SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கும் பைசரன் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் சையது ஆதில் ஹுசைன் ஷா மட்டுமே காஷ்மீரைச் சேர்ந்தவர்.
இப்போது ஆதிலின் கிராமத்தில் துக்கம் நிலவுகிறது. பஹல்காம் தாலுகாவின், ஹபட்னார் கிராமத்தைச் சேர்ந்த ஆதில், பஹல்காமில் குதிரைகள் ஓட்டிப் பிழைப்பு நடத்தி வந்தார்.
ஆதிலின் வருமானத்தையே அவரது குடும்பம் சார்ந்திருந்தது என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.
“அவர் வெறுமனே இறக்கவில்லை என்று கேள்விப்படுகிறோம். இந்தத் தாக்குதலை நிறுத்த அவர் தைரியமாக முயற்சி செய்திருக்கிறார். துப்பாக்கிகளைக்கூடப் பிடுங்க முயன்றிருக்கிறார். அப்போதுதான் அவர் குறிவைக்கப்பட்டிருக்கிறார்,” என்று ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

குடும்பத்தின் ஒரே ஆதரவாக இருந்த ஆதில்
குடும்பத்தின் ஒரே ஆதரவாக இருந்தது ஆதில் மட்டும்தான். ஆதிலின் மனைவி, ஆதிலின் பெற்றோர், இரண்டு தம்பிகள் ஆகியோரைக் கொண்டது அவரது குடும்பம்.
ஆதிலுக்கு ஒரு மகன் இருந்திருக்கிறார். ஆனால் அவர் சில நாட்களுக்கு முன்புதான் உயிரிழந்துள்ளார். ஆதிலும் இறந்தபிறகு, அவருடைய தாயின் நிலைமை மோசமாக இருக்கிறது.
“அவன்தான் இந்தக் குடும்பத்தில் சம்பாதித்துக் கொண்டிருந்த ஒரே பிள்ளை. குடும்பத்தில் மூத்தவனும் அவன்தான்,” என்று ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் ஆதிலின் அம்மா அழுதுகொண்டே கூறியிருக்கிறார்.
“குதிரை சவாரிக்காக பஹல்காமுக்குக்கு போனான் ஆதில். 3 மணிக்கு அங்கே ஏதோ நடக்கிறது என்று கேள்விப்பட்டோம். நாங்கள் அவனைத் தொலைபேசியில் அழைத்தபோது அது அணைக்கப்பட்டிருந்தது. 4 – 4.30 மணிவாக்கில் அவனது மொபைல் செயல்பாட்டில் இருந்தது. நாங்கள் திரும்பத் திரும்ப அவனை அழைக்க முயன்றோம். ஆனால் அவன் எடுக்கவே இல்லை.
பிறகு அங்கு ஏதோ விபத்து நடந்ததாகக் கேள்விப்பட்டோம். அதனால் எங்கள் இளைய மகன்கள் மருத்துவமனைக்குச் சென்றார்கள். ஆதில் அங்குதான் இருந்தான்,” என்றார் ஆதிலின் தந்தை சையது ஹைதர் ஷா.
எங்களின் மகன் இறந்துவிட்டார், ஆனால் அதைச் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் ஹைதர் ஷா.
இறுதிச்சடங்கில் முதலமைச்சர் கலந்து கொண்டார்

பட மூலாதாரம், Getty Images
சையது ஆதில் ஹுசைன் ஷாவின் இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெற்றது. மொத்த கிராமமும் கலந்து கொண்ட அந்த இறுதிச்சடங்கில் முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவும் கலந்து கொண்டார். அவர் ஆதிலின் குடும்பத்தோடு பேசியுள்ளார்.
“இந்தச் சம்பவத்தைப் பற்றி என்ன சொல்ல முடியும்? இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதன் கொடூர பாதிப்பை அனுபவிப்பவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் விருந்தினர்கள் வெளியில் இருந்து விடுமுறைகளைக் கொண்டாட இங்கு வந்திருந்தனர். ஆனால் அவர்கள் பிணமாக வீடு திரும்பிச் சென்றுள்ளார்கள்,” என்றார் ஓமர் அப்துல்லா.
“இந்தக் குடும்பத்தில் வேறு எந்த நபரும் சம்பாதிக்கவில்லை. அவர்கள் குடும்பம் வறுமையில் வாடுகிறது. அவர் ஒரு அப்பாவி. இப்படிப்பட்ட சூழலில் அவரது குடும்பம் காப்பாற்றப்பட வேண்டும்,” என்று ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் கூறினார் ஆதிலின் மாமா.
“இந்தக் குடும்பத்தை நாம்தான் காப்பாற்ற வேண்டும். அவர்களுக்கு உதவி தேவை. அரசாங்கம் அவர்களுடன் துணையாக நிற்கிறது என்று அனைவருக்கும் உறுதியளிக்கவே நான் இங்கு வந்திருக்கிறேன். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்,” என்றார் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா.
சதித்திட்டம் எதுவாயினும் அது அம்பலப்படுத்தப்பட வேண்டும்

பட மூலாதாரம், ANI
ஆதில் ஷாவின் கிராமத்தினரும், உறவினர்களும் பஹல்காம் தாக்குதலால் மிகவும் கோபமாகவும் வருத்தமடைந்தும் இருக்கிறார்கள்.
“எங்கள் பகுதி மீதும், காஷ்மீர் மீதும் படிந்த கறை இது. எளிதில் அழிக்கவே முடியாத கறை. நாங்கள் எல்லாருமே இந்த சதித் திட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தியாவின் துக்கத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்,” என்று ஆதிலின் உறவினர்களில் ஒருவரான மொஹிதின் ஷா தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
“எங்கள் விருந்தினர்கள் மற்றும் குறிப்பாக குதிரை சவாரி செய்து கொண்டிருந்த எங்களின் பிள்ளை என அனைவரும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இது மிக மோசமான விஷயம்,” என்றார் ஷா.
மேலும் அவர், “இந்தச் சதித்திட்டம் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறோம். வருங்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கக்கூடாது. அவன் மிகவும் வறுமையான குடும்பத்தில் இருந்து வந்தவன். அவன் பெற்றோருக்கு ஒரே ஆதரவாக இருந்தவன். இந்த ஏழைகள் என்ன செய்வார்கள்? அவர்கள் நிராதரவாக நிற்கிறார்கள்,” என்றார்.
குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு 10 லட்சம் ரூபாய் கருணைத் தொகை

பட மூலாதாரம், Getty Images
பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு கருணைத் தொகையை அறிவித்தார் ஓமர் அப்துல்லா. இந்தத் தாக்குதலில் மரணமடைந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா பத்து லட்சம் வழங்கப்படும்.
“பஹல்காமில் நடந்த இந்தக் கொடூரமான தீவிரவாதத் தாக்குதலால் நான் ஆழ்ந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளேன். ‘எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த இழப்பை ஈடு செய்ய முடியாது.’ இருந்தாலும் எங்கள் ஆதரவையும், ஒற்றுமையையும் தெரிவிக்கும் விதமாக ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்குகிறது,” என்று கூறினார் ஓமர் அப்துல்லா.
“அப்பாவி மக்களுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டித்தனமான கொடூரத்துக்கு நம் சமூகத்தில் இடமில்லை. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்,” என்றார் ஓமர் அப்துல்லா.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி, “பஹல்காமில் நடந்த கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இப்படிப்பட்ட வன்முறை நிச்சயம் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.”
“வரலாற்று ரீதியாக காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளை மனதார வரவேற்றிருக்கிறது. இந்த அரிதான தாக்குதல் மிகவும் கவலையளிக்கிறது,” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU