SOURCE :- BBC NEWS

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

செவ்வாய்க்கிழமையன்று பஹல்காமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் நடைபெற்ற மிகக் கொடூரமான தீவிரவாத தாக்குதலாக இச்சம்பவம் பார்க்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்கள் வீரர்களோ அல்லது அதிகாரிகளோ அல்ல.

மாறாக இந்தியாவின் மிக அழகான பள்ளத்தாக்கு ஒன்றில் விடுமுறையை கழிக்கச் சென்ற பொதுமக்கள்.

இந்த தாக்குதல் சம்பவம் மக்களின் உயிர்கள் மீதான வன்முறைத் தாக்குதல் மட்டுமல்ல, சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் இந்திய அரசு நிறுவ முயற்சித்து வரும் அமைதியை சிதைக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சியாகும்.

இதுவே இந்த தாக்குதலை மோசமானதாகவும், குறிப்பிடத்தக்கதாகவும் மாற்றுகிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீருக்கு முழுமையாக உரிமை கொண்டாடினாலும், இரு நாடுகளும் காஷ்மீரின் ஒரு பகுதியை மட்டுமே ஆட்சி செய்கின்றன.

காஷ்மீரின் சிக்கலான வரலாற்றை கருத்தில் கொண்டு, முந்தைய அனுபவத்தையும், தன் மீதுள்ள அழுத்தத்தையும் கருத்தில் கொண்டு இந்தியாவின் எதிர்வினை அமையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதன் தொடக்கமாக, இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான முக்கிய எல்லைக் கோட்டை மூடுதல், முக்கியமான நீர் பகிர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல் மற்றும் தூதர்களை வெளியேற்றுதல் போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், ‘வலுவான பதிலடி’ அளிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்து, குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல, இந்திய மண்ணில் ‘தீய செயல்கள்’ நடைபெற மூளையாகச் செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்துள்ளார்.

ராணுவத்தின் மூலம் பதிலடி கொடுக்கப்படுமா இல்லையா என்பது அல்ல கேள்வி. அது எப்போது நடக்கின்றது, எந்த அளவில் தாக்குதல் நடக்கப்படும், அதற்கு என்ன விலை கொடுக்கப்படும் என்பது தான் கேள்வி என்கின்றனர் நிபுணர்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

“நாம் ஒரு வலுவான பதிலடி நடவடிக்கையை காண வாய்ப்புள்ளது. இது பாகிஸ்தானில் உள்ள உள்நாட்டு மக்களுக்கும், சிக்கல்களை உருவாக்கும் அங்குள்ள நபர்களுக்கும் நம்முடைய உறுதியை வெளிப்படுத்தும்.

2016 முதல், குறிப்பாக 2019க்குப் பிறகு, பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பதற்கு, எல்லை தாண்டிய தாக்குதல்கள் அல்லது வான்வழித் தாக்குதல்கள் போன்ற குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு முறையை இந்தியா நிறுவியுள்ளது” என்று ராணுவ வரலாற்றாசிரியர் ஸ்ரீநாத் ராகவன் பிபிசியிடம் கூறினார்.

” இப்போது அந்த வரம்புக்கு கீழே செயல்படுவது அரசாங்கத்துக்கு கடினமாக இருக்கும்.

இதற்கு முன்பு செய்தது போல் பாகிஸ்தானும் பதிலடி கொடுக்கும். எப்போதும் போல, இரு தரப்பும் தவறுகளைச் செய்வதற்கான ஆபத்து உள்ளது.

2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு பெரிய பழிவாங்கும் நடவடிக்கைகளை ராகவன் குறிப்பிடுகிறார்.

2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உரி பகுதியில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, 19 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதற்குப் பதிலடியாக இந்தியா “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” செய்தது. இந்த தாக்குதல், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஓசி) அருகே, பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதத் தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டது.

2019 ஆம் ஆண்டில், புல்வாமாவில் குறைந்தது 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு, இந்தியா பாலகோட்டில் உள்ள ஒரு தீவிரவாதிகள் முகாமை வான்வழித் தாக்குதல்களால் தாக்கியது .

1971 க்குப் பிறகு பாகிஸ்தானுக்குள் நடந்த இதுபோன்ற முதல் தாக்குதல் இது.

இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டது, இதன் விளைவாக வான்வழிப் போர் ஏற்பட்டது மற்றும் ஒரு இந்திய விமானி தற்காலிகமாக பிடிபட்டார். இரு நாடுகளும் தங்கள் ராணுவத் திறன்களை வெளிப்படுத்தின, ஆனால் முழு அளவிலான போராக விரிவடைவதை தடுத்தனர்.

அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரில் அவ்வப்போது தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்தாலும், போர்நிறுத்த ஒப்பந்தம் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

பாஜக தொண்டர்கள்

பட மூலாதாரம், AFP

சமீபத்திய தாக்குதலில் ஏற்பட்ட அதிகமான உயிரிழப்புகளுக்கும், இந்திய பொதுமக்களை குறிவைத்ததற்கும், பாகிஸ்தானுக்கு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு இருப்பதாக இந்திய அரசு சந்தேகித்தால் அல்லது ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தினால், இந்தியா ராணுவ ரீதியில் பதிலடி கொடுக்க வலுவான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று வெளியுறவுக் கொள்கை ஆய்வாளரான மைக்கேல் குகல்மேன் கூறுகிறார்.

” இவ்வாறு பதிலடி கொடுப்பது இந்தியாவுக்கு அரசியல் ரீதியாக நன்மை பயக்கும். ஏனெனில் இந்தியா வலுவாக பதிலளிக்க வேண்டும் என்று மக்களின் அழுத்தம் இருக்கும்,” என அவர் பிபிசியிடம் கூறினார்.

“பதிலடியாகக் கொடுக்கப்படும் தாக்குதல் பயங்கரவாத இலக்குகளை வெற்றிகரமாக அழித்தால், அது மற்றொரு நன்மையை தரும். எதிர்கால தாக்குதல்களைத் தடுக்கும் இந்தியாவின் திறனை வலுப்படுத்தவும், இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தலை குறைக்கவும் முடியும். ஆனால் பதிலடியாகக் கொடுக்கப்பட்ட தாக்குதலின் விளைவாக, கடுமையான நெருக்கடியும், மோதலும் உருவாகக் கூடும்.”

தற்போது இந்தியாவின் முன்பாக உள்ள வாய்ப்புகள் யாவை ?

ரகசிய நடவடிக்கைகளை எடுத்தால், அந்தச் செயல்களுக்கு நாங்கள் பொறுப்பில்லை என்று இந்தியாவால் மறுப்பு தெரிவிக்க இயலும்.

ஆனால், தாக்குதல்களைத் தடுக்கும் தனது திறனை வெளிப்படையாக மீட்டெடுக்கும் அரசியல் தேவையை இந்த ரகசிய நடவடிக்கைகள் பூர்த்தி செய்யாமல் போகலாம் என அமெரிக்காவின் அல்பானி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கிளாரி கூறுகிறார்.

இது இந்தியாவுக்கு இரண்டு சாத்தியமான பாதைகளை காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

முதலாவதாக, 2021 எல்ஓசி போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்துள்ளது, மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அனுமதி அளிக்கலாம்.

இரண்டாவதாக, 2019 ஆம் ஆண்டைப் போல வான்வழித் தாக்குதல்கள் அல்லது வழக்கமான கப்பல் ஏவுகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

ஆனால் அவற்றைத் தொடர்ந்து நடந்த வான்வழி மோதல்களில் காணப்பட்டதை போலவே, ஒவ்வொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் பதிலடியாக வேறு தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அபாயமும் உள்ளது.

“ஆபத்து இல்லாத பாதை எதுவுமில்லை.

அமெரிக்காவும் திசை திருப்பப்பட்டுள்ளது, மேலும் நெருக்கடி மேலாண்மைக்கு உதவ தயாராகவோ அல்லது முடியாமல் போகவோ வாய்ப்புள்ளது,” என்று தெற்காசியாவின் அரசியல் குறித்து ஆய்வு செய்யும் கிளாரி பிபிசியிடம் கூறினார்.

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையில் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்று, இரு தரப்பினரும் அணு ஆயுதம் ஏந்தியிருப்பதுதான்.

இந்த உண்மை, ஒவ்வொரு முடிவிலும் தாக்கம் செலுத்தி, ராணுவத் திட்டங்களை மட்டுமல்ல, அரசியல் முடிவுகளையும் வடிவமைக்கிறது.

“அணு ஆயுதங்கள் என்பது ஒரே நேரத்தில் ஒரு அபாயத்தையும், கட்டுப்படுத்தும் காரணியையும் முன்வைக்கின்றன. அவை இரு தரப்பிலும் தலைவர்களை எச்சரிக்கையுடன் செயல்பட வைக்கின்றன. பதிலடியாக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் கவனமாக திட்டமிடப்பட்டு துல்லியமாக இருக்கும். பாகிஸ்தானும் அதேபோன்று பதிலளித்து, பின்னர் பதற்றம் குறையும் வழியைத் தேடக்கூடும்” என்று ராகவன் விளக்குகிறார்.

“இஸ்ரேல்-இரான் மோதல்கள் போன்ற பிற மோதல்களிலும் இந்த முறையை நாங்கள் கண்டிருக்கிறோம் . கணக்கிடப்பட்ட தாக்குதல்கள், அதைத் தொடர்ந்து பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகள்.

ஆனால், திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்காமல் போவதுதான் எப்போதும் ஆபத்து.”

பஹல்காம்

பட மூலாதாரம், Getty Images

“இந்தியாவும் பாகிஸ்தானும் முழு அளவிலான மோதலுக்குப் பதிலாக, கட்டுப்படுத்தப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதை” புல்வாமா நெருக்கடியில் இருந்து கிடைத்த பாடங்கள் காட்டுகிறது என்று குகல்மேன் விளக்குகிறார்.

“பழிவாங்கும் நடவடிக்கையில் அரசியல் லாபமும், தந்திரோபாய நன்மையும் இருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில், அது கடுமையான நெருக்கடி அல்லது நேரடி மோதலாக மாறக்கூடிய அபாயமும் உள்ளது. இதையெல்லாம் இந்தியா கவனமாக பரிசீலிக்க வேண்டும் “

இந்த முறை மோதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், 2016 ஆம் ஆண்டு போல இந்தியா வரையறுக்கப்பட்ட “சர்ஜிக்கல் தாக்குதல்களை” பரிசீலிக்கும் என்றும் அமெரிக்காவிற்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி நம்புகிறார்.

“இந்தியாவின் பார்வையில் இருந்து இதுபோன்ற தாக்குதல்களால் கிடைக்கும் நன்மை என்னவென்றால், அவற்றின் நோக்கம் குறைவாகவே உள்ளது, எனவே பாகிஸ்தான் பதிலளிக்க வேண்டியதில்லை, ஆனால் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என்பதை அந்த எதிர் தாக்குதல்கள் இந்திய மக்களுக்கு நிரூபிக்கின்றன,” என்று அன்வர் கர்காஷ் டிப்ளமேடிக் அகாடமி மற்றும் ஹட்சன் நிறுவனத்தின் மூத்த உறுப்பினரான ஹக்கானி பிபிசியிடம் கூறினார்.

“ஆனால் இத்தகைய தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் அபாயமும் உண்டு.

விசாரணையோ, ஆதாரமோ இல்லாமல் தன்னை குற்றவாளியாகச் சுட்டிக்காட்டும் திடீர் நடவடிக்கையாகவே இதைப் பார்க்கிறோம் என பாகிஸ்தான் வாதிடுகிறது”.

இந்தியா எந்த முடிவை எடுத்தாலும், பாகிஸ்தான் எப்படிப் பதிலளித்தாலும், ஒவ்வொரு கட்டமும் பெரும் அபாயத்தால் சூழப்பட்டுள்ளது.

மோதல் மேலும் தீவிரமடையலாம் என்ற அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.

இதன் விளைவாக, இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் ஏற்கனவே ஊசலாடிக்கொண்டிருக்கும் அமைதி நிலை, மொத்தமாக சீர்குலையும் அபாயம் உள்ளது.

“அதே நேரத்தில், தாக்குதல் சம்பவம் நடக்க வழிவகுத்த பாதுகாப்பு தோல்விகளை இந்தியா கணக்கிட வேண்டும். ‘சுற்றுலா பருவத்தின் உச்சத்தில், குறிப்பாக மத்திய அரசு நேரடியாக சட்டம் மற்றும் ஒழுங்கை கட்டுப்படுத்தும் யூனியன் பிரதேசத்தில் இப்படி ஒரு தாக்குதல் நடந்துள்ளது, ஒரு பெரிய தோல்வியை எடுத்துக்காட்டுகிறது. ‘ என்று ராகவன் குறிப்பிட்டார்.”

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU