SOURCE :- BBC NEWS

பாகிஸ்தானின் அதிகார மையமான பஞ்சாபில் உள்ள பஹாவல்பூரை இந்தியா ஏன் தாக்கியது?

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் பல இடங்களை இந்தியா தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலில் ‘பயங்கரவாத முகாம்கள்’ குறிவைக்கப்பட்டுள்ளன என இந்தியா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள சுப்ஹான் அல்லா மசூதி உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இது ஜெய்ஷ்-இ-முகமதின் தலைவர் மசூத் அசாரின் மறைவிடமாகக் கருதப்படுகிறது.

இந்திய அரசு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை தடை செய்துள்ளது.

இந்த அமைப்பின் தலைமையகம் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூரில் இருப்பதாக இந்திய அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.

இந்தியாவின் ‘மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகள்’ பட்டியலில் மசூத் அசாரின் பெயரும் உள்ளது.

இந்தியாவின் தாக்குதலுக்குப் பிறகு, தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதை, மசூத் அசார் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.

இந்தத் தாக்குதல் குறித்து இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி கூறுகையில், “பஹாவல்பூரில் உள்ள சுப்ஹான் அல்லா மசூதி, சர்வதேச எல்லையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகமாகவும் இருந்தது. ஆட்சேர்ப்பு, பயிற்சி மையமாக இருந்த இந்த இடத்துக்கு, தீவிரவாதிகள் வருவது வழக்கம்” என்றார்.

பாகிஸ்தானின் அதிகார மையமான பஞ்சாபில் உள்ள பஹவல்பூரை இந்தியா ஏன் தாக்கியது?

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச எல்லையிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேயில் அமைந்துள்ள “பயங்கரவாத முகாம்களை’ தாக்கியதாகவும் இந்தியா கூறியது.

பஹாவல்பூர் மற்றும் முரிட்கே தவிர, சியால்கோட் அருகே இரண்டு முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூறியுள்ளது

சியால்கோட் அருகே குறிவைக்கப்பட்ட முகாம்கள் குறித்து கர்னல் சோபியா குரேஷி கூறுகையில், “சியால்கோடில் உள்ள சர்ஜால் முகாம், சர்வதேச எல்லையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சியால்கோடில் உள்ள மஹ்மூனா சோயா முகாம் சர்வதேச எல்லையிலிருந்து 12 முதல் 18 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அது ஹிஸ்புல் முஜாஹிதீனின் பெரிய முகாம். பதான்கோட் விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதல் இங்கிருந்து இயக்கப்பட்டது.”என்று தெரிவித்தார்.

“பாகிஸ்தானின் ராணுவத் தலைவர் ஒரு பஞ்சாபி, பிரதமர் ஒரு பஞ்சாபி, அனைத்து அதிகாரிகளும் பஞ்சாபிகள். இதுபோன்ற சூழ்நிலையில், பஞ்சாபை தாக்குவது பாகிஸ்தானுக்கு சாதாரண விஷயமல்ல” என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி கூறுகிறார்.

‘இந்த தாக்குதல் ஆச்சரியமல்ல’

இந்த கோப்பு புகைப்படம் சோலிஸ்தான் பாலைவனத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு பாகிஸ்தான் வீரரைக் காட்சிப்படுத்துகின்றது.

பட மூலாதாரம், Getty Images

இந்தியத் தாக்குதல்களுக்குப் பிறகு வெளிவந்த காணொளிகள் சுப்ஹான் அல்லா மசூதிக்கு பெரும் சேதம் ஏற்பட்டதைக் காட்டுகின்றன.

இந்தியாவின் இலக்கு பட்டியலில் பஹாவல்பூர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் அஜய் சுக்லா கூறுகிறார்.

“பஹாவல்பூர் தெற்கு பஞ்சாபின் ஒரு முக்கிய நகரம். இது பஞ்சாபின் பெருமையை பறைசாற்றும் நகரம் மட்டுமல்ல, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற ஒரு அமைப்பின் கோட்டையாகவும் உள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது இங்கு தனது பலத்தை தக்க வைத்துக் கொள்கிறது” என்கிறார் அஜய் சுக்லா.

மேலும், “சியால்கோட் மற்றும் பஹாவல்பூர் பஞ்சாபின் முக்கியமான நகரங்கள். பஞ்சாப் மாகாணம் பாகிஸ்தானின் முக்கியமான பகுதியாகும். பஹாவல்பூர் மீதான தாக்குதலை, பாகிஸ்தானின் பிரதான நிலப்பகுதிக்குள் இந்தியா நடத்திய தாக்குதல் என்று அழைப்பது தவறல்ல” என்றும் அவர் கூறினார்.

மேலும் பஹாவல்பூர் மீது தாக்குதல் நடந்திருப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை என்கிறார் அஜய் சுக்லா.

“பஹவல்பூர் மீதான தாக்குதல் ஆச்சர்யமளிக்கவில்லை, ஆனால் இது சாதாரணமானதும் இல்லை. இந்திய ராணுவம் இலக்காகக் கொண்டுள்ள இடங்களில் பல தீவிரவாத முகாம்கள் இருக்க வேண்டும். வெளிப்படையாக, பஹவல்பூரும் அப்பட்டியலில் இருந்திருக்க வேண்டும். பாகிஸ்தானில் தீவிரவாதம் தொடர்பான உள்கட்டமைப்புக்கு அதிகபட்ச சேதம் ஏற்படக்கூடிய வகையில் எங்கு தாக்குதல் நடத்தலாம் என்று யோசித்த பிறகு இந்தியா இத்தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும்,” என்று கூறுகிறார் அஜய் சுக்லா .

இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத்திற்கு பஹாவல்பூர் எந்தவிதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என பாகிஸ்தானின் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

“பாகிஸ்தானின் பஹாவல்பூரில் மிக வலுவான பாதுகாப்பு அமைப்பு இல்லை. லாகூர் அல்லது கராச்சிக்கு வழங்கும் முக்கியத்துவத்தையும், அங்கு ராணுவம் அமைக்கும் பாதுகாப்பு தளங்களையும் போல் பஹாவல்பூருக்கு பாகிஸ்தான் அவ்வளவு முக்கியத்துவம் வழங்குவதில்லை .பஹாவல்பூர் மீதான தாக்குதல் மசூத் அசாரை நம் நினைவிற்கு கொண்டு வருகிறது,” என பாகிஸ்தான் ராணுவத்தின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரி மஹ்மூத் ஷா பிபிசியிடம் தெரிவித்தார்.

“தேசிய பாதுகாப்பைப் பொறுத்தவரை பாகிஸ்தான் என்ன பதில் அளித்தாலும், பஹாவல்பூர் மீதான தாக்குதலுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. பஹாவல்பூரைச் சுற்றி ஒரு பாலைவனப் பகுதி உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் இங்கு போர் பயிற்சிகளை நடத்துகிறது. இதைத் தவிர, சிறப்பு முக்கியத்துவம் எதுவும் இல்லை” என்கிறார் மஹ்மூத் ஷா.

பாகிஸ்தானின் அதிகார மையமான பஞ்சாபில் உள்ள பஹவல்பூரை இந்தியா ஏன் தாக்கியது?

பட மூலாதாரம், Getty Images

“இந்தியா அதன் எல்லைக்குள் இருந்தபடியே குறிவைத்தது”

இந்தியா தனது வான்வெளியில் இருந்து தாக்குதல்களை நடத்தியதாகக் கூறுகிறது.

அதே நேரத்தில், ஐந்து இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதற்கு இந்தியா எந்த எதிர்வினையும் தெரிவிக்கவில்லை.

பாகிஸ்தான் தெரிவித்துள்ள கூற்றுகள் பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தியா தனது எல்லைகளுக்குள் இருந்து பஹாவல்பூர் போன்ற இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்த முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அஜய் சுக்லா, “இப்போது இந்தியாவிடம் மேம்பட்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் உள்ளன. இந்தியாவிடம் உள்ள ஆயுதங்களைக் கொண்டு, அதன் எல்லைக்குள் இருந்து கொண்டே பஹாவல்பூர் போன்ற இடங்களில் துல்லியமான தாக்குதல்களை நடத்த முடியும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா அதன் எல்லைக்குள் இருந்து பஹாவல்பூரை குறிவைப்பதில் ஆச்சரியமில்லை” என்றார் .

பாகிஸ்தான் பாதுகாப்பு ஆய்வாளர்கள் பஹாவல்பூரின் முக்கியத்துவத்தை நிராகரித்து வரும் அதே வேளையில், இந்திய ஆய்வாளர்கள் இதை ஒரு பெரிய நடவடிக்கையாகக் கருதுகின்றனர்.

“பஹாவல்பூரில் நடந்த தாக்குதல் என்பது ஒரு முக்கியமான நடவடிக்கை. இப்போது இங்கிருந்து பதற்றம் எவ்வளவு அதிகரிக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் ராணுவம் தனக்கு சரி என்று தோன்றுவதைச் செய்யும். அதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும். இவ்வாறு பதிலடியாக வழங்கப்படும் நடவடிக்கைகள் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும். இந்த சூழ்நிலைகளில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் முன்னெடுக்குமா என்பதுதான் கேள்வி.” என்கிறார் அஜய் சுக்லா.

பாகிஸ்தானின் அதிகார மையமான பஞ்சாபில் உள்ள பஹாவல்பூரை இந்தியா ஏன் தாக்கியது?

பட மூலாதாரம், Getty Images

பஹாவல்பூரில் நடந்த தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரிக்குமா?

இதுபோன்ற சூழ்நிலையில், இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

“பாகிஸ்தான் நிச்சயமாக பதிலளிக்கும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அது எதை குறிவைக்கும்? இந்தியாவில் தீவிரவாத முகாம்கள் எதுவும் இல்லை. அத்தகைய சூழ்நிலையில், இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று பொதுமக்கள், மற்றொன்று விமானப்படை தளம். பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்களைக் குறிவைப்பதைத் தவிர்க்கும்.

இந்தியாவின் பஞ்சாபில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தை அது குறிவைக்கும் சாத்தியம் உள்ளது, ஆனால் அப்படி செய்தால் நிலைமை இன்னும் மோசமடையும். இந்த தாக்குதல் மூலம், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மட்டும் நடைபெறாது என்று இந்தியா கூறுகிறது” என்கிறார் ராகுல் பேடி.

செவ்வாய்க்கிழமை இரவு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதாக பாகிஸ்தானின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரி மஹ்மூத் ஷா கூறுகிறார்.

”அதாவது, இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பதிலளித்துவிட்டது. இந்தியா இந்த விஷயத்தை எவ்வளவு தூரம் எடுத்துச் செல்கிறது என்பதைப் பொறுத்து பதற்றம் மேலும் அதிகரிக்கும்” என்கிறார் மஹ்மூத் ஷா.

தொடர்ந்து பேசிய அவர் , “இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள். இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான போர் உலகிற்கு ஆபத்தானது. அதனால்தான் இந்தியாவும் பாகிஸ்தானும் போர்ச் சூழலை விரும்பவில்லை. தற்போதைய சூழ்நிலையில், தொலைதூரத்திலிருந்து ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது குறித்து பேச்சு உள்ளது. நிலத்தில் இருந்து நிலத்துக்கு ஏவப்படும் ஏவுகணைகள் பயன்படுத்தப்படும்போது இந்த நிலைமை ஆபத்தானதாக மாறும், ஏனெனில் இரு நாடுகளிலும் ஏவுகணைகள் உள்ளன. அவற்றால் அணு ஆயுதங்களையும் எடுத்துச் செல்ல முடியும்” என்கிறார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதை நிராகரிக்க முடியாது என்று அஜய் சுக்லா கருதுகிறார்.

“பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை நிராகரிக்க முடியாது. இருப்பினும், இப்போது இந்த விஷயத்தை எவ்வளவு தூரம் தீவிரப்படுத்துவது என்பதை பாகிஸ்தான் ராணுவம் தான் முடிவு செய்ய வேண்டும்.” என்கிறார் அஜய் சுக்லா

பஹாவல்பூர் ஏன் முக்கியமானது?

இந்திய விமானப்படை போர் விமானம் பயிற்சி செய்யும் படம் (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

பஹாவல்பூர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சட்லஜ் ஆற்றின் தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு பெரிய நகரம், இது பாகிஸ்தானின் 13வது பெரிய நகரமாக உள்ளது.

பஹாவல்பூர் மாவட்டம் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்று.

சட்லஜ் நதிக்கு அருகில் வளமான சமவெளிகள் உள்ளன, மேலும் சோலிஸ்தான் பாலைவனமும் இங்கு பரவியுள்ளது.

இந்த பாலைவனம் இந்தியாவின் தார் பாலைவனத்தை அடைகிறது. இந்த மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பங்கு பாலைவனப் பகுதியாக உள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, ​​பஹாவல்பூர் நவாப் பாகிஸ்தானுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார உதவிகளை வழங்கினார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் 31வது படைப்பிரிவின் தலைமையகமும் பஹாவல்பூரில் அமைந்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்தப் பிரிவுதான் தெற்கு பஞ்சாபின் பாதுகாப்பிற்குப் பொறுப்பு வகிக்கிறது.

மார்ச் 2025 இல், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் பஹாவல்பூரில் உள்ள ராணுவ முகாமிற்கு பயணம் செய்தார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கு இயற்கையான எல்லையாகவும் நுழைவாயிலாகவும் இந்த நகரம் திகழ்கிறது.

இங்குள்ள பாலைவனம் ஒரு இயற்கையான தடையாக உள்ளபோதிலும், போர் ஏற்பட்டால் ஒரு போர்க்களமாக மாறும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU