SOURCE :- BBC NEWS

பஹல்காம், ஜம்மு காஷ்மீர், பைசரன், இந்தியா, பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் கான்பூரை சேர்ந்த சுபம் துவிவேதியும் ஒருவர்.

சுபமும் அவருடைய குடும்பத்தினரும் பஹல்காமை சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தனர். அவரது மனைவி, பெற்றோர், சகோதரி, சகோதரியின் கணவர் மற்றும் உறவினர்கள் சிலரும் அவருடன் சென்றிருந்தனர்.

முப்பது வயதான சுபத்துக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்திருந்தது. அவர் கான்பூரில் சிமென்ட் தொழில் செய்து வந்தார்.

இந்தத் தாக்குதலில் தப்பித்த அவரது குடும்பம், தாங்கள் எப்படித் தப்பித்தோம் என்று பிபிசியிடம் கூறினார்கள். இது அவர்கள் எடுத்த ஒரு முடிவால்தான் சாத்தியமானது என சுபமின் சகோதரியும் தந்தையும் கூறுகிறார்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

சுபம் குடும்பத்தினர் எவ்வாறு உயிர் பிழைத்தார்கள்?

தங்கள் குடும்பம் மற்றும் உறவினர்கள் உள்பட 11 பேர் சேர்ந்து பஹல்காமுக்கு சென்றதாக அவருடைய சகோதரி ஆர்த்தி துவிவேதி கூறுகிறார்.

அவர்களது சுற்றுலாப் பயணத்தின் கடைசி நாளில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதன் பிறகு அனைவரும் ஊர் திரும்புவதாக இருந்தார்கள்.

அதுகுறித்துப் பேசிய ஆர்த்தி, “அன்றுதான் எங்கள் சுற்றுலாவின் கடைசி நாள். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தோம். இன்னும் சொல்லப்போனால், அதுதான் நாங்கள் எல்லாரும் சேர்ந்து செல்லும் முதல் சுற்றுலா என்பதால் கூடுதல் மகிழ்ச்சி” என்றார்.

“அண்ணனுக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருந்தது. அண்ணியின் குடும்பமும் எங்களுடன் இருந்தனர். அதனால் அனைவரும் அந்த சுற்றுலாவை நன்றாக அனுபவித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் மீண்டும்கூட அங்கு வரத் திட்டமிட்டிருந்தோம்,” என்கிறார் ஆர்த்தி.

பைசரனுக்கு சென்றதைப் பற்றிப் பேசிய சுபத்தின் சகோதரி ஆர்த்தி தான் எடுத்த ஒரு முடிவால் அவர் உயிரும், குடும்பத்தில் மற்றவர்களின் உயிரும் காப்பாற்றப்பட்டதாகக் கூறுகிறார்.

“நாங்கள் மேலே சென்று கொண்டிருந்தோம். எனக்கு உடல்நிலை சரியாக இல்லை. எனக்கு குதிரையில் அமர்ந்து செல்லப் பிடிக்கவில்லை. இதனால் நான் வரவில்லை என்று சொன்னேன்,” என்கிறார் அவர்.

தனது அந்த முடிவால், ஆறு குடும்ப உறுப்பினர்களும் திரும்பிவிட்டதாக ஆர்த்தி கூறுகிறார். “நாங்கள் பாதி வழி தாண்டிவிட்டோம். நான் அங்கிருந்து, என் கணவர், என் தந்தை மற்றும் சிலரையும் உடன் அழைத்துச் சென்றேன்” என்றார் அவர்.

குதிரைக்காரர்கள் சொன்னது என்ன?

பஹல்காம், ஜம்மு காஷ்மீர், இந்தியா, பாகிஸ்தான்

“ஏனென்று தெரியவில்லை. எனக்கு ஏதோ பயமாக இருந்தது. நான் போக மாட்டேன் என்று சொன்னேன். அதோடு வியர்க்கவும் ஆரம்பித்தது,” என்கிறார் ஆரத்தி.

“அங்கே வானிலை குளிர்ச்சியாகத்தான் இருந்தது. நான் அதிக உடைகள் ஒன்றும் அணிந்திருக்கவில்லை. ஆனாலும் எனக்கு வியர்த்துக் கொட்டியது. அதனால் நான் கண்டிப்பாக வரமாட்டேன் என்று கூறிவிட்டேன்,” என்கிறார் அவர்.

“ஆனால் அவர்கள் (குதிரை ஓட்டுபவர்கள்) ‘ஏன் பயப்படுகிறீர்கள். நாங்கள் அழைத்துச் செல்கிறோம்’ என்றார்கள். அவர்களோடு நாங்கள் சென்றாக வேண்டும் என்று பத்து நிமிடம் என்னோடு வாதாடினார்கள்.”

“ஆனால் நான் அவர்களிடம் உங்களுக்கான முழு பணத்தையும் நான் தந்துவிடுகிறேன். உங்களுடைய பணத்தில் ஒரு ரூபாய்கூட விடுபடாது. ஆனால் நான் போக விரும்பவில்லை. அதனால் போக மாட்டேன் என உறுதியாகக் கூறிவிட்டேன்” என்கிறார் ஆர்த்தி.

ஆர்த்தி சில குடும்ப உறுப்பினர்களுடன் வலுக்கட்டாயமாகத் திரும்பியதாகக் கூறினார். “அவர்களையும் அழைத்து வந்தது நல்லதுதான். இல்லையென்றால் என் அப்பாவும், என் கணவரும்கூட பிழைத்திருக்க முடியாது, யாருமே பிழைத்திருக்க முடியாது” என்கிறார் ஆர்த்தி.

சுபமின் தந்தை சொல்வது என்ன?

பஹல்காம், ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தான், இந்தியா, பைசரன்

இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசும்போது, தானும் தனது குடும்பமும் டிராவலர் வாகனத்தில் பஹல்காம் சென்றதாகக் கூறுகிறார் சுபம் துவிவேதியின் தந்தை சஞ்சய் குமார் துவிவேதி.

அங்கிருந்து 11 பேரும் செல்வதற்கு குதிரைகளை அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

”நாங்கள் 11 பேரும் ஒன்றாகவே நடந்து சென்றோம். எங்களிடம் 11 குதிரைகள் இருந்தன. முதல் புள்ளியை நாங்கள் அடைந்தபோது இறங்கி புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம்,” என்கிறார் சஞ்சய்.

“அதன் பிறகு என் மகள் (ஆர்த்தி) இதற்கு மேல் தொடர்ந்து செல்ல வேண்டாம். நாம் திரும்பிச் செல்வோம். தனக்கு ஏதோ சரியாகப்படவில்லை என்று கூறிவிட்டார்.”

“ஏனென்று தெரியவில்லை, எனக்குமே ஏதோ சரியாகப்படவில்லை. சரி நாம் எல்லாரும் திரும்பி விடுவோம் என்றேன். அதன் பின்னர் நாங்கள் அங்கிருந்து திரும்பிவிட்டோம்” என்றார் சஞ்சய்.

“அதன் பின்னர் எங்கள் மருமகன் தானும் செல்லவில்லை எனக் கூறிவிட்டார். பின்னர் என் மகளின் மாமனார் மாமியாரும் செல்லத் தயாராக இல்லை என்றார்கள். என் மனைவியும் செல்லப் போவதில்லை என்றார். இப்படி ஆறு பேர் மேலே தொடர்ந்து பயணிக்கத் தயாராக இல்லை என்றார்கள்.”

இதன் பிறகு முதல் புள்ளியில் இருந்து ஆறு பேரும் கீழே திரும்பியதாக சுபமின் தந்தை கூறுகிறார்.

“நாங்கள் வழியில் தேநீர், சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தோம். அப்போது என் மகன் சுபம் எங்களுக்கு அழைத்து மேலே சென்று அடைந்ததாகக் கூறினான். அதற்கு 20-25 நிமிடம் எடுத்திருக்கும்” என்றார் அவர்.

“நான் அவனிடம் எங்களை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் சீக்கிரம் வந்துவிடு என்று கூறினேன். நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். ஐந்து நிமிடம் கழித்து மறுபடியும் அழைப்பு வந்தது. அவர்கள் கிளம்பிவிட்டார்கள் என்று நினைத்தேன்.”

இதையெல்லாம் கூறும்போதே சுபம் துவிவேதியின் அப்பா உணர்ச்சிவயப்பட ஆரம்பித்தார். “அனைத்தையும் முடித்துவிட்ட ஒரு அழைப்பு அதுதான்” என்றார்.

சுபத்தின் சகோதரியின் நிலை என்ன?

சுபம் துவிவேதி, பஹல்காம் தாக்குதல், ஜம்மு காஷ்மீர், பைசரன்

அவர் எந்த நிலையில் இருந்தார் என்பதைக் கூறுவது மிகவும் கடினமானது என்கிறார் சுபமின் சகோதரி ஆர்த்தி.

“என் அப்பா, அம்மா, அண்ணி மற்றும் நாங்கள் அனைவரும் அவன் (சுபம்) இல்லாமல் எப்படி வாழப் போகிறோம் எனத் தெரியவில்லை. இந்த நாட்டில் இப்படிப்பட்ட விஷயங்கள் ஏன் நடக்கின்றன? மனிதர்கள் ஏன் ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள்” என்றார் அவர்.

“எல்லோரிடமும் மனிதநேயம் உள்ளது. நமக்குத் தெரியாதவருக்கு அடிபட்டால்கூட அவரைப் பற்றி நினைத்துப் பார்ப்போம்.”

“விலங்குகளை நாம் மிகவும் நேசிக்கிறோம். ஆனால் இங்கு மனிதர்கள், அவர்களின் சொந்த நாட்டுக்கு உள்ளேயே ஒருவரையொருவர் கொன்று கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் ஆர்த்தி.

மேலும் அவர், “நாங்கள் வெளிநாட்டிற்கு எங்கும் செல்லவில்லை. நீங்கள் இந்துவா அல்லது முஸ்லிமா என்று கேட்ட பிறகு கொலை செய்யப்படும் பாகிஸ்தானுக்கோ அல்லது வேறு ஒரு முஸ்லீம் நாட்டுக்கோ செல்லவில்லை. நாங்கள் இந்தியாவில்தான் இருக்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த நாட்டில்தான் இறந்திருக்கிறோம்” என்றார்.

பஹல்காம் தாக்குதல்

கடந்த வாரம் செவ்வாயன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடைபெற்றது. துப்பாக்கி ஏந்தியவர்கள் கண்ணை மூடிக்கொண்டு சுற்றுலாப் பயணிகளைச் சுட்டதாக அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தார்கள்.

இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

இதைத் ‘தீவிரவாதத் தாக்குதல்’ என்று குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோதி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரையும் விட்டு வைக்கப் போவதில்லை என்றார்.

சமீப காலங்களில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்று காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த சுபம் குடும்பத்தினருடன் உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU