SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Universidade de York
- எழுதியவர், அலெக்ஸ் மோஸ் மற்றும் விக்டோரியா கில்
- பதவி, பிபிசி நியூஸ்
-
3 மே 2025, 03:48 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்
ரோமானிய கிளாடியேட்டர் ஒருவரின் எலும்புக்கூட்டில் காணப்பட்ட பல் தடங்கள், சிங்கத்துக்கும் ஒரு மனிதனுக்கும் சண்டை நடந்ததை உறுதிப்படுத்தும் முதல் தொல்லியல் ஆதாரங்கள் ஆகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டனின் யார்க் பகுதியில் உள்ள ட்ரிஃப்பீல்டு டெரஸ்-இல், 2004ஆம் ஆண்டு நடந்த அகழ்வாய்வில் இந்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த எலும்புக்கூட்டில் தடய ஆய்வு செய்யப்பட்டபோது, அந்த இளைஞனின் இடுப்பு பகுதியில் பல் தடங்களும், சேதங்களும் இருந்தன. அவை ஒரு சிங்கத்தால் ஏற்படுத்தப்பட்டதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்த ஆய்வை மேற்கொண்ட தடயவியல் நிபுணரான பேராசிரியர் டிம் தாம்ப்ஸன், சிங்கம், புலி போன்றவற்றுடன் கிளாடியேட்டர்கள் சண்டையிட்டதற்கான முதல் ‘நேரடி ஆதாரம்’ இதுதான் என்றார்.

“ரோமானிய கிளாடியேட்டர்களின் சண்டையில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டது பற்றிய நமது புரிதல் பெரும்பாலும் வரலாற்று நூல்கள் மற்றும் கலைப் படைப்புகள் மூலமாகப் பெறப்பட்டவையே,” என்கிறார் அவர்.
“இந்தக் கண்டுபிடிப்புதான் இப்படிப்பட்ட விஷயங்கள் ரோமானிய வரலாற்றில் நடைபெற்றன என்பதற்கான முதல் நேரடி ஆதாரம்,” என்று கூறிய டிம், “இந்தப் பகுதியில் ரோமானிய பொழுதுபோக்கு கலை எப்படி இருந்தது என்று நாம் பார்க்கும் பார்வையை இது மாற்றும்,” என்றார்.
3டி ஸ்கேன் மூலம் உறுதி

நிபுணர்கள் இந்தக் காயங்களை ஆய்வு செய்ய 3டி ஸ்கேன் உள்ளிட்ட பல புதிய தடயவியல் முறைகளைப் பயன்படுத்தியதில் அந்த விலங்கு மனிதனை இடுப்பு பகுதியில் கடித்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.
“அந்த மனிதன் இறக்கும் சமயத்தில் அந்த விலங்கு அவரைக் கடித்திருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தோம்,” என்கிறார் அயர்லாந்து மேனூத் பல்கலைக்கழத்தின் பேராசிரியர் டிம் தாம்ப்ஸன்.
“அதனால் இறப்பிற்குப் பின் அவரை உண்பதற்காக அந்த மிருகம் முயற்சி செய்யவில்லை; அது கடித்ததுதான் இறப்புக்கே காரணமாக இருந்தது,” என்று விளக்கம் தருகிறார் டிம் தாம்ப்ஸன்.
அந்தக் காயத்தை ஸ்கேன் செய்தது மட்டுமல்லாமல், லண்டன் மிருகக்காட்சிசாலையில் இருக்கும் சிங்கம், புலி போன்றவற்றின் பல் தடங்களோடு அதன் அளவு மற்றும் வடிவத்தை ஒப்பிட்டுப் பார்த்தனர்.
“இந்த நபரின் உடலில் இருந்த பல் தடங்களைப் பார்த்தால் அவை சிங்கத்தின் பல்தடங்களோடு பொருந்திப் போகின்றன,” என்று பிபிசி நியூஸிடம் தாம்ப்ஸன் தெரிவித்தார்.
அது கடித்த இடம், அந்த கிளாடியேட்டர் எப்படிப்பட்ட சூழலில் மரணத்தைத் தழுவியிருக்கலாம் என்று முக்கியமான தடயங்களை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
அந்த எலும்புக்கூடு, 26ல் இருந்து 35 வயதிற்குட்பட்ட மனிதனுடையது. வேறு இரு சடலங்களுடன் அந்த மனிதர் புதைக்கப்படிருந்தார். அந்த சடங்களின் மீது குதிரையின் எலும்புகளும் காணப்பட்டன.
முந்தைய ஆய்வு அந்த நபர் ஒரு ‘Bestiarius’ – அதாவது காட்டு விலங்குகளுடன் சண்டை போடும் ஒரு கிளாடியேட்டர் – எனக் குறித்தன.
யார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மாலின் ஹோல்ஸ்ட், கடந்த முப்பதாண்டுகளாக எலும்புக்கூடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தாலும், இதற்கு முன் தான் ‘இப்படிப்பட்ட பல்தடங்களைப் போல எதையும் பார்த்ததில்லை’ என்று குறிப்பிடுகிறார்.
“குறுகிய மற்றும் கடினமான வாழ்வின்’ பாதையை இந்த எச்சங்கள் வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
”கடும் உடற்பயிற்சி செய்ததன் அந்த மனிதருக்கு மூலம் வலிமையான தசைகள் இருந்திருக்கும் என்பதையும், கடுமையான வேலை மற்றும் தொடர் சண்டைகளின் காரணமாக தோள் மற்றும் முதுகெலும்பில் காயங்கள் இருந்ததற்கான அறிகுறிகளையும் அந்த எலும்புகள் காட்டுகின்றன” என ஹோல்ஸ்ட் கூறுகிறார்.
யார்ஜ் ஆஸ்டியோஆர்க்கியாலஜியின் (அகழ்வாய்வில் கிடைக்கும் மனித எலும்புகளை ஆய்வு செய்வது) இயக்குநருமான ஹோல்ஸ்ட், “இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. ஏனெனில் இதன் மூலம் கிளாடியேட்டர்கள் அவர்கள் வாழும் காலகட்டத்தில் எப்படி இருந்தார்கள் என்பது பற்றிய ஒரு தெளிவான வரைபடத்தை தெரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம்,” என்றார்.
‘ரோமானிய கொலாசியத்தில் இருந்து வெகு தூரத்தில்…’

PLoS One என்ற கல்விசார் இதழில் வெளியான இந்த கண்டுபிடிப்புகள், “யார்க் போன்ற நகரங்களின் வெளிப்பகுதிகளில் பெரிய விலங்குகளும் இருந்ததை இந்தக் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துகிறது. அதோடு மரணம் வரும் வேளையில் இந்த விலங்குகள் தங்களைத் தாங்களே எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது,” என்றார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ரோமானிய யார்க்கில் ஒரு பெரிய அரைவட்ட அரங்கு இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது என்கிறார்கள் நிபுணர்கள். அது எங்கிருக்கிறது என்று இன்னும் தெரியவில்லை என்றாலும், ஏதோ ஒரு விதப் பொழுதுபோக்குக்காக கிளாடியேட்டர் சண்டைகள் இங்கேதான் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
யார்க்கில் உயர்பதவியில் இருந்த ரோமானியத் தலைவர்கள் வசித்ததால் அவர்கள் ஒரு ஆடம்பரமான வாழ்வையே வாழ்ந்திருக்கக்கூடும். இதனால் செல்வம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படும் கிளாடியேட்டர் சண்டைகள் நடந்தன என்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.
“நாம் நம்புவது போல, அடுத்தவர்களின் மகிழ்ச்சிக்காக சண்டையிட இந்த இடத்துக்கு அந்த மனிதனை எது வரவழைத்தது என்று நமக்குத் தெரியாது. ஆனால் பண்டைய உலகத்தின் ‘வெம்ப்ளி ஸ்டேடியம்’ என்று அழைக்கப்பட்ட ரோமானிய கொலாசியத்தில் இருந்து வெகு தூரத்தில் இப்படி ஒரு சண்டை நிகழ்ந்ததற்கான தொல்லியல் எலும்பு ஆதாரங்கள் கிடைத்தது ஆச்சர்யமான விஷயம்தான்,” என்கிறார் யார்க் தொல்பொருள் அமைப்பின் தலைமை நிர்வாகி டேவிட் ஜென்னிங்ஸ்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU