SOURCE :- BBC NEWS

- எழுதியவர், தீபாளி ஜக்தப்
- பதவி, பிபிசி மராத்தி
-
25 ஏப்ரல் 2025, 07:56 GMT
புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அதுல் மோனெ, சஞ்சய் லேலே, ஹேமந்த் ஜோஷி ஆகியோரின் குடும்பங்கள் இணைந்து ஒரு செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில், சம்பவ இடத்தில் இருந்த அனுஷ்கா மோனேவும், ஹர்ஷத் லேலேவும் ஏப்ரல் 22 அன்று என்ன நடந்தது என்பது பற்றித் தெரிவித்தார்கள். கொலையாளிகள் ‘கண்டதும் சுடப்பட வேண்டும்’ என்று இறந்தவர்களின் குடும்பங்கள் கோரிக்கை விடுத்தார்கள்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் மகாராஷ்டிராவை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். புனே, பன்வேல், நாக்பூர், டோம்பிவிலி ஆகிய இடங்களில் இருந்து சென்ற சுற்றுலாப் பயணிகள் இதில் அடங்குவர்.
‘துப்பாக்கிச் சூடு நடந்தபோது என் கை என் தந்தையின் தலையில் இருந்தது’

“அவர்கள் அனைவரையும் அமரச் சொன்னார்கள். அதில் யார் ஹிந்து, யார் முஸ்லீம் என்று கேட்டார்கள். அவர்கள் துப்பாக்கியால் சுட்டபோது என் தந்தையின் தலையில் என் கை இருந்தது. என் கையில் ஏதோ பட்ட மாதிரி இருந்தது. நிமிர்ந்து பார்த்தபோது, என் தந்தையின் தலை முழுவதுமாக ரத்தத்தில் நனைந்திருந்தது,” என்றார் சஞ்சய் லேலேவின் மகன் ஹர்ஷல் லேலே.
“என் தந்தையின் தலையில் அவர்கள் சுட்டார்கள். பின்னர் அங்கிருந்த காஷ்மீரிகள் எங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பிச் செல்லுமாறு கூறினார்கள். குதிரையில் சென்றாலும் மூன்று மணிநேரம் ஆகும். அங்கே கார்கள் கிடையாது. அங்கிருந்த எல்லா வாடகைக் குதிரைக்காரர்களும் வந்து எவ்வளவு மக்களை அழைத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு பேரை அழைத்துச் சென்றார்கள்.”
“எங்கள் குதிரைக்காரர் எங்களை அணுகி என் அம்மாவை அதன் முதுகில் ஏற்றிக் கொண்டார். மற்றவர்கள் நடந்து சென்றோம். அங்கிருந்து வெளியேற நான்கு மணிநேரம் ஆனது.”
“மதியம் துப்பாக்கிச் சூடு நடந்தது. நாங்கள் 5.30க்கு அங்கிருந்து வெளியே வந்து சேர்ந்தோம். 7 மணி அளவில் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள் என்று எங்களிடம் சொல்லப்பட்டது. நாங்கள் இரவெல்லாம் விழித்திருந்தோம். அடுத்து உடல்களை அடையாளம் காட்ட நான் சென்றேன். மறுநாள் அந்தப் பகுதியில் இருந்த காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றோம். அங்கே இருந்த சில நபர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதுதான் ஒரு நான்கு வயதுக் குழந்தையும் கொல்லப்பட்டது என்று அறிந்தோம்.”
‘தாக்குதல் நடந்த இடத்தில் எந்த பாதுகாப்பு அதிகாரிகளும் இல்லை’

“இந்தத் தாக்குதல் நடந்தபோது நாங்கள் தரையில் படுத்திருந்தோம். அதனால் எத்தனை பேர் அங்கே இருந்தார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. அங்கிருந்த ஒரு தீவிரவாதியின் தலையில் ஒரு கோப்ரோ கேமரா இருந்ததைப் பார்த்தேன். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு அங்கிருந்த மக்கள் எங்களுக்கு உதவினார்கள். அரசாங்க அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவருமே எங்களுக்கு உதவினார்கள்,” என்றார் ஹர்ஷல் லேலே.
“தாக்குதல் நடந்த அந்த இடத்தில் எந்தப் பாதுகாப்பும் இல்லை. ராணுவ வீரர்களும் இல்லை. அங்கே நூறு சுற்றுலாப் பயணிகளோ அல்லது அதற்கும் மேற்பட்டவர்களோ இருந்திருக்கலாம். மொத்த துப்பாக்கிச் சூடும் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் நடந்து முடிந்தது” என்றும் ஹர்ஷல் லேலே கூறினார்.
அதுல் மோனேவின் மனைவி அனுஷ்கா மோனே கூறும்போது, “நாங்கள் அங்கே 1-1.30 மணியளவில் சென்றிருப்போம். எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தோம். கொஞ்சம் புழுக்கமாக இருந்ததால் தண்ணீர் குடிக்கச் சென்றிருந்தேன். அப்போதுதான் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அது சுற்றுலாத் தலம் என்பதால் ஏதோ சாகச விளையாட்டாக இருக்கும் என்று நினைத்தேனே தவிர பெரிதாக அதில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டேன்,” என்றார்.
“துப்பாக்கிச் சூடு திடீரென்று தொடங்கியதும், எல்லாரும் பயந்து போனார்கள். யார் ஹிந்து, யார் முஸ்லீம் என்று கேட்டார்கள். யாரும் பதில் சொல்லவில்லை. யாரும் எழுந்து நிற்கவில்லை. அங்கிருந்த எங்களில் ஒருவர் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டவுடன் அவரைச் சுட்டு விட்டார்கள்” என்கிறார் அனுஷ்கா மோனே.
“என் கணவர் அதுல் மோனே, ‘எங்களைச் சுடாதீர்கள். நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம்’ என்றார். உடனே அவரையும் சுட்டார்கள். யார் ஹிந்து என்று கேட்கப்பட்டதும் என் மாமா கையை உயர்த்தினார். அவரையும் சுட்டார்கள். எங்கள் கண் முன்னால் அவர்கள் மூன்று பேரையும் கொன்றார்கள். குற்றவாளிகள் அனைவரும் ஆண்கள்.”
“அவர்கள் சென்றதும் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அங்கிருந்த மக்கள், ‘உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இங்கிருந்து கிளம்புங்கள்’ என்றனர்.”
“தீவிரவாதிகள் பயத்தைப் பரப்புகிறார்கள். அரசுதான் நீதி வழங்க வேண்டும்.”
ஊடக சந்திப்பில் இந்தத் தகவல்களை அந்தக் குடும்பங்கள் வழங்கிய பிறகு, இதற்கு மேலும் எங்களிடம் கருத்து கேட்டு வராதீர்கள் என்று பத்திரிகையாளர்களிடம் கேட்டுக் கொண்டார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU