SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
பொதுவாக, மனிதக் குடியிருப்புகளுக்கு நடுவே இருக்கக்கூடிய உயிர்ச்சூழல் மிக்க ஒரு சூழலியல் அமைப்பின் குறியீடுகளாக பல்லிகள் திகழ்கின்றன.
வீடுகள் உள்பட மனித கட்டுமானங்களில் அதிகமாக பூச்சிகள் பெருகிவிடாமல் கட்டுப்படுத்துவதில் அவற்றின் பங்கு அளப்பரியது.
வீட்டுச் சுவர்களில் ஒட்டிக்கொண்டு பூச்சிகளை வேட்டையாடும் அழையா விருந்தாளிகளான இந்தப் பல்லிகளின் வால் வெட்டப்பட்டால்கூட, அது மீண்டும் முழுதாக வளர்ந்து விடுவதைப் பார்த்து நம்மில் பலரும் வியந்திருப்போம்.
ஆனால், பல்லிகளே தங்களது வாலை துண்டித்து விடுவதுண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அவைதம் உடலின் ஒரு பாகத்தைத் தாமே இழப்பது ஏன்? அந்த உறுப்பு மீண்டும் வளர்வது எப்படி? இதன் அறிவியல் பின்னணியை இங்கு விரிவாகப் பார்ப்போம்.
பல்லிகளின் வாழ்வியல்
பல்லிகளில் மரப் பல்லி, பாறைப் பல்லி எனப் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் வீடுகளில் காணப்படும், நாம் வழக்கமாகப் பார்க்கும் பல்லியினம்.
மனித வாழிடங்களுக்குத் தங்களை திறம்பட தகவமைத்துக் கொண்ட ஊர்வனவற்றில் அவையும் ஒன்று.
குளிர் ரத்தப் பிராணிகளான பல்லிகள், பொதுவாகக் கதகதப்பான சுவர்கள், கூரைகள், மூலைகளை விரும்புகின்றன. பெரும்பாலும் இரவு நேரங்களில் பூச்சிகளை வேட்டையாடுவதற்காக வெளியே வருகின்றன. கொசுக்கள், அந்துப்பூச்சிகள், ஈக்கள் உள்படப் பல்வேறு பூச்சிகளை உணவுக்காக இவை வேட்டையாடுகின்றன.
மனித வாழ்விடங்களுக்குத் தகவமைத்துக் கொண்ட அவை, உணவுச் சங்கிலியில் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பட மூலாதாரம், Getty Images
பல்லிகள் பயன்படுத்தும் தந்திர யுக்தி
செயற்கை ஒளியால் ஈர்க்கப்படும் பூச்சிகளை வேட்டையாடுவதற்காக இரவு நேரங்களில் சுவர்களில் மின் விளக்குகளுக்கு அருகில் பல்லிகள் இருப்பதைப் பல முறை பார்த்திருப்போம்.
சுவர்களில் ஒட்டிக்கொண்டு நகரும் திறன், உருமறைப்பு, வேகம் ஆகிய திறன்களைக் கொண்ட அவை, ஆபத்து ஏற்படும்போது, தப்புவது சாத்தியமற்ற சூழ்நிலைகளில் தங்களைத் தற்காத்துக் கொள்ள வியக்கத்தக்க ஒரு தந்திரத்தைப் பயன்படுத்துகின்றன.
“பொதுவாக வேட்டையாடி விலங்கு ஏதேனும் ஒன்றால் தனக்கு அபாயம் நேரும் சூழல்களில், பிற பல்லிகளுடன் சண்டை ஏற்படும் நேரங்களில் என உயிருக்கு ஆபத்தான நிலைமை வரும்போது பல்லிகள் தங்களது வாலை தாமாகவே துண்டித்துக் கொள்கின்றன,” என்கிறார் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தைச் சேர்ந்த உயிரியலாளர் முனைவர் தணிகைவேல்.
இந்தச் செயல்முறை ‘ஆட்டோடோமி’ என்று அழைக்கப்படுவதாக பல்லிகள் தொடர்பான ஊர்வனவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, ‘தனது உடலுறுப்பைத் தானே துண்டித்துக்கொள்ளும் செயல்முறை’ என்பதே அதன் பொருள்.
பட மூலாதாரம், Getty Images
“ஆபத்து நேரும்போது தனது உடலுறுப்பான வால் பல்லிகளின் ஒரு திசைதிருப்பும் கருவியாகச் செயல்படுகிறது. துண்டிக்கப்பட்டவுடன் வால் சில நிமிடங்களுக்கு இடைவிடாமல் துடித்துக்கொண்டே இருக்கும்.
அது வேட்டையாடி உயிரினத்தின் அல்லது தன்னைத் தாக்க வரும் எதிரியின் கவனத்தை திசைதிருப்பும். அந்த நேரத்தில் பல்லி அங்கிருந்து தப்பிவிடுகிறது” என்று விளக்கினார் முனைவர் தணிகைவேல்.
அதுமட்டுமின்றி, “பல்லிகள் தமது வாலில் அதிக புரதம் மற்றும் கொழுப்புச் சத்துகளை சேமித்து வைக்கின்றன. இதனால், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சூழலில் தமது வாலை தாமே துண்டித்துச் சாப்பிடுவது அல்லது வேறு பல்லி ஒன்றைத் தாக்கி வாலைத் துண்டித்துச் சாப்பிடுவது ஆகியவற்றின் மூலம் அதை உணவாகவும் உட்கொள்கின்றன,” என்று அவர் விளக்கினார்.
வால் வெட்டப்பட்ட பல்லியை நன்கு அவதானித்துப் பார்த்தால், அந்தப் பகுதி ஏதோ உடைந்த பாகத்தைப் போலத் தோற்றமளிப்பதை அறியலாம். அந்த உறுப்பு மீண்டும் புதியது போல வளரக்கூடிய திறன் கொண்டவை என்பதால் அதை இழப்பதன் மூலம் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் யுக்தியை பல்லிகள் பயன்படுத்துகின்றன.
பல்லியின் உடலமைப்பு இந்தத் தந்திர யுக்தியைச் சிறப்பாகப் பயன்படுத்த ஏதுவான வகையிலான தகவமைப்பை அடைந்துள்ளதாகக் கூறுகிறார் அவர்.
“அவற்றின் வால் பகுதி தொடக்கம் முதல் நுனி வரைக்கும், ஒரு சங்கிலித் தொடரைப் போல, எளிதில் முறிவுறக்கூடிய தன்மையைக் கொண்ட அமைப்புகளைக் கொண்டுள்ளன. வால் அமைப்பு, துண்டிக்கப்பட்டாலும் உயிருக்கு ஆபத்தான காயம் ஏற்படாத வகையில் இருக்கும்.”
பட மூலாதாரம், Getty Images
பல்லிகளின் தனித்துவம் வாய்ந்த உடலமைப்பு
கடந்த 2016ஆம் ஆண்டு பயாலஜி, மெடிசின் & நேச்சுரல் பிராடக்ட் கெமிஸ்ட்ரி என்ற ஆய்விதழில் வெளியான வீட்டுப் பல்லிகள் தொடர்பான ஓர் ஆய்வு, அவற்றின் இந்த வால் துண்டித்தல் செயல்முறையுடைய தனித்துவத்தை விரிவாக விளக்குகிறது.
அந்த ஆய்வின்படி, வேட்டையாடிகளின் அச்சுறுத்தல், திடீர் இடையூறுகள் ஆகியவற்றுக்கு உள்ளாகும்போது இந்த வால் துண்டிப்பு செயல்முறையை பல்லிகள் மேற்கொள்கின்றன.
ஆனால், கதை அத்துடன் முடிந்துவிடுவதில்லை. அவற்றின் தனித்தன்மை வாய்ந்த மீட்டுருவாக்கம்தான் ஆய்வாளர்களைப் பல்லாண்டுக் காலமாக வியப்பில் ஆழ்த்தி வந்துள்ளது.
இந்த ஆய்வின்படி, அந்த மீட்டுருவாக்கச் செயல்முறை மூன்று கட்டங்களாக நடக்கிறது. “முதல் கட்டமாக, காயம் விரைவாகக் குணமடைகிறது. இரண்டாம் கட்டமாக, துண்டிக்கப்பட்ட இடத்தில் பிளாஸ்டெமா எனப்படும் சிறப்பு செல்களின் தொகுப்பு தோன்றுகிறது. இறுதியாக இந்த செல்கள் படிப்படியாக வளர்ந்து புதிய வாலாக உருவெடுக்கிறது.”
ஆனால், “வெட்டப்பட்ட அசல் வால் போலவே அடுத்ததாக மீண்டும் வளரும் வால் இருக்காது” என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
பல்லியின் முதன்மையான வாலில் “வால் எலும்புகள், அவற்றின் ஊடாகச் செல்லும் தண்டுவடம், தசை அடுக்குகள், கொழுப்புத் திசுக்கள், ரத்த நாளங்கள், நரம்புகள் இருக்கும். இவையனைத்தும் இணைந்து பல்லிக்கு இயக்கச் சமநிலை மற்றும் வலிமையை வழங்குகின்றன.”
இந்த அற்புதமான திறன், பல்லிகளுக்கு உடனடி ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகின்றன. இருந்தாலும், தனது வாலை இழந்த பிறகு மீண்டும் வளரும் வால் வெளித் தோற்றத்திற்கு ஒன்று போலத் தோன்றினாலும் அசலில் இருந்து பல வகைகளில் வேறுபடுவதாக ஆய்வு கூறுகிறது.
“துண்டிக்கப்பட்ட பிறகு வளரும் வாலில், எலும்புகளுக்குப் பதிலாக குருத்தெலும்பால் ஆன ஒரு நீண்ட குழாய் அமைப்புதான் இருக்கும். மேலும் தண்டுவடம், நரம்பு செல்கள் இல்லாமல், எளிமையான நரம்புத் திசுக்களைக் கொண்டிருக்கும். புதிய வாலில் உள்ள தசைகளும்கூட அசலில் இருப்பதைவிடக் குறைவான ஒழுங்கமைப்பைக் கொண்டிருக்கும்.”
மேலும், எபென்டைமல் அடுக்கு எனப்படும் தண்டுவடத்தின் ஒரு பகுதி பல்லியின் உடலில் அப்படியே இருந்தால்தான் இந்த வால் மீட்டுருவாக்கம் சாத்தியமாகும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக அந்த ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
வால் மீட்டுருவாக்கம் எத்தனை முறை சாத்தியம்?
பல்லி தனது வாலை இழப்பதால், அதன் இயக்கவியல், தப்பிக்கும் நடத்தை ஆகியவற்றில் தாக்கத்தைச் சந்திப்பதாக சிக்காகோ பல்கலைக் கழகத்தின் ஆய்விதழில் 2013ஆம் ஆண்டு வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது.
இருப்பினும், இந்தச் செயல்முறைக்குக் குறிப்பிட்டு எவ்வித எண்ணிக்கை கட்டுப்பாடும் இல்லை என்று கூறுகிறார் தணிகைவேல்.
“எத்தனை முறை அபாயங்களை எதிர்கொண்டாலும், அவைதம் வால் துண்டிப்புச் செயல்முறையை மேற்கொள்ளவே செய்கின்றன. அது, பல்லியின் உடல் ஆரோக்கியம், சூழ்நிலை ஆகியவற்றைப் பொருத்தது” என்கிறார் அவர்.
வால் எத்தனை முறை துண்டிக்கப்பட்டாலும் மீண்டும் வளரும் என்றாலும், “காயம் குணமடைதல், ஊட்டச்சத்துப் பயன்பாடு, திசு வேறுபாடு ஆகியவையும் அடுத்தடுத்த முறைகளில் தாக்கம் செலுத்துவதாக” சிக்காகோ பல்கலைக் கழக ஆய்விதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, “மீண்டும் வளரும் வால், அளவு, வடிவம், செயல்பாடு உள்படப் பல வழிகளில் வேறுபட்டிருக்கும். இதுவொரு தப்பிப் பிழைக்கும் யுக்தி என்றாலும், அவை உடலியல் ரீதியான அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. மிக முக்கியமாக வால் மீண்டும் வளர்வதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.
அதற்காக மொத்த உடல் வளர்ச்சி, இனப்பெருக்கம், நோயெதிர்ப்புத் திறன் ஆகியவற்றுக்கான தேவையில் இருந்து இந்தச் செயல்முறைக்குத் தனது ஆற்றலை திசை திருப்ப வேண்டியுள்ளது. அதோடு, வால் மீண்டும் வளர்வதற்கு ஆகும் காலகட்டத்திற்குள் வேட்டையாடிகளை எதிர்கொள்ளும் திறன் குறைவாக இருப்பதால் எளிதில் வேட்டையாடப்படவும் வாய்ப்புகள் உள்ளன.”
மேலும் அவை, “வேகம் குறைவது, சுவர்கள் அல்லது மரங்களில் ஏறும்போது சமநிலையை இழப்பது ஆகிய தாக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதன் காரணமாக, காடுகளில் வாழக் கூடிய, அடிக்கடி வாலை இழக்கும் பல்லிகளுக்கு ஆயுட்காலமும் குறைய வாய்ப்புண்டு.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU







