SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
துருக்கிக்கு பயணம் மேற்கொள்வதை புறக்கணிக்க வேண்டும் என இந்தியாவில் தொடங்கிய பொதுக் கோரிக்கைகள் தற்போது விரிவடைந்துள்ளது.
துருக்கிய வணிக நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் உள்ள தொடர்புகளையும் இந்தியா துண்டித்து வருகிறது.
சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் சண்டையின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, ராஜ்ஜீய உறவுகள் பதற்றமடைந்துள்ளன.
தேசிய பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து, துருக்கிய நிறுவனமான செலிபி, இந்திய விமான நிலையங்களில் செயல்படுவதற்கு இந்தியா தடை விதித்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்தது.
மேலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இந்தியப் பல்கலைக்கழகங்கள் துருக்கிய கல்வி நிறுவனங்களுடனான தொடர்பை நிறுத்திவிட்டன.
டெல்லி, சென்னை மற்றும் மும்பை போன்ற முக்கிய விமான நிலையங்களில் சில சேவைகளை வழங்கி வந்த செலிபி நிறுவனம், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவின்படி செயல்பாடுகளை நிறுத்தியது.
இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், சமீப நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து இந்த நிறுவனத்தைத் தடை செய்ய அரசுக்கு பல கோரிக்கைகள் வந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
“இந்தப் பிரச்னையின் தீவிரத்தன்மையையும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான தேவையையும் உணர்ந்து, இந்த கோரிக்கைகளை நாங்கள் கருத்தில் எடுத்துள்ளோம். ஆகவே, விமானப் போக்குவரத்து துறை அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்துள்ளது,” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை “தெளிவுபடுத்த” மற்றும் இந்த உத்தரவை திரும்பப் பெறுவதற்காக அனைத்து “நிர்வாக மற்றும் சட்ட” வழிகளையும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக செலிபி தெரிவித்துள்ளது என்கிறது ப்ளூம்பெர்க் செய்தி.
மேலும், தனது பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்ததை அந்த நிறுவனம் “அநியாயமானது” என்றும் குறிப்பிட்டுள்ளது .
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தியா தனது அண்டை நாட்டை நோக்கி வான்வழித் தாக்குதலை நடத்திய பிறகு, கடந்த வாரம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான சண்டை வெடித்தது.
தீவிரவாத தாக்குதலில் தனக்கு தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு துருக்கியும் அஜர்பைஜானும் பாகிஸ்தானை உடனடியாக ஆதரித்தன.
துருக்கி “முழு போர் ஏற்படலாம்” என்று எச்சரித்தது. அதேவேளையில் அஜர்பைஜான் இந்தியாவின் தாக்குதல்களை கண்டித்து விமர்சித்தது.
துருக்கி மற்றும் அஜர்பைஜானின் நடவடிக்கைகளால் இந்தியாவில் அவற்றுக்கு எதிரான எதிர்ப்பு அலை கிளம்பியது.
துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து, மூத்த அரசியல் தலைவர்களாலும் அக்கருத்து பகிரப்பட்டது.
பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக துருக்கி டிரோன்களை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியதும், அந்நாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவு பெருகியது.

பட மூலாதாரம், Getty Images
“வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு இந்தியரும் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, நமது நாட்டின் எதிரிகளுக்கு உதவுகிறவர்களுக்கு செலவிடக் கூடாது என்பதை இன்றைய நாளில் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்” என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினருமான ராஜீவ் சந்திரசேகர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் அந்த நாடுகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று பகிரப்பட்ட கருத்துக்கள் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தின.
அங்கு பயணம் மேற்கொள்வதற்காக செய்யப்பட்டிருந்த முன்பதிவுகள் இந்த வாரம் அதிகமாக ரத்தாகியுள்ளன என்று இந்தியாவின் பயண தளங்கள் கூறுகின்றன.
“கடந்த வாரத்தில் இந்திய பயணிகள் வலுவான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். அஜர்பைஜான் மற்றும் துருக்கிக்கான முன்பதிவுகள் 60% குறைந்துள்ளதோடு, 250% பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று பயண இணையதளமான MakeMyTrip இன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பெரும்பாலான பயண தளங்கள் இன்னும் முன்பதிவுகளை அனுமதித்தாலும், சில தளங்கள் பயணத்தை ஊக்குவிப்பதைத் தவிர்க்கின்றன. துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு வழங்கப்படும் விளம்பரங்கள் மற்றும் விமான கட்டணங்களுக்கான தள்ளுபடிகள் மெதுமெதுவாக அகற்றப்பட்டுள்ளன.
டெல்லியில் டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் ரோஹித் கட்டார், துருக்கிக்குச் செல்வது குறித்து வாடிக்கையாளர்களிடையே தெளிவான தயக்கம் ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது என்றார்.
“சமூக ஊடகங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் எழலாம் என்ற அச்சத்தால் பல இளம் பயணிகள் துருக்கி செல்ல விரும்பாமல் இருக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் 330,100 இந்தியர்கள் துருக்கிக்கு பயணம் செய்துள்ளனர். 2023 இல் இந்த எண்ணிக்கை 274,000-ஆக இருந்தது . அஜர்பைஜானுக்கும் கடந்த ஆண்டு சுமார் 244,000 இந்தியர்கள் வருகை சென்றுள்ளனர்
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், 2024 இல் துருக்கிக்குச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் 1% க்கும் குறைவாக இருந்தனர். இந்த பங்கு அந்நாட்டின் சுற்றுலா வருவாயில் அதிக தாக்கம் செலுத்தாது. அதே நேரத்தில், அஜர்பைஜானில் வெளிநாட்டு பயணிகளில் இந்தியர்கள் சுமார் 9%ஆக இருந்தனர்.
கோவிட் பெருந்தொற்று காலத்திற்கு பின்னர், துருக்கிக்கும் அஜர்பைஜானுக்கும் குறைவான விலையில் செல்ல முடிவதாலும், நாட்டுக்கு அருகில் உள்ளதாலும், குறைந்த செலவில் ஐரோப்பா போன்ற அனுபவங்களை வழங்குவதாலும் இந்திய பயணிகளிடையே பிரபலமான இடங்களாக மாறிவிட்டன.
சமீபத்தில் சில விமான நிறுவனங்கள் நேரடி விமான சேவைகளை அதிகரித்து, பயணிகள் அங்கு செல்வதற்கு எளிதாக மாற்றியுள்ளன.
சில சமூக ஊடகப் பயனர்கள் கிரீஸ் போன்ற மாற்று நாடுகளுக்கு செல்வதை பரிந்துரைக்கின்றனர். ஆனால், அதற்கு மக்களுடையே அதிக விருப்பம் இல்லை என பயணத் தளங்கள் தெரிவிக்கின்றன.
”நிலையற்ற சூழ்நிலை தொடருவதால், மக்கள் இந்த மாற்றுப் பயண இடங்களை தேர்வு செய்வதில் பெரிய மாற்றம் காணப்படவில்லை” என பயண இணையதளமான கிளியர்ட்ரிப் பிபிசியிடம் கூறியது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU