SOURCE :- BBC NEWS

ரா அமைப்பின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் துலாத்

“பஹல்காமில் நடந்த தாக்குதலில் காஷ்மீரிகளின் மீது எந்தத் தவறும் இல்லை. அங்கிருக்கும் சிலருக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பிருக்கலாம் அல்லது அதற்கான சதித் திட்டத்தில் பங்கேற்று இருக்கலாம்… ஆனால் இதற்காக அனைத்து காஷ்மீரிகளும் தண்டிக்கப்படக் கூடாது.”

இந்தக் கருத்தைக் கூறுவது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (RAW) முன்னாள் தலைவரும் ஐபிஎஸ் அதிகாரியுமான அமர்ஜித் சிங் துலாத்.

கடந்த மாதம் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா எதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்? இந்தியா என்ன செய்ய வேண்டும், அதிலும் குறிப்பாக ஜம்மு காஷ்மீரில்?

இதுபோன்ற சில முக்கியமான கேள்விகளை அமர்ஜித் சிங்கிடம் கேட்டோம், அனுபவமிக்க அவருடைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை அறிய விரும்பினோம்.

ஏப்ரல் 22 அன்று பஹல்காம் அருகே தாக்குதல் நடந்தது

பட மூலாதாரம், Getty Images

கடந்த 1940ஆம் ஆண்டு பிறந்த அமர்ஜித் சிங் துலாத், அடல் பிஹாரி வாஜ்பேய் அரசாங்கத்தில் பிரதமர் அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். தனது பணிக் காலத்தின் தொடக்கத்திலேயே ஜம்மு காஷ்மீரில் உளவுத்துறை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.

பிபிசி உடனான சிறப்பு உரையாடலின்போது, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்பின் குறைபாடுகள் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குக் காரணம் என்று அவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம்

பட மூலாதாரம், Getty Images

“பஹல்காமில் நடந்தது போன்ற மிகவும் மோசமான தாக்குதல்கள் இதற்கு முன்பு நடந்ததில்லை என்று கூறுவேன். பஹல்காம் தாக்குதல் ஒரு பாதுகாப்பு தோல்வி என்றே எனக்கு தோன்றுகிறது. அங்கு எந்த வகையான பாதுகாப்பும் இல்லை. நிர்வாகத்திற்குத் தெரியாமல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருந்தால், இதுவும் உளவுத்துறை தோல்விதான்” என்று அவர் கூறுகிறார்.

தனது கருத்தைத் தெளிவுபடுத்தும் அவர் இவ்வாறு கூறுகிறார்: “நாம் உளவுத் தகவல்கள் அல்லது உளவுத்துறை அமைப்பு பற்றிப் பேசும்போது, காஷ்மீரில் மிக முக்கியமான துப்புகளும் தகவல்களும் காஷ்மீரிகளிடம் இருந்து மட்டுமே கிடைக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே காஷ்மீரிகளை நமக்கு இணக்கமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.”

“இந்தத் தாக்குதல் ஏன் நடந்தது, எப்படி நடந்தது, என்ன நடந்தது, யார் பொறுப்பு என்பதை விசாரிக்க வேண்டும். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஜம்மு-காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைப் பேணும் பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது, அங்குள்ள முதலமைச்சரின் கைகளில் இல்லை. எனவே மத்திய அரசு இதைப் பற்றி ஆழமாக ஆராய வேண்டும். தவறு எங்கே நடந்தது என்பதை அங்குள்ள துணைநிலை ஆளுநர் ஆராய வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

தீவிரவாத சம்பவங்களுக்கும் சுற்றுலாவுக்கு என்ன தொடர்பு?

ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி

பட மூலாதாரம், Getty Images

பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு, ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

அரசாங்க தரவுகளின்படி, 2020ஆம் ஆண்டில் 34 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்துள்ளனர். அதுவே, 2023ஆம் ஆண்டின் இறுதியில், இந்த எண்ணிக்கை 2 கோடியே 11 லட்சத்தைத் தாண்டிவிட்டது.

அதைவிட 2024ஆம் ஆண்டில், ஜூன் மாதத்திற்கு உள்ளாகவே, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே எட்டு லட்சத்தைத் தாண்டிவிட்டது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது என்றால், அங்கு தீவிரவாத வன்முறைச் சம்பவங்கள் குறைந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.

தெற்காசிய தீவிரவாத போர்ட்டலின்படி, 2012ஆம் ஆண்டில், தீவிரவாத வன்முறைச் சம்பவங்களில் ஜம்மு காஷ்மீரில் 19 பொதுமக்கள் உயிரிழந்தனர், பாதுகாப்புப் படையினர் 18 பேர் கொல்லப்பட்டனர், 84 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்

பட மூலாதாரம், Getty Images

அதுவே 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தீவிரவாத வன்முறைகளில் பொதுமக்களில் 12 பேர், 33 பாதுகாப்புப் படையினர் மற்றும் 87 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2024ஆம் ஆண்டில், 31 பொதுமக்கள், 26 பாதுகாப்புப் படையினர் மற்றும் 69 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அதாவது தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.

ஆனால் அரசின் அறிக்கைகளில், ஜம்மு-காஷ்மீரில் ‘பூஜ்ஜிய தீவிரவாதம்’ போன்ற விஷயங்களும் இடம்பெறத் தொடங்கின. ‘ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு ஏதுவான சூழல் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு விட்டதாகவும்’ கூறப்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

அதே நேரத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமே இல்லாத பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தொடங்கினார்கள். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகுதான், பல பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு நிர்வாகம் தடை செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இந்தப் பிரச்னையை அமர்ஜித் சிங் துலாத் எப்படிப் பார்க்கிறார் என்று அவரிடம் கேட்டோம்.

“கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளன. சுற்றுலா என்பது வேறு, இயல்புநிலை என்பது வேறு. ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை நிலவுவதாக நாம் கூறும்போதெல்லாம், அந்தப் பக்கத்தில் இருந்து தாக்குதல்கள் நடக்கின்றன” என்று அவர் கூறுகிறார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் துறை 'பூஜ்ஜிய பயங்கரவாதம்' பற்றிப் பேசியிருந்தது

பட மூலாதாரம், Getty Images

மேலும், “சுற்றுலாத்துறை அங்கு முன்னேறிக் கொண்டிருந்தது, பயணிகள் எல்லா இடங்களுக்கும் சென்று கொண்டிருந்தனர். ஆனால், அரசாங்கம் ஆபத்தை முன்கூட்டியே பார்த்திருக்க வேண்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் எங்கு சென்றாலும், பாதுகாப்பு இருப்பதைக் காணலாம். ஆனால், தாக்குதல் நடைபெற்றபோது பஹல்காமுக்கு வெளியே, பைசரன் பள்ளத்தாக்கில் ஏன் பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லை என்பது எனக்குத் தெரியவில்லை” என்று அமர்ஜித் சிங் ஆச்சரியப்படுகிறார்.

‘இது இந்து-முஸ்லிம் பிரச்னை அல்ல’

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, வன்முறைக்கு எதிராக ஸ்ரீநகரில் காஷ்மீர் வணிகர்கள் போராட்டங்களை நடத்தினார்கள்

பட மூலாதாரம், Getty Images

பஹல்காம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டு தெரிந்துகொண்டே சுட்டதாக, தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

எனவே இந்தத் தாக்குதலின் பின்னணி என்ன, அதன் பின்னணியில் எத்தகைய சிந்தனை இருப்பதாகத் தோன்றுகிறது, இந்தியா என்ன மாதிரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று அமர்ஜித் சிங் துலாத்திடம் கேட்டோம்.

“பஹல்காமில் இந்து-முஸ்லிம் பிரச்னையில் தாக்குதல் நடைபெறவில்லை. ஜம்மு-காஷ்மீரிலோ அல்லது இந்தியாவிலோ இந்து-முஸ்லிம் பிரச்னை இல்லை. பார்க்கப் போனால், இங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று என்ற செய்தி தெளிவாகத் தரப்பட வேண்டும்.

கடந்த 1947இல் விடுதலை பெற்றது முதலே ஒரு சில மதப் பிரச்னைகள் உள்ளன. ஜம்மு-காஷ்மீர் ஒரு முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக இருந்த போதிலும், அங்கு ஒருபோதும் இந்து-முஸ்லிம் பிரச்னை இருந்ததில்லை” என்று அவர் பதில் கூறுகிறார்.

“காஷ்மீரியத் என்று நாம் அழைப்பது என்ன? காஷ்மீரியத்தின்படி, அங்குள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் நெருங்கியுள்ளனர். நாம் காஷ்மீரியத்தை இழக்கக்கூடாது என்று கூற விரும்புகிறேன், அதை உயிர்ப்புடன் வைத்திருப்பது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்தார் அவர்.

‘போர் நடக்கும் என்று நான் நம்பவில்லை’

நபிசா ராஸ் இந்தியர், அவரது குழந்தைகள் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள்

பட மூலாதாரம், Getty Images

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அது தூதரக நிலை, வர்த்தகம் அல்லது மக்கள் நடமாட்டம் போன்ற விஷயங்கள் எனப் பல்வேறு விஷயங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிடிஐ செய்தி முகமையின் செய்திகள்படி, பொருத்தமானதாகக் கருதும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க ஆயுதப் படைகளுக்கு அண்மையில் பிரதமர் நரேந்திர மோதி முழு சுதந்திரத்தையும் வழங்கியுள்ளார்.

அதே நேரத்தில், இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தானிலும் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து, அடுத்து என்ன நடக்கும் என்று அமர்ஜித் சிங் துலாத் என்ன நினைக்கிறார் எனக் கேட்டோம்.

கடந்த ஆண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு அரசாங்கம் அமைந்தது

பட மூலாதாரம், Getty Images

“ராஜ்ஜீய ரீதியாக, பாகிஸ்தானுக்கு வலுவான செய்தி ஒன்றை இந்தியா அனுப்பியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளக்கூடும் என்றும் மக்கள் கூறுகிறார்கள். போர் என்பது மிகவும் தவறான வழி என்றும், வேறு வழியில்லை என்ற நிலையில் அது இறுதியானதாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். அதோடு போர் நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்று துலாத் கூறுகிறார்.

“எதிர்காலத்தில் ஏதாவது ஒரு வழியில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். 2021ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டது ஏன்? அன்றைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், ராணுவத் தளபதி ஜெனரல் பாஜ்வாவும் இந்தியாவுடன் இணக்கமான உறவை விரும்பினார்கள்.

அதேபோல், இன்று பாகிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் நவாஸ் ஷெரீப்பும், பிரதமர் மோதியும் பரஸ்பரம் நல்லுறவைக் கொண்டுள்ளனர். எனவே சமாதானம் ஏற்படலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்.”

இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 போர் விமானம்

பட மூலாதாரம், Getty Images

இது பற்றி மேலும் விரிவாகப் பேசும் அமர்ஜித் சிங் துலாத், “தற்போது சூழல் சற்று மோசமாக உள்ளது, நிலைமை மாற சிறிது காலம் ஆகலாம். ஆனால் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்குப் பல வழிகள் உள்ளன. திரைக்குப் பின்னால் அதைச் செய்யுங்கள், பின்னணி சேனல் ஒன்றை உருவாக்கிப் பேசுங்கள்.

என்னைப் பொறுத்தவரை, அந்தப் பேச்சுவார்த்தைகள் ஒருபோதும் முடிவடையாது. நேரடியாகப் பேச விரும்பாவிட்டால், செளதி அரேபியா, இரான் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என உங்கள் சார்பாக வேறு யாராவது பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.”

“மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற நடவடிக்கை அல்லது பாலகோட் போன்ற ஏதாவது செய்யலாம், நிச்சயமாக அதைச் செய்யலாம். என்னைப் பொறுத்தவரை, ராணுவத்தின் பதில் நடவடிக்கை வரையறுக்கப்பட்டதாக இருக்கலாம், அதில் தவறில்லை” என்கிறார் துலாத்.

இந்த முழு விவகாரத்திலும் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை பொறுப்பாக்கி, இந்தியா நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை என்பதுதான். பஹல்காம் தாக்குதலுக்கு எல்லை தாண்டிய தொடர்புகள் இருப்பதாகவே வெளியுறவுச் செயலாளர் உறுதிபடக் கூறியிருந்தார்.

ஜம்மு காஷ்மீர் முன்பாக அடுத்து இருக்கும் பாதை

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

பட மூலாதாரம், Getty Images

ஆதாரங்களை வழங்குவது இந்தியாவுக்கு பயனளிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் துலாத், “பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானின் உதவியின்றி நடந்திருக்காது. கடந்த காலங்களிலும் பாகிஸ்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதற்கான ஆதாரங்களை இந்தியா வழங்க முடிந்தால், அவற்றைப் பிற நாடுகளும் நம்பினால், இந்தியாவுக்கு நல்லது” என்கிறார்.

ஆனால், பஹல்காம் தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று கூறும் பாகிஸ்தான், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, ‘நடுநிலை’ விசாரணையில் பங்கேற்கும் என்று கூறியுள்ளது.

நிர்வாகத்தின் கூற்றுப்படி, இடிக்கப்பட்ட இந்த வீடு அஹ்சன்-உல்-ஹக் ஷேக்கின் குடும்பத்திற்கு சொந்தமானது

பட மூலாதாரம், Getty Images

உள்ளூர் தீவிரவாதிகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற விஷயம் புதிதானது இல்லை என துலாத் கூறுகிறார்.

“இந்தத் தாக்குதலில் உள்ளூர்வாசிகளில் சிலரும் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவலைக் கேள்விப்பட்டபோது, எனக்கு ஆச்சரியம் ஏதும் ஏற்படவில்லை. உண்மையில், இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

பெரும்பாலும் அது நமக்குத் தெரிய வராது. ஆனால் தற்போது மக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்படுகின்றன, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்காக உதவிய சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், 250-300 பேரைக் கைது செய்யாதீர்கள். ஏனென்றால், அவ்வாறு செய்வது யார் மீது தவறு இருக்கிறது என்பதை அடையாளம் காண முடியாமல் நாம் தோல்வி அடைந்ததையே காட்டுகிறது” என்று அவர் கூறுகிறார்.

370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக ஆகஸ்ட் 2019 இல் காஷ்மீரில் போராட்டங்கள் வெடித்த

பட மூலாதாரம், Getty Images

உள்ளூர் மக்களிடையே அதிகரித்து வரும் விரக்திக்கான காரணத்தைக் கூறும் துலாத், “கடந்த ஆண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு அரசாங்கம் அமைந்தபோது, மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். தங்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டு விட்டதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால் இது தங்கள் அரசாங்கம் அல்ல என்பதைப் புரிந்துகொண்டதாக மக்கள் சொல்லத் தொடங்கிவிட்டனர். இப்போதும் ஜம்மு காஷ்மீரை நடத்துவது டெல்லிதான் (மத்திய அரசு) என்று அவர்கள் கூறுகின்றனர்” என்கிறார்.

“அங்கே மீண்டும் ஒருவிதமான விரக்தி நிலை வரத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் அடுத்து என்ன செய்ய வேண்டும்? அரசாங்கம் அங்குள்ள மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அங்குள்ள மக்கள் ஒருபோதும் வருத்தப்படக்கூடாது,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

“கடந்த சில ஆண்டுகளில், சுற்றுலாப் பயணியாக அல்லாமல் நிலைமையைப் புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் காஷ்மீருக்கு சென்றிருந்தால், மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டிருக்கலாம். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, நாட்டில் மக்கள் மகிழ்ச்சியடைந்ததைப் பார்த்திருக்கலாம். ஒரு நோய் நீங்கியது என்றும் இது நல்லது என்றும் மக்கள் சொன்னார்கள்” என்று துலாத் சொல்கிறார்.

இதையெல்லாம் பார்த்த காஷ்மீர் மக்கள், டெல்லி (மத்திய அரசு) எப்போதும் தங்களுக்கு எதிராக இருப்பதாகவும், ஆனால் இந்திய மக்களும் தங்களுக்கு எதிரானவர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது என்றும் சொன்னார்கள். பின்னர் படிப்படியாக காஷ்மீர் அமைதியாகிவிட்டது. இந்த கனத்த மௌனத்தைக் கவனிக்க வேண்டும். இவ்வளவு அமைதியாக இருப்பது நல்லதல்ல” என்று தனது அனுபவத்தை மேற்கோள் காட்டி துலாத் கூறுகிறார்.

ஜம்மு காஷ்மீர் மக்களுடன் இந்தியா தொடர்ந்து பேச வேண்டும் என்று கூறும் துலாத், “சுற்றுலா மூலம் காஷ்மீரிகளுடான இடைவெளியை நிரப்ப முடியாது. அதற்குப் பேச்சுவார்த்தை அவசியம்” என்று முன்னாள் ரா தலைவர் அமர்ஜித் சிங் துலாத் கூறுகிறார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU