SOURCE :- BBC NEWS

போப் லியோ XIV (முன்னர் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரீவோஸ்ட்)

பட மூலாதாரம், Getty Images

கத்தோலிக்க திருச்சபையின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதைக் கண்டுபிடிப்பது ஒரு நம்பிக்கையின் மர்மத்தைப் போன்றது என்றொரு பழமொழி உண்டு. அந்த மர்மத்தை திருச்சபை பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து வருகிறது.

தேவாலயம் பல பிரிவுகளாக அல்லது மறைமாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் தங்களுடைய தனித்தனி நிதிக்கணக்குகளைத் தாங்களே நிர்வகிக்கின்றன.

உலகம் முழுவதும் உள்ள 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் திருச்சபையின் மொத்த செல்வத்தின் மதிப்பை கணக்கிடுவது கடினம், அல்லது சாத்தியமற்றது என்று கூட சொல்லலாம்.

ஆனால் அது குறித்து தெரிந்துகொள்ள, கத்தோலிக்க அமைப்பின் மையத்தில் அமைந்துள்ள ஆன்மீகமும் நிர்வாகமும் சார்ந்த அதிகார அமைப்பான வாடிகனின் ‘ஹோலி சீ’ யிலிருந்து தொடங்கலாம்.

தி ஹோலி சீ

திருச்சபை இயல்பாகக் கொண்டுள்ள ரகசியத் தன்மையால், ஹோலி சீயிடம் உள்ள செல்வத்தின் அளவைக் குறித்த ஊகங்கள் பல ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டே வந்துள்ளன.

ஆனால் ஏப்ரல் 21 அன்று மறைந்த போப் பிரான்சிஸ், தனது பதவிக்காலத்தின் தொடக்கத்திலிருந்தே, இந்த நடைமுறையில் ஒரு மாற்றத்தையும், நிதி சார்ந்த விவகாரங்களில் அதிக வெளிப்படைத்தன்மையும் இருக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

2021 ஆம் ஆண்டில், அப்போஸ்தலிக் சீயின் சொத்துக்களை பராமரிக்கும் நிர்வாகம் (APSA) முந்தைய ஆண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டது. இது தற்போது ஆண்டுதோறும் செய்யப்படும் வழக்கமாகி உள்ளது.

1967 ஆம் ஆண்டு அப்போஸ்தலிக் சீயின் சொத்துக்களை பராமரிக்கும் நிர்வாகம் நிறுவப்பட்ட பிறகு, இந்த புள்ளிவிவரங்கள் முதன்முறையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய நிதி ஆதாரங்களைக் காட்டும் படம்: நன்கொடைகள், சுற்றுலா, சொத்துக்கள் மற்றும் முதலீடுகள் (எ.கா. கலாச்சார கலைப்பொருட்கள், தங்கம் மற்றும் வெள்ளி), நிலம் மற்றும் சொத்துக்கள்

அப்போஸ்தலிக் சீயின் சொத்துக்களைப் பராமரிக்கும் நிர்வாகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி, 2023-ல் வாடிகனால் நடத்தப்படும் தேவாலய கிளையின் மொத்த லாபம் 52 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அதன் சொத்துக்கள் சுமார் 8 மில்லியன் டாலர் அதிகரித்துள்ளன என்றும் அறியப்படுகின்றது.

சொத்துக்களின் நிகர மதிப்பு அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால், ரோமில் உள்ள சந்தைகள், கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகள் ஆராய்ச்சி மையம் (MCE) அளித்த தரவின்படி, சமீபத்தில் கணக்கிடப்பட்ட மதிப்பு கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலராக உள்ளது.

