SOURCE :- BBC NEWS

உளவுத்துறையின் தோல்வியே பஹல்காம் தாக்குதலுக்கு காரணமா? பாதுகாப்பு நிபுணர்கள் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images

ஜம்மு-காஷ்மீரில் ஏப்ரல் 22ஆம் தேதியன்று தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த பலரும் சுற்றுலாப் பயணிகளே.

இதில் உயிரிழந்தவர்களில் காஷ்மீர், கேரளா, குஜராத், அசாம் எனப் பல மாநிலங்களை சேர்ந்தவர்களும் அடங்குவர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு தொடர்பாகப் பல கேள்விகள் எழுகின்றன.

தாக்குதலை நேரில் பார்த்தவர் கூறியது என்ன?

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தியில், “தாக்குதல் சுமார் 20 நிமிடங்களுக்கு நீடித்தது என நிகழ்விடத்தில் இருந்த ஒருவர் கூறியுள்ளார். பாதுகாப்புப் படைகள் அங்கு சென்றவுடன், பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை நேரில் கண்ட சாட்சியான அசவாரி ஜக்தாலேவிடம் பிடிஐ செய்தி முகமை பேசியது.

பாதுகாப்புப் படையினர் பஹல்காமில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்

பட மூலாதாரம், Getty Images

அசவாரி புனேவை சேர்ந்தவர். தாக்குதல் நிகழ்ந்தபோது அவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் இருந்தார். அவருடைய தந்தையும் உறவினர் ஒருவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

அசவாரி பிடிஐ செய்தி முகமையிடம் பேசியபோது, “எங்களுக்கு உதவ அங்கே யாரும் இல்லை. எங்களை அங்கே குதிரை சவாரியில் அழைத்துச் சென்றவர்கள்தான் எங்களுக்கு உதவினர்” என்றார். தாக்குதல் நிகழ்ந்த 20 நிமிடங்களுக்குப் பிறகு பாதுகாப்புப் படைகள் நிகழ்விடத்துக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலான கேஜேஎஸ் தில்லோன், ஸ்ரீநகரில் இந்திய ராணுவத்தின் 15வது படைப்பிரிவின் தளபதியாகவும் இருந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “காஷ்மீரில் பாதுகாப்புக் கட்டமைப்பு தொடர்ந்து மாறக்கூடிய தன்மையைக் கொண்டது. அது தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பைசரன் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படைகள் இல்லை என்ற ஊடக செய்திகளை நான் பார்த்தேன். அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஒரு பகுதியில், பாதுகாப்புப் படைகள் இருந்திருக்க வேண்டும்” என்றார்.

 பஹல்காம் தாக்குதல், ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், “நாங்கள் சுற்றுலாப் பயணிகள் மீது இந்த அளவிலான தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. தாக்குதலுக்கு பஹல்காமை தேர்ந்தெடுத்தது வியூக ரீதியிலான முடிவு. அந்தப் பகுதி மிகவும் அமைதியானது. அங்குள்ள மக்கள் சுற்றுலாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவர்கள்.

அவர்கள் இந்த மாதிரியான நடவடிக்கைகளை ஆதரிக்க மாட்டார்கள். ஆனாலும், பயங்கரவாதிகளால் இந்தத் தாக்குதலை நிகழ்த்த முடிந்திருக்கிறது. இதுகுறித்து முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும், இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார்.

அவர் கூறுகையில், “இந்தப் பயங்கரவாதிகளுக்கு உள்ளூரில் ஏதேனும் ஆதரவு இருக்கிறதா என்பது குறித்தும் நாம் யோசிக்க வேண்டும். இது உளவு அமைப்பின் தோல்வியா என்பதையும் பார்க்க வேண்டும். லட்சக்கணக்கில் பாதுகாப்புப் படையினரை நிறுத்தினாலும் சில குறைபாடுகள் ஏற்படும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.

இந்திய அரசும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகமும் இந்தச் சூழலுக்குப் பொறுப்பேற்கப் போகிறதா?

புள்ளிவிவரங்கள்

 பஹல்காம் தாக்குதல், ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

அரசு அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, 2020ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீருக்கு 34 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதேநேரம், 2023ஆம் ஆண்டின் முடிவில் இந்த எண்ணிக்கை 2 கோடியே 11 லட்சத்தைக் கடந்தது.

கடந்த 2019-20இல் ஜம்மு காஷ்மீரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாவின் பங்கு 7.84%. இது, 2022-23இல் 8.74% ஆக உயர்ந்தது. ஜம்மு காஷ்மீரில் 2021ஆம் ஆண்டில் இருந்து சுற்றுலாத் துறையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 15.13% ஆக உள்ளது.

மேலும், கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மக்கள் மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் ஆர்வமாகப் பங்கெடுத்தனர்.

ஜம்மு-காஷ்மீர் குறித்த அரசின் அறிக்கைகளில் ‘ஜீரோ பயங்கரவாதம்’ போன்ற வார்த்தைகள் இடம்பெற்றன. மேலும், ‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் சூழல் ஏறத்தாழ நீக்கப்பட்டுவிட்டது,” எனவும் கூறப்பட்டது.

இன்னும் சில புள்ளிவிவரங்கள்

தெற்காசியா முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களையும் தரவுகளையும் தொகுத்து வரும் தெற்காசிய பயங்கரவாத இணையதளம் என்ற தளத்தின்படி, ஜம்மு காஷ்மீரில் 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற தீவிரவாத வன்முறையில் பொதுமக்கள் 19 பேர் கொல்லப்பட்டனர். அதே ஆண்டில் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 18 பேரும் 84 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

அதன் பிறகு வன்முறை மிகவும் அதிகரித்தது, 2018ஆம் ஆண்டில் பொது மக்களுள் 86 பேர், பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 95 பேர் மற்றும் 271 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

கடந்த 2023ஆம் ஆண்டில் பொது மக்களுள் 12 பேர் கொல்லப்பட்டனர். இதுமட்டுமின்றி, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 33 பேரும் 87 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

கடந்த ஆண்டான 2024இல் ஆண்டில் பொது மக்களுள் 31 பேரும் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 26 பேரும், 69 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

அதாவது, வன்முறையின் அளவு முழுவதுமாகக் குறையவில்லை. எனவே, பெரிய அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்னர் அரசு நிர்வாகம் நிலைமையை மேலும் கட்டுப்படுத்த வேண்டியிருந்ததா?

ஜம்மு காஷ்மீர்,  உமர் அப்துல்லா , ப. சிதம்பரம்

பட மூலாதாரம், Getty Images

ஜம்மு காஷ்மீரில் அரசு தனது வியூகத்தை மறு யோசனைக்கு உட்படுத்த வேண்டுமென்று தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

ராணுவ நடவடிக்கைகளுக்கான (DGMO) பொது இயக்குநராக இருந்த அந்த நிபுணர் பிபிசியிடம் பேசியபோது, இந்தத் தாக்குதலுக்குப் பிறகு சுற்றுலா குறித்தான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

அவர் கூறுகையில், “சுற்றுலாப் பயணிகள்தான் எப்போதும் எளிதில் இலக்குக்கு ஆளாவோராக உள்ளனர். இந்த மாதிரியான தாக்குதல் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்டதில்லை என்றும் வருங்காலத்திலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்றும் நம்பப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் இப்பகுதியில் அமர்நாத் யாத்திரை ஒருங்கிணைக்கப்படுகிறது. எனவே, அரசு சுற்றுலா குறித்து யோசிக்க வேண்டும் என நம்புகிறேன். சுற்றுலாவை அனுமதியுங்கள், ஆனால் அது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். பாதுகாப்புப் படையினரால் சோதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வேண்டும்” என்றார்.

அமர்நாத் யாத்திரை

பட மூலாதாரம், Getty Images

ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலான கேஜேஎஸ் தில்லோன் கூறுகையில், “சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். யாருக்கும் அசௌகரியம் ஏற்படாமல் எல்லோரையும் கண்காணிப்பது பாதுகாப்புப் படையினருக்கு உண்மையிலேயே கடினமானது.

இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தவிர்த்து, உள்ளூர் மக்களும் அத்தகைய பகுதிகளில் உள்ளனர். அதாவது பயண வழிகாட்டிகள், தற்காலிக தாபா உணவகங்கள், உணவகப் பணியாளர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், குதிரை சவாரி சேவையை வழங்குபவர்கள் என்று பலர் உள்ளனர். எனவே, அந்தக் கூட்டத்திற்கு இடையில் இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் இணைந்து கொண்டு, யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் இருப்பது எளிதானது,” என்றார்.

நெருக்கடி மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் அஜர் சஹ்னி கூறுகையில், தற்காலிகமாக இருந்தாலும் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார். “இல்லையென்றால், சுற்றுலாப் பயணிகளிடையே எழுந்துள்ள நியாயமான பயம், ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாவையே அழித்துவிடும்” என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய பின்னர், சுற்றுலாவும் பல்வேறு துறைகளில் முதலீடுகளும் அரசால் ஊக்குவிக்கப்பட்டது. இதில் அரசின் நிலைப்பாடு மாறுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்றார்.

இருப்பினும், எந்த வடிவில் எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெளிவாக இல்லை.

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரை மேலும் அதிகரிப்பது பயன் தருமா? உளவு ரீதியாக மேம்பட இன்னும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா?

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம், Getty Images

ஆஸாத் கூறுகையில், “பாகிஸ்தான் இந்தத் தாக்குதலின் பின்னால் உள்ளது என்பது என் கருத்து. தற்போது அதிகளவிலான இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தருகின்றனர். ஜி20 கூட்டம் இந்தியாவில் நடைபெற்றது. இதற்குப் பிறகும், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் இத்தகைய தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன

இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் உயிருடன் பிடிக்கப்படுவார்கள் என நம்புகிறேன். தாக்குதலில் அவர்களின் பங்கு மற்றும் பாகிஸ்தானின் பங்கு குறித்தும் ஆராய்ந்து சரியான நடவடிக்கை எதுவாக இருந்தாலும் இந்தியா எடுக்க வேண்டும்” என்றார்.

ஆஸாத் கூறுகையில், “பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நான் எப்போதுமே ஆதரித்துள்ளேன். அதேநேரம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்தைத் தொடர்வது ஏற்புடையதா என்பது குறித்து இந்தியா மறு ஆய்வு செய்ய வேண்டியதற்கான நேரம் வந்துவிட்டது எனக் கருதுகிறேன். இந்தச் சண்டை நிறுத்தம் இந்தியாவைவிட பாகிஸ்தானுக்கே அதிக பலனை வழங்குகிறது” என்றார்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு

பட மூலாதாரம், Getty Images

எனினும், பாகிஸ்தானும் எந்தக் காரணமும் இன்றி இந்தியா சண்டை நிறுத்த விதிமீறலில் ஈடுபடுவதாக இந்தியா மீது குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த வருத்தம் கொள்கிறோம். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை பொறுப்பாக்குவது தவறானது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் இந்தியா பல சாதனைகளைப் புரிந்துள்ளதாக அஜய் சஹ்னி கூறுகிறார். அந்தப் பணியை மேலும் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சஹ்னி கூறுகையில், “ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுகிறது. புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு பார்த்தால், இந்த பயங்கரவாதம் தனது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகக் கருதுகிறேன். அதிகளவிலான பாதுகாப்புப் படையினரை நிலைநிறுத்துவது குறித்து யோசித்தால், மலைகளும் காடுகளும் சூழந்துள்ள அப்பகுதியின் நிலவியல் சூழலைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து எவ்வளவு பேரைப் பாதுகாப்புக்காக நிறுத்த முடியும்?” என்றார்.

மேலும், “இந்தக் காலகட்டத்தில் உள்ளூர் மக்கள் நாட்டிலிருந்து அந்நியமாக்கப்படுவதாக உணரக் கூடாது என்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும். அதற்கு, அரசியல்வாதிகள் பிரிவினைவாத கருத்துகளைப் பேசுவதை நிறுத்த வேண்டும். உளவுத்துறை சிறப்பாக இருப்பதையும் காவல் படை வலுவாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். பயங்கரவாதிகளுக்கு அதரவு இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டுமானால், உள்ளூர் மக்களை அரசு தங்கள் பக்கம் கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU