SOURCE :- BBC NEWS

அமெரிக்க எஃப்-16 விமானங்களை பாகிஸ்தான் நம்பியிருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானுக்கு எஃப்-16 போர் விமானங்களுக்கான தொழில்நுட்ப ஆதரவையும் உபகரணங்கள் விற்பனையையும் தொடர அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

அமெரிக்க டிஃபன்ஸ் செக்யூரிட்டி கோ-ஆபரேஷன் ஏஜென்சி (டிஎஸ்சிஏ) இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி, முன்மொழியப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின் மொத்த அளவு 686 மில்லியன் அமெரிக்க டாலர்.

பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்களை நவீனமயமாக்குவதும், அவற்றின் பயன்பாட்டின் போதான பாதுகாப்பு அபாயங்களை நிவர்த்தி செய்வதுமே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட பாகிஸ்தானை அனுமதிக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 8-ம் தேதி நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், பாகிஸ்தானுக்கு லிங்க்-16 தொடர்பு / தரவு பகிர்வு நெர்வொர்க், குறியாக்க (cryptographic) கருவிகள், பயிற்சி மற்றும் விரிவான தளவாட ஆதரவு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் திறனைத் தக்க வைத்துக்கொள்ள உதவும் என்று அமெரிக்க பாதுகாப்பு ஏஜென்சி கூறுகிறது.

பாகிஸ்தானிடம் உள்ள எஃப்-16 போர் விமானம் 2040-ம் ஆண்டு வரை சேவையில் நீடிக்க இந்த மேம்படுத்துதல் நடவடிக்கை உதவும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்படுத்தல்கள், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க விமானப்படைகளுக்கு இடையிலான ராணுவப் பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் என்று டிஎஸ்சிஏ கூறுகிறது.

பாகிஸ்தான் தனது எஃப்-16 க்கு எத்தகைய மேம்படுத்தலை விரும்புகிறது?

இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக எஃப்-16 போர் விமானங்களை மேம்படுத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது என்று பாகிஸ்தான் கூறியது.

டிசம்பர் 11-ம் தேதி நடந்த வாராந்திர மாநாட்டில், 686 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான எஃப்-16 போர் விமான மேம்படுத்துதல்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார். இது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார். அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்த பாகிஸ்தான் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த நான்கு தசாப்தங்களாக பாகிஸ்தான் தனது வான்வெளியை பாதுகாப்பதற்கும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு நோக்கங்களுக்காகவும் எஃப்-16 போர் விமானங்களைப் பயன்படுத்துகிறது.

பாகிஸ்தான் விமானப்படையில் எஃப்-16 போர் விமானங்கள் மிகவும் முக்கியமானவை என்று பாதுகாப்பு ஆய்வாளர் மொஹம்மது அலி கூறுகிறார்.

இந்த விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள, வான் இலக்குகளை தாக்கி அழிக்கக் கூடிய ஏஎம்ஆர்ஏஏஎம்-ன் (AMRAAM) ஏவுகணையை மேம்படுத்தபட்ட நவீன வடிவில் பெற பாகிஸ்தான் விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.

2006-ம் ஆண்டில் பாகிஸ்தான் விமானப்படை வாங்கிய ஏஐஎம்-120 ஏவுகணைகள் சி-5 மாடலைச் சேர்ந்தவை என்றும் அவர் கூறுகிறார்.

இந்த ஏவுகணையின் நவீன பதிப்புகள் இன்று கிடைக்கின்றன என்றும், இதை பாகிஸ்தான் வாங்க விரும்புகிறது என்றும் அவர் கூறினார்.

மொஹம்மது அலியின் கூற்றுப்படி, பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானங்களின் ஏவியோனிக்ஸ் தொகுப்பையும் மேம்படுத்த விரும்புகிறது.

அமெரிக்க எஃப்-16 விமானங்களை பாகிஸ்தான் நம்பியிருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

நவீன சீன போர் விமானங்கள் இருந்தும் எஃப்-16 போர் விமானங்களை சார்ந்திருப்பது ஏன்?

பாகிஸ்தான் விமானப்படையிடம் தற்போது சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜே-10சி மற்றும் ஜேஎஃப்-17 ரக போர் விமானங்கள் உள்ளன.

பாகிஸ்தான் விமானப்படையில் தற்போது சீனா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளிடம் வாங்கப்பட்ட போர் விமானங்கள் உள்ளன.

பாகிஸ்தான் விமானப்படை தற்போது பிரெஞ்சு போர் மிராஜ் விமானம், அமெரிக்க எஃப்-16 மற்றும் சி-130 விமானங்கள் மற்றும் சீன ஜே-10சி மற்றும் ஜேஎஃப்-17 தண்டர் போர் விமானங்களை பயன்படுத்துகிறது.

இந்த போர் விமானங்களை அவற்றின் திறன்களைப் பொறுத்து பல்வேறு வழிகளில் பாகிஸ்தான் பயன்படுத்துகிறது.

பாகிஸ்தான் விமானப்படை இந்த மூன்று நாடுகளிடமும் வாங்கிய போர் விமானங்களை சரியான நேரத்தில் பயனுள்ள வகையில் பயன்படுத்தியதுடன், அவற்றின் பழுதுபார்ப்பு, மேம்படுத்தல் மற்றும் பயிற்சிக்கான விரிவான கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானிடம் டி-37 பயிற்சி விமானங்கள் தவிர, அமெரிக்க தொழில்நுட்பத்தில் உருவான எஃப்-16 போர் விமானம் மற்றும் சி-130 விமானம் ஆகியவை உள்ளன.

பாகிஸ்தானிடம் தற்போதுள்ள சீனத் தயாரிப்பான ஜே-10சி மற்றும் ஜேஎஃப்-17 ஆகிய போர் விமானங்கள் பிஎல்-15 ஏவுகணை பொருத்தப்பட்ட மிகவும் நவீன மற்றும் பயனுள்ள போர் விமானங்கள் என்பதில் சந்தேகமில்லை என்று ஆய்வாளர் மொஹம்மது அலி கூறுகிறார். அந்த பிஎல்-15 ஏவுகணைகள், 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை.

எஃப்-16 என்பது பாகிஸ்தான் விமானப்படையின் வெற்றிகரமான, நவீன போர் விமானமாகும். இது கடந்த 40 ஆண்டுகளாக திறமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மற்ற போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில், எஃப்-16 போர் விமானம் விலை மலிவானது, திறன் மிக்கது, பராமரிப்புச் செலவும் குறைவு என்று மொஹம்மது அலி கூறுகிறார்.

ஐந்தாம் தலைமுறை விமானத்தை விட மலிவான எஃப்-16 போர் விமானம் எளிதாக பயிலக்கூடிய, மிகவும் நம்பகமான விமானம் ஆகும்.

பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் எஃப்-16 போர் விமானங்கள் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன.

கடந்த 25 ஆண்டுகளில், பாகிஸ்தான் தனது 80 சதவீத நடவடிக்கைகளில் மிகவும் துல்லியமாக பயங்கரவாத மறைவிடங்களை குறிவைக்க இந்த விமானங்களையே போர் பயன்படுத்தியதாக மொஹம்மது அலி கூறினார்.

அமெரிக்க எஃப்-16 விமானங்களை பாகிஸ்தான் நம்பியிருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானுக்கு எஃப்-16 போர் விமானம் எப்போது, ​​எப்படி கிடைத்தது?

1972-ல் அமெரிக்க நிறுவனமான ஜெனரல் டைனமிக்ஸ், இலகுரக போர் விமானத்தின் அவசியத்தை உணர்ந்து, எஃப்-16 போர் விமானத்தை உருவாக்கியது. இந்த விமானத்திற்கு ‘ஃபைட்டிங் ஃபால்கன்’ என்று பெயரிடப்பட்டது.

ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பறக்கும் இவை, ஒற்றை இருக்கை, ஒற்றை என்ஜின் கொண்ட ஜெட் விமானங்கள். ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை.

ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனம் பின்னர் லாக்ஹீட் மார்ட்டின் கார்பரேஷனின் ஒரு பகுதியாக மாறியது.

இந்த போர் விமானங்களின் முதல் தொகுதி (batch) அமெரிக்க விமானப்படையால் பெறப்பட்டது. பாகிஸ்தான் தவிர, பஹ்ரைன், பெல்ஜியம், எகிப்து, தைவான், நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் அமெரிக்கா எஃப்-16 போர் விமானங்களை வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் தனது பாதுகாப்பிற்காக பல்வேறு வகையான ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குகிறது.

சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் தலையிட்டபோது, அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எஃப்-16 போர் விமான கொள்முதல் திட்டம் தொடங்கியது.

சோவியத் ஒன்றியம் மற்றும் ஆப்கானிஸ்தான் விமானங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக அவற்றை பாகிஸ்தானுக்கு விற்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

1986 மற்றும் 1990 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட எஃப்-16 போர் விமானங்கள் குறைந்தது பத்து ஆப்கான் மற்றும் ரஷ்ய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களை சுட்டு வீழ்த்தின.

ஆனால் 1990-ல், பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்கா, அதற்கு 28 எஃப்-16 போர் விமானங்களை வழங்க மறுத்தது. அதற்கு பாகிஸ்தான் 658 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்தியிருந்தது.

பின்னர் 2001-ல், அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் மீதான அல்-கொய்தா தாக்குதலுக்குப் பிறகு, ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ தொடங்கிய பின்னர்,18 அதிநவீன பிளாக்-52 எஃப்-16 போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

இதனுடன் சேர்த்து, பாகிஸ்தானுக்கு இலக்கு நிர்ணயிப்பு பாட்கள் (targeting pods) மற்றும் மின்னணு போர் (electronic warfare) கருவிகள் மட்டுமன்றி, 52 பழைய எஃப்-16 போர் விமானங்களை பிளாக்-52க்கு இணையாக மேம்படுத்தும் கருவிகள் வழங்கப்பட்டன.

2011-ம் ஆண்டில், எஃப்-16, சி-130, டி-37 மற்றும் டி-33 விமான பாகங்களுக்கான 26 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டது.

2016-ல், அமெரிக்கா பாகிஸ்தானுடன் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி எட்டு எஃப்-16 பிளாக்-52 போர் விமானங்கள் விற்கப்பட்டன.

2019-ல், எஃப்-16 திட்டத்தின் தொழில்நுட்ப உதவிக்கான 120 மில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தம் பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு பின் அங்கீகரிக்கப்பட்டது. பின்னர், செப்டம்பர் 2022-ல், எஃப்-16 போர் விமானங்களின் பராமரிப்புக்கான உபகரணங்கள் மற்றும் சேவைகளை பாகிஸ்தானுக்கு வழங்க 450 மில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளித்தது.

அமெரிக்க எஃப்-16 விமானங்களை பாகிஸ்தான் நம்பியிருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானிடம் எத்தனை எஃப்-16 போர்விமானங்கள் உள்ளன?

அமெரிக்கா தயாரித்த எஃப்-16 போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானப்படையை பலப்படுத்துவதில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

வெளியுறவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் 2020 அறிக்கையின்படி, பாகிஸ்தானிடம் மொத்தம் 85 எஃப்-16 போர் விமானங்கள் உள்ளன. இவற்றில் 66 பழைய பிளாக்-15 ரகத்தைச் சேர்ந்தவை. 19 விமானங்கள் புதிய பிளாக்-52 ரகத்தை சேர்ந்தவை. இந்த விமானங்கள் அமெரிக்க தொழில்நுட்ப பாதுகாப்பு குழுவின் கண்காணிப்பில் உள்ளன.

இந்த அறிக்கையின்படி, விமானப் பராமரிப்புக்காக பாகிஸ்தான் இதுவரை மூன்று பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளது.

எஃப்-16 போர் விமானம் பாகிஸ்தான் விமானப்படையின் வெற்றிகரமான நவீன போர் விமானம். சோவியத் ஒன்றியதிற்கு எதிராக, இந்தியாவுடனான பதற்றங்களின்போது, பாகிஸ்தான் வான்வெளியை பாதுகாப்பதிலும் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைப்பதிலும் எஃப்-16 போர் விமானம் முக்கிய பங்கு வகித்ததாக பாதுகாப்பு ஆய்வாளர் மொஹம்மது அலி கூறுகிறார்.

கடந்த 25 ஆண்டுகளில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் எஃப்-16 போர் விமானங்களின் உதவியுடன் மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மொஹம்மது அலி கூறுகிறார்.

அமெரிக்க எஃப்-16 விமானங்களை பாகிஸ்தான் நம்பியிருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்த கட்டுப்பாடுகள் உள்ளதா?

எஃப்-16 ரக போர் விமானங்கள் பாதுகாப்புத் தேவைக்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை பாகிஸ்தான் தனது தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அமெரிக்கா பலமுறை கூறியுள்ளது.

இந்த போர் விமானங்களை போர் நோக்கில் வேறு எந்த நாட்டையும் தாக்க பயன்படுத்த முடியாது என்றும் அமெரிக்கா கூறுகிறது.

பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின்படி, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விமானம் பாதுகாப்புக்கு அல்லாத பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், அது போர்க் கருவிகள் வாங்குவது தொடர்பாக அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறுவதாக இருக்கலாம்.

இருப்பினும், அத்தகைய ஒப்பந்தங்கள் குறித்து முறையான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த அனுமானம் தவறானது என்று பாதுகாப்பு ஆய்வாளர் மொஹம்மது அலி கூறுகிறார். “பாகிஸ்தானுடன் பதற்றம் ஏற்பட்டால், பாகிஸ்தான் விமானப்படையின் முதன்மை பொறுப்பு அதன் நாட்டைப் பாதுகாப்பதாகும்” என்கிறார் அவர்.

பாகிஸ்தானின் வான்வெளியை பாதுகாப்பதே விமானப்படையின் மிக முக்கியமான பணி என்றும், ஏதேனும் வெளிப்புற சக்தி தாக்கினால், மற்ற ஆயுதங்களுடன் எஃப்-16 போர் விமானங்களைப் பயன்படுத்தியும் அது நாட்டைப் பாதுகாக்கும் என்றும் மொஹம்மது அலி கூறுகிறார்.

பாகிஸ்தானின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் நயீம் லோதி, எஃப்-16 போர் விமானங்களின் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளோ அல்லது தடை செய்யும் விதிகளோ இடம்பெற்றுள்ள அமெரிக்கா–பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் எதையும் தான் பார்த்ததில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU