SOURCE :- BBC NEWS

தண்டுபாளையம் கும்பல், குற்றம், கொலை, கோயம்புத்தூர்

  • எழுதியவர், பெ.சிவசுப்பிரமணியம்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மே 2025

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே தோட்டத்துவீட்டில் வசித்து வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட நிலையில், கொங்கு மண்டலத்தில் தனியாக இருக்கும் வீடுகளை குறி வைத்து நடத்தப்படும் தொடர் கொலைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் நடந்த தண்டுபாளையம் பாணி கொலைகளைச் சுட்டிக்காட்டும் முன்னாள் காவல்துறை அதிகாரி, இது ஒரே கும்பலால் நடத்தப்படும் தொடர் குற்றங்களாக இருக்கலாம் என சுட்டிக்காட்டுகிறார்.

தனியாக இருக்கும் விடுகள் இந்த கும்பல்களால் குறிவைக்கப்படுவது எப்படி? காவல்துறையினர் கடந்த காலங்களில் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து காணலாம்.

மூன்று நாட்களாக பேசாததால் வந்த சந்தேகம்

இந்த கொலை தொடர்பான சிவகிரி காவல்நிலைய முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், “ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி, மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் இராமசாமி (வயது 75), இவரது மனைவி பாக்கியம்மாள் (65) இருவரும் தங்களுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தங்கி, விவசாயம் செய்து வந்தனர்.

இவரது மகன் கவிசங்கர், மகள் பானுமதி. கவிசங்கர் திருப்பூர் மாவட்டம், முத்தூரில் இரும்புக் கடை வைத்துள்ளார். மகள் பானுமதி, தனது குடும்பத்துடன் முத்தூர் அருகிலுள்ள சக்கர பாளையம் என்ற ஊரில் வசிக்கிறார்.

அவ்வப்போது பெற்றோருடன் செல்போனில் பேசும் கவிசங்கர், கடந்த திங்கள்கிழமை காலை பெற்றோரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன்பிறகு, அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தபோது யாரும் செல்போனை எடுக்கவில்லை.

மூன்று நாள்களாக செல்போனை பெற்றோர் எடுக்காததால் சந்தேகம் அடைந்த கவிசங்கர், இரவு எட்டு மணிக்கு அவரது உறவினர் ஒருவரை அனுப்பியுள்ளார். தோட்டத்து வீட்டுக்குச் சென்றபோது, வீட்டுக்கு வெளியே பாக்கியம்மாளும், வீட்டின் உள்ளே ராமசாமியும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரிந்துள்ளது. மூன்று நாள்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டதால், உடல்கள் அழுகிய நிலையிலிருந்தன.”

பின்னர் கவிசங்கர், இதுகுறித்து சிவகிரி போலீசில் புகார் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இராமசாமி, பாக்கியம்மாள் இருவரின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உடற்கூறு ஆய்வுக்காகப் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையிலான போலீசார் நிகழ்விடத்தில் மேற்கொண்ட விசாரணையில், பாக்கியம்மாள் அணிந்திருந்த ஏழு பவுன் (சவரன்) தாலிக்கொடி, நான்கு பவுன் கை வளையல்கள், பீரோவிலிருந்த 1.50 லட்சம் ரூபாய் கொள்ளை போனதை உறுதி செய்ததாக கூறுகின்றனர்.

இந்த கொலை நடந்த இடத்திற்கு பிபிசி தமிழ் நேரடியாக சென்று ஆராய்ந்த போது, கொலை நடந்த வீடு மக்கள் நடமாட்டமுள்ள சாலையிலிருந்து ஒதுக்குப்புறமாக உள்ளது. விளக்கேத்தி, மோலபாளையம் நால்ரோடு என்ற இரண்டு ஊர்களுக்கும் இடையே கீழ் பவானி பாசனக் கால்வாய் உள்ளது.

இந்த கால்வாய் பாசனக்கரையில் உள்ள சாலையில், இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மேகரையான் தோட்டம் என்ற இடத்தில் தான், இராமசாமி தனது விவசாய நிலத்தில் வீடு கட்டியுள்ளார். இதன் மூலம் கிட்டத்தட்ட ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில் முதியவர்கள் வசித்த வீடு இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

முதலில் நாய், பின்னர் தம்பதி – சதித்திட்டம்

தண்டுபாளையம் கும்பல், குற்றம், கொலை, கோயம்புத்தூர்

பட மூலாதாரம், Getty Images

இராமசாமியின் வீட்டுக்கு பக்கத்தில் வேறு வீடுகள் இல்லை. சிலர், இந்த வாய்க்கால் கரையை ஒட்டி அமைந்துள்ள தங்களது பண்ணைக்குச் செல்லவே இந்தப் பாதையை பயன்படுத்துகின்றனர். வெளியாட்கள் யாருமே இந்தப் பக்கம் வர வேண்டிய தேவையும், வாய்ப்பும் இல்லை.

இராமசாமி வீட்டில் காவலுக்கு ஒரு நாய் வைத்திருந்துள்ளார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன், இரவில் எதையோ சாப்பிட்டுள்ளது. ஒவ்வாமையால், பகலில் வாந்தி எடுத்தபடியே, தென்னந்தோப்புக்குள் சுற்றிக்கொண்டே இருந்தது, மாலையில் இறந்தது என்பதையும் முதிய தம்பதியின் மகன் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

நாய் இறந்ததால் புதிய நாய்க்குட்டி வாங்க வேண்டுமென தனது பெற்றோர் தன்னிடம் கூறியதாகவும் கவிசங்கர் கூறியுள்ளார்.

இதையெல்லாம் ஆய்வு செய்த போலீசார், ‘கொள்ளையர்கள் பல நாள்கள் முன்பாகவே இந்தப் பகுதிக்கு வந்துள்ளனர். திட்டமிட்டு, முதலில் காவல் நாய்க்கும் விஷம் வைத்துக் கொன்றுள்ளனர். பிறகு, தனியாக இருந்த இராமசாமி-பாக்கியம்மாள் இருவரையும் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்’ என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஈரோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகாநாதன் தலைமையில் எட்டு தனிப்படைகள் அமைத்து, விசாரணையை வேகப்படுத்தியுள்ளதாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா கூறியுள்ளார்.

‘வேட்டை சமூகக் கொள்ளையர்கள்’

தண்டுபாளையம் கும்பல், குற்றம், கொலை, கோயம்புத்தூர்

பட மூலாதாரம், Getty Images

இதற்கு முன், காங்கேயம், சென்னிமலை பகுதியில் நடந்த ஐந்து கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என 12 பேரை, 2024, அக்டோபர் மாதம், பெருந்துறை துணை காவல் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்திருந்தனர்.

இதுகுறித்துப் பேசிய துணை காவல் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், “இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் பகல் நேரங்களில், எல்லோருமே காட்டுப்பகுதிகளுக்கு முயல், கீறி, அணில், வேட்டைக்காகச் செல்வார்கள். சில குழுவினர், அம்மிக்கல், ஆட்டுக்கல் கொத்துப் போடுவதற்காக ஊர் பகுதிகளுக்குச் செல்வர். பெண்கள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளைப் பொறுக்குவதற்காகக் கிராமப்புறங்களுக்குச் செல்வர்.

இந்த குழுவினர் பகலில், தனியாக இருக்கும் வீடுகளைக் கண்காணித்து, இரவு இரண்டு மணிக்கு மேல், அதிகாலை நான்கு மணிக்குள் வீட்டிலிருப்பவர்களைக் கொலை, செய்து கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, கூடலூர் பகுதிகளில் தங்கியிருக்கும் இவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

எல்லோருமே நெருங்கிய உறவினர்கள், தமிழ்நாடு முழுவதும் சென்று தலையில், தாக்கி கொலை செய்துவிட்டு, கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். இந்தக் குழுவைச் சேர்ந்த சிலர், கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும், வெளியே உள்ளவர் இந்த வேலைகளைத் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இனி இதுபோன்ற கொள்ளைகள் நடக்காது” எனக் கூறியிருந்தார்.

ஆனால் இதற்கு முரணாக கடந்த 2024, நவம்பர் 28இல், திருப்பூர் மாவட்டம் அவினாசி பாளையம் காவல் நிலைய எல்லையிலுள்ள சேமலைக் கவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி (வயது 78), அவரது மனைவி அலமேலு (75), மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தனர்.

250க்கும் அதிகமான சிசிடிவி கேமரா பதிவுகளை, கைப்பற்றி நான்கு மாதங்களாக விசாரணை மேற்கொண்டும், எந்த முன்னேற்றமும் இல்லாததால், கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில்தான், சிவகிரி காவல்நிலைய எல்லையில் ஓர் இரட்டைக் கொலை நடந்துள்ளது.

2016 வரை அச்சுறுத்திய தண்டுபாளையம் கும்பல்

தண்டுபாளையம் கும்பல், குற்றம், கொலை, கோயம்புத்தூர்

பட மூலாதாரம், Getty Images

இதுபோலவே, 2000-த்திலிருந்து 2016வரை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஒரே பாணியிலான பல கொலை நிகழ்வுகள் நடந்துள்ளன. இதுபோல நூற்றுக்கும் அதிகமான கொலை வழக்குகள் கண்டுபிடிக்கப்படாமலே உள்ளன.

இந்த கொலைகளில் கர்நாடக மாநிலம் தண்டுபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த கொள்ளைக் குழுவினர்தான் ஈடுபட்டு வருகின்றனர் என்பதைக் கண்டுபிடித்து, அதைத் தொடராமல் நிறுத்தக் காரணமாக இருந்தவர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனிகுமார்.

காவல் கண்காணிப்பாளராக பணி ஓய்வு பெற்று மதுரையில் வசித்துவரும் அவர் பிபிசி தமிழிடம் பேசும்போது, “அந்தக் காலகட்டத்தில், தண்டுபாளையம் டீம் தமிழ்நாட்டில் பல இடங்களில் கைவரிசை காட்டியது. திண்டுக்கல்லில் மூன்று, நெல்லையில் மூன்று, சென்னை புறநகர்ப் பகுதிகளில் நான்கு கொலைகள் எனத் தொடர்ச்சியாக நடந்து வந்தன.” என்றார்.

“அதுமட்டுமின்றி கன்னியாகுமரி, தூத்துக்குடியிலிருந்து ஓசூர் வரை இப்படி பல கொலைகள், எப்படி ஒரே மாதிரியான கொலைகள் நடந்திருக்க முடியும் என்று குழம்பினேன். அதில் ஒரு விஷயம் புலப்பட்டது. இந்த நிகழ்வுகள் எல்லாமே ரயில் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள்ளேயே நடந்துள்ளன.”

“தருமபுரி இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் உள்ளிட்ட என்னுடைய டீமை அழைத்து பேசினேன். அப்போதுதான் கர்நாடக மாநிலத்தில் தண்டுபாளையம் என்ற ஊரைச் சேர்ந்த கொள்ளைக் குழுவினர் இதுபோன்ற கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தெரிந்தது.” என்று அவர் விவரிக்கிறார்.

கர்நாடகா, ஆந்திராவில் நூற்றுக்கணக்கான கொலை, கொள்ளை சம்பவங்களில், தண்டுபாளையம் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பல ஆண்டுகளாக வெளியே தெரியாமல் இருந்த இந்தக் குழுவினரை, கர்நாடக காவல்துறையின் உதவி ஆணையர் ஜலபதி என்பவர்தான் கண்டுபிடித்து, விசாரித்து, பலருக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தார் என்றும், அவரிடமிருந்து பல தரவுகளையும், ஆதாரங்களையும் பெற்றோம் என்கிறார் பழனிகுமார்.

சனி, ஞாயிறு கொலைக்கு விடுமுறை

தண்டுபாளையம் கும்பல், குற்றம், கொலை, கோயம்புத்தூர்

தண்டுபாளையம் கொள்ளைக் குழுவினர் குறித்து விவரித்த பழனிகுமார், “அவர்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டவர்கள். ஒரு குழு, ஒரு மாதத்தில், இரண்டு கொலை செய்வார்கள், கொலை நடக்கும் இடத்தில் இந்தக் குழுவைச் சேர்ந்த ஆண், பெண் அனைவருமே இருப்பார்கள். இவர்களுக்குள் உறவு முறை கிடையாது. ரயில் நிலையங்களை ஒட்டியே ஷெட் போட்டுத் தங்குவர்.

இந்த குழுவினர் கொலை செய்யும் ஆண் அல்லது பெண் அணிந்திருக்கும் நகைகளைத் தவிர வேறு பொருள்களை எடுக்க மாட்டார்கள். கொள்ளையடிப்பதை விடவும், கொலை செய்வதிலேயே விருப்பம் கொண்டவர்கள். இந்த டீம் செய்யும் கொலைகள் எல்லாமே, காலை எட்டு மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணிக்கு உள்ளாக முடித்து விடுவார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொலை செய்ய மாட்டார்கள் என்பதெல்லாம் தெரிந்துகொண்டோம்.” என்றார்.

“தண்டுபாளையம் கொள்ளை கும்பல் கொள்ளை வேலைக்குப் போகும்போது, செல்போன் பயன்படுத்த மாட்டார்கள் என்பதும் ஜலபதி மூலமாக தெரிந்தது” என்றும் அவர் கூறினார்.

“தண்டுபாளையம் டீம், தமிழ்நாட்டில் 08.08.2016இல், செய்ததுதான் கடைசி கொலை. இந்தக் கொலை சென்னை, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் நடந்தது. அதற்குப் பிறகு, தண்டுபாளையம் கொள்ளைக் கும்பல் தமிழ்நாட்டுக்குள் வரவில்லை” என்று குறிப்பிடுகிறார் பழனிகுமார்.

‘அமாவாசை கொலைகள்’

தண்டுபாளையம் கும்பல், குற்றம், கொலை, கோயம்புத்தூர்

பட மூலாதாரம், Getty Images

“இப்போது கொங்கு மண்டலத்தில் நடக்கும் கொலைகளை பார்க்கும்போது, திருப்பூரை மையமாக வைத்தே இந்தக் கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன. திருப்பூர் பல வட இந்திய மக்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கின்ற ஊர். இங்கு வேலை செய்வது போலக் காட்டிக் கொண்டு, பலர் வேலை செய்யாமல் தங்கி இருக்க வாய்ப்புள்ளது” என்கிறார்.

இப்போது கொங்கு மண்டலத்தில் நடக்கும் கொலைகள் அனைத்தும் இரவு நேரத்தில் நடக்கிறன என்பதையும், அமாவாசைக்கு முந்தைய அல்லது பிந்தைய இரு நாள்களுக்குள் இரவுகளில் மட்டுமே நடக்கிறது என்பதையும் குறிப்பிடும் பழனிகுமார், தமது அனுபவத்திலிருந்து இத்தகைய கொலைகளை ஒரே கும்பல் செய்திருக்க வாய்ப்புள்ளது என்ற அனுமானத்திற்கு தான் வருவதாகக் கூறினார்.

“இந்த கொலை, கொள்ளை வழக்குகளிலும் தேவையான வசதிகளை உயர் அதிகாரிகள் செய்து கொடுக்கவேண்டும். ஒவ்வொரு காவல் நிலைய எல்லைகளிலும், வாகனச் சோதனையை கடுமையாக்கினாலே குற்றங்கள் வெகுவாகக் குறையும்” என்கிறார் பழனிகுமார்.

கொலைகளைத் தடுக்க நடவடிக்கை என்ன?

ஈரோடு சிவகிரி இரட்டைக் கொலை சம்பவம் அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கும் வழி வகுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி கே பழனிசாமி தமது எக்ஸ் வலைத்தள பதிவில், 2022ம் ஆண்டுக்குப் பின் நடந்த 5 கொலைச் சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார். இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை “தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்” அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

இதே போன்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும், 50 கிலோ மீட்டர் சுற்றளவில் 3 கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். ஒட்டு மொத்த கொலை வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.

இன்று (மே 3) காலை, மூன்று மாவட்டத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள 250 காவலர்களைக் கொண்டு, பெருந்துறை துணைக் கோட்டத்திலுள்ள தனித்தனிப் பண்ணை வீடுகளில் குடியிருப்போர் பற்றிய விவரங்களைச் சேகரித்து, உள்ளூர் காவலர்கள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை பிடிக்கும் அதே நேரத்தில் இனி இது போன்ற சம்பவம் நிகழாமல் தடுக்கவும் காவல்துறை முனைப்புடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC