SOURCE :- BBC NEWS

 டிரம்பின் விமர்சனங்களை அமைதியாக சமாளித்த ராமபோசா

பட மூலாதாரம், Getty Images

டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், வெளிநாட்டு தலைவர்கள் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு செல்வதற்கு அழைப்பு கிடைப்பதை ஒரு புறம் பெருமையான விஷயமாகக் கருதலாம்.

ஆனால் அதே நேரத்தில் அனைவர் முன்னிலையில் விமர்சிக்கப்படுவதற்கும், அவமானப்படுத்தப்படுவதற்கான அபாயமும் அந்த அழைப்பில் உள்ளது என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசாவுக்கும் இடையே நடந்த சந்திப்பு அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.

மங்கலான விளக்குகள், நீண்ட வீடியோ ஒன்றின் திரையிடல் மற்றும் செய்திக் கட்டுரைகளின் குவியல்களுடன் நடத்தப்பட்ட ஒரு மறைமுக தாக்குதலும் இதில் இடம்பெற்றது.

அந்த சந்திப்பை தொலைக்காட்சி கேமராக்கள் பதிவு செய்துக்கொண்டிருந்தன. அங்கே ஒரு அமைதியான உரையாடல் நடைபெற்றது.

அதன் பிறகு, தென்னாப்பிரிக்காவில் “வெள்ளையர்கள் இனப்படுகொலை” செய்யப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை என நீங்கள் நம்ப வேண்டுமென்றால் எந்த வகையான ஆதாரங்கள் தேவை என்று டிரம்பிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டார்.

அந்த கேள்விக்கு முதலில் பதிலளித்த ராமபோசா , இந்த விவகாரத்தில் அதிபர் “தென்னாப்பிரிக்க மக்களின் குரல்களைக் கேட்க வேண்டும்” என்று கூறினார்.

அதன் பின்னர் பேசத் தொடங்கிய டிரம்ப், தென்னாப்பிரிக்கத் தலைவருக்கு “சில விஷயங்களை” காட்ட வேண்டும் எனக் கூறி, “விளக்குகளை அணைத்து” தொலைக்காட்சியை இயக்குமாறு ஒரு உதவியாளரிடம் கூறினார்.

மறுபுறம் டிரம்பின் ஆலோசகராகவும், தென்னாப்பிரிக்காவில் பிறந்த கோடீஸ்வரராகவும் இருக்கும் ஈலோன் மஸ்க், ஒரு சோபாவில் அமைதியாக அமர்ந்து நிகழ்வைக் கவனித்துக் கொண்டிருந்தார் .

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

அதற்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டு, ஒரு அசாதாரணமான மற்றும் திட்டமிட்டு நடத்தியது போன்ற தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்தார்.

இது, பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த யுக்ரேன் தலைவர் ஸெலென்ஸ்கியை டிரம்ப் நடத்திய விதத்தை நினைவுபடுத்தியது.

தென்னாப்பிரிக்க அரசியல் தலைவர்கள் “போயரை சுடு” (Shoot the Boer) என்ற இனவெறி எதிர்ப்புப் பாடலை கோஷமிடுவதை அந்த பெரிய திரையில் காண்பிக்கப்பட்ட வீடியோ காட்டியது.

அடிக்கடி செய்தி ஊடகங்களை விமர்சிக்கும் டிரம்ப், தெளிவாக ஆதாரம் இல்லாத புகைப்படங்களை காட்டி மகிழ்ந்ததாகவும் தெரிந்தது.

மேலும் விவசாயிகளாக இருந்த வெள்ளையர்களின் கல்லறைகள் எங்கே உள்ளன என்ற கேள்விக்கு, டிரம்ப் வெறும் “தென்னாப்பிரிக்கா” என்று மட்டும் பதிலளித்தார்.

அந்த வீடியோவில் அரசாங்கத்தில் பங்கு வகிக்காத அரசியல் தலைவர்கள் காட்டப்பட்டனர். விவசாயிகளாக இருந்த வெள்ளையர்களின் நிலத்தைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் அந்த அரசியல் தலைவர்களுக்கு இருப்பதாக டிரம்ப் நம்புவதாகவும் தெரிகிறது. ஆனால், அவர்களுக்கு அதற்கு உரிமை இல்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இழப்பீடு இல்லாமல் நிலத்தை கையகப்படுத்துதலை அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு ராமபோசா கையெழுத்திட்டபோதிலும், அந்த சட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

மேலும், தென்னாப்பிரிக்க அதிபரான ராமபோசா அரசியல் உரைகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அல்லது தொனியுடன் உடன்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆனால் தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய கூட்டாளியும், சிறுபான்மை வெள்ளையர்களால் ஆளப்பட்ட ஆட்சியை முடிக்க உதவிய பேச்சுவார்த்தையாளருமான ராமபோசா, அந்தக் கூட்டத்திற்காக தயாராக வந்திருந்தார்.

தென்னாப்பிரிக்க அதிபருடன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் வாக்குவாதம் ஏன்?  உத்தி என்ன?

பட மூலாதாரம், Getty Images

வெளிநாட்டு தலைவர்கள் வெளிப்படையாக புகழ்வதற்கு எடுக்கும் முயற்சிகளை டிரம்ப் சில சமயம் உணராமல் இருக்கிறார். ஆனால் அது தென்னாப்பிரிக்காவுடைய தெளிவான திட்டத்தின் ஒரு பகுதி.

டொனால்ட் டிரம்ப் ஒரு கோல்ஃப் வெறியர் என்பது உண்மைதான்.

ஆனால், ராஜ்ஜீய பிரச்னைகள் மற்றும் வர்த்தக கொள்கை குறித்து நடைபெறும் கூட்டத்துக்காக இரண்டு புகழ்பெற்ற கோல்ஃப் வீரர்களான எர்னி எல்ஸ் மற்றும் ரீடீஃப் கூசனை அழைத்து வரும் ராமபோசாவின் திட்டம், நான் இதுவரை படித்த எந்த சர்வதேச உறவுகள் பாடப்புத்தகத்திலும் காணப்படாத ஒரு யுக்தி.

மேலும், இரண்டு வெள்ளை தென்னாப்பிரிக்க கோல்ஃப் வீரர்களை அங்கு காண்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகிழ்ச்சியடைந்ததை அனைவரும் தெளிவாகக் கண்டனர்.

ராமபோசா பெரும்பாலும் அமைதியாகவும், சுருக்கமாகவும் பேசினார்.

மேலும் ராமபோசா இந்த சூழ்நிலையில் மகிழ்ச்சியடைந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால் கோல்ஃப் வீரர்களும், தேசிய ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள எதிர்க்கட்சியிலிருந்து வந்த அவரது வெள்ளையின விவசாய அமைச்சரும், ஓரளவு பாதுகாப்பாகவும், ஆதரவாகவும் இருந்தனர்.

ஒரு சிறிய கவசம் அல்லது ராஜ்ஜீய பாதுகாவலைப் போல காணப்பட்ட இந்த உத்தி பயனுள்ளதாகவும் இருந்தது.

டிரம்ப் விவசாயிகளின் அவலநிலை குறித்து மீண்டும் பேசினார் . அவர்களில் பலரை அவர் அமெரிக்காவிற்குள் அகதிகளாக வரவேற்றுள்ளார்.

ஆனால் அதிபர் ராமபோசா இதற்கு பதில் சொல்லவில்லை, மேலும் அவரை கோபமூட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் பெரும்பாலும் கவனம் பெறவில்லை.

ஒரு கட்டத்தில், கோல்ஃப் வீரர்களையும், தனது அணியில் இடம் பெற்றிருந்த ஒரு ஆப்பிரிக்க கோடீஸ்வரரையும் ராமபோசா குறிப்பிட்டு, ” ஆப்பிரிக்க விவசாயிகள் (வெள்ளை தென் ஆப்ரிக்க விவசாயிகள்) மீது இனப்படுகொலை நடந்திருந்தால், இந்த மூன்று நபர்களும் இங்கே இருக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக சொல்ல முடியும்.” என்று டிரம்பிடம் கூறினார்.

அதிபர் டிரம்ப்பால் தென்னாப்பிரிக்க அதிபரிடம் இருந்து எந்த எதிர்வினையையும் பெற முடியவில்லை என்றாலும், அவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்ட முயற்சிகள் வீண் என்று அர்த்தமல்ல.

அவை நிச்சயமாக வீணாகவில்லை.

ஏனென்றால், இவ்வாறு திட்டமிட்டது போல நிகழ்த்தப்பட்ட இந்த ராஜ்ஜீய பாணியானது, அதிபர் அலுவலகத்திற்கு சென்றிருந்த பார்வையாளர்களை மட்டுமின்றி, உள்நாட்டு அமெரிக்க பார்வையாளர்களையும் இலக்காகக் கொண்டது.

சில வெளிநாட்டு தலைவர்கள் இந்த தருணங்களை திறமையாக சமாளிக்க கற்றுக்கொண்டால், டொனால்ட் டிரம்ப் தான் விரும்பும் தாக்கத்தை தொடர்ந்து பெற, தனது திட்டங்களை சிறிது மாற்ற வேண்டியிருக்கும்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU