாங்கம் அவருக்கு 2020 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க பத்ம பூஷன் விருதை வழங்கியது.  

இந்நிலையில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஐதராபாத்தைச் சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள்  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

பி.வி. சிந்து –  வெங்கட தத்தா சாய் ஆகியோரது திருமணம் ஏற்கனவே அறிவித்த படி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இதில் இரு குடும்பத்தினரும் சில முக்கிய விருந்தினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். பி.வி. சிந்துவின் திருமண வரவேற்பு டிசம்பர் 24-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் சமீபத்தில் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இவர்களின் திருமணத்தின் முதல் புகைப்படத்தை கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில்,” நேற்று மாலை உதய்பூரில் பேட்மிண்டன் சாம்பியன் பிவி சிந்து – வெங்கட தத்தா சாய் திருமண விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் தம்பதியரின் புதிய வாழ்க்கைக்கு எனது வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்தேன்.” என்று பதிவிட்டுள்ளார். 

சிந்துவின் கணவரான வெங்கட தத்தா சாய், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

SOURCE : TAMIL INDIAN EXPRESS