வாடிகன் வங்கி என்று அறியப்படும் மத வேலைகளுக்கான நிறுவனம் (IOR) நிர்வகிக்கும் அனைத்து சொத்துக்களையும் இந்த மதிப்பு குறிக்கிறது. எனவே, இதில் பல கட்டிடங்கள் மற்றும் பரவலான நிலங்கள் குறித்த விவரங்கள் சேர்க்கப்படவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயம்

பட மூலாதாரம், Getty Images

அப்போஸ்தலிக் சீயின் சொத்துக்களை பராமரிக்கும் நிர்வாகத்தின் கூற்றுப்படி, 5,000க்கும் மேற்பட்ட சொத்துக்களை நிர்வகித்து திருச்சபை அதில் வருமானம் ஈட்டுகிறது. அதில் ஐந்தில் ஒரு பங்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 84 மில்லியன் டாலர் வருமானம் மற்றும் சுமார் 40 மில்லியன் டாலர் நிகர லாபம் ஏற்படுகிறது என்றும் அப்போஸ்தலிக் சீயின் சொத்துக்களை பராமரிக்கும் நிர்வாகம் கூறுகின்றது.

இந்த அனைத்து புள்ளிவிவரங்களும் வாடிகனின் நிதி அமைப்புடன் தொடர்புடையவை. உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் மற்ற கிளைகளின் கணக்குகள் இதில் சேர்க்கப்படவில்லை.

போப் பிரான்சிஸ்

பட மூலாதாரம், PA Media

கத்தோலிக்க திருச்சபையின் நிதி அமைப்பு பரவலாக இருப்பதாலும், ஒவ்வொரு மறைமாவட்டமும் தன்னுடைய தனிப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை நிர்வகிப்பதாலும், உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் மொத்த செல்வமும் வருமானமும் மிகப் பெரியதாகவும், கணக்கிட முடியாத அளவிலும் இருக்கலாம்.

“முழு கத்தோலிக்க திருச்சபையின் சொத்துக்களை மதிப்பிடுவது நடைமுறையில் சாத்தியமற்றது,” என்று சாவ் பாலோவிலுள்ள பொன்டிஃபிகல் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் (PUC-SP) சமூக அறிவியல் துறையின் பேராசிரியர் பெர்னாண்டோ அல்டெமேயர் ஜூனியர் தெரிவித்தார்.

உலகளவில், திருச்சபையின் பல கிளைகள் 71 முதல் 81 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை கொண்டுள்ளன என்று பாரிஸை தளமாகக் கொண்ட மதங்கள் மற்றும் மதச்சார்பின்மை ஆய்வுக் கூடம் (IREL) கூறுகிறது. அதனால், திருச்சபை உலகின் மிகப்பெரிய நில உரிமையாளர்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

திருச்சபையிடம் உள்ள சொத்துகளில் தேவாலயங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மடங்கள் ஆகியவை அடங்கும்.

திருச்சபை கொண்டுள்ள சொத்துக்களின் உண்மையான மதிப்பை சரியாக கணக்கிட முடியவில்லை என்றாலும், அறிக்கைகளில் கூறப்பட்ட தகவல்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களின் மதிப்பீடுகளை சேர்த்தால், உலகளவில் திருச்சபையின் சொத்து மதிப்பு பில்லியன் டாலர்களில் இருக்கலாம்.

இன்ஸ்டிடியூட் ஃபார் ரிலிஜியன் (IOR)

பட மூலாதாரம், Getty Images

கத்தோலிக்க திருச்சபை கொண்டுள்ள செல்வத்தின் தோற்றம்

கத்தோலிக்க திருச்சபை அதன் சொந்த கேனான் சட்டத்தைப் பின்பற்றியது என்றால், சொத்துக்கள் எப்படி உருவானது? எனும் கேள்வி எழலாம்.

ஏனென்றால், செல்வத்தை குவிப்பதற்கோ அல்லது லாபம் ஈட்டுவதற்கோ திருச்சபை முயற்சி செய்யக் கூடாது என்று இந்த கேனான் விதிமுறை கூறுகிறது.

4ஆம் நூற்றாண்டில், கத்தோலிக்க மதத்தை ரோமானியப் பேரரசின் அதிகாரப்பூர்வ மதமாக அறிவித்த பேரரசர் கான்ஸ்டன்டைன் (272-337 கி.பி.) காலத்தில், கத்தோலிக்க திருச்சபை பொருட்கள் மற்றும் செல்வங்களை சேகரிக்கத் தொடங்கியது என்று நெய் டி சோசா தனது நூலான ‘History of the Church (Ed. Vozes)’ இல் எழுதியுள்ளார்.

அந்த காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் தாழ்மையுடன் வாழ்ந்து, தங்கள் சொந்த வீடுகளிலும் கேடாகம்ப்களிலும் (நிலத்தடி சுரங்கங்கள் அல்லது புதைகுழிகள் கேடாகம்ப் எனப்படுகின்றன . பெரும்பாலும் ரகசியமாக மத வழிபாடுகளை நடத்தவும் இறந்தவர்களை அடக்கம் செய்யவும் பண்டைய கிறிஸ்தவர்கள் அவற்றைப் பயன்படுத்தினர்) ஆராதனை சடங்குகளை நடத்தியதாகவும் வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

“இந்த நிகழ்வுகள் கிறிஸ்தவம் மற்றும் ரோமானியப் பேரரசின் வரலாற்றை மாற்றியது” என்று டி சோசா கூறுகிறார்.

அதனையடுத்து, “ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து, சலுகைகளைப் பெற்று, பல சொத்துக்களின் உரிமையாளராக திருச்சபை வளர்ந்தது.”

அது நாளடைவில், ரோமப் பேரரசின் உயர்மட்ட பிரமுகர்கள் பெற்றிருந்த செல்வத்தை ஒத்த அளவிற்கு திருச்சபைக்கு செல்வம் குவிவதற்கு வழிவகுத்தது.

பேரரசர் கான்ஸ்டன்டைன்

பட மூலாதாரம், Getty Images

பெரும் செல்வம்

கான்ஸ்டன்டைன் மற்றும் ரோமானியப் பேரரசின் பல தலைவர்கள் தங்கம் மற்றும் வெள்ளியை திருச்சபைக்கு நன்கொடையாக அளித்தனர். மேலும், அரண்மனைகள், நிலங்கள், தோட்டங்கள் மற்றும் வெப்ப குளியல்கூடங்களையும் நன்கொடையாக அளித்தனர்.

அப்போதில் இருந்து, திருச்சபைக்கு நன்கொடை வழங்குவதற்கான ஒரு வழிமுறை நிறுவப்பட்டது.

இன்று, விலைமதிப்பற்ற படைப்புகள், ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்கள் கட்டணம் செலுத்தி பார்வையிடும் அருங்காட்சியகங்கள், மேலும் நிதி சந்தையில் முதலீடுகளையும் திருச்சபை கொண்டுள்ளது.

போப் பிரான்சிஸ்

பட மூலாதாரம், Getty Images

கத்தோலிக்க திருச்சபையுடைய அதிகார மையமாக வாடிகன் நகரம் உள்ளது.

வாடிகனின் முழு அதிகாரம் போப்பால் மட்டுமே நிர்வகிக்கப்படுகின்றது. மேலும் “போப்” என்ற பட்டம் ரோம் நகரின் பிஷப்பாக இருக்கும் பாதிரியாரைக் குறிக்கிறது.

போப் லியோ XIV

பட மூலாதாரம், EPA

சுற்றுலாவும் திருச்சபையின் வருமானத்துக்கான மற்றொரு ஆதாரமாக உள்ளது.

  • மத மற்றும் வரலாற்று கட்டிடங்கள்: அப்போஸ்தலிக் அரண்மனை, புனித பேதுரு பேராலயம், பேராலயத்திற்கு அருகிலுள்ள கட்டிடங்கள், டோமுஸ் வாடிகன் (முந்தைய பெயர்: காசா சாண்டா மார்டா)
  • அருங்காட்சியகங்கள் மற்றும் காட்சியகங்கள்: சிஸ்டைன் சேப்பல், ரஃபேல் சேப்பல்ஸ், பினாகோடெகா வாடிகனா, மிஷனரி எத்னாலஜிகல் அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று அருங்காட்சியகம் உட்பட 15 அருங்காட்சியகங்கள்.
  • நூலகங்கள் மற்றும் காப்பகங்கள்: வாடிகன் அப்போஸ்தலிக் நூலகம், அப்போஸ்தலிக் ஆவணக் காப்பகம், மற்றும் வாடிகன் பதிப்பகம்.
  • ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு: வாடிகன் வானொலி, L’Osservatore Romano செய்தித்தாள், வாடிகன் ஊடகம், வாடிகன் தொலைக்காட்சி மையம்.
  • பிற நிறுவனங்கள்: வாடிகன் வங்கி, வாடிகன் கண்காணிப்பகம்
பல கார்டினல்கள்

பட மூலாதாரம், Getty Images

வாடிகனின் முக்கிய சொத்துக்கள்

வாடிகன் தனது எல்லைக்கு வெளியே 12 முக்கிய சொத்துகளைக் கொண்டுள்ளது.

இதில் செயின்ட் ஜான் லேட்டரன் தேவாலயம் , செயின்ட் பால் தேவாலயம் , செயின்ட் மேரி மேஜர் தேவாலயம் , செயின்ட் ஆன் தேவாலயம், திருச்சபையின் உயர் நிர்வாக அலுவலகங்கள் மற்றும் காஸ்டல் காண்டோல்போவில் உள்ள போப்பாண்டவரின் கோடைகால குடியிருப்பு ஆகியவை அடங்கும்.

மேலும் ‘பீட்டர்ஸ் பென்ஸ்’ எனும் அமைப்பின் மூலம், உலகளாவிய தன்னார்வ நன்கொடைகளை வாடிகன் பெறுகிறது. சமூக நலத் திட்டங்கள், வாடிகனின் செயல்பாடுகள், சுற்றுலா மற்றும் அருங்காட்சியக பராமரிப்பு போன்றவற்றுக்கு இந்த நன்கொடைகள் உதவுகின்றன.

9 மே 2025 அன்று வாடிகனில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் போப் லியோ XIV அவர்களால் நடத்தப்பட்ட திருப்பலி.

பட மூலாதாரம், Reuters

திருச்சபையின் வருவாய் ஆதாரங்களில் வாடிகன் அருங்காட்சியகங்கள், சிஸ்டைன் சாப்பல், நினைவு முத்திரைகள் மற்றும் நாணயங்களின் விற்பனை, மேலும் முக்கியமான சொத்துக்களை நிர்வகிக்கும் வாடிகன் வங்கி மற்றும் அப்போஸ்தலிக் சீயின் சொத்துகள் நிர்வாகம் (APSA) போன்ற நிறுவனங்கள் அடங்குகின்றன.

பெனிட்டோ முசோலினி

சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி

பட மூலாதாரம், Getty Images

கத்தோலிக்க திருச்சபை கொண்டுள்ள செல்வத்தின் பெரும்பகுதி இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியிடம் இருந்து வந்தது.

1929ஆம் ஆண்டில், முசோலினி 1.75 பில்லியன் இத்தாலிய லிராவை (அப்போதைய மதிப்பில் சுமார் 91.3 மில்லியன் டாலர்) ஹோலி சீயின் கருவூலத்திற்கு அளித்தார் என இத்தாலிய வரலாற்றாசிரியரும் சாண்ட் எஜிடியோ சமூகத்தின் நிறுவனருமான ஆண்ட்ரியா ரிக்கார்டி கூறுகிறார்.

இது சமரச ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படும் லேட்டரன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக காணப்பட்டது.

1860 முதல் 1870 வரை நடந்த இத்தாலிய ஒருங்கிணைப்பின் போது, அரசால் கைப்பற்றப்பட்ட கத்தோலிக்க திருச்சபையின் சொத்துகளுக்கான இழப்பீடாக இந்த தொகை வழங்கப்பட்டது.

நவீன வாடிகன் அரசை உருவாக்கவும், ஹோலி சீ கட்டிடங்களை அமைக்கவும், வாடிகன் ஊழியர்களுக்கான வீடுகளை வழங்கவும், அந்த நிதியின் சுமார் ஒரு பங்கை போப் பியஸ் XI பயன்படுத்தினார்.

மீதமுள்ள பணம், ஆபத்தை குறைக்கும் வகையில் வெவ்வேறு வகைகளில் முதலீடு செய்யப்பட்டது.

இன்று, அப்போஸ்தலிக் சீயின் சொத்துக்களை பராமரிக்கும் நிர்வாகத்துக்கு இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தில் சொத்துக்கள் உள்ளன.

கட்டிடங்கள் மற்றும் நிலம்

வாடிகனில் உள்ள செயின்ட் பால்ஸ் கதீட்ரல், 2025 ஏப்ரல்

பட மூலாதாரம், Getty Images

தற்போது, சுமார் 1.77 பில்லியன் யூரோ (அல்லது $1.9 பில்லியன்) மதிப்புள்ள முதலீட்டு தொகுதியும், நிலச் சொத்துகளும் இணைந்து, வாடிகனின் நிர்வாக அமைப்பான ரோமன் கியூரியாவை பராமரிக்க தேவையான வருமானத்தை உருவாக்குகின்றன என்று அப்போஸ்தலிக் சீயின் சொத்துக்களை பராமரிக்கும் நிர்வாகம் தெரிவிக்கிறது.

2019 ஆம் ஆண்டில், மூலதனம் மதிப்பிழப்பதை தடுக்கும் ஒரு முறையாக முதலீடு செய்வதைக் கருதினார் போப் பிரான்சிஸ்.

“அதனால் மூலதனம் பராமரிக்கப்படலாம் அல்லது சிறிய வருமான உண்டாகலாம்” என்று அவர் விளக்கினார்.

ரோமில் உள்ள பசிலிக்கா டி சாண்டா மரியா மாகியோரே

பட மூலாதாரம், Getty Images

வாடிகன் அரசால் ஆதரிக்கப்பட்ட போதிலும், ஹோலி சீ தனியாக ஒரு நாடு அல்ல. எனவே இந்த முறை பொருத்தமானது என்று இத்தாலிய செய்தித்தாள் கொரியர் டெல்லா செராவுக்கு ரிக்கார்டி தெரிவித்தார்.

ஹோலி சீ வரி செலுத்துவது இல்லை மேலும் எந்த பொதுக் கடனும் இல்லாமல் உள்ளது என மத நிதி தொடர்பான மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம் (IHEFR-Institute of Advanced Studies in Religious Finance) தெரிவித்துள்ளது.

ஹோலி சீ அதனிடம் உள்ள சொத்துக்களிலிருந்து வருமானம் பெறுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, விசுவாசிகளிடமிருந்து பெறும் நன்கொடைகள் மூலம் ஆதரிக்கப்படுகிறது.

ஆனால், வாடிகனின் ஆண்டு வருவாய் மற்றும் செலவுகள் கணிசமாக குறைவான அளவில் பதிவாகியுள்ளன.

அதன் மொத்த சொத்துக்கள் முன்பு அறிவிக்கப்பட்டதை விட இரு மடங்கு (சுமார் 4 பில்லியன் டாலராக) இருப்பதாக மத நிதி தொடர்பான மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம் கூறுகிறது.

பணக்கார மறைமாவட்டங்கள்

 ரைன் ஆற்றின் கரையில் கொலோன் கதீட்ரல் காணப்படுகிறது

பட மூலாதாரம், Getty Images

ஜெர்மனியில் உள்ள கொலோன் பேராலயம் உலகில் உள்ள பணக்கார தேவாலயங்களில் ஒன்றாகும்.

அதன் வருமானத்தின் பெரும்பகுதி “கிர்சென்ஸ்டூயர்” எனப்படும் வரியால் வருகிறது. இது கத்தோலிக்க திருச்சபை உட்பட, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மத சமூகங்களின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடமிருந்து நேரடியாக வசூலிக்கப்படுகிறது.

2023ல், திருச்சபை இந்த வரியிலிருந்து சுமார் 7.4 பில்லியன் டாலர் தொகையை திரட்டியது. முந்தைய ஆண்டில் பெறப்பட்ட 7.77 பில்லியன் டாலரை விட, அந்த ஆண்டு சுமார் 5% குறைந்துள்ளது என மத நிதி தொடர்பான மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம் (IHEFR) தெரிவித்துள்ளது.

பிஷப் ஃபிரான்ஸ்-பீட்டர் டெபார்ட்ஸ் வான் எல்ஸ்டுக்கான பிஷப் அரண்மனையை கட்டுவதற்கும், பராமரிப்பதற்கும் செலவான தொகை ஐந்து ஆண்டுகளில் 5.7 மில்லியன் டாலரில் இருந்து சுமார் 35 மில்லியன் டாலர் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், ஜெர்மனியின் 27 மறைமாவட்டங்களில் பாதி மறைமாவட்டங்கள் தங்கள் சொத்துக்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளன.

அவற்றில் பத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், 70 ஹோட்டல்கள், சொத்து நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் ஆகியவை அடங்கும்.

அமெரிக்கத் திருச்சபை

வாஷிங்டன் டிசியில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில்.

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் உள்ள திருச்சபை வாடிகனுக்கு பெரும் பங்களிப்பை வழங்குகிறது.

பரந்த சொத்துக்களை அமெரிக்க திருச்சபை கொண்டுள்ளது. அதில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களும் உள்ளன.

உதாரணமாக, இந்தியானாவில் உள்ள நோட்டர் டேம் பல்கலைக்கழகம் (1.76 பில்லியன் டாலர் வருமானம்) மற்றும் வாஷிங்டன் டிசியில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் (1.92 பில்லியன் டாலர் வருமானம்), மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளும் அமெரிக்க திருச்சபையின் கீழ் அடங்கும்.

அங்கு கட்டாய மத வரி கிடையாது.

ஆனால் குறிப்பிடத்தக்க தனிப்பட்ட நன்கொடைகளை திருச்சபை பெறுகிறது.

பிரேசில்: உலகின் மிகப்பெரிய கத்தோலிக்க சமூகம்

பிரேசிலில் உள்ள அபரேசிடாவின் அன்னையின் தேசிய ஆலயம்

பட மூலாதாரம், Getty Images

உலகில் அதிக அளவில் கத்தோலிக்க மக்கள் வசிக்கும் நாடு பிரேசில்.

உலகில் மிகப்பெரியதும், அதிகமாக மக்கள் வருகை தரும் மரியன்னை ஆலயங்களில் இரண்டாவது இடத்திலும் உள்ள அபரேசிடாவின் அன்னை தேசிய தேவாலயத்துக்கு, பிரேசில் புகழ் பெற்றது.

ஆண்டுக்கு 10 மில்லியன் பக்தர்கள் அந்த புனித தலத்துக்கு வருவதாக அபரேசிடா மறைமாவட்டம் கூறுகிறது. இதனால், வெறும் 35,000 மக்கள் வாழும் அந்த நகரத்தில் ஆண்டுதோறும் சுமார் 240 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது.

அபரேசிடா மறைமாவட்டம்

பட மூலாதாரம், Getty Images

பிரேசில் மறைமாவட்டங்கள் திருச்சபையின் விசுவாசிகளிடமிருந்து நன்கொடைகளைப் பெறுகின்றன. அவற்றுக்கு வரி விலக்கும் கிடைக்கிறது.

நிதி சார்ந்த தகவல்கள் ஒருங்கிணைந்து இல்லாவிட்டாலும், தேவாலயங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற பலவற்றை திருச்சபை நிர்வகிக்கிறது.

முழு கத்தோலிக்க திருச்சபையின் உண்மையான செல்வத்தை மதிப்பிடுவது எவ்வளவு கடினம் என்பதை இந்த சிக்கலான சூழ்நிலை எடுத்துக்காட்டுகிறது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC