SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு 180 ரன்கள் அல்லது அதற்கு அதிகமான ரன்களை சேஸ் செய்வதில் சிஎஸ்கே-வுக்கு இருந்த சிரமம் நேற்றோடு முடிவுக்கு வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏறக்குறைய 12 போட்டிகளுக்குப் பிறகு 180 ரன்களை எட்டி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
நட்சத்திர வீரர்களுக்கே முன்னுரிமை கொடுத்து ஆடி வந்த சிஎஸ்கே, அணியில் மாற்றங்களைச் செய்து, மாத்ரே, ரஷீத், கம்போஜ், உர்வில் படேல், பிரேவிஸ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்த பிறகு கிடைத்துள்ள 3வது வெற்றி இது.
அதோடு, ஐ.பி.எல் வரலாற்றில் 100 முறை நாட் அவுட்டாக இருந்து தோனி குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்துள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே அணி.
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
சிஎஸ்கே அணியின் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

கொல்கத்தாவின் ப்ளே ஆஃப் கனவு?
இந்த வெற்றியால் சிஎஸ்கே அணியின் நிலையில் எந்த மாற்றமும் வரவில்லை. தொடர்ந்து கடைசி இடத்தில்தான் இருக்கிறது. ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் சிஎஸ்கே அடுத்த 2 போட்டிகளில் வென்றாலும் அது பெரிதாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
கொல்கத்தா அணியைப் பொருத்தவரை இந்தத் தோல்வியால் அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. கொல்கத்தா அணி தற்போது 12 போட்டிகளில் 11 புள்ளிகளுடன் இருக்கிறது. இன்னும் 2 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில், அதிகபட்சமாக 15 புள்ளிகள் வரைதான் பெற முடியும்.
ஆனால், இது ப்ளே ஆஃப் செல்ல போதுமானதாக இருக்காது. ஒருவேளை கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் செல்ல வேண்டுமென்றால் மும்பை, பஞ்சாப் கிங்ஸ், லக்னெள, டெல்லி அணிகள் அடுத்து வரும் ஆட்டங்களில் தோற்று 14 புள்ளிகளுக்கு மேல் பெறாமல் இருந்தால் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் செல்லும்.
பயம் அறியா இளம் வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக நூர் அகமது தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால், உண்மையில் சிஎஸ்கே அணியின் சேஸிங் நாயகர்களாக இருந்தது அறிமுகப் போட்டியில் களமிறங்கிய உர்வில் படேல்(31), டெவால்ட் பிரேவிஸ் (52) ஆகியோரின் பயம் அறியா ஆட்டம்தான்.
சிஎஸ்கேவின் தொடக்க வீரர்களான ஆயுஷ் மாத்ரே, கான்வே இருவரும் டக்-அவுட்டில் வெளியேறிய பிறகு, 3வது வீரராக வந்த உர்வில் படேல், அறிமுகப் போட்டி என்ற பதற்றமும், பயமும் இல்லாமல் ஷாட்களை ஆடினார்.
நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசிய உர்வில் படேல் 11 பந்துகளில் 31 ரன்களை விளாசி, அரோரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேவில் உர்வில் படேல் அமைத்துக் கொடுத்த அடித்தளம் பவர்ப்ளே முடியும் வரை விக்கெட்டுகளை இழந்தாலும் ரன்ரேட் குறையவில்லை.
ஜடேஜா(19), அஸ்வின்(8) சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. இருப்பினும் சிஎஸ்கே ரன்ரேட் ஓவருக்கு 10 ரன்கள் என்ற ரீதியில் ஸ்திரமாக இருந்தது. இதை அடிப்படையாக வைத்து நடுவரிசையில் ஷிவம் துபே, பிரேவிஸ் அணியை வெற்றிக்கு எடுத்துச் சென்றனர்.
அதேபோல தென் ஆப்பிரிக்க இளம் வீரர் பிரேவிஸ் 22 பந்துகளில் அடித்த அரைசதம் சேஸிங்கை விரைவுப்படுத்தியது. வைபவ் அரோரா வீசிய 11வது ஓவரில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்த பிரேவிஸ் ஆட்டத்தைத் தலைகீழாக மாற்றி, வெற்றியை சிஎஸ்கே பக்கம் இழுத்து வந்தார்.
அரோரா வீசிய ஓவருக்கு முன்பு வரை கொல்கத்தா அணியின் வெற்றி சதவிகிதம் 78 ஆக இருந்தது. ஆனால் பிரேவிஸ் 30 ரன்களை விளாசிய பிறகு, சிஎஸ்கேவின் வெற்றி 78 சதவிகிதமாக மாறியது. பிரேவிஸ், உர்வில் படேல் ஆகிய இருவரின் பயம் அறியா ஆட்டம்தான் சிஎஸ்கே சேஸிங்கை எளிதாக்கியது.

பட மூலாதாரம், Getty Images
ஆயுஷ் மாத்ரே இந்த ஆட்டத்தில் டக்-அவுட்டில் வெளியேறினாலும், ஆர்சிபிக்கு எதிராக அற்புதமான இன்னிங்ஸ் ஆடினார். மாத்ரே, பிரேவிஸ், உர்வில் ஆகியோர் அனைவரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பிறகு காயமடைந்த வீரர்களுக்குப் பதிலாக சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டவர்கள்.
கான்வே, ஜடேஜா, விஜய் சங்கர், திரிபாதி, கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சிஎஸ்கே அணிக்காகப் பெரிதாக இந்த சீசனிலும் விளையாடாமல் ஏமாற்றிய நிலையில், இளம் வீரர்கள் நீண்ட போட்டிகளுக்குப் பின் 3வது வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
அடுத்து வரும் 2 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றியைப் பற்றிக் கவலைப்படாமல் அணியில் இருக்கும் இளம் வீரர்களைக் களமிறக்கி, 2026 சீசனுக்கு தயாராவது குறித்துச் சிந்திக்க வேண்டும்.
சிஎஸ்கே அணியில் கடந்த போட்டிகளைவிட இந்த ஆட்டத்தில் பேட்டர்கள் ரன் சேர்க்க வேண்டும் என்ற தாகத்தை ஏற்படுத்தினர். அதற்கு இளம் வீரர்களின் ஆட்டம் முக்கியக் காரணம். கொல்கத்தா அணி ஆட்டத்துக்கு முன்பாக பவர்ப்ளேவில் சிஎஸ்கே ரன்ரேட் இந்த சீசனில் 8.1 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆட்டத்தில் 10 ரன்ரேட்டுக்கு அதிகமாக இருந்தது.
டாப் ஆர்டர் பேட்டர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடவில்லை, சுதந்திரமாக ஆடுவதில் தடுமாறுகிறார்கள். இதனால்தான் இந்த சீசனில் பெரும்பகுதி ஆட்டங்களில் பவர்ப்ளேவில் சிஎஸ்கே குறைந்தபட்சம் 2 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. பவர்ப்ளேவில் சிஎஸ்கே அணியின் தடுமாற்றம் தொடர்கிறது. இந்த ஆட்டத்தில் மோசமாக 5 விக்கெட்டுகளை இழந்தது சிஎஸ்கே. ஆனால் பிரேவிஸ் 11வது ஓவரை பயன்படுத்திய விதம்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
நடுவரிசையில் ஷிவம் துபே எடுத்த 45 ரன்கள், கடைசி நேரத்தில் தோனி(18 ரன்கள்) ரஸல் பந்தில் அடித்த சிக்ஸர் ஷாட் ஆகியவை சேஸிங்கை எளிதாக்கியது.
தவறைத் திருத்திய தோனி

பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் தோனி களத்தில் இருந்த போதிலும் எந்த பெரிய ஷாட்டுக்கும் முயலவில்லை. ஆனால், இந்த ஆட்டத்தில் அரோரா வீசி ய 19வது ஓவரில் துபே, நூர் அகமது ஆட்டமிழந்த பிறகு சிஎஸ்கே வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது.
ரஸல் வீசிய கடைசி ஓவர் முதல் பந்து “லோ-ஃபுல்டாஸாக” வீசியதை டீப் மிட் விக்கெட்டில் அருமையான சிக்ஸராக மாற்றி, அழுத்தத்தைக் குறைத்தார்.
ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் பெரிய ஷாட்களை ஆடாமல் இருந்தது தவறு என்று பேசிய தோனி, இந்த ஆட்டத்தில் அந்த தவறைத் திருத்திக் கொண்டு சிக்ஸர் அடித்து அணியின் அழுத்தத்தைக் குறைத்து வெற்றியைத் தேடித் தந்தார்.
இந்தப் போட்டியில் தோனி இரு கேட்சுகளைப் பிடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 டிஸ்மிஸல் செய்த ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். 153 கேட்சுகள், 47 ஸ்டெம்பிங்குகள் என 270 போட்டிகளில் 200 டிஸ்மிசல்கள் செய்துள்ளார். தோனிக்கு அடுத்து தினேஷ் கார்த்திக் 174 டிஸ்மிசல்கள் செய்துள்ளார்.
போராடும் நடப்பு சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் (11) ஏமாற்றம் அளித்த நிலையில் சுனில் நரேன் (26), கேப்டன் ரஹானே (48) ஆகியோரின் பார்ட்னர்ஷிப் நம்பிக்கையளித்தது. அதன்பின் மணிஷ் பாண்டே(36) ரஸல் (38) நடுப்பகுதியில் சிறப்பாக ஆடிய ஸ்கோரை உயர்த்தினர்.
அதிலும் மணிஷ் பாண்டே களத்துக்கு வந்தது முதல் பெரிய ஷாட்டுக்கு முயன்றும் அவரால் அடிக்க முடியவில்லை. டி20 போட்டியில் களமிறங்கி டெஸ்ட் போட்டி ரீதியில் விளையாடினார். ரிங்கு சிங் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி வைத்திருக்கும் பேட்டிங் வலிமையைக் கொண்டு அந்த அணி இன்னும் கூடுதலாக 20 ரன்களை சேர்த்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், முடியவில்லை.
அதே போல பந்துவீச்சில் சுனில் நரேன், வருண் இருவரின் ஓவர்கள் தான் கட்டுக்கோப்பாக இருந்தது. வருண் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், நரேன் விக்கெட் வீழ்த்தாமல் 28 ரன்களையும் மட்டுமே கொடுத்தார்.
ஆனால், மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 10 ரன்கள் வீதம் வழங்கினர். அதிலும் வைபவ் அரோரா 16 ரன்ரேட்டில் வாரி வழங்கி தோல்விக்கு முக்கியக் காரணமானார். அவர் வீசிய 11வது ஓவரில் பிரேவிஸ் அடித்த 30 ரன்கள்தான் ஆட்டத்தை கொல்கத்தா கைகளில் இருந்து நழுவ வைக்கக் காரணமாக இருந்தது. வெற்றிக்காக அனைவரும் போராடியும் சிலர் செய்த தவறுக்குப் பெரிய விலையை கொல்கத்தா கொடுத்துள்ளது.
எதிர்காலம் பற்றி தோனி கருத்து

பட மூலாதாரம், Getty Images
வெற்றிக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் “இது எங்களுக்குக் கிடைத்த 3வது வெற்றி. பல போட்டிகளில் நாங்கள் நினைத்தது போல சில விஷயங்கள் நடக்கவில்லை. பெருமையைப் பற்றிப் பேசுவதற்கு முன், நிதர்சனத்தை உணர வேண்டும். 25 வீரர்களும் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்.
எந்த பேட்டர் உடற்தகுதியுடன் இருக்கிறார், யாரை பந்துவீச வைக்கலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும். இந்த போட்டியில் பேட்டர்கள் ரன் சேர்க்க வேண்டும் என்ற தாகத்தோடு ஆடியது மகிழ்ச்சியாக இருந்தது,” என்று கூறினார்.
மேலும், “எங்களுடன் அணியில் இருக்கும் மற்ற வீரர்களையும் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் பரிசோதிக்க வாய்ப்பாக இருக்கும். தொடரில் இருந்து நாங்கள் வெளியேறியதால், அந்த வீரர்களின் மனநிலை, அழுத்தத்தைத் தாங்கும் திறனை பரிசோதிக்கலாம்.
பிரேவிஸ் ஆட்டத்தைக் கடைசி வரை ஆழமாகக் கொண்டு செல்ல உதவினார். வருண், சுனில் நரேன் பந்துவீச்சில் நான் விக்கெட்டை இழக்கவில்லை. வேகப்பந்துவீச்சு வரட்டும் என்று காத்திருந்தேன்,” என்றும் குறிப்பிட்டார்.
அதோடு, தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசிக் கட்டத்தில் இருப்பதாகக் கூறிய தோனி, “ஆண்டுக்கே 2 மாதங்கள்தான் விளையாடுகிறேன். இந்த ஐபிஎல் முடிந்தபின் அடுத்த 6 முதல் 8 மாதங்களுக்கு நான் கடினமாக உழைக்கும் அளவு, அழுத்தத்தைத் தாங்கும் அளவு உடல்நிலை தாங்குமா என பார்க்க வேண்டும். இப்போது எதையும் முடியு செய்ய முடியாது. ரசிகர்களின் அன்பும், அரவணைப்பும் அற்புதமாக இருக்கிறது,” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அடுத்து வரும் முக்கிய ஆட்டங்கள்
இன்றைய ஆட்டம்
- பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
- இடம்: தரம்சாலா
- நேரம்: இரவு 7.30
மும்பையின் அடுத்த ஆட்டம்
- மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
- நாள் – மே 6
- இடம் – மும்பை
- நேரம்- இரவு 7.30 மணி
சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்
- ராஜஸ்தான் vs சிஎஸ்கே
- நாள் – மே 12
- இடம் – சென்னை
- நேரம்- இரவு 7.30 மணி
ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
- ஆர்சிபி vs லக்னெள
- நாள் – மே 9
- இடம் – லக்னெள
- நேரம்- இரவு 7.30 மணி
மும்பையின் அடுத்த ஆட்டம்
- மும்பை vs பஞ்சாப்
- நாள் – மே 11
- இடம் – தரம்சலா
- நேரம்- பிற்பகல் 3.30 மணி
ஆரஞ்சு தொப்பி யாருக்கு
- சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) – 510 (12 போட்டிகள்)
- சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்) – 509 ரன்கள்(11 போட்டிகள்)
- சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்) – 508 ரன்கள்(11 போட்டிகள்)
நீலத் தொப்பி
- பிரசித் கிருஷ்ணா (குஜராத்) – 20 விக்கெட்டுகள்(11 போட்டிகள்)
- நூர் அகமது(சிஎஸ்கே) – 20 விக்கெட்டுகள்(12போட்டிகள்)
- ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) – 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU