SOURCE :- BBC NEWS

திருநாகேஸ்வரர் கோவில்

பட மூலாதாரம், Facebook/Kundrathur Nageswarar temple

‘ஒரு மனிதனின் தாழ்ந்த நிலையைக் காரணம் காட்டி கோவில்களில் நன்கொடை பெற மறுப்பது தீண்டாமையின் மற்றொரு வடிவம்’ என, கடந்த ஏப்ரல் 29 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் திருநாகேஸ்வரர் கோவிலில் தங்களை உபயதாரராக சேர்க்க மறுப்பதாகக் கூறி பட்டியல் பிரிவினர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அறநிலையத்துறை அதிகாரிகளும் கோவில் அறங்காவலர்களும் மறுக்கின்றனர். தங்களிடம் மனு கொடுக்காமல் நீதிமன்றத்தை நாடிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

கோவிலில் என்ன பிரச்னை?

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் சிறப்புகளைக் கூறுவதற்கு 45 கல்வெட்டுகள் உள்ளதாக கோவில் குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

சேக்கிழார் கட்டியதாகக் கூறப்படும் இந்தக் கோவிலுக்கு கி.பி. 1182 ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் விளக்கெரிக்க தானம் அளிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது எனவும் இணையதளம் கூறுகிறது.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

கி.பி. 1192 ஆம் ஆண்டு காமாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்டதாகவும் கோவிலில் பணிபுரிந்த ஆடல் மகளிரும் வழிபாட்டுக்காக தானம் அளித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கி.பி. 1546 ஆம் ஆண்டு விஜயநகர மன்னரும் திருநாகேஸ்வரம் வந்துள்ளதாகவும் பெரிய புராணம் எழுதிய சேக்கிழாருக்கு இங்கு தனிக்கோவில் உள்ளதாகவும் அறநிலையத்துறை கூறியுள்ளது.

குன்றத்தூரில் திருநாகேஸ்வரம் கிராமத்தில் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்துள்ள கூலி வேலைகள் பிரதானமாக உள்ளன.

‘குறிப்பிட்ட சாதி கட்டுப்பாட்டில் கோவில்’

 திருநாகேஸ்வரம்

பட மூலாதாரம், Facebook/Kundrathur Nageswarar temple

“கோவிலுக்கு அருகில் முருகன் கோவில், பெருமாள் கோவில், சிவன் கோவில் ஆகியவற்றில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் அறங்காவலர் குழுவில் உள்ளனர். ஆனால், திருநாகேஸ்வரர் கோவிலை குறிப்பிட்ட சாதியினர் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்” எனக் கூறுகிறார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாண்டியராஜன். இவர் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கத்தின் தலைவராக இருக்கிறார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தான் கோவிலில் உபயதாரராக உள்ளதாகக் கூறும் அவர், “பட்டியல் சாதியைப்போல பிற சாதியினருக்கு உபயதாரராக முக்கியத்துவம் தருவதில்லை. அனைத்து சாதிகளுக்கும் உரிமை கொடுக்க உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்தேன்” என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை மூன்று வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்ரவர்த்தி உத்தரவிட்டார்.

‘கடவுள் முன் சாதி ஒரு பொருட்டல்ல’

தீர்ப்பில், ‘இந்த நாட்டில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தன்னைவிட கீழ் நிலையில் உள்ள நபரிடம் நன்கொடைகளை வாங்காமல் இருப்பது தீண்டாமையின் மற்றொரு வடிவம். கடவுள் முன் சாதி ஒரு பொருட்டல்ல’ என நீதிபதி கூறியுள்ளார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபரை கோவிலுக்குள் உபயதாரராக சேர்க்க மறுப்பதாகக் கூறுவது அரசியல் சாசன சட்டத்தின் 17 ஆவது பிரிவை மீறுவதாகும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற ஒரு வழக்கில் (நாமக்கல் மாவட்டம் பொன் காளியம்மன் கோவில் வழக்கு) பிப்ரவரி 5 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் நீதிபதி மேற்கோள் காட்டியுள்ளார்.

இந்த வழக்கில், ‘காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவிலில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே உபயதாரராக இருக்க முடியும்’ என இந்து அறநிலையத்துறை வாதிட்டதாகக் கூறுகிறார், வழக்கைத் தொடர்ந்த பாண்டியராஜனின் வழக்கறிஞர் சுகந்தன்.

“சமூக நீதி அரசை நடத்துவதாகக் கூறும் ஆட்சியில் இப்படியொரு பதிலைக் கூற முடியாது. கோவிலில் பக்தர்களிடம் நன்கொடைகளை வாங்குகின்றனர். ஆனால், குறிப்பிட்ட சாதியினரின் விழாவாக கொண்டாடுகின்றனர்” எனக் கூறுகிறார்.

 திருநாகேஸ்வரம்

பட மூலாதாரம், Facebook/Kundrathur Nageswarar temple

அழைப்பிதழ் சர்ச்சை

திருநாகேஸ்வரர் கோவிலில் கடந்த மே 13 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

“பத்து நாட்களாக நடைபெற்ற இந்த விழாவுக்கு அனைத்து சாதியினரிடம் இருந்தும் நன்கொடை பெற்றனர். ஆனால், விழா அழைப்பிதழில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் பெயர் மட்டும் இருந்தது” எனக் கூறுகிறார், குன்றத்தூரை சேர்ந்த வைரமுத்து.

கோவில் விழா தொடர்பான அழைப்பிதழை நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு சமர்ப்பித்ததாகக் கூறும் வைரமுத்து, “குறிப்பிட்ட சாதியைத் தவிர வேறு யாரும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர்” என்கிறார்.

கோவில் வளாகத்தில் குறிப்பிட்ட சாதியின் பெயரில் சங்கம், திருமண மண்டபம் உள்ளதாகக் கூறும் அவர், “இது அவர்களின் மூதாதையரின் கோவிலாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்” என்றார்.

திருநாகேஸ்வரர் கோவில் கடந்த 1968 ஆம் ஆண்டு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறும் பாண்டியராஜன், “60 பேர் கொண்ட குழுவில் பத்து பேர் உபயதாரராக உள்ளனர். அவர்கள் 10 பேரும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழா நடத்துகின்றனர். வேறு சாதிக்கு அனுமதியில்லை” என்கிறார்.

“திருவிழாவுக்கு நன்கொடை வசூல் செய்தால் அதற்குரிய ரசீதுகள் கொடுக்கப்படுவதில்லை. கணக்கு வழக்குகளும் இல்லை. அனைத்தும் தங்கள் சாதிக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், “கோவிலில் வழிபாடு நடத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை” எனக் கூறும் வைரமுத்து, “கோவிலில் உபயதாரராக பட்டியல் சாதி உள்பட இதர சாதியினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். நன்கொடைகளையும் பாரபட்சம் பார்த்து தான் வாங்குகின்றனர்” எனக் கூறுகிறார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ராஜ்பாபு முழுமையாக மறுத்தார்.

அறங்காவலர் குழு சொல்வது என்ன?

திருநாகேஸ்வரர் கோவில்

பட மூலாதாரம், Facebook/Kundrathur Nageswarar temple

“முறைசாரா பரம்பரை அறங்காவலர் திட்டத்தின்கீழ் இந்தக் கோவில் வருகிறது. அதன்படி அறங்காவலர் குழுவில் ஒரே சாதியினர் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு” எனக் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கோவிலுக்கு நியமிக்கப்படும் ஐந்து அறங்காவலர்களில் 3 பேரை அறநிலையத்துறை ஆணையரும் 2 பேரை துறையின் செயலரும் நியமிப்பார்கள்” என்கிறார்.

சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலை குறிப்பிட்ட சாதியினர் மட்டும் நிர்வாகம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“எங்கள் சாதியினர் கோவிலை சிறப்பாக நிர்வாகம் செய்வதாகக் கூறி நாயக்கர், செட்டியார், வன்னியர், ஆதிதிராவிடர் என அனைவரும் சேர்ந்து கடிதம் கொடுத்தனர். அதை அடிப்படையாக வைத்து நிர்வாகம் செய்து கொள்வதற்கு அறநிலையத்துறை உத்தரவிட்டது” எனக் கூறுகிறார் ராஜ்பாபு.

ஒரு சாதியினர் உரிமை கோர முடியுமா?

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதியினர் கோவிலை நிர்வகிக்க உரிமை கோரினால், அறநிலையத்துறை சட்டப்படி அதனை பரிசீலித்து அனுமதி வழங்கும் நடைமுறையை நிர்வாக திட்டம் (scheme) எனக் கூறுகின்றனர்.

இவை கிராமங்கள், ஊர்க்காரர்கள், சாதி ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ‘கோவிலுக்கு ஒரு சாதியினர் மட்டும் உரிமை கோர முடியாது’ என நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொன் காளியம்மன் கோவில் வழக்கில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்குவதற்கு கோவில்களை பயன்படுத்திக் கொள்வதாக தீர்ப்பில் கூறிய நீதிபதி பரத சக்ரவர்த்தி, பெரும்பாலான பொதுக் கோவில்கள் குறிப்பிட்ட சாதியினரின் கோவில்களாக முத்திரை குத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 25, 26 ஆகியவை மத உரிமைகள் மற்றும் மத நடைமுறைகளை மட்டுமே பாதுகாப்பதாகக் கூறிய நீதிபதி, ‘அப்படிப் பார்த்தால் எந்த சாதியினரும் கோவிலுக்கு உரிமை கோர முடியாது’ எனக் குறிப்பிட்டார்.

“தகவல் சொல்லாமல் வழக்கு”

அதேநேரம், தங்கள் வழக்கில் உண்மைக்கு மாறான தகவல்களை மனுதாரர் வழங்கியுள்ளதாகக் கூறுகிறார் திருநாகேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ராஜ் பாபு.

“கோவிலில் உபயம் செய்வதற்கு ஏதுவாக பொறுப்பு கொடுக்குமாறு கேட்டிருந்தால் பரிசீலித்திருக்கலாம். ஆனால், எந்தவித தகவலும் சொல்லாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர்” என்கிறார்.

அதேநேரம், நன்கொடை பெறுவதில் எந்தவித பிரச்னையும் இல்லை. கோவிலில் 16 உண்டியல்கள் உள்ளன. ஏராளமான கியு.ஆர் கோடு அட்டைகள் உள்ளனர். யார் வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற பிரம்மோற்வ விழாவுக்கு உபயதாரர்கள், பக்தர்கள், ஊர் பெரியவர்கள் ஆகியோரிடம் நன்கொடை பெற்று நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

“நன்கொடை வாங்காமல் எந்த விழாவையும் நடத்த முடியாது. அனைத்துக்கும் கணக்குகள் உள்ளன. இதில் தவறு நடந்தால் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும்” என்கிறார் ராஜ்பாபு.

“அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினால் அவர்களிடம் எங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்போம்” எனக் கூறும் ராஜ்பாபு, “கோவிலில் கருங்கல் மண்டபம் உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளோம். அப்போதெல்லாம் உதவி செய்வதற்கு இவர்கள் வரவில்லை” எனக் கூறினார்.

 திருநாகேஸ்வரர் கோவில்

பட மூலாதாரம், Facebook/Kundrathur Nageswarar temple

அறநிலையத்துறை கூறுவது என்ன?

கோவில் செயல் அலுவலர் சுதாகரிடம் பிபிசி தமிழ் பேசியது.

“இதுவரை உபயதாரராக சேர்க்குமாறு அவர்கள் எந்த மனுவையும் கொடுக்கவில்லை. ஏதேனும் இடங்கள் காலியாக இருந்திருந்தால் மனுவை பரிசீலித்திருப்போம். ஆனால், நேரடியாக நீதிமன்றம் சென்றுவிட்டனர்” எனக் கூறினார்.

உபயதாரர்களையும் நன்கொடையாளர்களையும் கோவில் நிர்வாகம் வரவேற்பதாகக் கூறும் சுதாகர், “யார் வேண்டுமானாலும் நன்கொடை தரலாம். எந்த சாதி வேறுபாடுகளும் இல்லை” என்கிறார்.

கோவிலுக்கு குறிப்பிட்ட சாதியினர் பணம் செலவழித்து விழாக்களை நடத்துவதாகக் கூறும் சுதாகர், “உபயதாரர்களாக அவர்கள் செலவுகளை ஏற்றுக் கொள்கின்றனர். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இதனைச் செய்து வருகின்றனர்” என்கிறார்.

முறைசாரா பரம்பரை அறங்காவலர் திட்டத்தின்கீழ் நாகேஸ்வரம் கிராமத்தில் வசிக்கும் குறிப்பிட்ட சாதியினர் அறங்காவலராக இருக்க வேண்டும் என 1981 ஆம் ஆண்டு சென்னை அறநிலையத்துறை துணை ஆணையர் மூலமாக உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“கோவில்களுக்கு ஒரு குறிப்பிட்ட சாரார் உரிமை கோர முடியாது” என, நாமக்கல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து கோவில் செயல் அலுவலர் சுதாகரிடம் பிபிசி தமிழ் கேட்டது.

“தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களை குறிப்பிட்ட சாதியினர் அறங்காவலர்களாக இருந்து நிர்வாகம் செய்கின்றனர். திருநாகேஸ்வரர் கோவில் வழக்கில் இணை ஆணையர் விசாரணை நடத்தி மனுவை பரிசீலனை செய்வார்” என்று மட்டும் பதில் அளித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU