SOURCE :- BBC NEWS
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
செவ்வாய் மற்றும் புதன்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள “ஒன்பது பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து தாக்கியதாக” இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பஹாவல்பூரில் அமைந்துள்ள மர்கஸ் சுப்ஹான் அல்லா உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதல் குறித்து இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷி கூறுகையில், “பஹாவல்பூரில் அமைந்துள்ள மர்கஸ் சுப்ஹன் அல்லா, சர்வதேச எல்லையிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இது ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகம். தீவிரவாத முகாமிற்கு ஆட்சேர்ப்பு, பயிற்சியளிப்பது மற்றும் சித்தாந்தங்களை கற்றுக் கொடுக்கும் மையமாகவும் இந்த இடம் இருந்தது. இங்கு பல உயர்மட்ட தீவிரவாதிகள் வருவார்கள்.” என்றார்.
இந்தியாவின் தாக்குதல் இலக்கு பட்டியலில் பஹாவல்பூர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் அஜய் சுக்லா நம்புகிறார்.
“பாகிஸ்தானின் பிரதான நிலப்பகுதியில் உள்ள சியால்கோட், பஹாவல்பூர் ஆகிய இரண்டும் பஞ்சாபின் முக்கியமான நகரங்கள். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் அந்நாட்டின் பிரதான நிலப்பகுதியாகும். பஹாவல்பூர் மீதான தாக்குதல் பாகிஸ்தானின் பிரதான நிலப்பகுதிக்குள் இந்தியா நடத்திய தாக்குதல் என்று கூறுவது தவறாகாது” என்று அஜய் சுக்லா கூறுகிறார்.
பஹாவல்பூர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்றும் அஜய் சுக்லா கூறுகிறார்.
“பஹாவல்பூரை தாக்கியதில் வியப்பில்லை என்றாலும், அது சாதாரணமானதும் அல்ல. இந்திய ராணுவத்தின் இலக்கு பட்டியலில் பல பயங்கரவாத மறைவிடங்கள் இருக்கும்போது,பஹாவல்பூரும் அதில் இருக்கும்” என்று அவர் கூறினார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC