SOURCE :- BBC NEWS

இன்றைய முக்கியச் செய்திகள் - மே 02, 2025

பட மூலாதாரம், Getty Images

2 மே 2025, 03:27 GMT

இன்றைய (02/005/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறையுடன் இணைந்து எல்லைப் பாதுகாப்புப் படை மேற்கொண்ட நடவடிக்கையில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

ஏற்கெனவே போலீசாருடன் இணைந்து கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி எல்லை பாதுகாப்புப் படை மேற்கொண்ட நடவடிக்கையில், ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருந்ததாகவும் அந்தச் செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை இந்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் எல்லை மாநிலமான பஞ்சாபில் உளவுத் தகவல் அடிப்படையில், போலீசாருடன் இணைந்து எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.

இந்தத் தேடுதல் வேட்டையில் நேற்று இரண்டு வெவ்வேறு இடங்களில் பாகிஸ்தானின் இரு ஆளில்லா விமானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

“பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் ஷாஹர் கலன் கிராமம் அருகே வயல்வெளி ஒன்றில் நேற்று காலை ஆளில்லா விமானம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று அமிர்தசரஸ் மாவட்டத்தில் பைனி ராஜ்புடானா கிராமத்தில் வயல்வெளி ஒன்றில் மற்றொரு ஆளில்லா விமானம் கைப்பற்றப்பட்டது. இதை எல்லை பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கை உறுதி செய்துள்ளது” என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

சென்னையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது, 19 லட்சம் ரூபாய் பறிமுதல்

இந்தியாவில் தற்போது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெருநகர சென்னை காவல்துறையினர் ஆன்லைன் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை மையப்படுத்தி சூதாட்டம் நடைபெறுவதாக சென்னை காவல் ஆணையர் அருணுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடிப்படையாக வைத்து சூதாடியவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சென்னையில் உள்ள யானைகவுனி பகுதியில் இணையதளம் வாயிலாக சூதாட்டம் நடைபெற்றதை போலிசார் கண்டறிந்தனர். இதில் தொடர்புடைய 10 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.19 லட்சம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்” என்று அந்தச் செய்தி கூறுகிறது.

அதோடு, அதே ஐபிஎல் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததாக மேடவாக்கத்தைச் சேர்ந்த ராம் மோகன் (46) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து ரூ.15,450 மதிப்புள்ள 6 நுழைவுச் சீட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

தேர்தல் ஆதாயத்திற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு அதிகரிப்பு என திருமாவளவன் கருத்து

இன்றைய முக்கியச் செய்திகள் - மே 02, 2025

பட மூலாதாரம், Thol Thirumavalavan

மத்திய அமைச்சரவை நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகின்றன.

இந்த நிலையில் ஆதாயம் கருதியே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பே எப்போது நடக்கும் என்று மத்திய அரசு அறிவிக்கவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பு கண்துடைப்பாகவே இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

மேலும், “பாஜக அரசு 2029இல் பதவிக் காலத்தை நிறைவு செய்கிறது. அடுத்த கணக்கெடுப்பு 2031இல் நடைபெறும். ஏற்கெனவே, 2021இல் நடத்த வேண்டிய கணக்கெடுப்பு கொரோனாவால் 2031க்கு தள்ளிப்போயுள்ளது. அப்போது பாஜக ஆட்சியில் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. எனவே, இந்த அறிவிப்பு கண்துடைப்பாகவே இருக்கலாம்.”

“பிகாரில் நடக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் இது பேசுபொருளாக மாறியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பை முன்னிறுத்தி பரப்புரை செய்கிறார். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு வலியுறுத்துகின்றனர். தேர்தல் ஆதாயம் கருதியே இந்த நிலைப்பாட்டை பாஜக அரசு தற்போது அறிவித்துள்ளது. எனினும், முன்பு பாஜக இதுகுறித்து எதிர்நிலைப்பாட்டைக் கொண்டிருந்த நிலையில், தற்போது அது மாறியுள்ளதை வரவேற்கிறோம்” என திருமாவளவன் பேசியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண் ஓட்டுநர்கள் பயன்படுத்தி வந்த பிங்க் ஆட்டோக்கள் பறிமுதல்

இன்றைய முக்கியச் செய்திகள் - மே 02, 2025

பட மூலாதாரம், DT NEXT

தமிழ்நாட்டில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்காக கொண்டு வரப்பட்ட பிங்க் ஆட்டோ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆட்டோக்களை ஆண் ஓட்டுநர்கள் பயன்படுத்தியதால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கடந்த மார்ச் மாதம் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு முதல் கட்டமாக 165 ஆட்டோக்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், “இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மானியமும், வங்கிக் கடன் உதவியும், ஓட்டுநர் பயிற்சியும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெறுபவர்கள் உரிமத்தை இன்னொருவரின் பெயருக்கு மாற்றவோ அல்லது ஆண்கள் இயக்க அனுமதிக்கவோ மாட்டோம் என எழுத்துபூர்வ உத்திரவாதம் வழங்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்று அந்தச் செய்தி கூறுகிறது.

ஆனால், பல இடங்களில் ஆண் ஓட்டுநர்கள் பிங்க் ஆட்டோக்களை இயக்குவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து சமூக நலத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய ஆய்வில் இரண்டு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களை புறக்கணிக்காமல் அவர்களின் உரிமையை உறுதிப்படுத்துவோம் – இலங்கை ஜனாதிபதி

இன்றைய முக்கியச் செய்திகள் - மே 02, 2025

பட மூலாதாரம், ANURAKUMARA DISANAYAKE

“இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை நாங்கள் புறக்கணிக்கப் போவதில்லை. அவர்களின் அரசியல், மொழி மற்றும் பாரம்பரிய காணி உரிமை, சுதந்திரமாக வாழும் உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளையும் நாங்கள் உறுதிப்படுத்துவோம்” என அந்நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்புவில் உள்ள காலி முகத்திடலில் சர்வதேச மே தினத்தையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் பேசிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க “தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இந்த நாட்டை எம்மால் கட்டியெழுப்ப முடியும். மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நாங்கள் நிச்சயம் பாதுகாப்போம். மக்களின் நம்பிக்கை என்ற பாரதூரமான பலம் எம்மிடம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளதாக வீரகேசரி செய்தி கூறுகிறது.

மேலும் அவர் தமிழ் மக்கள் தொடர்பாகப் பேசுகையில், “வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எம்மீது முழுமையான நம்பிக்கை கொண்டு முழு ஆதரவளித்துள்ளார்கள். தமிழ் மக்கள் பாரம்பரியமான அரசியல் தரப்பினரை முழுமையாகப் புறக்கணித்துள்ளார்கள்.

ஆகவே தமிழ் மக்களை நாங்கள் புறக்கணிக்கப் போவதில்லை. அவர்களின் அரசியல், மொழி மற்றும் பாரம்பரிய காணி உரிமை, சுதந்திரமாக வாழும் உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை நாங்கள் உறுதிப்படுத்துவோம். இதைச் செய்யாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. தேசிய நல்லிணக்கம் பொருளாதார மீட்சிக்கான சிறந்த வழிகோலாகும்” என்று கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC