SOURCE :- BBC NEWS

CSK vs DC, தோனி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க. போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 6 ஏப்ரல் 2025, 03:29 GMT

    புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர்

“சேப்பாக்கத்துக்கு டி20 மேட்ச் பார்க்கவந்தோமா இல்லை, டெஸ்ட் மேட்ச் பார்க்க வந்தோமானு சந்தேகம் வந்துவிட்டது. ஹைலைட்ஸ் போடமுடியாத அளவுக்கு சிஎஸ்கே மோசமாக பேட் செய்தார்கள், வெற்றிக்காக முயற்சிக்கவில்லை. தோனி ஓய்வு அறிவித்துவிட்டு இளம் வீரருக்கு வாய்ப்புத் தரலாம்”

சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-டெல்லி கேபிடல்ஸ் ஆட்டம் நேற்று முடிந்த பின் ரசிகர் ஒருவர் இவ்வாறு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்த விதம் அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

சேப்பாக்கத்திலிருந்து போட்டி முடிந்து சென்ற ரசிகர்கள் அனைவரும் இந்த ஆட்டத்தைப் பார்க்கவா இவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினேன் என்று கடுமையான விமர்சனங்களை சாலையெங்கும் விதைத்துவிட்டு சென்றனர்.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம், Getty Images

சொந்த மண்ணில் கோட்டை விட்ட சிஎஸ்கே

சேப்பாக்கம் என்பது சிஎஸ்கே அணியின் கோட்டையாக ஐபிஎல் தொடரில் கருதப்பட்டது, இங்கு வந்து சிஎஸ்கே அணியை சாய்ப்பது என்பது அரிதாக இருந்தது. ஆனால் இந்த சீசனின் தொடக்கத்திலேயே 17 ஆண்டுகளுக்குப்பின் சிஎஸ்கேவை புரட்டி எடுத்து ஆர்சிபி வென்றது. நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 15 ஆண்டுகளுக்குப் பின் டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றுள்ளது. இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்ற சிஎஸ்கே அணி அதன் பின்னர் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது.

ஐபிஎல் தொடக்க சீசன்களில் “சேஸிங் கிங்” என்று வர்ணிக்கப்பட்ட சிஎஸ்கே அணி, கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பின் 180 ரன்களை சேஸ் செய்ததே கிடையாது என்ற மோசமான வரலாற்றை கொண்டுள்ளது.

அதாவது, இலக்கைத் துரத்துகையில் அழுத்தத்தை சமாளித்து கொண்டு களத்தில் திறம்பட செயல்படும் பேட்டர்கள் மற்றும் பிக் ஹிட்டர்கள் யாரும் அணியில் இல்லை என்பதையே இது மறைமுகமாக உணர்த்துகிறது. 180 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டால் சிஎஸ்கே அணியை வென்றுவிடலாம் என்ற தார்மீக நம்பிக்கையை எதிரணிக்கும் சிஎஸ்கே வழங்கியிருக்கிறது.

ஒரு காலத்தில் அழுத்தம், நெருக்கடி மிகுந்த நேரத்தில் அமைதியாக செயல்படுவது, திடீரென மீண்டுவருவது, திட்டங்களை சரியாகச் செயல்படுத்துவது, சேஸிங்கில் மாஸ்டர்ஸ் என்றெல்லாம் சிஎஸ்கே புகழப்பட்டது.

ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தைப் பார்த்தபின் சிஎஸ்கே அணி வெற்றிக்காக சிறிதுகூட முயற்சிக்கவில்லை என்று ரசிகர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். சிஎஸ்கே் அணியின் எந்த பேட்டரிடமும் “இன்டென்ட்” என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய “வெற்றிக்கான திண்ணிய எண்ணம்” இல்லை என்பது நேற்றைய ஆட்டத்தில் புலப்பட்டது.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம், Getty Images

தோனியும் காலாவதி ஃபார்முலாவும்

சிஎஸ்கே அணி, இந்த ஐபிஎல் சீசனுக்காக வீரர்களைத் தேர்வு செய்தது என்பது புதிய பாட்டிலில் பழைய மது என்ற ரீதியில்தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த 2011-ஆம் ஆண்டு கடைபிடித்த அதே ஃபார்முலாவை இன்னும் கடைபிடிப்பது இன்றைய சூழலுக்கு சரிவராது. எந்த ஸ்கோராக இருந்தாலும் கடைசிவரை இழுத்தடிப்பது, மெதுவாக சேஸிங்கை நகர்த்துவது ஆகியவை காலாவதியான ஃபார்முலாக்கள்.

கடந்த இரு சீசன்களாக பல்வேறு அணிகளும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து புதிய அணியை உருவாக்கி வரும் போது, கண்ணை மூடிக் கொண்டு இந்த குறிப்பிட்ட சிலவீரர்கள் சிஎஸ்கே அணியில் இருப்பார்கள் என்று சொல்லிவிடும் அளவிலான அணியாகவே சிஎஸ்கே உள்ளது.

சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் உள்ள பேட்டர்களிடம் அச்சப்படாமல் ஆடக்கூடிய மனப்போக்கு இல்லை. ஒரு ரன், 2 ரன்கள் சேர்ப்பது, சாஃப்ட் டிஸ்மிஸல் ஆவது என பழைய பாணியிலேயே இன்னும் ஆட்டம் நகர்கிறது.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம், Getty Images

“ஆங்கர் ரோல்” செய்ய பேட்டர்கள் இல்லை

சிஎஸ்கே அணியின் நடுவரிசை பார்ப்பதற்கு வேண்டுமானால் 9வது வரிசை வரை பேட்டர்கள் இருப்பதாக தெரியலாம். ஆனால் அணி சிக்கலான நேரத்தில் இருக்கும் போது ஆங்கர் ரோல் எடுத்து விளையாட ஒரு சிறந்த பேட்டர், பிக் ஹிட்டர் யாருமில்லை. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் விஜய் சங்கர் ஆங்கர் ரோல் எடுக்க முயற்சி செய்து, ஒட்டுமொத்த கப்பலையும் கடலில் மூழ்கடித்துவிட்டார்.

விஜய் சங்கர் நேற்று அடித்த 54 பந்துகளில் 69 ரன்கள் என்பது காகிதத்தில் வேண்டுமென்றால் கவுரவமாக இருக்கலாம் ஆனால், ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்கிறேன் என டி20 ஆட்டத்தை டெஸ்ட் போட்டியாக மாற்றிவிட்டார்.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம், Getty Images

பிக் ஹிட்டர்கள் இருக்கிறார்களா?

சிஎஸ்கே அணியில் இக்கட்டான சூழலில் பெரிய ஷாட்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்யும் பிக் ஹிட்டர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்றால் ஷிவம் துபே பெயரை மட்டும்தான் ரசிகர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சிஎஸ்கே அணியால், இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட பின்புதான் ஷிவம் துபே பிக் ஹிட்டராக அறியப்பட்டார்.

ஷிவம் துபே பிக் ஹிட்டராக அறியப்படுகிறாரே தவிர, இன்னும் முழுமையாக அவர் அந்த ரோலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. பிக் ஹிட்டர்கள் என்பவர்கள் ஆட்டத்தை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய ஸ்கோரை அடித்து, திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியவர்கள். அவ்வாறு, தடாலடியாக சிக்ஸர், பவுண்டரிகளை விளாசும் வீரர்களை சிஎஸ்கேஇன்னும் அணியில் அடையாளப்படுத்தவில்லை. நடுவரிசையில் ஜடேஜா, ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகியோர் இந்த சீசனில் கைகொடுக்கத் தவறிவிட்டனர்.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம், Getty Images

இளைஞர்களுக்கு மறுக்கப்படும் வாய்ப்பு

சர்வதேச கிரிக்கெட்டில், இந்திய அணிக்கு கேப்டனாக பல இளம் வீரர்களை வளர்த்துவிட்ட தோனி, இன்று சிஎஸ்கே அணியில் அதனைச் செய்ய தவறிவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒவ்வொரு ஐபிஎல் சீசன் ஏலத்திலும் இளம் வீரர்கள், அன்கேப்டு வீரர்கள் பலரையும் வாங்கும் சிஎஸ்கே அணி அவர்களில் பலரை வாய்ப்பே வழங்காமல் வெளியேற்றியுள்ளது.

இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் தமிழக வீரர் ஆந்த்ரே சித்தார்த், விக்கெட் கீப்பர் வனிஷ் பேடி, , ஆல்ரவுண்டர்களாக அன்சுல் கம்போஜ், ராமகிருஷ்ணா, வேகப்பந்துவீச்சில் குர்ஜப்நீத் சிங், ஷேக் ரஷீத் என இளம் வீரர்கள் இருந்தும் இதுவரை யாருக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு தரப்படவில்லை.

ஓர் அணியில் இளம் வீரர்கள்தான் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவர்கள், பயமில்லாதவர்கள், பாதுகாப்பானவர்கள். ஆனால், இந்த வெற்றி ஃபார்முலா தெரிந்திருந்தும் சிஎஸ்கே இந்த விஷயத்தை வெளிப்படையாக கையாள்வதில்லை.

ஆனால் ஐபிஎல் தொடரில் உள்ள சன்ரைசர்ஸ், மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி, குஜராத் அணிகள் அன்கேப்டு வீரர்கள் பலருக்கும் வாய்ப்பளித்து அவர்களின் திறமையை பயன்படுத்திக் கொண்டன. ஆனால், சிஎஸ்கே அணி வழக்கமான ஃபார்முலாவுடன் அனுபவமான சர்வதேச வீரர்களைத் தேர்வு செய்கிறேன் என்ற ரீதியில் வீரர்களை தேர்வு செய்வதும், குறிப்பிட்ட வீரர்களை தக்கவைப்பதும் தோல்விக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும்.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம், Getty Images

தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லை

ருதுராஜ், கான்வே ஜோடி சிறப்பான தொடக்கத்தை கடந்த சீசனில் வழங்கி 849 ரன்கள் குவித்து சிறந்த தொடக்க ஜோடியாக பெயரெடுத்தது. இவர்கள் இருவரும் பவர்ப்ளேயில் மட்டும் 619 ரன்களை சிஎஸ்கேவுக்கு சேர்த்துள்ளனர்.

ஆனால் இந்த சீசனில் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது. இந்த சீசனில் சிஎஸ்கேயின் பவர்ப்ளே ரன்ரேட் 10 அணிகளின் ரன்ரேட்டில் கடைசி இடத்தில் ஓவருக்கு 7 ரன்ரேட்டில் இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரராக ரவீந்திராவையும், திரிபாதியையும் களமிறக்கியது பலனளிக்கவில்லை.

கடந்த சீசனில் சிறப்பான துவக்கம் தந்த கான்வே – ருதுராஜ் இணையை களமிறக்கமால் நேற்றைய ஆட்டத்தில் ரச்சின் ரவீந்திரா, கான்வே இருவரையும் களமிறக்கியும் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம், Getty Images

ஃபார்மில் இல்லாத வீரர்கள்

சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் ஏலத்தில் 5 வீரர்களைத் தக்கவைத்து 10 அன்கேப்டு வீரர்கள், 6 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 20 பேரை வாங்கியது. புதிதாக சிஎஸ்கே அணிக்குள் வந்தவர்களில் பல வீரர்கள் கடந்த சீசன்களாகவே ஃபார்மில் இல்லாதவர்கள், உள்நாட்டுப் போட்டிகளிலும் பெரிதாக ரன் சேர்க்காதவர்கள்.

சாம் கரன், நேதன் எல்லீஸ், ஓவர்டன், திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், முகேஷ் சவுத்ரி ஆகியோரின் கடந்த சீசன்களின் ஃபார்மை ஆய்வு செய்தால் ஏன் இப்படிப்பட்ட வீர்ரகளை தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வி எழும்.

சாம்கரனுக்கு இங்கிலாந்து அணியிலேயே வாய்ப்பு இல்லை, நேதன் எல்லீஸ் ஆஸ்திரேலிய அணியின் பேக்அப் பந்துவீச்சாளர், ஓவர்டன் இங்கிலாந்துஅணியில் சமீபத்தில்தான் அறிமுகமாகியுள்ளார்.

திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், முகேஷ் சவுத்ரி ஆகியோரின் உள்நாட்டுப் போட்டியில் ஆடிய விதம், ஃபார்ம் ஆகியவற்றை ஆய்வுசெய்தால் படுமோசமாக இருக்கிறது.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம், Getty Images

கோட்டையில் அடிவாங்குவது சரியல்ல

சிஎஸ்கேயின் கோட்டையாக இருந்தது சேப்பாக்கம் மைதானம். இங்கு சிஎஸ்கே அணியை வெளியில் இருந்து ஓர் அணி வந்து தோற்கடிப்பது சுலபமல்ல. ஆனால், இந்த முறை 2008க்குப் பின் ஆர்சிபி வென்றுவிட்டது, 2010க்குப்பின் டெல்லி அணியும் சிஎஸ்கேவைபுரட்டி எடுத்துவிட்டது.

இந்தத் தோல்விகள் அனைத்தும், சிஎஸ்கே அணியில் ஏதோ தீவிரமான தவறு இருக்கிறது என்பதையும், அணியில் ஒட்டுமொத்த மாற்றம் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

பழைய ஃபார்முலா இனியும் கைகொடுக்காது

சிஎஸ்கே அணியின் கடந்த கால ஃபார்முலா என்பது, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் 6 அல்லது 7 லீக் ஆட்டங்களை வென்றுவிடலாம். அதன்பின் வெளி மைதானங்களில் ஏதேனும் சில போட்டிகளில் வென்று ப்ளே ஆஃப் சென்றுவிடலாம். அதன்பின் அரையிறுதி, இறுதிப்போட்டிக்குள் நுழையும் ஃபார்முலாவையே சிஎஸ்கே பின்பற்றி வந்தது.

ஆனால், இந்த பழைய ஃபார்முலா இனிமேல் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்காது, அதற்குரிய சூழலையையும் எதிரணிகள் வழங்காது என்பதுதான் நிதர்சனம். சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுகளங்கள் மாற்றப்பட்டு, தன்மை மாறியுள்ளதால், எந்தநேரத்தில் ஆடுகளம் எப்படி செயல்படும் என்பது கணிக்க முடியாததாகியுள்ளது. ஆனால், இன்னும் சிஎஸ்கே அணி பழைய ஃபார்முலாவை கையில் வைத்திருப்பது வெற்றிக்கு உதவாது.

அது மட்டுமல்லாமல் சிஎஸ்கேஅணியில் எந்தெந்த வீரர்கள் வழக்கமாக களமிறங்குவார்கள் எனத் தெரிந்து அதற்கேற்றபடி தனித்தனியாக திட்டத்துடன் எதிரணியினர் களமிறங்கி விக்கெட்டை வீழ்த்துகிறார்கள். ஆதலால், சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிகளை அள்ளிவிடலாம் என்று சிஎஸ்கே நினைப்பது கடந்த காலம்.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம், Getty Images

தோனி பற்றி ரசிகர்கள் கருத்து

சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்தவர், ஜாம்பவான் என்பதை ஒப்புக்கொண்டாலும், வயது மூப்பு என்பது அவரையும் அறியாமல் பேட்டிங்கில் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்துகிறது. பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனியை பார்த்த ரசிகர்கள் நேற்று ஆடிய தோனியின் பேட்டிங்கை கண்கொண்டு பார்க்க முடியாமல் மனம் குமுறினர்.

இதனால் போட்டி முடிந்தவுடன் ” தோனிரிட்டயர்மென்ட்” என்ற ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் டிரண்டாகியது. தோனி நேற்றைய ஆட்டத்தில் 19 பந்துகளைச் சந்தித்த பின்புதான் முதல் பவுண்டரியே அடித்தார். ஆட்டத்தின் சூழல் தெரிந்தும், தன்மை அறிந்தும் பிஞ்ச் ஹிட்டர் போல் அதிரடியாக ஆட முயலாமல் ஆமை வேகத்தில் பேட் செய்து தோல்வி கிட்டத்தட்ட உறுதியான பிறகே கடைசி ஓவரில் சிக்ஸ, பவுண்டரி அடித்து ரசிகர்களை தோனி வெறுப்பேற்றினார்.

தோனி ஓய்வு பற்றி ஃபிளமிங் கூறியது என்ன?

தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் ” தோனியிடம் ஓய்வு குறித்து பேசுவது என் வேலையல்ல. எனக்கு அது குறித்து ஏதும் தெரியாது. அவர் அணியில் இருக்கும்வரை அவருடன் சேர்ந்து பணியாற்றுவதை விரும்புகிறேன். தோனி இன்னும் வலிமையாக இருக்கிறார், நான் கூட இதுவரை தோனியிடம் ஓய்வு குறித்து கேட்டதில்லை, நீங்கள்தான்(ஊடகங்கள்) கேட்கிறீர்கள்” எனத் தெரிவித்தார்.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கேவுக்கு எச்சரிக்கை மணி

கிரிக்இன்போ தளத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அளித்த பேட்டியில் ” டாப்ஆர்டர் பயர்ஆகாமல் துபேயும் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால் சிஎஸ்கே அணி அவ்வளவுதான். சிஎஸ்கே அணியில் உள்ள பேட்டர்கள் வெற்றிக்காக முயற்சி கூட செய்வதில்லை, இதுபோன்ற அணுகுமுறை எனக்கு வியப்பாக இருக்கிறது. ஒருமுறை அல்ல இருமுறை சிஎஸ்கே இந்த சீசனில் மோசமாக ஆடி விரைவாக விக்கெட்டுகளை இழந்துள்ளது நல்ல அறிகுறியல்ல. சிஎஸ்கே அணி இந்த சீசனில் இதுவரை 17 வீரர்களை மாற்றிப் பயன்படுத்தியும் எந்த பலனும் இல்லை. இதற்கு முன் 2015ல் 14 வீரர்கள், 2021-ல் 16 வீரர்களை மாற்றியது” எனத் தெரிவித்தார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU